in

காதலெனும் தேர்வெழுதி❤ (பகுதி 1) – ✍️சஹானா கோவிந்த்

காதலெனும்...❤ (பகுதி 1)

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“வாவ்…” என கண்கள் விரிய நயாகரா நீர்வீழ்ச்சியை ரசித்த புது மனைவியை, ரசித்து நின்றான் ஒரு சீன இளைஞன் 

“டாடி… ரெயின்போ” என குதூகலித்து தந்தையின் சட்டையை இழுத்தது, ஒரு இத்தாலிய குழந்தை 

கைப்பிடியில் இருந்து நழுவ முயன்ற பிள்ளையை, ஸ்ட்ராலரில் கிடத்தி பெல்ட் அணிவித்து விட்டு, தன் செம்பட்டை முடியை சிலுப்பி நிமிர்ந்தாள் ஒரு இளம் தாய்

“ஐயோ இங்க பாருங்களேன், ரெண்டு கண்ணு போதாது. பத்து  குத்தாலம் சேரணும் போல”

“காசிக்கு வந்தும்னு ஏதோ பழமொழி சொல்றாப்ல, உங்க நெல்லைகாரங்களுக்கு எதைப் பாத்தாலும்  குத்தாலம் குத்தாலம்’னுட்டு. அதுக்கு எங்க தலையாறு அருவியை சொன்னாலும் தகும்”

“ஆமா உங்க தேனிக்காரங்க புத்தி எப்பவும் அடுத்தவங்களை மட்டம் தட்றது தான. என் புள்ள படிச்சு அமெரிக்காவுக்கு ஜோலி பாக்க வந்தில்ல என்னை உங்க குடும்பத்து ஜெயில்ல இருந்து வெளிய கொண்டு வந்திருக்கான்” என அவள் கழுத்தை நொடிக்க   

“என்னம்மா… கண்டம் விட்டு கண்டம் தாண்டியும் அப்பாவோட தகறாரா?” என அந்த தம்பதியின் பிள்ளை சிரிப்புடன் வினவினான்  

“உங்கம்மாக்கு என்னோட சண்டை போடலைனா செரிக்காது டா” என மகனுடன் சேர்ந்து சிரித்தார் அவர்

கணவர் சொன்னதைக் கேட்டு பொய் கோபத்துடன் சட்டென திரும்பிய அந்த பெண்மணி, திரும்பிய வேகத்தில் விழப் போக, “ஏய் பாத்துடீ…” எனப் பதறி, மனைவியின் கையைப் பற்றி விழாமல் பிடித்தார் கணவர்  

பெற்றோரின் விளையாட்டு சண்டையையும், அந்நியோன்யத்தையும் ரசித்து நின்றான் அந்த வளர்ந்த பிள்ளை 

பிரமாண்டமான அந்த நீர்வீழ்ச்சி மட்டுமின்றி, அதைச் சுற்றி நிகழும் இது போன்ற காட்சிகளும் இமயாவுக்கு எப்போதும் சுவாரஷ்யமே. அதன் காரணமாகவே, நேரம் கிடைக்கும் போதெல்லாம் இங்கு வந்து விடுவாள்

ஊர் உறவு நட்பு அனைவரையும் விட்டு விலகி வாழும் இந்த வாழ்வில், இது போன்ற காட்சிகள் அவளுக்கு மாறுதலாய் இருப்பதாய் உணர்வாள் 

தன் வேடிக்கையை தொடர்ந்தவளை, “இமயா…” என்ற அழைப்பு கலைத்தது

“இந்த ஊர்ல என்னை பேர் சொல்லி கூப்பிடற அளவுக்கு யாரது?” என முணுமுணுப்புடன் குரல் வந்த திசையில் திரும்பியவள், அங்கு நின்றவனைக் கண்டு ஆச்சர்யத்தில் விழி விரித்தாள் 

ஏழு வருடம் கடந்தும், அவனிடம் பெரிய மாறுதல் இருக்கவில்லை. சற்று எடை கூடி, அதன் விளைவாய் கொஞ்சம் நிறம் கூடி, அதே முகம் மாறா சிரிப்புடன் நின்றவனை காண, பேச்சே வரவில்லை அவளுக்கு 

