2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
அத்தியாயம் 1 அத்தியாயம் 2 அத்தியாயம் 3 அத்தியாயம் 4
வான்மழை கொஞ்சமாய் வேகம் மட்டுப்பட்டதும் உள்ளூர் இளைஞர்கள் சிலர் எங்கிருந்தோ படகுகளைக் கொணர்ந்து அதில் பெண்கள், வயதானவர்கள், நோயாளிகள், குழந்தைகள் போன்றோரையெல்லாம் ஏறிக் கொண்டு பாதுகாப்பான இடம் தேடி அலைந்து கொண்டிருந்தனர்.
“ஆறுமுகம் போன் வேலை செய்யுதா பாருப்பா” வாட்மேன் வடிவேல் சொல்ல, மொபைலை எடுத்துச் சோதித்த ஆறுமுகம் உதட்டைப் பிதுக்கினார்.
“ம்ஹும்… கரெண்ட்டும் இல்லை… மொபைல் டவரும் இல்லை!…”
அப்போது ஆறுமுகத்தின் காலை யாரோ சுரண்டு போலிருக்க குனிந்து பார்த்தார். இரு கால்களும் சூப்பையான ஒரு சிறுவன், “சார்… அவங்கெல்லாம் பாவம் சார்!… இருக்க இடமில்லாமல்… சாப்பிட சாப்பாடு இல்லாமல் திண்டாடிட்டிருப்பாங்க… நம்ம இல்லம்தான் மேட்டில் இருக்கே… அவங்களையெல்லாம் இங்க வரவழைச்சு… ஊருக்குள்ளார தண்ணீர் வடியற வரைக்கும் இங்க இருக்கச் சொல்லலாம் சார்” என்று சொல்ல,
அவன் சொல்வதை ஆமோதிப்பது போல் அங்கிருந்த மாற்றுத் திறனாளிகள் அனைவரும், “ஆமாம் சார்… பாவம் சார்!… குழந்தைகளுக்குப் பால் இருக்காது… பெரியவங்களுக்கு சாப்பாடு இருக்காது!… இங்க வர வெச்சு… நாம சமைச்சுப் போடலாம் சார்” என்றான் மூன்று நாட்களுக்கு முன் பேருந்து நிலையத்தில் ரவுடி கோபியிடம் தன்னுடைய பணத்தை மொத்தமாய்ப் பறி கொடுத்திருந்த பார்வையற்றவன்.
நெகிழ்ந்து போன ஆறுமுகம் வாட்ச்மேன் வடிவேலுவைப் பார்க்க,
“தப்பில்லே தம்பி… நாம அப்படியே செய்யலாம்” என்றார்.
“இருந்தாலும் சிட்டில இருக்கற நம்ம ஹெட் ஆபீஸ்ல… ஒரு வார்த்தை…” என்று ஆறுமுகம் இழுக்க,
“அப்படிக் கேட்பீங்க?… அதான் மொபைல் போன் எல்லாம் கட்டாகிக் கிடக்கே?”
சில நிமிடங்கள் யோசித்த ஆறுமுகம், “ஓ.கே… மனிதாபிமான அடிப்படையில் நாம் இதைச் செய்வோம்!… பின்னர் பேசிக் கொள்வோம்” என்றார்.
“அதெல்லாம் சரி… ஊருக்குள்ளார படகுல போய்க்கிட்டிருக்கற ஜனங்களை எப்படி இங்க வரவழைக்கறது?” வடிவேல் கேட்க,
“நாங்க கூப்பிடறோம்…” என்று சொல்லி விட்டு மாற்றுத்திறனாளிகள் எல்லோரும் அங்கிருந்து வெளியேறி போர்ட்டிகோவில் வந்து நின்று தங்களிடமிருந்த சாப்பாட்டுத் தட்டுக்களை குச்சியால் தட்டி ஓசையெழுப்பினர்.
இரு கால்களும் சூம்பிப் போன நிலையிலிருந்தவன் தரையில் அமர்ந்தபடி தட்டினான்.
கண் பார்வை இழந்தவன் எங்கோ பார்த்துக் கொண்டு தட்டினான்.
முதுகு கூனமானவன் குனிந்தவாறு தட்டினான்.
தலை மட்டும் பெரிதாகவும் உடல் சிறியதாகவும் இருக்கும் சிறுவன் சிரித்துக் கொண்டே தட்டினான்.
பதினேழு வயதிற்குரிய வளர்ச்சியில்லாமல் ஐந்து வயதுச் சிறுவனைப் போலிருந்தவன் உற்சாகமாய்த் தட்டினான்.
அந்த மாற்றுத் திறனாளிகளின் முயற்சி ஒரு கட்டத்தில் வெற்றியடைய, படகுகள் திசை மாறி “மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு இல்லம்” அமைந்திருந்த மேடான இடத்தை நோக்கி வந்தன.
ஊனமுற்றவர்கள் அனைவரும் “ஹேய்ய்ய்ய்ய்ய்” என்று உற்சாகக் குரலெழுப்பி அவர்களை வரவேற்க,
வந்து நின்ற படகிலிருந்து பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், மூத்த பெண்மணிகள் அனைவரும் இறங்க, அவர்களை அழைத்துச் சென்று பிரேயர் ஹாலில் அமர வைத்தவர் ஆறுமுகமும், வாட்ச்மேன் வடிவேலும்.
அடுத்த நிமிடம் சமையல்காரனை அழைத்த ஆறுமுகம், “கோவிந்தா… இவங்க அத்தனை பேரும் மழையெல்லாம் நின்னு, தண்ணீரெல்லாம் வடியற வரைக்கும் இங்கதான் இருக்கப் போறாங்க, இவங்களுக்கு மூணு நேரம் சாப்பாடு, தங்கும் வசதி எல்லாம் நாமதான் செஞ்சு குடுக்கப் போறோம்!… நம்ம கிட்டே அதுக்கான மளிகைப் பொருட்கள்… அரிசி… பருப்பு… காய்கறியெல்லாம் இருக்கா?… பார்த்து சொல்லு” என்றார்.
அந்த சமையல்காரன் பதில் சொல்லும் முன் அங்கிருந்தோர் எண்ணிக்கையைக் கணக்கிட்ட ஆறுமுகம், “இப்ப… இருபத்தி மூணு இருக்காங்க!…. இன்னும் நிறைய பேர் வருவாங்க!… அதனால…ம்ம்ம்… ஒரு நூத்திஐம்பது பேருக்கு மூணு நாளைக்கு… என்னென்ன வேணுமோ எல்லாம் இருக்கா பாரு?… இல்லேன்னா சொல்லு ஹெட் ஆபீஸுக்கு எப்படியாவது தகவல் அனுப்பி அவங்களை ஏற்பாடு செஞ்சு அனுப்பச் சொல்லுவோம்” என்று சொல்ல, உடனே அங்கிருந்து சென்ற சமையல்காரன் சில நிமிடங்களிலேயே திரும்பி வந்து, “சார்… இன்னிக்கும் நாளைக்கும் சமாளிக்கலாம் சார்” என்றார்.
“ஓ.கே… அப்ப உடனே சமையலை ஆரம்பி.,.. முதல்ல எல்லோருக்கும் டீயோ… காபியோ குடு… குழந்தைகளுக்கு பால் கொடு” மின்னல் வேகத்தில் ஆர்டர் கொடுத்தார் ஆறுமுகம்.
அப்போது மேலும் சில படகுகள் வந்து நிற்க, மாற்றுத் திறனாளிகள் அனைவரும் சந்தோஷமாய்ச் சென்று அவர்களை வரவேற்று அழைத்து வந்தனர்.
அந்தப் படகில் வந்த ஒரு பெரியவர், “வானம் இருக்கும் நிலையைப் பார்த்தா இன்னும் ரெண்டு நாளைக்கு மழை நிக்காது போலிருக்கு தம்பி… அப்படியே மழை நின்னாலும் தண்ணீரெல்லாம் வடிய ரெண்டு நாளாய்டும்… அதுக்குப் பின்னாடி நாங்க எங்கே போய்… எங்க குடிசைக் கண்டுபிடிக்கப் போறோமோ?” தலையிலடித்துக் கொண்டு சொல்ல,
குறுக்கே புகுந்த ஒரு வயதான பெண்மணி, “வயித்தைக் கட்டி வாயைக் கட்டிச் சேர்த்து வெச்ச பணங்காசு… துணிமணியெல்லாம் போயிடுச்சே… இனி நாங்க என்ன பண்ணுவோம்” கதறினாள்.
“சார்… என்னோட ஸ்கூல் பேக்… நோட்டு புத்தகம் எல்லாம் தண்ணில போயிடுச்சு சார்” கண்ணீரோடு சொன்னாள் ஒரு சிறுமி.
“யாரும் எதைப் பத்தியும் கவலைப்படாதீங்க!… நாங்க இங்க நூத்திஎழுபது பேர் இருக்கோம்!… எல்லோருமே ஏதோவொரு விதத்துல ஊனமானவங்கதான்!… ஆனா அந்த ஊனம் எங்களுக்கு ஒரு குறையாய்த் தெரியாத மாதிரி இங்கிருக்கற ஆறுமுகம் சார் எங்களையெல்லாம் பக்குவமா வளர்த்திட்டு வர்றார்!… எங்களாலேயும் காசு பணம் சம்பாதிக்க முடியும்… நல்லாப் படிக்க முடியும்… பெரிய பெரிய உத்தியோகத்துக்கெல்லாம் போக முடியும்னு சொல்லி எங்களுக்கு நோட்டுப் புத்தகமெல்லாம் வாங்கிக் குடுக்கறார்!… அவர் எங்களோடு சேர்த்து உங்க அனைவரையும் காப்பாத்துவார்” என்றான் கண் பார்வை இல்லாத சத்தியவேந்தன்.
“நீங்கெல்லாம் இன்னும் நாலஞ்சு நாளைக்கு எங்களோட விருந்தாளிகள்… உங்களை நல்லமுறையில் கவனிப்பது எங்களோட வேலை” என்றான் இரு கால்களும் சூம்பிக் கிடந்த முருகன்.
“அனாதைகளான நம்மைத் தேடி இதுவரைக்கும் யாரு வந்திருக்கா?… இப்பத்தான் இந்த இல்லத்துக்கு விருந்தாளிக வந்திருக்காங்க… சந்தோஷமாயிருக்கு” என்றான் முதுகு வீங்கிப் புடைத்திருக்கும் குள்ளன் குருமூர்த்தி.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings