in

காதல் (கவிதைத் தொகுப்பு) – ✍ கவி தா பாரதி

காதல் (கவிதைத் தொகுப்பு)

பிப்ரவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

காவியக் காதலிது

கலாபக் காதல்…

பொதிகை மலைத் தென்றல்..

தவழ்கின்ற நேரம்

இசைச்சாரல் தூவும் அருவி

மலைச்சாரல் ஓரம்

 

மருண்டிடும் கலைமான் துள்ளி ஓட…

சிருங்கார மயிலொன்று தன் தோகை விரித்தாட….

கானக் குயில் ஒன்று கனிந்து பாட…

 

கருங்கூந்தல் மெல்லவிழத்

துள்ளி விழும் வெள்ளி நீரில்

குளிர் நிலவின் பொலிவொளியாய் மண்ணில் உலா வரும்

வெண்ணிலவுப் பெண்ணரசி

மருள்விழிக் கயல் குளிர் நீரிலாட…

 

ஒய்யார நடை பயிலும் அன்னம் இவளோ?

குளிர்தேகத்தில் தந்தம் இழைந்தோடும்

பெண்மான் இவள்தானோ?

 

கண்ணிமைக்கும் நேரமதில்

காட்சியாய் நான் காண…

கனிமொழியாள் கயல்விழியால் எனை

கனிந்து நோக்க….

கண்சாடையால் கல்லும் கனிந்துருக

கயல்விழியோரம் காதல் வழிய…

 

கொவ்வை இதழ் பிரித்து,  செம்மாதுளை முத்துதிர…

தேன் ஊறும் புன்னகை மென்னகையாய்த் தவழ…

 

வானத்து ஊர்வசியாள் எனை நோக்க

மையலால் பேச்சிழந்து ஊமையாய்

நான் அவள் மதிமுகம் நோக்க

கண்களால் காதல் ரசம் பருகி…

 

நிலமகளை நீ நோக்க,

நின் வதனம் நாணத்தில்

சிவப்பதேனோ?

என்னைப் பார்த்தும்

பாராமுகமாய் இருப்பதேனோ?

 

காமனுக்குத் தூதுவிட்டு

காவியக் காதல் மலர…

கண்மணியே, பொன்மானே…

உன்மீது மையல் கொண்டேன்.

 

கனவுக் காதலிது…

கனவே  நீ கலையாதே!

 

நான் என் செய்வேன்?

நானிலத்தீர்…

நாளும் அவள் நினைவில்

நான் தேடுகின்றேன்!

 

என் உள்ளம் கொள்ளை போகுதே…

எவரறிவார் என் மனம்?

செங்கரும்புத் தோட்டத்தில்

செங்கமலம் நான்தேட

 

வெண்ணிலவில் ஒளிந்தாளோ?

வெள்ளொளியில் கரைந்தாளோ?

கள்ளி… என் உள்ளத்தை…

களவாடிச் சென்றாளே!

 

கண்டீரோ நீர் அவளை…

கருமுகிலே நீ சொல்வாய்…

கண்ட உண்மை

மறைக்காமல்… 

 

அவளைக்

காணாமல் தவிக்கின்றேன்…

கண்டதென்ன கனவோ?… என்

கருத்தினில் புலப்படச்

சொல்வாயோ?

 

கண்டவை வெறும்

கனவென்றால்…

கன்னியவள் முகமலர்

காணும்  காலம்வரை…

 

கனவே நீ கலையாதிரு…

கண்ணுறக்கம் காணும்வரை

கண்ணே நீ உறங்காதே…

கனவே நீ கலையாதே!

 

சந்தேகக் காதலிது…

காதலே… என்னைக் காதலி

 

காதலே… என் காதலி… நீ என்னை

என்ன செய்யப் போகிறாய்?

நான் கவிஞன் என்று தெரிந்தும் நீ… என்னை

ஏன் கண்கலங்கச் செய்கிறாய்?

 

உறவுகள்… பிரிவுகள்…

ரெண்டில் என்ன தரப் போகிறாய்?

இன்பமா… துன்பமா…

வாழ்விலே குழப்பமா?

 

என் நெஞ்சிலே… தடுமாற்றம் ஏன்?

என்னைப் புரிந்து கொள்ள

மனம் மறுப்பதேன்?

நீ சொல்லாமலே… புரிந்துகொள்ள…

என்னாலே… முடியுமா?

உன்னைப் புரிந்து கொள்ள

என் மனம் மறுக்குமா?

 

காதலே… என் காதலி… நீ என்னை

என்ன செய்யப் போகிறாய்?

நான் கவிஞன் என்று தெரிந்தும் நீ… என்னை

ஏன் கண்கலங்கச் செய்கிறாய்?

 

கிராமத்துக் காதலிது…

 காதலி… நீ என்னை காதலி!

 

பச்சைப் பசேல் என பளிச்சிடும்

பச்சைக் கம்பள வரவேற்பில்

பரிதியும் மகிழ்ந்து…

படரவிடும் தங்கக் கதிரொளியில்

பாவை நீயும் பள பளத்து மின்ன

பழம்தேடி அலையும் பச்சைக்கிளி

கோவைச் செவ்விதழில்…

கோர்வையாய் கோர்த்த…

முத்துச்சர சிரிப்பில் நான் மயங்க,

முகமலரில் கருமுத்துக் கண்களில்

விழிவழியே வழிந்தோடும்

தேமதுரக் காதல்தனை

கண்டுகொண்டேன்…

கண்டுகொண்டேன்!

என் அருமை கண்மணியே…

காதலில் நான் கலந்துவிட்டேன்…

காதலி… நீ,  என்னைக் காதலி!

  

பிரிவுக் காதலிது…              

விழியின் முத்து நீர்த்துளி!

 

வரும் வழியே முகம் நோக்க

வாடிய பயிரின் வாட்டமுடன்

வழிந்தோடும் புன்சிரிப்பும்

விலகியே நிற்கக் கண்டேன்.

 

காரணமொன்றும் விளங்காது

கனிவுடன் உன் விழிநோக்க உன்

கண்களின் கலக்கம் கண்டு

கலங்கியே போனேன் நான்…

 

கலகலவென சிரிப்பொலியும்

காணாமற் போனதேனோ?…

காற்சதங்கை ஒலி கூட

காதில் வீழா கடுகானதேனோ?…

 

உள்ளதைச் சொல்ல உள்ளம்

…துடித்த போதும்

உதடுகள் சொல்ல மறுத்ததேனோ?

உண்மை நீ சொல்வாயென…..

உன்னை நான் கேட்ட போதும்…..

உணர்ச்சிகளை நீ அடக்கி…

.‌.. கூறாமற் போனதேனோ?

 

போலியாய் சிரிப்பொன்றை…

பொய்யாய் எனக்குக் காட்டி…..

கல்லாய் உன் மனதாக்கி என்முன்

கண்ணாமூச்சி ஆட்டம் காட்ட

ஏன்தான் துணிந்தனையோ?

 

பிரிந்தவர் கூடும் காதலிது…

விழியிலே மலர்ந்தது…

காதலில் கலந்தது… 

   

   உன் நினைவில் நானும்

   என் நினைவில் நீயும்…

   ஒன்றாய் கலந்திருக்க…

   உன் விழியில் ஏன் சோகம்…

 

   உன் கண்களின் ஓரம்…

   எதற்காகவோ ஈரம்…

   உன் நெஞ்சிலே பாரம்…

   சுமப்பதேனோ…

 

   சுகமாய் நீ இருக்க…

   சுமைதாங்கி நானிருக்க…

   இன்பச் சுமையாய் தாங்க…

   உனக்கேனிந்த சோகம்…

 

   வரும் வழியில் நானிருக்க…

   விழிவழியே காத்திருக்க…

   வழிந்தோடும் கண்ணீரை…

   நானென்றும் மாற்றிட…

   விரைந்தோடி வருகின்றேன்…

 

   வேதனை தீரவே…

   வெண்பனி விலகவே…

   நீ காணும் துன்பமெலாம்..

   கனவாய் கலைந்து போக…

 

   உன் சோகம் நான் மாற்றி…

   சுகமாய் நீ இருக்க…

   இனிதாய் நாம் இணைந்திருக்க…

   இனி நம் வாழ்வெலாம்

   ஆனந்தம்… ஆனந்தமே…

 

தெவிட்டாக் காதலிது!

அழகான காதல்… ஆதலினால் காதல் செய்வீர்!

 

நனைந்திருக்கும்

செடியில்

இலை அழகா…

பூ அழகா…

கனி அழகா… என்றவளிடம்

கன்னியே… நீ

நனைந்திடினும்… உன்னை

நான் நினைந்திடினும்…

உன் அழகுக்கு ஈடிணை

உலகிலுண்டோ…

என மொழிந்து நான் நோக்க

அவளோ நனைந்தது

நனைந்தபடி நிலம் நோக்க…

காதலால் கன்னம் சிவக்க…

கயல்விழியாள் விழியோரம் காதல் ரசம் வழிந்தோட…

ஏற்றினாள் காதல் தீபம்…

ஏறிட்டவளை நான் நோக்கி

குறுநகையால் ஏற்பிசைத்து என் காதலை முன்மொழிந்தேன்…

கன்னியவள் நாணத்தால்

கால்களால் கோலமிட்டே

காதலை வழிமொழிந்தாள்…

தெவிட்டாத காதலிது…

தெய்வீகக் காதலன்றோ?

 

நிறைவேறாக் காதலிது…

மறந்துபோன ஞாபகம்!

                  

      நீரில்லாத நதியில்…

      ஓடவிடும் ஒளிதீபம்.

      நதியில்லாத ஊரில்

      ஓடம் விடும் ஓணம்.

     

      அலைகளில்லாக் கடலில்

      அளையும் நீரில் கால்கள்.

      நீரில்லாத ஓடையில்

      நீந்தி விளையாடும் மீன்கள்.

 

      மாலைநேர பூபாளம் இசைக்கும்

      மஞ்சள் காட்டுக் குயில்கள்.

      வசந்தம் இல்லாப் பருவத்தில்

      வாடும் இந்த காதல் கிளி…

 

      நீல நிறம் இழந்த வானில்

      நீந்தி விளையாடும்

      விண்மீன்கள்?

      நண்பகல் வானில் உலவும்

      நிலைகொள்ளா வெண்ணிலவு?

     

      தென்றலாய்த் தீண்டும் காதல்

      தீயாய்ச்சுடும் ஒருதலைக்

      காதலாய்

      மனதில் நீங்கா நினைவுகளில்

      நான் மறந்துபோன ஞாபகம்?  

     

ஒருதலைக் காதலிது…

ஒருதலை ராகம்!

 

     புல்நுனியின் பனி முத்தில்…

     அவள் முகம் நான் கண்டு

     வந்தேன்!

     அவள் வருவாளென நான்

     காத்திருந்து…

     இதயத்தை நான் திறந்து…

     வைத்தேன்!

 

     இரக்கமில்லாப்

     பெண்ணுக்காக…

‌     இதய வீணை வாங்கி

     வைத்தேன்.

     மனமில்லா மங்கைக்காக…

     மங்கலநாண் வாங்கி

     வைத்தேன்.

 

     காதலில்லா கல் நெஞ்சில்…

     காவியம் பாடுவதேனோ?

     கசந்திடும் கனிச்சுவை…

     காதலில் வந்ததேனோ?

 

     காதலுக்கு இடமில்லா

     கருணையற்ற பெண்

     இதயத்தில்

     இடம் தேடி அலைந்தேன்…

     இனிய விஷம் நான் குடித்து,

     இனிக்கும் வாழ்வை நான்

     மறந்தேன்.

 

     என் நெஞ்சில் இருந்த காதல்…

     ஒருதலை ராகம்தானே?

     இது தெரியாமல் இத்தனை நாள்

     ஏனோ கனவில் மூழ்கிக்

     கிடந்தேன்?

 

கொரோனாக்கால காதலிது…

காதல் துரத்தும்…         

கொரோனாவே ஓடிவிடு!

 

துரத்தும் கொரோனா

தூரமே ஓடிடுவோம்…

துவண்டு விடாதே கண்மணி!

தோள்மேல் ஏறிக்கொள்…

 

காதல் கசக்குமா?

காதலி ஓர் பாரமா?

தோள்களிலே சுமந்து

காத தூரம் நடந்தாலும்

கால்கள்தான் வலிக்குமா?

 

உன் கடைக்கண் பார்வை

ஒன்று போதும்!

ஓட ஓட விரட்டிடுவேன்…

ஓடிவிடும் கொரோனா…

 

புலம்பெயர்ந்து வந்ததனால்

புலம்பித் தவிக்க வேண்டாம்…

விரைவினில் நாம் செல்வோம்

பிறந்து வளர்ந்த ஊருக்கு

கவலை வேண்டாம் உனக்கு…

 

காதலி உன்  ஒரு

கண்ணசைவில்

கடுகாகும் ஓர் மலையாம்!

கண்ணே! நீயெனக்கு

சுமையல்ல… சுகமே!

 

(முற்றும்)

‘சஹானா’ சிறுகதைப் போட்டி 2021 முடிவுகள் அறிய இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

  1. கவிதா பாரதி அவர்களின் கவிதைத் தொகுப்பு மிகவும் அருமையாக இருந்தது. ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு ரத்தினமாய் மின்னுகிறது. ஒவ்வொரு வரியும் அவருடைய கவி புனையும் திறனைச் சொல்லிச் சொல்லிச் செல்கின்றது. காதலி ஒரு பாரமா காத தூரம் நடந்தாலும்….ஒவ்வொரு காதலனும் கேட்கும் கேள்விதான். காதலி நீயெனைக் காதலி….அருமை. அருமை. புலவருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள், பாராட்டுகள்.

    • எனது “💕 காதல்” கவிதை தொகுப்பினை ஆழ்ந்து படித்துவிட்டுத் தாங்கள் செய்துள்ள விமர்சனத்தில் தங்களின் கவி மனதின் பிரதிபலிப்பு தெரிகின்றது…
      தங்கள் அன்பான விமர்சனத்திற்கு என் காதல் இதயங்கனிந்த நன்றி!

      அன்புடன்
      கவி-தா-பாரதி!

டும் டும் டும் (சிறுகதை) – ✍ ராஜஸ்ரீ முரளி

அந்த நாளும் வந்திடாதோ? (மலரும் தீபாவளி நினைவுகள்) – ✍ கே.என்.சுவாமிநாதன், சென்னை