sahanamag.com
சிறுகதைகள்

கல்லூளிமங்கன் (சிறுகதை) – ✍ தி. வள்ளி, திருநெல்வேலி

ஜூலை 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

கும்பகோணத்தில் என்  சினேகிதியின் பெண் கல்யாணம். முகூர்த்தம் முடிந்து, மணமக்களை ஆசீர்வாதம் பண்ணி விட்டு இறங்கும் போதுதான் கவனித்தேன்.

கோகிலா மாமி – ரொம்ப வருஷத்துக்கு முன் பார்த்தது. ஒரு சந்தோஷ பரபரப்பு தொற்றிக் கொள்ள, அவள் அருகில் போனேன்

“மாமி” என்றழைக்க, என்னை ஏறிட்டு பார்த்தவள் அப்படியே அதிர்ந்து போனாள்.

“டீ… அஞ்சனா… என் தங்கமே…” என்றவள் அருகிலிருந்தவர்கள் வெட்கப்படும்படி என் இருகன்னங்களிலும் முத்தமிட்டாள்.

“பார்த்து எவ்வளவு நாளாச்சுடி, நல்லா இருக்கியா? உன் ஆத்துக்காரர், பெண்கள் எல்லாம் சௌக்கியமா?” என்றாள் வாஞ்சையோடு.

“நல்லா இருக்காங்க மாமி! பொண்ணுங்க ரெண்டும் யு.எஸ்’ல, ஒருத்தி கல்யாணமாகி மாப்பிள்ளையோட இருக்கா… சின்னவ எம்எஸ் படிக்கிறா. மாமி உங்க பையன்ங்க நாலு  பேரும் நல்லா இருக்காங்களா?”

“நல்லா இருக்காங்கடி, இந்த மேள சத்தத்தில  பேசுறது கஷ்டமா இருக்கு. வாடி சித்த நாழி வெளில உட்கார்ந்து பேசுவோம்” என்றாள்.

எனக்கு 15 வயதிருக்கும், மாமி எங்க வீட்டுக்கு முறுக்கு சுத்த வருவா. எங்க ஆச்சிகிட்ட அவ்வளவு சீக்கிரம் யாரும் நல்ல பெயர் வாங்கி விட முடியாது. மாமியை மட்டும் ஆச்சிக்கு ரொம்ப பிடிக்கும்.

மாமி முறுக்கு சுத்த மட்டுமில்லாம, ஊறுகாய் போட,  மிளகாய் வத்தல் காம்பு ஆய்ந்து வைக்க, நெல் அவிக்க, அவல் இடிக்க என எல்லா வேலையிலும் ஆச்சிக்கு அசிஸ்டன்ட் கோகிலா மாமி தான்.

மாமா ஏதோ வேலை பார்த்து வந்தாலும் ஆச்சிக்கு உதவியது, அவள் மகன்களை வளர்க்க பெரிதும் உதவியது. ஆச்சி பணமா அதிகமாய் கொடுக்காவிட்டாலும்  கேப்பை, அவல், குருணை அரிசி, புளி, மிளகாவத்தல் மற்றும் என கிராமத்திலிருந்து வரும் விளைபொருள்கள் என்று தாராளமாக கொடுப்பா. மாமி வெள்ளந்தியான மனுஷி. எங்கள் வீட்டிற்கு வரும்போது, கடைசி மகனை மட்டும் கூட்டி வருவாள்.

“டேய் கல்லூளிமங்கா… சேட்டை பண்ண கூடாது” என்று அதட்டுவாள். அவனும் தேமேன்னு  உட்கார்ந்திருப்பான்.

எப்போதும், “கல்லூளிமங்கா.. கல்லூளிமங்கா… “என்று அவனை கூப்பிடுவதை பார்த்து, “ஏன் மாமி ஊர்ல இத்தனை அழகான பேர் எல்லாம் விட்டுட்டு இப்படி கூப்பிடுறீங்களே…” என்பேன்.

மாமி முறுக்கு சுற்றிக் கொண்டிருக்க, அம்மா வெந்தெடுத்துக் கொண்டிருந்தாள். நான் கேட்டதற்கு சிரித்துக் கொண்டே, “மூணு புள்ளையாயிடுச்சேன்னு ஜாக்கிரதையாகத்தான் இருந்தேன். என்  மாமியா சொல்லுவா, சேலையும், வேட்டியும் பக்கத்து பக்கத்துல காய போட கூடாதுன்னு. விதி யார விட்டுது, இது நாலாவதா  வயத்தில வந்ததுடுத்து. நானும் என்னென்னவோ செஞ்சு பார்த்தேன். குங்குமத்தைக் கரைச்சுக் குடிச்சேன், நெல்அவிச்ச தண்ணீயக் குடிச்சேன். அரைகிலோ எள்ளு இடிச்சு வெல்லம் சூடுன்னு அதையும் சேர்த்து தின்னேன், முழுசா நாலு பப்பாளிப்பழம்… என்னென்னவோ செஞ்சு பார்த்தேன்.  வயறுப் புண்ணானது  தான் மிச்சம்.  இந்த கல்லூளிமங்கன் மசியல. இது  எதுக்கு பொறந்ததுன்னு அதுக்கும் தெரியல எனக்கும் தெரியல” என்றாள் சலிப்பாக.

அதன் பிறகு நான் வடக்கே போய்விட, 20 வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் கோகிலா மாமியை பார்க்கிறேன். பாட்டியும் அம்மாவும் இறந்த பிறகு, மாமி வருவதில்லை என்று அப்பா சொல்லியிருந்தார்.

“மாமி! மாமா, புள்ளைங்க எல்லாரும் சவுக்கியமா”

“மாமா போய்ச் சேர்ந்து  பத்து வருஷங்களாச்சு! உங்க அம்மா, பாட்டி இருந்தவரை எனக்கு ஒரு குறையும் இல்லடி. அவா புண்ணியத்துல என் வீடும் செழிப்பா இருந்தது. குழந்தைகளும் நன்னா படிச்சா. பெரியவன் ஸ்காலர்ஷிப்ல சி.ஏ. படிச்சு தனியா  பிரக்டிஸ் பண்றான். அடுத்தவன் செல்வம் ஐகோர்ட்டில் பெரிய லாயர்.  கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் வச்சிருக்கான். சென்னையில் ஒரு பெரிய வீடு கட்டியிருக்கான்”

“நீங்க கஷ்டப்பட்டதுக்கு பிள்ளைங்க நல்லா செட்டிலாயிட்டாங்க!  ஒவ்வொரு வீட்டிலும் கொஞ்ச கொஞ்ச நாள் இருந்தாலே  போதுமே! ராஜாத்தியா நாளைக் கடத்திடலாம்.  நீங்களோ துருதுருன்னு ஏதாவது செஞ்சுகிட்டிருப்பீங்க”

“அங்க தாண்டி நீ தப்புக்கணக்கு போட்டுற! பிள்ளைகள கல்யாணம் பண்ணி கொடுக்கிற வரை பிரச்சனையில்லை. மூத்தவன் பொண்டாட்டிக்கு நான் கிச்சனுக்கு போனாலே பிடிக்காது. மாடர்ன் சமையல் எனக்கு தெரியாதும்பா..” மாமியின் கைமணம் அறியாமல் ஒருத்தி இப்படியா சொல்லுவாள் என்று வியந்தேன்.

“இரண்டாவது மருமகள் தெலுங்கு பொண்ணு, கேட்கவே வேண்டாம். காதல் கல்யாணம்… ஒட்டவே மாட்டாள். மூன்றாவது மருமகளாவது சொந்தத்தில் இருக்கட்டுமேயென்று அண்ணன் மகளையே பண்ணி வைச்சேன். நான் என்ன இளிச்சவாயா?  நான் மட்டும் தான் உங்களை பார்க்கணுமா?”ன்னு சண்டை போட்டா. அண்ணன் தம்பிகளுக்குள்ள என்னால சண்டை. அதனால நான் இங்க தஞ்சாவூர் பக்கத்துல முதியோர் இல்லத்துல சமையல் பண்ணி கொடுக்க போறேன்னு வந்து சேர்ந்தப்ப யாருமே எதிர்க்கலை. அப்படியே இங்கேயே தங்கிட்டேன். யாரும் கண்டுக்கல..”

“மனசு கஷ்டமா இருக்கு மாமி!” என்று கண்கலங்க…

“இருடி அஞ்சனா… அவசரப்படாதே… சினிமால வர்ற டுவிஸ்ட் மாதிரி என் கதையிலும் ஒரு திருப்பம். என் கடைசிப் பையன் ஞாபகம் இருக்கா…”

“கல்லூளிமங்கன்”

“ஆமாண்டி அவனேதான்! அவன டெல்லில உள்ள என் அக்கா, அத்திம்பேர் கூட்டிண்டு போயிட்டா. நல்ல படிச்சு சிவில் என்ஜினியர் ஆயிட்டான். நான் பாத்து, பாத்து வளர்த்த மத்த பிள்ளைங்ககிட்ட நான் எதிர்பார்த்த நல்ல குணங்கள் வரல. ஆனால் இவன் அப்படி இல்லைடி.. நேர்மை, உழைப்பு, விடாமுயற்சி, இரக்ககுணம் அம்புட்டும் இருக்கு எம்புள்ளைக்கு.

சென்னையில் ஒரு மால் கட்ட வந்தவன், என்னைப் பார்க்க வந்தான். நான் அண்ணன் வீட்ல இருக்கறதா நினைச்சவன், முதியோர் இல்லத்தில இருக்கறதப் பாத்து ஷாக்காயிட்டான். எந்த பிள்ளையை,  குடும்பமே ஒதுக்கி வைச்சமோ… அந்தப் பிள்ளைதாண்டி என்னை தனி வீட்டில வைச்சு தங்கமா தாங்குறான். அதேநேரம் வயசானவங்களுக்குன்னு ஒரு இல்லமே கட்டிக் கொடுத்தான். அந்த இல்லத்தில் தங்க மட்டும் அனுமதிக்க மாட்டேன்னு சொல்லிட்டான் அந்த கல்லூளிமங்கன். என்ன பாத்துக்க சம்மதிக்கிற பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு பிடிவாதமா இருக்கான்” என்றவள்,  கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தோடியது.

“மாமி! இவன் எதுக்கு வந்து பிறந்திருக்கானோன்னு  நீங்க எப்பவும் சலிச்சுக்குவீங்க, இப்ப புரியுதா கடைசி காலத்துல உங்களை சந்தோஷமாக வைச்சிக்கத்தான்  அந்த பிள்ளை பிறந்திருக்கு மாமி”

“நீ சொல்றது ரொம்ப சரிடி” என்ற மாமி  முகம் பூவாய் மலர.. என்னை நெகிழ்வோடு கட்டிக் கொண்டாள்.

(முற்றும்)

Similar Posts

2 thoughts on “கல்லூளிமங்கன் (சிறுகதை) – ✍ தி. வள்ளி, திருநெல்வேலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!