in ,

கரிசல் காட்டில் பூத்த பருத்திப் பூ ❤ (கவிதை வடிவில் ஒரு கரிசல் காட்டுக் கதை ) – பகுதி 1 – ✍ சசிகலா எத்திராஜ்

கரிசல் காட்டில்... ❤ பகுதி 1 -

#ad 

                      

வானம் பார்த்த பூமியில்
பாளமாக வெடித்த கரிசல்காட்டில் 
மழையே வருவாயாவென 
உயரமா வளர்ந்த  
பனைமரங்கள் வேண்டினவாம்

மழையை வேண்டிய
பனை மரங்களின் ஓலைகள்
காற்றில் சரசரக்க 
வானிற்கு வெண்சாமரம் வீசியும் 
வானமும் பொய்யத்தது
காடுகளும் பாறைகளாய் 
இறுகித்தான் போனது

எங்கு திரும்பினாலும்
வறண்ட பூமியும்
வெட்ட வெளியில்
வெக்கை சுட்டெரித்தது

மழை பெய்ஞ்சா வெள்ளாமை 
இல்லையேல் கருப்பு 
மண்ணாகி தரிசாக 
சோத்துக்கும் நீருக்கும் வழியின்றி
காய்ந்த வயிறும்
சுருங்கிய தேகமுமாய் 
பணங்காசுக்கு அல்லல்படும் 
அவலை நிலையை கேட்டீரோ 

வானம் தெளிக்க 
பருத்தி பூக்க
எள்ளு செழிக்க 
மல்லி மலர
திணையும் சோளமும் விளையவென 
வயிற்றுப் பாட்டுக்கும்
வகையின்றி கிடைக்கும்

மழைநீர் வற்றியதால் 
இளசுகள் கூடிநின்று 
வேலையின்றி கதைப்பேச 
பெண்கள் திண்ணையில் சாய்ந்து 
ஊர்வம்பில் மூழ்கவென 
பொழுதை கழித்தனர்

முப்பாட்டன் சேத்து வச்ச
கரிசல் காடும் மச்சு வீடும்
பரம்பரைப் பணத்தோடு கௌரவத்தையும் 
கரைக்கவே வந்தானவன் 
ராமசாமி ரங்கம்மா
பெற்றெடுத்த ஊதாரிப்பிள்ளை

கரிசல் மண்ணின் நிறமாக
கட்டிளங்காளையாக
பனைமர உசரமாக
முரட்டுதனமும் முசட்டு குணமும் 
வாயோடு கை காலும் பேசும் 
கரியமுகத்தான் காத்தவராயன்

சோக்காளிகள கூட்டுசேத்து 
ஊர்வம்பை விலைக்கு வாங்கும் 
மைனரா சுத்தியலைஞ்சான்
உருவத்தில் மதுரை வீரனை 
மயக்கினாள் ஒருத்தி 
அவள் பெயர் ராசாத்தி 

பெண்ணவளின் கைகளிலே 
மன்மதனாய் விளையாடியவன்
சாராயத்தின் பிடியில் 
இரவைக் கழித்தான் 
கடைந்தெடுத்த கழிசடையவன் 

ராசத்தி பெண்ணவளோ 
பணமுதலை தேடியலையும் 
பரத்தை பிறவிக்கு 
காத்தரவராயன் வீசிய 
காசுதான் இனித்ததோ 
முரட்டு ஆடவனின்  
விழியால் மயங்கினாளோ 

அவளுக்குத் தேவை
பணம்காய்க்கும் மரமொன்று 
ஆசைவார்த்தை கூறி
முந்தியில் முடிந்துக் கொண்டாள்
கனவான் காத்தவராயனை

மகனின் போக்கை கண்ட
ஆத்தாவும் அப்பனும் 
கால்கட்டு போட்டா பொறுப்பாவான்னு 
ஊர்ஊரா பெண்ணைத் தேட
பார்க்கும் பொண்ணுகளோ
'அதுக்கு  நான் நாண்டுகிட்டு செத்தருவேன்'னு சொல்ல 
பொண்ணுங்கள பெத்தவங்க 
பாத்தாலே காத தூரம் ஓட 

காத்தவராயனின் ஆத்தாகாரி 
‘ராசா கணக்கா இருக்கானே 
இவனை கட்டிக்க
கசக்குதா இவளுகளுக்கு 
சொத்துல கொறவா 
அழகல கொறவா 
கருப்பா இருந்தாலும் 
கம்பீரமா ஆம்பளையா 
வளர்ந்து நிற்கிறானே எம்புள்ள’

‘வயசு கோளாறுல கொஞ்சம் 
அப்படியும்  இப்படியும்  
இருக்கத் தான் இருப்பாங்க 
அந்த காலத்துல 
அவங்கப்பன் ஆடாத ஆட்டமா 
இப்ப பொட்டிப் பாம்பா நா
முந்தியிலே முடிஞ்சுக்கலயா 
போங்கடி மேனா மினுக்கிகளா’

‘இந்த வயசிலே இப்படி இல்லனா  
ஆம்பளையே இல்ல’னு 
பிள்ளைக்கு வக்காலத்து வாங்கினா 
அருமையான அந்த ஆத்தாகாரி

மகன் உத்தமனென 
நாடாளும் மன்னனென 
உயர்த்தி ஊரில் பேசி 
பொண்ணைப் பெற்றவர்களை
பிடிக்கத்தான் பாத்தா ஆத்தா 

பெண்ணை பெற்றவர்களோ
'மகன் இப்படி இருக்கவே 
இந்த பேச்சு பேசுறவ 
இந்திரன் சந்திரனாருந்தா 
வானத்துக்கும் பூமிக்குமில்ல குதிப்பா 
வறண்ட காட்ட வச்சுகிட்டு
வாய்கிழிய பேசறவள 
அடக்க ஒருத்தி வராமலா போவா'ளென 
ஏச்சும் பேச்சுமாக
வசைபாடி கலைந்தனர் 

பதிலுக்கு ஆத்தாகாரி 
'உலகயழகிகள பெத்துட்டதா 
நினைப்பு தான் இதுகளுக்கு  
இதுக வாய அடக்கவே 
சீமையில் பொறந்து வளந்த 
செவப்பான  பொண்ண 
எம்புள்ளைக்கு கட்டலைனா 
ஒருத்தனுக்கு நான் முந்தி விரிக்கல'னு 
விசனத்திலும் கோபத்திலும் 
சபதம் தன்னை எடுத்தாள்
காத்தவராயனை பெத்த
கலியுக கண்ணகி ரங்கம்மா

ஊராரருக்கு தகரமென்றாலும் 
பெற்றவளுக்கு பிள்ளை தங்கமாச்சே 
வண்டவாளம் தண்டவாளம் ஏறினாலும் 
பெத்தவளுக்கு பிள்ளை உசத்தி தானே 

ஊராரின் நினைப்பும்
ரங்கம்மாவின் ஆசையுமாக
கரிசலில் விளைந்த
மென்பருத்திப் பூவாய் 
கருவானில் உதித்த கீற்றாய் 
ஊருக்கே வெளிச்சத்தை
அள்ளித் தரும் வெண்ணிலவாய் 
ஆயிரம் கனவுகளை
ஆசையாய் கண்ணில் தேக்கி 
வாழ்க்கையாய் வாழ நினைத்து 
மென்பட்டு மேனி கொண்டவளாம்
பருத்தி நிறத்தவளாம் 
செவ்வந்தி என பெயர் கொண்ட
பெண்ணொருத்தி வந்தாளாம்

(கதை தொடரும் - புதன் தோறும்)

#ad

           

             

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    இனிய நட்பிற்கு (சிறுகதை) – ✍ ப. சிவகாமி

    சிதம்பர ரகசியம் (சிறுகதை) – ✍சியாமளா வெங்கட்ராமன்