“ஹே இமயா… ஆர் யு ஓகே?” என்று கேட்டபடி நெருங்கியவன், அவள் முகத்தின் முன் சொடக்கு போட

அதில் மீண்டவள், “ஓ மை காட்… விஷ்ணு? வாட்  எ சர்ப்ரைஸ்” என மகிழ்ச்சியுடன் ஒலித்தது இமயாவின் குரல் 

“என்னாலயும் நம்ப முடியல, பிளசன்ட்  சர்ப்ரைஸ்” என அவளின் மகிழ்வை பிரதிபலித்தான் விஷ்ணு 

“நீங்க எப்படி இங்க? இங்க ஒர்க் பண்றீங்களா? எப்ப கனடா வந்தீங்க?” என மூச்சு விடாமல் பேசியவளை தடுத்தவன்   

“இந்த மூச்சு விடாம பேசுறத இன்னும் விடலியா?” என்றான் கேலியாய் 

“இந்த கேள்விய நீங்களும் மாத்தலயா?” என்றாள் அவளும் கேலியாய் 

கல்லூரி நாட்களின் நினைவுகள் இருவருக்கும் மேலெழ, ஒரே நேரத்தில் வாய் விட்டு சிரித்தனர்

கண்ணில் நீர் வர சிரித்தவள், “இப்படி சிரிச்சு எவ்ளோ நாளாச்சு” எனவும், யோசனையுடன் அவள் முகத்தில் பதிந்தது அவனது விழிகள் 

“சொல்லுங்க… நீங்க எப்படி இங்க?” என கேள்வி படலத்தை மீண்டும் ஆரம்பித்தாள் இமயா

“நான் சிகாகோ வந்து ஏழு வருசமாச்சு. அதே ஆபிஸ், அதே வேலை, அதே ஊர்னு போர் அடிச்சுடுச்சு. அதான் இங்க கனடாவுக்கு மாறலாம்னு ஒரு இன்டெர்வியூக்கு வந்தேன்”

“இன்டெர்வியூ என்னாச்சு?” என ஆர்வத்துடன் இமயா கேட்க 

“சக்ஸஸ்” என கட்டை விரலை உயர்த்தி காண்பித்தான் விஷ்ணு 

“வாவ்…கனடால எங்க?” 

“இங்க ஒன்டேரியோ தான்”

“ஒன்டேரியோல எங்க?”

“மிசிசாகா”

“வாட்?” என அதிர்ந்தாள் அவள் 

“ஏன்? விஷ்ணுனு பேர் வெச்சவங்களுக்கு மிசிசாகால வேலை தர மாட்டாங்களா?” என கேலியுடன் அவன் கேட்க 

“அதில்ல… நானும் மிசிசாகால தான் இருக்கேன், அதான்” என்றாள் மகிழ்வுடன் 

அவளின் மகிழ்வை உணர்ந்த போதும், வேண்டுமென்றே, “ஏன் மேடம், நீங்க இருக்கற ஊர்ல நான் இருக்கக் கூடாதா? ஏதாச்சும் நாட்டாமை தீர்ப்பா எனக்கு தெரியாம?” என மீண்டும் அவன் கேலியில் இறங்க, முறைத்தாள் அவள் 

“சரி சரி நோ டென்ஷன், ஜஸ்ட் கிட்டிங்” என்றான் சமாதானமாய் 

“எந்த கம்பெனி?” என அடுத்த கேள்வியை கேட்டாள் 

அதற்கு விஷ்ணு சொன்ன பதிலில், இமயா மயங்கி விழாதது தான் குறை 

அசையாமல் நின்றவளை கண்டு, “ஏய் என்னாச்சு?” என விஷ்ணு உலுக்க

“ஏதோ சினிமால வர்ற மாதிரி இருக்கு” என்றாள் மெல்ல 

“என்ன சொல்ற?” என்றான் புரியாமல் 

“நானும் அங்க தான் ஒர்க் பண்றேன்” என்றவள் கூற, அவன் விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்தது 

“ரியலி?” என்றவன், “வாவ்… மறுபடி ஒரே கேம்பஸ்ல இருக்கப் போறமா?”

“காலேஜ்ல நீங்க சீனியரா இருந்துருக்கலாம், ஆனா இங்க ஆபிஸ்ல நான் தான் சீனியர்” என்றாள் குறும்புச் சிரிப்புடன் 

“ஓ… ரேக்கிங் பண்ணுவீங்களோ?” என்றான் பொய்யாய் பயந்தவன் போல் 

“ம்… அப்ப நீங்க செஞ்சீங்கள்ல?” என கேலி கலந்த மிரட்டலாய் ஓலித்தது அவள் குரல் 

மீண்டும் இருவரும் ஒன்றாய் சிரித்தனர் 

“அது சரி, என்ன ரோல் விஷ்ணு?”

“டெலிவரி மேனேஜர்”

“ஐயோ…சரியான டென்ஷன் புடிச்ச வேலைனு கேள்விப்பட்டிருக்கேன். எனக்கு இந்த ப்ராஜெக்ட் மேனேஜர் வேலையே சில நாள் தலை சுத்துது”

“ஹா ஹா… அப்புறம் சும்மாவா சம்பளம் குடுப்பான். ஆனா நீ காலேஜ் டேஸ்லயே படிப்ஸ் ஆச்சே, அப்புறமென்ன”

“அதை ஒரு கோல்ட் மெடலிஸ்ட் சொல்றது தான் பெரிய காமெடி. அது சரி… எப்ப ஜாயின் பண்ணனும்?”

“ஃப்ரைடே மதியம் ஆஃபர் லெட்டர் கிடைச்சது. அப்பவே சிகாகோ ஆபிஸுக்கு மெயில் பண்ணிட்டேன். டூ வீக்ஸ் நோட்டீஸ் அங்க, சோ ரெண்டு வாரம் கழிச்சு இங்க ஜாயின் பண்ணனும்”

“ஓ… சூப்பர். வீடு பாத்துட்டீங்களா? அதுவும் என்னோட அபார்ட்மெண்ட் பேரே சொல்லுவீங்களோ? இன்னைக்கி இதுக்கு மேல அதிர்ச்சி தாங்காதுடா சாமி” என்றவள் சிரிக்க 

“ஹா ஹா…இருக்கலாம்” என சிரித்தவன்,  “நேத்து பூரா அபார்ட்மெண்ட் தேடுதல் வேட்டை தான். நல்லவேளையா நல்ல ஏஜெண்ட் ஒருத்தர் கிடைச்சார். என் பிரெண்ட் அசோக் உனக்கு ஞாபகமிருக்கா?”

“மறக்க முடியுமா? ரெண்டை பிறவிங்க ஆச்சே, எப்பவும் ஒண்ணா தான சுத்துவீங்க” 

“ஹா ஹா ஆமா…  அவன் ஸ்கார்பரோ ஏரியால இருக்கான்”

“ஓ… திஸ் இஸ் நியூஸ் டு மீ. உங்க பிரெண்ட் ஏரியாலயே வீடு பாத்துட்டீங்களா?”

“தினம் நாப்பது கிலோ மீட்டர் ஆபீஸுக்கு ட்ராவல் பண்ண என்னால முடியாதுப்பா. அவன் ரெஃபர் செஞ்ச ஏஜெண்ட் ஒரே நாள்ல வீடு புடிச்சு குடுத்துட்டாரு. காண்ட்ராக்ட் சைன் பண்ண கையோட கிளம்பினேன். போற வழில பார்டர் க்ராஸ் பண்றதுக்கு முன்னாடி, நயாகராவை ஒரு பார்வை பாத்துட்டு போலாம்னு வந்தேன்” என்றான் 

“நல்லவேளை… இல்லேனா நாம மீட் பண்ணி இருக்க மாட்டோம்”

“எப்படியும் ஆபிஸ்ல பாத்துருப்பமே”

“அவ்ளோ பெரிய ஆபிஸ்ல உடனே மீட் பண்ற சான்ஸ் கம்மி தான் விஷ்ணு, ஒரே டீம்ல இருந்தாலொழிய. எதுனா சக்சஸ் மீட்னு போனா தான் எல்லாரையும் பாப்போம், மத்தபடி அவங்க அவங்க கேபின்ல தான் புதைஞ்சு கிடப்போம்” என்ற நிதர்சனத்தை இமயா கூற 

“அதென்னமோ நிஜம் தான், ஆனா இத்தனை வருசத்துல நீ கொஞ்சம் கூட மாறவே இல்ல” என முறுவலித்தான் விஷ்ணு 

“நீங்களும் தான்” என்றாள் சிரிப்பை கட்டுப்படுத்தியபடி

அவள் முகத்தை பார்த்தே, ஏதோ வம்பு தான் என்பதை உணர்ந்தவன், “அவுட் வித் இட்” என்றான் பொய் மிரட்டலாய் பார்வையை குறுக்கி 

“ஹா ஹா… ஒண்ணுமில்ல, அப்பவும் உங்ககிட்ட ஒரு பதில் வாங்கறதுக்குள்ள தொண்டை தண்ணி வத்த பேசணும். இப்பவும் அபார்ட்மெண்ட் எங்கேனு கேட்டு அரைமணி நேரமாச்சு, இன்னும் பதில் வரல” என்றாள் குறும்பாய் 

“உன்னை அப்புறம் கவனிச்சுக்கறேன்” என்றவன், “அபார்ட்மெண்ட் ஷெரிடன் காலேஜ்கிட்ட” எனவும் 

“ஓ… என்னோடது ஸ்கொயர் ஒன் ஏரியா” என்றாள் 

“நல்லவேளை வேற அபார்ட்மெண்ட்… இன்னொரு அதிர்ச்சில இருந்து இன்னைக்கு தப்பிச்சுட்ட, இல்ல இமயா?” என்றவன் கேலியாய் கேட்க

“ம்ம்… நல்லா தான் இருந்துருக்கும் ஒரே அபார்ட்மெண்டா இருந்துருந்தா” என்றவளை மகிழ்வுடன் பார்த்தான் விஷ்ணு 

“ஆனா எனக்கு கஷ்டமா போயிருக்கும்” என்றவன் கூற 

“என்ன கஷ்டம் என்னால உங்களுக்கு” என்றாள் சற்றே கோபமாய் 

“இல்ல… நானும் அதே அபார்ட்மெண்ட்னு சொல்லி அதிர்ச்சில நீ மயங்கி விழுந்துருந்தா, தூக்கிட்டு போற சைசும் இல்ல” என சிரிப்பை அடக்கிய குரலில் அவன் கூற 

“என்னது…? நான் ஒண்ணும் பெருசா வெய்ட் போடல” என முறைத்தாள் 

“ஓகே ஓகே கூல் கூல், ஜஸ்ட் கிட்டிங் இமயா. நீயெல்லாம் வெய்ட் போட்டா தான் அதிசயம். இப்பவும் அப்படியே லன்ச் பினிஷ் பண்ணாம கிளோஸ் பண்ணி வெக்கற பழக்கம் தானா?” என சமாதானமாய் ஆரம்பித்தவன், கேலியுடன் முடிக்க 

“அதெல்லாம் இல்ல, நல்லா தான் சாப்பிடறேன்” என்றவளை நம்பாமல் பார்த்தவன் 

“பாத்தா அப்படி தெரியல” என்றான் 

“நாம காலேஜ்ல பாத்தது தான், அப்புறம் பாக்கவே இல்லல்ல விஷ்ணு” என பேச்சை மாற்றினாள்

“ஆமா… உன்னோட எம்.எஸ்.சி பைனல் எக்ஸாம் அன்னைக்கு பாத்தது, ஏழு வருசமாச்சு”

“ம்… நீங்க ஏதோ வேலையா அந்த பக்கம் வந்துட்டு அப்படியே வந்ததா சொன்ன ஞாபகம்”

“ம்… அன்னிக்கி தான் நீ உன்னோட வெட்டிங் இன்விடேஷன் குடுத்த” என்ற விஷ்ணுவின் நினைவூட்டலில், இமயாவின் முகம் மாறியது

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

#ad இந்த தொடர்கதையை எழுதி வரும் எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇  

                                

 “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇

                

(தொடரும்… மே 16, 2021)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

4 Comments

நீரினைத் தேடிடும் வேரென நான் ❤ (பகுதி 15) -✍ விபா விஷா

ஆஸ்திரேலியா – மெல்பெர்ன் – பல்லரட் சவரன் தங்கச்சுரங்கம் (✍ வித்யா அருண், சிங்கப்பூர்)