எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
சிவா பதறினான்.
அவனது மொபைலைக் காணவில்லை.
டிபன் சாப்பிட்டுவிட்டு அப்படியே ஒரு குட்டித் தூக்கம் போட்டு முடித்து, நண்பர்களைப் பார்க்க கிளம்பியபோதுதான் தெரிந்தது மொபைலைக் காணவில்லை என்று. பதறினான். தேடினான். கிடைக்கவில்லை என்றதும் கொஞ்சம் டென்ஷனும் ஆகினான்.
ஹாலுக்கு வந்தான். பெரிய அண்ணி பவித்ரா வத்தல் காயப் போட மாடிப்படிகளில் ஏறிக்கொண்டிருந்தாள். ‘ அண்ணி… என் ஃபோனை பார்த்தீங்களா… ‘ என்றான், இங்கிருந்தே. அவளோ, ‘ நான் பார்க்கலையே தம்பி… ‘ என்றுவிட்டு போய்விட்டாள்.
சின்ன அண்ணி செல்வி துணி அயர்ன் செய்துகொண்டிருந்தாள். அவளிடம் போனான், ‘ அண்ணி… என் மொபைலைக் காணோம்… நீங்க எங்காவது பார்த்தீங்களா…. ‘ என்றான். அவளும், ‘ இல்லையேப்பா… நான் பார்க்கலையே… ‘ என்றாள்.
அவனது அம்மா சமயலறையில் ஏதோ வேலையாய் இருந்தாள். ‘ அம்மா நீயாவது பார்த்தியா… ‘ என்றான். நெற்றியை சுருக்கியபடி, ‘ முழுசா எப்போவாவது பேசியிருக்கியாடா மாடு… எதை பார்த்தியான்னு கேட்கறே… ‘ என்று சிடுசிடுத்தாள். நெற்றியில் அடித்துக்கொண்டவன், ‘ரொம்ப நேரமா என் மொபைலை தேடிக்கிட்டிருக்கேன்மா… கிடைக்கவே இல்லை. நான் என் பிரண்ட்ஸ்களைப் பார்க்கப் போகணும். அவனுங்க எனக்காக காத்துக்கிட்டிருப்பானுங்க… இந்த மொபைலை எங்கே வச்சேன்னே தெரியலை… தேடறேன், தேடறேன், தேடிக்கிட்டே இருக்கறேன்.. ‘
‘ கடைசியா எப்போ பார்த்தே… ‘
‘ எல்லாரும் டிபன் சாப்பிட்டோமே அப்போ கையில வச்சிருந்தேன்…’ என்றவன், சட்டென ஏதோ நினைவு வந்தது போல, ‘ ஏம்மா, அண்ணனுங்க அவங்க போன்னு நினைச்சு என்னோடதை எடுத்துக்கிட்டு போயிருப்பாங்களோ… ‘ என்றான்.
‘ ஏன்டா… அவங்கவங்க ஃபோன் அவங்கவங்களுக்குத் தெரியாம போயிடுமாடா… போயி நல்லாத் தேடுடா… இங்கேதான் எங்கேயாவது வச்சிருப்பே… ‘ என்றுவிட்டுதனது வேளைகளில் மூழ்கினாள்.
திரும்பி வந்தான். சின்ன அண்ணி துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தாள். ‘ அண்ணி, சிவா அண்ணன் ஒருவேளை தெரியாத்தனமா என் மொபைலை எடுத்துக்கிட்டு போயிருக்குமோ… ‘ என்றான்.
சிரித்தாள் அவள், ‘ ஏன்ம்பா, அவரோட மொபைல கலர் ப்ளாக்கிஸ் ப்ளூ. உன்னோடது டார்க் ப்ளாக் கலர். அப்படிக்கூட தெரியாம எடுத்துக்கிட்டு போயிருப்பாரா என்ன… ‘ என்றவள், ‘ அவ்வளவு ஏன்… இதோ போன் அடிச்சே கேட்டுடறேனே… ‘ என்றுவிட்டு தன் கணவனுக்கு ஃபோன் போட்டாள்.
‘ இல்லப்பா…அவர்கிட்ட் ஒரு மொபைல்தான் இருக்காம்… அது அவரோட மொபைலாம்… ‘ என்றுவிட்டு மேற்கொண்டு பேசுவதற்கு ஒன்றுமில்லை என்பது போல அடுக்கிய துணிகளை அள்ளிக்கொண்டு தங்களது அறைக்குள் போய்விட்டாள்.
சில நொடிகளில் பெரிய அண்ணி பவித்ரா மாடிப்படிகளில் இறங்கிவந்தாள். அதே சந்தேகத்தை அவளிடமும் கேட்டான். ‘ அண்ணி… எதுக்கும் பரமு அண்ணனுக்கு ஒரு போன் பண்ணி பாருங்களேன், ஒருவேளை அவர் ஏதும் தெரியாத்தனமா என் மொபைலை எடுத்துக்கிட்டு போயிருக்கலாம்… ‘
அவளும் தன் கணவனிடம் பேசிவிட்டு, ‘ இல்லப்பா… ‘ என்றுவிட்டு அவனைக் கடந்து போய்விட்டாள்.
சலிப்புடன் ஷோபாவில் உட்கார்ந்தான். ‘ டீ குடிக்கிறியாடா… ‘ என்றாள் அம்மா… ‘ அது ரொம்ப அவசியமாம்மா… என் பிரெண்ட்ஸ் எல்லாம் வந்திருப்பானுங்கம்மா… நான் அங்கேயே போயி குடிச்சுக்குவேன்… இப்போ மொபைல் இல்லாம நான் எப்படி போவேன்… ’ புலம்பித் தள்ளினான்.
சட்டென ஞாபகம் வந்து, ‘ ஏன்டா… ஒரு ரிங் விட்டு பாரேன்டா… எங்கே இருந்து சத்தம் குடுக்குதுன்னு பார்த்துடலாம்… ‘ என்றாள்.
துள்ளி எழுந்தவன், ‘ அம்மா… என் மொபைலைத்தான் காணலையே… எதுலேர்ந்து ரிங் விடுவேன்… ‘ என்றான்.
‘ போடா… அத்தைக்கிட்டே பேசிட்டு இப்போதான் கிச்சன் மேடைல வச்சேன்… எடுத்துக்கிட்டு வந்து அதுலேர்ந்து ரிங் விடேன்… இல்லே அண்ணிகள்கிட்டேயும்தான் மொபைல் இருக்கு. அதுலேர்ந்து கூட விடலாம். புலம்பித்தள்ளறே… ‘
ரிங் விட்டுப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கினான். ´ ஸ்விச்சுடு ஆஃப் அல்லது அவுட் ஆஃப் ரீச் ‘ னு வருதும்மா…’
‘ ஒருவேளை சார்ஜ் தீர்ந்துடுச்சோ என்னவோ… ‘
‘ இல்லம்மா… தூங்கும்போது சார்ஜ் போட்டிருந்தேன். நூறு பர்சன்ட் ஆகியிருந்துச்சு. விடிஞ்சுகூட பிரெண்ட்ஸ் கூட பேசிட்டிருந்தேனே. சாட்டிங் பண்ணினேன். வாட்ஸப் பார்த்தேன், மெயில் பார்த்தேன், பேஸ்புக் பார்த்தேன்… யூட்யூப் பார்த்தேன்… ‘
‘ ஆமாமா… இருக்கற எல்லாத்தையும் பாரு… ஆனா போனை மட்டும் எங்கேயோ தொலைச்சிட்டு இப்போ வந்து எங்க மண்டைய உருட்டு… ‘
‘ தொலைக்கலைம்மா… இங்கேதான் எங்கேயோ கிடக்கும்… ‘
‘ அப்போ தேடு போ… எனக்கு வேலை கிடக்கு… ‘
பெரிய அண்ணி வாஷிங் மிஷினில் இருந்து துவைத்த துணிகளை இரண்டு பாக்கெட்டுகளில் அள்ளிக்கொண்டு மாடிக்குப் போனாள். சின்ன அண்ணி புத்தகத்தை திறந்து வைத்துக்கொண்டு படுக்கையில் படுத்திருந்தாள்.
இவனுக்கு கோபம் கோபமாக வந்தது. அண்ணிகள் கொஞ்சமாவது அக்கரைப் பட்டுக்கொள்ளவே இல்லையே… கொஞ்சம் வந்து தேடக் கூடாது… என்ன சுயநலம்…. ச்சே… !
கீழே இறங்கி வந்தாள் அண்ணி. சின்ன அண்ணி எழுந்து வந்தாள். இவளிடம் ஏதோ சைகை செய்தாள். இருவரும் சைகையிலேயே பேசிக்கொண்டனர். இப்படி நிறைய தடவைகளில் அவர்கள் பேசிக்கொள்வார்கள். ‘ இதுல ஒன்னும் குறைச்சல் இல்லை… ‘ என்று முனகியவன், ‘ அண்ணி… மொபைலைத் தேடிப்பாக்க எனக்கு கொஞ்சம் உதவி பண்ணக் கூடாதா… ‘ என்றான் அழாத குறையாக.
‘ அடடா… ஒரு ரிங்விட்டுத்தான் பாரேன்பா… ‘
‘ அம்மா மொபைல்லேர்ந்து விட்டப் பார்த்துட்டேன் அண்ணி… ‘
‘ இதோ இன்னொருமுறை என் மொபைல்லேர்ந்தும் விட்டுப்பாரேன்… ஒருவேளை ரிங்க அடிச்சு உன் காதுல விழலியோ என்னவோ… ‘
‘ அதெப்படி அண்ணி…என் காது செவிடா… ‘
‘ எனக்குத் தெரியாதுப்பா… ‘
‘ சரி கொடுங்க…’
அவன் ரிங் விட்டான். மாடியில் இருந்து மெலிதாய் சத்தம் கேட்டது.
ஓடினான். மொட்டை மாடியில் இருந்து டேங்கிற்கு ஏறும் படிக்கடியில் அது கிடந்தது.
‘ அப்பாடா… இங்கே கிடக்குது… ‘ பரவசத்துடன் எடுத்துக்கொண்டு இறங்கி ஓடி வந்தான்.
இரண்டு அண்ணிகளும் அறைக்குள் கிசுகிசுத்துக்கொண்டிருந்தார்கள்.
‘ எப்போ கொண்டு போய் வச்சே… ‘
‘ துணி காய போடப் போகும்போதுதான். ஆன் பண்ணியும் வச்சிட்டேன்… ‘
‘ அப்பாடா… எப்படியோ அவனுக்கு ஒரு ஆட்டத்தைக் காட்டியாச்சு… எப்போ பாரு மொபைலை வச்சுக்கிட்டு பேஸ்புக், யூட்யூப், சாட்டிங்க்னு அவன் அடிக்கற லூட்டி… யப்பப்பா… ‘
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
முற்றும்
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings