சஹானா
சிறுகதைகள்

இனிய நட்பிற்கு (சிறுகதை) – ✍ ப. சிவகாமி

#ad 

                      

             

ன்பிற்கினிய நட்பிற்கு,

உன் தோழி எழுதுவது, இங்கு நான் நலம். அங்கு  உன் நலத்தையே நாடுகிறேன்

நிற்க! உன்னோடு சில வார்த்தைகள்:

அடுத்தவர் கடமையில் குறை காணும் போது சரி பாதி உறவும் சிக்கலாகிறது. எதிர்பார்ப்புகள் அனைத்தையும் ஈடேற்றும் கருவியாக இருக்கும் வரை வாய் நிறைய வாழ்த்திடும் தொப்புள் கொடி உறவு கூட சுதந்திரமாய் நீ பறக்கத் துணிந்தால் உன் சிறகுடைக்கத் தயங்குவதில்லை. 

அதன் இழுப்புகளுக்கெல்லாம் இணங்காத போது, வசவுகளும்  சாபங்களும் சுற்றங்களின் பரிசாக….

நெடுந்தொலைவில் இருந்தாலும், உன் நினைவைச் சுமந்து, எண்ணங்களால் மட்டுமே உன்னோடுப் பேசி, முகம் வாடிப் போனாலே ஓடோடி வந்துத் தோள் கொடுக்கும் தோழன் தம்மருகில் இல்லையே என்று, சுற்றம் ஆயிரம் சூழ்ந்திருந்தாலும், தனிமையில் தவிக்கும் நட்பை நினைப்பாயா?

பிறவிப் பெருங்கடலைக் கடக்க உதவும்  நட்பெனும் நாவாய்…! என சிறைப்படுத்தத் தொடங்கியதோ சிலச் சில்லறைப் பழக்கங்கள்

மெல்ல மெல்ல அது உன்னைச் செல்லரித்துக்  கொண்டிருப்பதை நினைக்கும் போது சிதைந்து போகிறது என் நெஞ்சம்

தாயால் புறக்கணிக்கப்பட்டு, தந்தையால் தவிர்க்கப்பட்டு, குருவால் சபிக்கப்பட்டு, தெய்வத்தாலும்  வஞ்சிக்கப்பட்ட தர்மத்தின் தலைமகனாம் கர்ணனைக் கௌரவப்படுத்தியது நட்பு மட்டும் தான்

 ஆகையால், மாதா பிதா குரு தெய்வம் என்ற நால்வருக்கும் முன்னால், வைத்து வணங்கப்பட வேண்டிய புனிதமன்றோ நட்பு

எத்தனைப் பிறவி எடுத்தாலும், உன் நட்பென்னும் வரம் கிடைக்க வேண்டும்.

எனக்கு முன் நீயோ உனக்கு முன் நானோ  என்றில்லாது, அவரவர் கடமைகளை ஓரளவுக் கடந்த பின், இருவருக்குமான முற்றுப்புள்ளியை இறைவன் ஒரே நாளில் இட வேண்டும்.

அது வரை உன்னைச் சிறைப்படுத்தி இருக்கும் தேவையற்ற பழக்கங்களை விரட்டிக் கொல்ல முயற்சி செய்

பாரி _கபிலர், அதியன்_அவ்வை, சோழன்_ஆந்தையார்  வரிசையில் நம் நட்பையும் நிலைபெறச் செய்

இப்படிக்கு,

உன் நலம் நாடும்   

அன்புத்தோழி.

கடிதத்தை எழுதி முடித்து உறையிலிட்டு, என் கணவரிடம் கொடுத்து, நண்பர் செந்திலின் விலாசத்திற்குப் பதிவுத் தபாலில் அனுப்பி விடச் சொன்னேன்.

தற்போதையச் சூழலில் அலைபேசி, வாட்ஸ்அப், இ-மெயில், ஃபேஸ்புக், ட்விட்டர் என உடனடித் தகவல் தொடர்புக்குப் பல வழிகள் இருக்கும் போது கடிதமாவது அஞ்சலாவது என நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது

 இருப்பினும் நான் கடிதம் எழுதுவதற்கும் காரணம் இருக்கிறது  தோழர்களே….!

னது நண்பர் செந்தில். அவர் நிறமென்னவோ கருப்பு. காட்சிக்கும் கரடு முரடு. ஆனால் உள்ளமோ தூய வெள்ளை

பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் நிறுவனத்தில் ஒரு குழுவாகப் பணியமர்த்தப்பட்ட பதின்மரில் நான் உட்பட அவரும் ஒருவர்.

ஒரு விஷயம் என்னவெனில், அக்குழுவில் நான் மட்டுமே பெண்

மூன்றுமாதப் பயிற்சிக்குப் பின், வெவ்வேறுக் கிளைகளில் பணியமர்த்தப்பட்டோம். என்றாலும் கூட, நாங்கள் அனைவரும் அவ்வப்போதுச் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்புக்களும் ஏற்படத் தான் செய்தது.

அவ்வாறுச் சந்திக்க நேரிடும் பொழுதெல்லாம், அனைவருமே என்னுடன் நட்புடன் பேசுவார்கள், நலம் விசாரிப்பார்கள்.

ஆனால் செந்தில், என்னை தவிர்த்து மற்ற அனைவரிடமும் நன்றாகவே நட்பு பாராட்டுவார்

‘பெண்களிடம் பேசக் கூச்சப்படும் சுபாவம் உள்ளவர் போல’ என நினைத்துக் கொள்வேன்

‘அதுவே உண்மையும் கூட’ என, பின்நாட்களில் அவரது மனைவி கவுசல்யா சொல்லத் தெரிந்து கொண்டேன்

இப்படியேச் சுமார் மூன்று ஆண்டுகள் கடந்திருந்த நிலையில் நான், செந்தில், கதிர் மூன்று பேருக்கும் தொழில் நிமித்தம் பகுதி நேர உயர்கல்விக் கற்க வேண்டியக் கட்டாய நிலை (எங்கள் மூவரைத் தவிர ஏனையோர் உயர்கல்வியை முடித்திருந்தனர்)

மற்ற இருவருக்கும் பிரச்சினை இல்லை. என் நிலை தான் கவலைக்கிடம். காரணம் வேலைநிமித்தம் என் கணவர் அயல்நாட்டில் இருந்ததால், வீட்டு வேலைகள் துவங்கி, என் இரு மகன்களின் பராமரிப்பு, அவர்களின் படிப்பு, மற்ற பிற பணிகள் என, பல சுமைகளுடன் இருந்தேன் நான் 

இந்நிலையில் நான் எப்படி மேற்கல்வி பயில இயலும்?

அதோடு மட்டுமல்லாமல், நான் பயில வேண்டியப் பயிற்சி மையமோ எனக்குத் தெரிந்திராத, நான் இதுவரைச் சென்றிராத புறநகர் பகுதி.

அங்குச் சென்று வர பேருந்து வசதியும் இல்லை, எனக்கு இருசக்கர வாகனமும் ஓட்டத் தெரியாது.

பயிற்சிப் பெறவில்லையெனில், நான் மட்டும் தனித்து விடப்படுவேன். அதனால் பின்னாட்களில் எனக்கு நஷ்டம் ஏற்படலாம்.

என்ன செய்வதென்ற குழப்பமும் கவலையும் என் நிம்மதியைக் கெடுத்து கொண்டிருந்தது, நாட்களும் கடந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் ஓர் நாள் காலை , என் அலைபேசி ஒலித்தது

உயிர்பித்து, “ஹலோ” என்றேன்

எதிர்முனையில், “மேடம் நான் செந்தில் பேசறேன். ஹையர் ஸ்டடி பற்றி என்ன முடிவு பண்ணீங்க? அட்மிஷனுக்கு நாளை தான் கடைசி நாள். கதிர் நேத்தே ஜாயின் பண்ணிட்டான். நான் நாளைக்கு ஜாயின் பண்ணப் போறேன். அப்புறம் நம்ம குரூப்ல நீங்க மட்டும் தனித்து விடப்படுவீங்க.

அதனால உங்ககிட்ட அட்மிஷனுக்குத் தேவையானப் பணம் இருந்தாலும் சரி. இல்லைன்னாலும் பரவாயில்லை. நீங்க நாளைக்கு கிளம்பிட்டு இந்த நம்பருக்குப் போன் செய்யுங்க. நான் வந்து உங்களை அழைச்சுக்கிறேன். ரெண்டு பேரும் நாளைக்கு ஜாயின் பண்ணிடுவோம்” என்று படபடவென கூறியதுடன், அழைப்பை துண்டித்து விட்டார்.

‘பேசியது செந்தில் தானா?’ சில வினாடிகள் திகைத்துப் போய் அப்படியே நின்றுவிட்டேன்

‘சூழ்நிலை காரணமாக மேற்கல்வி பயில முடியாதோ? என்ற என் கவலைக்குக் கடவுளின் தீர்வா இது? செந்திலை, அதாவதுப் பிரிதொரு ஆடவரை நம்பி இந்த காரியத்தில் இறங்கலாமா? தினசரி வகுப்புக்குச் செல்ல வேண்டுமே’ என்றெல்லாம் பலவாறு யோசித்துக் குழம்பிப் போனேன்

கதிர் என்னோடு நன்றாகப் பேசுவார் என்றாலும், ‘கோர்ஸ் ஜாயின் பண்ணப் போறேன்’ என தகவல் சொன்னதோடு சரி! ஆனால் செந்தில்? முதன்முதலில் பேசினாலும், எவ்வளவு அக்கறை அவருடைய சொற்களில்

துணிந்து மறுநாள் அவரோடு போய் கோர்ஸ் ஜாயின் செய்தது மட்டுமல்ல, தினசரி ஸ்டடி சென்டர் எக்ஸாம் சென்டருக்கு சென்றதோடு, கோர்ஸ் முடித்து பிரவிஷனல் வாங்கியது வரை, அவரது உதவியின்றி என்னால் முடிந்திருக்காது

இடைப்பட்ட அந்த இரண்டு ஆண்டுகளில் ஒருவர் மீது ஒருவருக்கு இருந்த மதிப்பும் மரியாதையும் வளர்ந்திருந்ததோடு, இருவரது குடும்பங்களும் நெருங்கிய நட்புறவுடன் வளர்ந்து, விழுது விட்டிருந்தது.

பாலியல் குற்றங்கள் பெருகிவிட்ட இக்காலத்தில், பத்து நிமிடங்கள் ஆணோடு ஒரு பெண் தனியாகப் பயணிக்க நேர்ந்தால் அவளுக்கு ஏற்படும் இன்னல்கள் சீண்டல்கள் அவமரியாதைகளைப் பற்றியச் செய்திகளை படிக்கும் பொழுதும் கேட்கும் பொழுதும், இவனுங்களைச் சுட்டுப் பொசுக்க வேண்டும் என கோபம் கொந்தளிக்கக் கூக்குரலிடும் என் மனம், செந்தில் சாரை நினைத்துப் பெருமிதப்படவேச் செய்கிறது

வேடதாரிகளுக்கு மத்தியில் செந்திலின் உண்மையும் நேர்மையும் நினைக்குந்தோறும் என்னை மகிழ்ச்சியடைய வைக்கிறது.

ஆகவே தான், என் மனதின் மதிப்புமிக்க உயரத்தில் அவரை இருத்தியிருக்கின்றேன்

அப்படிப்பட்டவரை, சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புச் சந்தித்த போது, மிகவும் மெலிந்திருந்தார்.

காரணம் விசாரித்த போது பக்கத்திலிருந்த பிரதாபன் சார், “அவருக்குள் இரண்டு மூன்று ஃபேக்டரி வெச்சிருக்காருங்க” என்றார்.

“என்ன சார் சொல்றீங்க? எனக்குப் புரியலையே!” என்றேன்.

“ஏற்கனவே ஸ்மோக் பண்ணுவாரு. இப்போ  சுகரும் பிரஷரும் சேர்ந்துடுச்சு”  என்றார் பிரதாபன்.

நான் செந்திலைப் பார்த்து, “அதுக்குள்ள சுகர் பிரஸர் எல்லாம் வந்துடுத்தா? கொஞ்சம் உடல் நலத்தையும் கவனத்தில் வைங்க சார். ப்ளீஸ்” என்று சொல்லி விட்டு வந்தேன்.

இயந்திரப் பொறியாளரான செந்தில், கல்லூரி காலத்திலேயே நண்பர்கள் மூலம் புகைப்பழக்கத்திற்கு ஆளாகி இருந்தாரென்றும், பிறகு சில ஆண்டுகள் கப்பலில் பணியாற்றிய போது மது அருந்தும் பழக்கமும் அவருக்கு ஏற்பட்டிருந்தது என்றும் நண்பர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருந்தேன்

எப்போதாவது இது பற்றி அவரிடம் கடிந்து பேச ஆரம்பித்தால், நைஸாக நழுவி விடுவார். என்ன செய்ய?

மீபத்தில் அவரிடம், “நல்ல அலைபேசி ஒன்றிற்கு ஆன்லைனில் ஆர்டர் செய்து விடுங்கள்” என்று சொல்லியிருந்தேன்

அந்த கைபேசி எனக்குக் கிடைத்து விட்டது என்றும், மாடல் நன்றாக இருக்கிறது என்றும் அவருக்கு தகவல் சொல்ல அழைத்த போது, அவர் மனைவி கவுசல்யா தான் பேசினார்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாங்கள் இருவரும் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தோம்

அப்போது அவரது பேச்சின் ஊடே அவரது கணவரைப் பற்றிய, அவரது உடல்நலம் சார்ந்த வருத்தங்கள் மிகுதியாக தென்படவே, நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

ஒரு நல்ல நண்பர், நல்ல மனிதநேயர், கள்ளம் கபடம் இல்லாத ஓர் உயர்ந்த ஆன்மாவின் நலன், நமக்கும் முக்கியம் தானே

நேரிலோ போனிலோ இது பற்றிப் பேச்செடுத்தாலே, “மேடம் எனக்கு வேலை இருக்கு கிளம்பட்டுமா?” என்றோ, “மேடம் அப்புறம் பேசுறேன்” என்றோ நழுவிவிடுபவரை என்ன தான் செய்வது?.

‘அவரது நேசமும் நட்பும் எனக்குக் கிடைத்தற்கரிய வரம் என்றும், என் மதிப்பிற்குரிய மிகச் சிறந்த மனிதர் அவர் என்பதையும், அவரது நலன் பலருக்கும் நலம் பயப்பன என்பதையும் எப்படித் தான் நான் அவருக்கு வெளிப்படுத்துவது?’

அதனால் தான் இதயத்தின் உணர்வுகளை கையெழுத்துகளாக்கி, கடிதம் மூலம் வடித்தனுப்புகிறேன்

அன்பு அகிலத்தையே மாற்றியமைக்கும் அற்புத சக்தி வாய்ந்த கருவியல்லவா?

என் நண்பரின் மனதிலும் செயலிலும் மட்டும் மாற்றத்தை நிகழ்த்தாதா என்ன?

எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றேன், நல்ல பலனே கிடைக்குமென்று

#ad

              

                  

Similar Posts

2 thoughts on “இனிய நட்பிற்கு (சிறுகதை) – ✍ ப. சிவகாமி
  1. நல்ல பலன் கிட்டட்டும். வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: