டிசம்பர் 2021 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
“மகேசு மகேசு சீக்கரம் வாடீ…ஆனந்து வர்ற நேரமாச்சு. அத வுட்டா 9 மணிக்குதா பஸ்ஸூ. இல்லைனா மேட்டுக்கு நடந்து போய் தா பஸ்ஸேரனும்” என்று கத்திக் கொண்டிருந்த போதே, மகேஸ்வரி இயல்பான தன் கருப்பழகை பான்ட்ஸ் பவுடரால் அழித்துக் கொண்டிருந்தாள்.
“கேக்குதா இல்லையாடி?” என்று மீண்டும் காளியம்மாவின் குரல் குடிசைக்குள் குனிந்து நுழைந்து நிமிர்ந்து நின்றது.
“அவ்ளதா, அவ்ளதா..முடிஞ்சு..!”என்றாள் மகேசு.
“அப்றம் பாப்பா! வெயில்ல சுத்தாதீங்க, உங்களுக்கு புடிச்ச வெங்காய ரசமும் கருவாட்டு தொக்கும் வெச்சிருக்கேன் சாப்ட்டு படுங்க. சாய்ந்தரம் அம்மா வந்து டாக்டருகிட்ட கூட்டுப் போறேன். ம்ம் சமத்து..” என நெற்றியில் முத்தம் வைக்க மகஸ்வரியின் உதடு நெருங்கிய போது குழந்தை இருமினாள்.
மகேசும் காளியம்மாளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, மனமே இல்லாமல் வேலைக்கு கிளம்பினார்கள்.
குணசேகர மேஸ்திரியிடம் தான் காளியம்மாவும் மகேஸ்வரியும் சித்தாள் வேலை செய்கின்றனர். அவர் கொஞ்சம் கடுகடுப்பான முகம் கொண்ட கருணை பட்சி.
கடும் வெயிலாலும் குளிராலும் அசைக்க முடியாத மகேசின் மரத்துப் போன உடம்பு, அன்று ஏனோ குழந்தையின் சிறு இருமலுக்கு சற்று ஆடித் தான் போயிருந்தது!
ஒரு 10 மணி கூட ஆகியிருக்காது,
“குணாண்ணே வீட்டுக்கு போறேன்..பாப்பாவுக்கு மேலுக்கு முடியல, மனசே ஆறல ணே”
யோசித்து விட்டு, “பெத்தவ கூட இப்டி பாத்துருப்பாளான்னு தெரில மகேசு? சரி போய்ட்டு நாளைக்கு மறக்காம வந்துரு. காங்கிரட் போடணும் வேலை அதிகம், ஆள் கமியாதா இருக்குது” என்று சொல்லி, தன் பாக்கெட்டுக்குள் கை விட்டு 100 ரூபாய் நோட்டுகளில் ஒன்றை அவள் கைகளில் கொடுத்து விட்டு, “படி காசுல கழிச்சுக்குறேன்” என்றார் குணசேகரன்
அந்த கூட்டமில்லாத கடைத்தெரு, காலி சீட்கள் அதிகம் நிரம்பிய பஸ், மிதமான வெய்யில் ஆகியவைகளை தாங்கிய அந்த 10 மணி பொழுது அவளுக்கு ஏதோ ஒரு வலி நிறைந்த உணர்வை கொடுத்து கொண்டிருந்தது.
மார்க்கெட்டை அந்த பஸ் கடக்கும் போது மல்லிகை பூ, வாழைக்காய் பஜ்ஜி, வாட்டிய சோளக்கருது, தேங்கிய சாக்கடை, வெங்காயம் போன்ற அனைத்து வாசங்களும் இவளை நெருங்கினாலும், சேட்டு கடை பாசுந்தியின் வாசம் மட்டும் பழைய நினைவுகளை தூண்டியது.
இன்று எல்லோராலும் கனிவாக மகேஸ்வரி, மகேசு என்று அழைக்கப்படும் இவளது இயற்பெயர் மகேஷ் குமார்.
தன் 10 வயது வரை அவனின் வாழ்க்கை இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் நகர்ந்தது
அந்த வயதில் தான் அவன் தன் பாசமிகு தந்தையை இழந்தான். அவனது தாயும் பாசமானவள் தான், ஆனால் அது தன் 11வது வயதில் ஏற்பட்ட உடற், செயற் மாற்றம் எற்படும் வரை மட்டுமே
இரண்டு மூன்று ஆண்டுகள் அவள், ‘அவனாகவே’ தாக்குப் பிடித்தாள். ஆனால் அதன் பிறகு முடியவில்லை. பின் வெளியே வந்து உடல், உடை எல்லாம் மாற்றிய அவள்; பெயரில் மட்டும் அப்பாவின் பாசத்தால் மகேசாகவே மிஞ்ச ஆசைப்பட்டாள்.
எங்கோ போய் எப்படியோ அலைந்து திருநங்கைகள் சங்கத்தில் சேர்ந்து போலியான மகிழ்ச்சியில் ஆர்பரித்த காலத்தில், இந்த சமூகம் அவளுக்காக விரித்த வேலைவாய்ப்பு வலை இரண்டே இரண்டு தான்..!
- கைதட்டி யாசகம் பெறுவது
- பாலியல் தொழில்
இவளது பயமோ அல்லது அருவருப்போ..எது என்று தெரியாது! இவளை முதல் வேலையையே தேர்ந்தெடுக்க வைத்தது.
அப்படியான ஒரு நாளில் ரோட்டோர சேட்டு கடை ஒன்றில், “மீசை தான் ஆணின் திமிர்” என்று யாரோ சொன்னதை நம்பி, தன் முகத்திற்கு சற்றும் பொருந்தாத “ஹேண்டில் பார்” மீசை வைத்திருந்த நன்கு தமிழ் தெரிந்த ஒரு வடக்கிந்திய வாலிபனிடம் இவள் கை தட்டி யாசகம் கேட்டாள்
அவன் அதை மறுக்க , “கொஞ்சம் ‘பாசுந்தி’யாச்சும் தா பையா” என்று கேட்க
அதற்கு அவன் “வேலை நேரத்துல வந்துட்டு ஜாவ்..ஜாவ்..” என்று கடிந்து கொண்டான்
“பெரிய ஆண்ட பரம்பரை” என்று அவன் மீசையை செல்லமாகவோ, நக்கலாகவோ தெரியாமல் இழுக்க, அவன் இவளை பிடித்து தள்ளினான்
பாய்லர் டேபிளின் முனையில் நெத்தி பட்டு, மயிரிலையில் கண் தப்பி மயங்கி விழுந்தாள்
விழுவதற்கு முன், “Xeroxஆ இருக்கும்போதே இவ்ளோ கொழுப்புனா.., உண்மையிலியே பொண்ணா இருந்தா எவ்ளோ ஆட்டம் போடுவ நீ..?” என்று அவன் சொன்ன அந்த வார்த்தையும், பாசுந்தியின் வாசமும் அவளை விட்டு போகவேயில்லை.
கூட்டம் ஜே ஜே என்று கூடினாலும், பூக்கடை பார்வதி மட்டும் இவளை அரசு மருத்துவமனையில் சேர்த்தாள்.
இந்த நினைவுகளோடு வீட்டுக்கு வந்த மகேசு, பாப்பாவை அள்ளி அணைத்து தோளில் போட்டு பஸ் ஸ்டாப்பிற்கு ஓடி வருவதற்குள் ஒரு பஸ் கடந்து விட்டது.
அடுத்த பஸ்ஸிற்கான அரை மணிநேர இடைவெளியை கடக்க, எண்ணெய் தீர்ந்து போன அவளது காலச்சக்கரம் திக்கி திணறி சுழல ஒரு யுகமே எடுத்துக் கொண்டது…
அவளுக்கான பஸ் ஊர்ந்து வந்தது. “பெரியாஸ்பத்திரி ஒன்னு” என்று டிக்கெட்டை கேட்டு வாங்கி, ஒரு தனி ஜன்னலோர சீட்டை ஆக்கிரமித்துக் கொண்டாள்.
ஆஸ்பத்திரியும் வந்தது. ஆஸ்பத்திரி க்யூவில் நின்று கொண்டிருக்கும் போதே ஒரு பெண்ணின் கை மெதுவாக இவளின் தோளைத் தட்டியது.
அது யாரென்று பார்த்தால், பார்வதி. இன்றும் அதே நன்றி கலந்த புன்னகையை தெளித்து “எப்டியிருக்கீங்க கா? “என்றாள் மகேஸ்வரி.
“நல்லாருக்கேம்பா, இது உன் பொண்ணா? “என்றாள் பார்வதி.
“ஆமாக்கா”
தத்துப் பிள்ளை தான் என்று உறுதியாக யூகித்த பார்வதி, அடுத்த கேள்விக்கு குதித்தாள்.
“பாப்பா பேரென்ன மகேசு”
“பாசுந்தி” என்றாள்
சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings