2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
அன்று மாலை இல்லத்திற்குச் சொந்தமான வேனில் திரும்பிய முருகன் தனக்கு நேர்ந்தவற்றைச் சொல்லி அழ, கொதித்தெழுந்தார் இல்ல நிர்வாகி ஆறுமுகம். “நாளைக்கே போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணி அவனை உள்ளார தூக்கிப் போட்டாகணும்… இல்லேன்னா அவன் இன்னும் அதிகமா துள்ளுவான்”
“ஆறுமுகம்… உனக்கு அவனைப் பத்தி முழுசாத் தெரியலை… அதனாலதான் போலீஸ் கம்ப்ளைண்ட் அதுஇதுன்னு குதிக்கறே!… நீ போய் அவன் மேலே கம்ப்ளைண்ட் பண்ணினா போலீஸ் அவனை எதுவும் பண்ணாது…” வாட்ச்மேன் சொல்லி விட்டுச் சிரித்தார்.
“ஏன்?… ஏன் எதுவும் பண்ணாது?” ஆறுமுகம் சத்தமாய்க் கேட்க,
“ஆறுமுகம்… அவன் ஒரு அரசியல் கட்சில… பெரிய போஸ்டிங்ல இருக்கான்!… அவனைத் தொட்டா… அது போலீஸுக்கே பிரச்சினையாயிடும்”
“சரி… அதுக்காக விட்டுட முடியுமா?”
“வேற வழியில்லை… சிரித்துக் கொண்டே கடந்து போக வேண்டியதுதான்!… கவலைகளை மட்டுமல்ல… அந்தக் கவலைகளுக்குக் காரணமானவர்களையும்…” அனுபவசாலியான வாட்ச்மேன் தத்துவமாய்ப் பேசினார்.
“இது என்னண்ணே அநியாயம்?… இதையெல்லாம் கேட்பதற்கு யாருமே இல்லையா?”
மேலே கையைக் காட்டிய வாட்ச்மேன் வடிவேல், “மேலே ஒருத்தன் இருக்கான் அவன் எல்லாத்தையும் பார்த்திட்டுத்தான் இருக்கான்… எப்ப எது செய்யணுமோ?.. அப்ப அதை அவன் சரியாய்ச் செய்வான்… பொறுத்திருப்போம்” என்றார்.
****
தான் கொண்டு வந்திருந்த ஊதுபத்திகள் மொத்தமும் விற்றுப் போன பின், கண் பார்வை இல்லாத இளைஞனான சத்தியவேந்தன், தன் கையிலிருந்த குச்சியைத் தட்டிக் கொண்டே பஸ் ஸ்டாண்டிற்கு வெளியே வந்தான். பின்னர் மெல்ல நடந்து… தான் வழக்கமாக அமரும் இடத்தில் சென்றமர்ந்தான். பார்வை இல்லையென்ற போதிலும் பார்வை உள்ளவன் போலவே தெளிவாகவும்… நிதானமாகவும் நடப்பது அவனுடைய தனித் திறமை. தன்னை அழைத்துப் போக வரும் “மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு இல்ல”த்தின் வேனுக்காகக் காத்திருந்தான்.
அதே நேரம், மதுக்கடையை விட்டு வெளியேறிய ரவுடி கோபி, போதை மிதப்பிலேயே தனது பைக்கை ஸ்டார்ட் செய்து அதில் ஏறியமர்ந்தான். பில்லியனில் ஏறியமர்ந்த இன்னொருவன், “என்ன தல… உன்னால வண்டி ஓட்ட முடியுமா?… இல்லை நான் ஓட்டவா?” கேட்டான்.
“ஸ்ஸ்ஸ்… ஐ யாம் ஸ்டெடி” போதையில் ஆங்கிலம் வந்து விழுந்தது.
அந்த பைக் பஸ் ஸ்டாண்ட் அருகே வரும் போது, ”மாற்றுத் திறனாளிகள் மறு வாழ்வு இல்லம்” என்று பெயர் பொறித்த வேன் உள்ளே நுழைந்து கொண்டிருந்தது.
“தல… தல… வண்டியை ஸ்லோ பண்ணு” பின்புறம் அமர்ந்திருந்தவன் கத்தினான்.
“ஏழ்ண்டா?… எழ்ன்னாச்சு?” கோபி குழறலாய்க் கேட்டான்.
“அந்த வேனைப் பார்த்தியா?”
“எழ்ந்த வேழ்ன்?”
“அந்த மாற்றுத் திறனாளிகள் இல்ல வேன்” சொல்லியபடியே கை காட்டினான் பில்லியனில் அமர்ந்திருந்தவன்.
அவன் காட்டிய திசையில் பார்த்த கோபி, “ஆமாம்… அது எதுக்கு பழ்ஸ் ஸ்டாண்டுக்குழ்ழார போகுது?” கேட்டான்.
“உனக்குத் தெரியாதா?… தெனமும் அந்த வேன் இல்லத்திலிருந்து ஊனமுற்ற பசங்களைக் கூட்டிட்டு வந்து, மக்கள் கூடுற இடங்கள்ல இறக்கி விட்டு அவங்களை வியாபாரம் பண்ண வைக்கும்!… அப்புறம் ஒரு மணி நேரம் இல்லேன்னா ரெண்டு மணி நேரம் கழிச்சு வந்து அவனுகளைத் திரும்பக் கூட்டிட்டுப் போயிடும்” என்றான் பின்னால் அமர்ந்திருந்தவன் கத்தலாய்.
“என்னது வியாபாரம் பண்றானுகளா?… அவனுகளே அரையும் குறையுமாய் இருக்கறானுக… அவனுக என்னத்தைய்யா வியாபாரம் பண்ணுவானுக?” சிரித்தவாறே கேட்டான் கோபி.
“அது செரி… அந்த இல்லத்துல… வெளியே எங்கேயும் போக முடியாத அளவுக்கு ஊனமுற்றவங்க நிறைய பேர் இருக்காங்க!.. அவங்க அங்கேயே… அப்பளம்… வடாம்… ஊறுகாய்… ஊதுபத்தி… இன்னும் என்னென்னமோ தயாரிக்கறாங்க… அந்தத் தயாரிப்புக்களை… வெளியே போய் வியாபாரம் பண்ணும் அளவுக்கு இருக்கும் சிலர் இந்த வேனில் வெளிய வந்து வியாபாரம் பண்றாங்க”
“கிரீச்”சென்று பிரேக்கிட்ட கோபி, “நீ சொல்றதைப் பார்த்தா அந்த வேன்ல நிறைய பணம் இருக்கும்ங்கறே?… அப்படித்தானே?” கேட்டான்.
“ஆமாம்… பல இடங்கள்ல வியாபாரம் முடிச்சிட்டுப் போறாங்கல்ல?… அப்ப பணம் இருக்கத்தானே செய்யும்”
“அதான்… அதான்… எனக்கு வேணும்” சொல்லி விட்டு மறுபடியும் பைக்கைக் கிளப்பி நேரே பஸ் ஸ்டாண்டிற்குள் சென்று அந்த மாற்றுத் திறனாளிகள் வேன் முன் நிறுத்தினான் கோபி.
டிரைவர் இருக்கையில் இருந்தவன் கத்தினான், “யோவ்… அறிவிருக்காயா?… இப்படிக் கொண்டு வந்து குறுக்கே நிறுத்தறியே… அடிச்சிருந்தா… என்னாவது?”
நிதானமாய் இறங்கி பைக்கை ஸ்டாண்ட் போட்டு விட்டு, வேனை நோக்கி வந்த கோபி, “அடிச்சிடுவியா?… அடிச்சிடுவியா?” பற்களைக் கடித்துக் கொண்டே கேட்க,
“அது… வந்து” இழுத்தான் டிரைவர்.
திரும்பி தன்னுடன் வந்தவனைப் பார்த்து, “டேய்… வேனுக்குள்ளார போயி… எத்தனை பணம் இருக்கோ அத்தனையும் அள்ளிட்டு வாடா” என்றான்.
“வேண்டாங்கய்யா… வேண்டாம்… எல்லாம் இந்த ஊனமுற்றவங்க கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசு… அதுல கை வைக்காதீங்க” டிரைவர் கெஞ்சினான்.
“அப்படின்னு… அந்தப் பணத்துல எழுதியிருக்கா?” சிரித்தபடி கேட்டான் கோபி.
அதற்குள் வேனின் பின் புறக் கதவைத் திறந்து, உள்ளேயிருந்த மாற்றுத் திறனாளிகள் கையிலிருந்த பணத்தை பலவந்தமாய்ப் பிடுங்கினான்.
தர மறுத்த ஒரு குருடனின் முகத்தில் ஓங்கியறைந்து கைப்பற்றினான்.
வேன் வந்து நின்ற ஓசையை வைத்தே அது இருக்குமிடத்தை யூகித்து கையிலிருந்த குச்சியைத் தட்டிக் கொண்டே வேன் அருகே வந்தான் பேருந்து நிலையத்தில் வேனுக்காக காத்திருந்த சத்தியவேந்தன். பாவம் அவனுக்கெப்படித் தெரியும் அங்கே அரங்கேறிக் கொண்டிருக்கும் அநியாயம்?
உள்ளிருந்த பணத்தை மொத்தமாய்ச் சுருட்டிக் கொண்டு வெளியே வந்த கோபியின் கைத்தடி, குச்சியைத் தட்டிக் கொண்டே வரும் அந்த பார்வை இழந்தவனைப் பார்த்து, “அடடே… இவன் கைல வேற கொஞ்சம் பணம் இருக்கும் போலிருக்கு” என்று சொல்லிக் கொண்டே அதையும் பிடுங்க, தடுமாறினான் சத்தியவேந்தன். அங்கே என்ன நடக்கிறது என்பதை அவன் யூகிக்கும் முன்னர் அவனைக் கீழே தள்ளி விட்டு, கோபியிடம் சென்ற அந்த ஆள், “போகலாம் தல எல்லாத்தையும் அள்ளிட்டேன்” என்றான்.
இருவரும் சிரித்துக் கொண்டே பைக் அருகில் சென்று, அதை ஸ்டார்ட் செய்து பறந்தனர்.
அவர்கள் சென்றதும், டிரைவர் இருக்கையில் இருந்தவன் வேகமாக வெளியே வந்து, தரையில் கிடந்த சத்தியவேந்தனைத் தூக்கி, வேனுக்குள் திணித்தான்.
“என்ன… என்ன… நடக்குது இங்கே?… அவங்க யாரு?… எதுக்கு பணத்தைப் பிடுங்கிட்டுப் போறாங்க” குருடன் கத்தலாய்க் கேட்க,
“அதையெல்லாம்… அங்கே இல்லத்துக்குப் போய் சொல்றேன்… மொதல்ல இங்கிருந்து கிளம்புவோம்”
அவசர அவசரமாய் வேனைக் கிளப்பிக் கொண்டு அங்கிருந்து பறந்தான் அந்த டிரைவர்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings