in ,

ஜன்னல் வழியே…(சிறுகதை) – ✍சத்யா GP, நங்கநல்லூர், சென்னை

ஜன்னல் வழியே…
இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 25)

“வாய் விட்டு அழுதாலும் கேட்க பக்கத்துல யாரும் இருக்க மாட்டங்க” அப்படி ஒரு நாறப் பொழப்பை அனுபவிப்பீங்க…

சுந்தர் அறிமுகப்படுத்திய ஜோஸியர் ஜாதகத்தைப் பார்த்து சொன்ன போது பெரிதாக யோசிக்கவில்லை. நட்சத்திரம், ராசி, ஜனன காலம், பிறந்த ஊர் விவரம் கேட்டவரிடம் பிறந்த ஆங்கில தேதி, மாதம், வருடம், பிறந்த நேரம், லக்னம் என சகலத்தையும் ஒப்பித்தான். பொதுப் பலன் சொன்ன ஜோசியரிடம் ஜாதகமே கணிக்க சொன்னது போல நடந்து கொண்டான். ஜோஸியர் சில கணக்குகளைப் போட்டு தன் கூற்றை மீண்டும் உறுதிப் படுத்தினார்.

“கும்ப லக்னத்து ஆளுங்கனாலே இப்படித்தான், தன் ஆளுங்க கஷ்டப்படக்கூடதுன்னு சுய தேவைகளை குறைச்சுப்பாங்க, அத்தி பூத்த மாதிரி தனக்குன்னு ஏதாவது செஞ்சுக்கிட்டா போச்சு, எல்லாரும் ஒன்னு கூடி சாத்துவாங்க, யதார்த்தவாதி வெகு ஜன விரோதிங்கற சொலவடைக்குப் பொருத்தமானவங்க”

ராகவால்‌‌‌ தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஜோஸியரை எதிரே வைத்துக் கொண்டு சுந்தரிடம் கேலி கிண்டல் செய்து தான் அடங்கினான்.

இப்போது மனம் அவரை தீர்க்கதரிசி என்று ஆராதிப்பது ‘பகுத்தறிவு’ என்று சொல்லும் வஸ்துவை கேவலப்படுத்தினாலும் உண்மை சுடுகிறது. கொரோனா வரும்னு ஏன் ஜோசியம் முன்னாடியே சொல்லல? என்றொரு தர்க்க கேள்வி எழுப்பி அது பலவீனமாக கண் முன்னே வீழ்ந்தது.

வயதாக வயதாக மனம் நிலை கொள்ளத் துவங்குகிறது. தர்க்கம், குறுக்குக் கேள்விகள், சம்பிரதாயங்களைப் பகடி செய்தல், வலிந்து உடுத்திக் கொண்ட மேதாவிலாச ஆடைகள்… அனைத்தையும் களைந்து இயல்பாய் இருக்க மனம் விரும்புகிறது.

மார்ச் மாத இறுதியில் சம்பளம் வந்த பின் லாக் டவுன் அறிவிப்பை அரசு வெளியிட்ட போது, பெரிதாக எந்தவொரு கவலையும் இல்லை. புத்திக்கும் உறைக்கவில்லை

வழமையான சம்பளம்… பணம்… மனதை இயல்பாகத் தான் இருக்க வைத்தது. இடையே சொந்த ஊருக்குப் போக கோயம்பேடு திமிலோகப்பட்டு கதிகலங்கிய போது, ரூம் மேட் சுந்தர் ஊருக்குக் கிளம்பினான்

அலுவலகம், பணியாளர்களை வேலைக்கு வர வேண்டாம் என்றது. அடுத்த மாதம் சம்பளம் உண்டு என்று சொன்னது. ராகவ் ஊருக்கு செல்லும் யோசனையைப் புறந்தள்ளினான்

மாதத்தின் முதல் இரண்டு வெள்ளிக்கிழமை இரவுகளில், ஊருக்கு செல்வதை யார் சொன்னாலும் நிறுத்தாத பிடிவாதம். இப்போது எதற்கும் வழியில்லை.

வீட்டில் இருந்து பதறி வரும் போன் அழைப்புகளுக்கு கவனமாக பதில் சொல்லும் மொழி நடையை, சம்பாஷணையில் வெளிப்படுத்துவது புதிதாக சேர்ந்து கொண்ட சடங்கு

மாஸ்க், ஸானிடைசர். டிஸ் இன்ஃபெக்டன்ட் ஸ்ப்ரே… எத்தனை எத்தனை புது அனுபவங்கள், விதிமுறைகள்.

டிவி, யூ.டியூப், ஃபேஸ்புக், வாட்ஸப், நெட் ஃபிளிக்ஸ், அமேஸான் ப்ரைம், புத்தகங்கள்… தோணும் போது தூங்குவது, நினைக்கும் போது கண் விழிப்பது என்று ஆரம்பத்தில் நன்றாகவே இருந்தது. சுந்தர் ஊருக்கு சென்றதால் சமையல் சாப்பாடு பிரச்சனை நர்த்தனமாடியது.

முதல் தளத்தில் வசிக்கும் ராகவுக்கு, அப்பார்ட்மெண்ட் குடியிருப்புவாசிகளுடன் பெரிய பழக்கம் கிடையாது. அசோசியேஷன் பிரஸிடெண்ட்டிடம் மெயின்டெனன்ஸ் தொகையைத் தரும் போது சிரிப்பான்

அவர் சில சமயம் சிரிப்பார், பல சமயம் எந்தவொரு பாவத்தையும் வெளிப்படுத்தாது பணத்தை வாங்கிக் கொள்வார். மே மாதத்திலிருந்து மெயின்டெனன்ஸ் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த சொல்லி G – pay, Phone Pe, BHIM என செயலி விவரங்களை அப்பார்ட்மெண்ட்வாசிகள் அனைவருக்கும் வாட்ஸப்பி இருந்தார்

இருப்பிடம் அருகே இருந்த டீக்கடைக்காரரும் அரசு உத்தரவால் கடையை மூடிவிட்டார். சாப்பாடு பார்ஸல் வாங்க ஏதாவது நல்ல மெஸ் சிக்குமா என்ற தீவிர  கூகிள் சோதனை, தோல்வியில்‌‌‌ முடிந்தது.

தெரிந்த மெடிக்கல்ஸ் நபர் ஒரு மெஸ்சை சிபாரிசு செய்ய, போனான். காலை 8 மணிக்கு முன்பாகவும், மதியம் 12 மணிக்கு முன்பாகவும், மாலை 6 மணிக்கு முன்பாகவும் நேரடியாகப்‌‌‌ போய் பார்ஸல் வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற சட்ட திட்டங்களுடன் இயங்கி வந்த மெஸ் அது.  

காலை டிஃபன் ஐம்பது ரூபாய், மதிய சாப்பாடு நூறு ரூபாய், ஆறு மணிக்கு முன்பு வாங்கும் இரவு உணவு அறுபது ரூபாய். மெனுவெல்லாம் கிடையாது அவர்கள் தரும் “ஹோம்லி ஃபுட்”டை சாப்பிட வேண்டும்.

முதல் நாள் காலை ஐந்து இட்லியும், வைரமுத்து வரியை நினைவு படுத்தும் வெள்ளை நதியாக ஒரு திரவமும் (தேங்காய் சட்னி) பார்ஸலில் இருந்தது. மதியம் மூன்று கரண்டி சாதம், ஒரு கரண்டி சாம்பார், அரை கரண்டி வெண் திரவம் (மோர்?), ரெண்டு ஸ்பூன் பொரியல், ஒரு ரூபாய் சின்னீஸ் ஊறுகாய் பாக்கெட்… இதற்குப் பெயர் மீல்ஸ்…

தாங்க முடியாது விசாரித்த போது அவர்கள் சொன்னது, “ஹோம்லி மீல்ஸ் தம்பி, வத்தக் குழம்பு, கூட்டு, அப்பளம், பாயசம்னு பத்து ரகம் இருக்காது”.

வீட்டுக்கு வெளியே சில ஆசாமிகள் தரும் ‘வீட்டுச் சாப்பாடு’க்‌‌‌கான அர்த்தம் விளங்கியது. பார்ஸலை கையில் வாங்கிக் கொண்டு ஆவல் மேலிட டின்‌‌‌னர்‌‌‌ என்ன? என்ற கேள்விக்கு கண்ட பதில், “ரவா கிச்சடி”

அறுபது ரூபாய்க்கு ஆயுஸில் ஒரு முறை கூட உப்புமா வாங்கி சாப்பிட்டதில்லை. மறுநாள் மாறும் என்று நினைத்ததும் பிழையாகிப் போனது. மதிய சாப்பாட்டில் முதல் நாள் சாம்பாரில் இருந்த காய் மறு நாள் பொரியலிலும், பொரியலில் இருந்த காய் சாம்பாரிலும் மாறி இருந்தது.

காலை உப்புமா மற்றும் மாலை ஆறு மணிக்கு முன்பு பெறும் இரவு உணவு இட்லியாக இடம் மாறி இருந்தது.

நான்கு நாட்களுக்கு மேல் சாப்பிட நாவும், மனமும், வயிறும் இடம் தரவில்லை. இந்த லாக் டவுன் இம்சை இத்தோடு முடிந்து விட வேண்டும். இரண்டு, மூன்று என வரிசை கட்டி அலை அலையாய் பாயக் கூடாது. கவலை குடியேறியது

யூ டியூபில் நிறைய சமையல் குறிப்பு வீடியோக்களை தவறாது தொடர்ந்து பார்க்க, வெறி ஏறி சமையல் செய்ய மூளை சங்கல்பம் செய்தது.  

தக்காளி, உருளை, பீன்ஸ், கோஸ், வெங்காயம், மல்லி & புதினா, இஞ்சி, மிளகாய் – காய் கடை வசமானது.

அரிசி, பருப்பு, நூடுல்ஸ், அரிசி சேவை, சமையல் எண்ணெய், மிளகாய்த்தூள், மல்லித்தூள், மிளகுத்தூள், உப்பு, பெருங்காயம், கடுகு, சீரகத் தூள், வெந்தயத் தூள், ரசப்பொடி, கரம் மசாலா. ஊறுகாய், தயிர், பால், டீத்தூள், முட்டை – மளிகைக் கடை பழக்கமானது.

இறைச்சி கடைக்குப் போக மட்டும் மனம் துணியவில்லை. முட்டை தற்காலிக அசைவ உணவாக இருக்கட்டும் என்று மனம் சமாதானம் செய்து கொண்டது.

முதல் வாரம் சமையல் செய்ய சுவாரசியத்தின் நதியாக பொங்கிப் பாய்ந்தது. குக்கர் விசில் சத்தம் “யானி லைவ் அட் அக்ரபோலிஸ்” கீதமாக பரவசப்படுத்தியது. நாளடைவில் ஸ்ருதி பேத நாராசமானது

சமையலும் கசந்து போக ஆரம்பித்தது. பெரிய வேலைப்பளு, சுமை என அங்கலாய்ப்பு இறுதியானது.

கொரோனா தொற்று வந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கூற்று, ராகவ் அளவில் முழுமையாக பொருந்தவில்லை ஆனால் பொருந்திப் போனது. ஃப்ளாட்டில் தனியாக வாழ்க்கை சுழன்றது.  

மே மாதம், ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ என நிறுவனம் அறிவித்தது. துவக்கத்தில் வேலைப் பளு மிகவும் குறைவாக இருந்த நிலை உள்ளத்துக்கு பலத்த சோர்வைத் தந்தது.

விடிய விடிய ஓடிடிகளில் லயித்துக் கிடைக்கும் போது ரெஸ்ட் ரூம் செல்ல எழுந்து லைட் ஸ்விட்சைப் போடுவது ராகவுடைய வழக்கம். நள்ளிரவு ஒரு மணி, இரண்டு மணி என்று கடிகாரம் நேரத்தைக் காட்டும் அகால வேளை தருணங்கள் அவை.

திறந்திருக்கும் ஜன்னல் கதவு வழியே வெளியே பார்த்தால் ஒரு வீட்டின் பின்புறம் கண்ணுக்குப் புலப்படும். அடுக்குமாடி குடியிருப்பு அல்ல! தனி வீடு.

அந்த வீட்டின் பின்புறம் இரு வேப்பமரங்கள், நடுவே நிறைய பூச்செடிகள். ஒரு ஓரத்தில் கேணி. பக்கத்தில் துணி துவைக்கும் கல் அதன் அருகே ஒரு தண்ணீர் பைப். சுற்றி சிமெண்ட்டால் மெழுகிய கான்க்ரீட் தளம். துணி துவைக்க ஏற்பாடு போல!  

கொஞ்சம் தள்ளி ஜன்னல். உள்ளே ஒரு அறை. படுக்கையறையாக இருக்கக் கூடிய சாத்தியங்கள் அதிகம். ஜன்னலலிருந்து அந்த வீட்டு ஜன்னலுக்குள் மேற்கொண்டு தரிசனங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

சொல்லி வைத்தாற் போல், இரவு இரண்டு அல்லது இரண்டரை மணி வரை அந்த வீட்டு அறையின் உள்ளே விளக்கு ஒளிர்வது, ஜன்னல் வழியே நன்கு தெரியும். மூன்று மணிக்கு மேல் ரெஸ்ட் ரூம் செல்லும் போது விளக்கொளி புலப்படாது. இந்த நிகழ்வு வழமையானது.

தொடர்ந்து இரு இரவுகள் விடாது டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஹோஸ்டேஜஸ் – சீசன் 1 சீரிஸ் பார்த்து முடித்து அதிகாலை மூன்று மணியளவில் அந்த வீட்டு ஜன்னலைப் பார்த்த போது, விளக்கு வெளிச்சம் தவறாது புலப்பட்டது

ஒருவேளை அந்த வீட்டுக்காரரும் ஏதாவது சீரிஸ் பார்த்து முடித்தாரோ? நாம் கண்டதையே அவரும் அனுபவித்தாரோ? அடுக்கடுக்காய் விசித்திர யோசனைகள்…

வெளியே போய் வீட்டைப் பார்த்தால் என்ன? வீட்டுக்காரர் விழித்திருந்தால் அவரிடம் கதைக்கலாமா? யோசிக்க யோசிக்க சிரிப்பாய் வந்தது.

மே மாத ‘வீட்டு வேலை’ காலத்தில் ஒரு நாள் நள்ளிரவு இரண்டு மணிக்குப் பார்த்தால் வெளிச்சமின்றி இருந்தது. அவருக்கும் லாக் டவுன் சலிப்பை உண்டாக்கி விட்டது போலும்!

அவர் யார்? ரிடையர்ட் ஆசாமியா? காரியாலயத்துக்கு வர வேண்டாம் வீட்டிலிருந்து வேலை பார் என்ற நிர்வாக உத்தரவைப் பெற்றவரா? அரசு ஊழியரா? சுய தொழில் செய்பவரா?

லாக் டவுனால் வியாபாரத்தில் நொடிந்து போனவரா? அவர் சாப்பாட்டிற்கு என்ன செய்கிறார்? வீட்டில் யாராவது சமைக்கிறார்களா? நம்மைப் போல் ஹோம்லி மெஸ்ஸில் சிக்கி கொண்டவரா? அல்லது நல்ல மெஸ் ஏதாவது அமைந்து விட்டதா?

நம்மைப் போல் அவரும் செல்ஃப் குக்கிங் ஆசாமியா? விலைவாசி அறிந்தவரா? மரக் கறி மட்டும் உண்பவரா? அசைவம் சேருமா? காய்கனிகளை எல்லாம் மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்வாரா?

இரு சக்கர வாகனத்தில் செல்வாரா அல்லது நடை அரசரா? ஜன்னலுக்கு அந்தப் பக்கம் இருப்பவர் யார்? தெரிந்து கொள்ள மனம் பரிதவித்தது.   

பல நாட்கள் வேலையின்றி இருக்க, நிர்வாகம் ‘அரை மாத சம்பளம்’ என்று அறிவித்தது.

‘வீட்டு வாடகை, மெயின்டெனன்ஸ், மளிகைப் பொருட்கள்… ஊருக்குப் பணம் அனுப்ப முடியுமா?’ சந்தேகம் வந்தது. புதிய கவலைகள் எட்டிப்பார்க்கத் துவங்கின.

இரவு எட்டரை ஒன்பது மணிக்கெல்லாம் படுக்கையில் விழுந்து அறையை இருட்டாக்கி தூங்கத் துவங்கும் பழக்கம் உண்டானது. தூக்கம் வராது போனாலும் படுக்கையிலிருந்து நகராமல் மல்லுக் கட்ட மனம் உத்தரவிட்டது.

ஜூன் மாதம் சிறப்பாக விடியவில்லை. நிறுவனத்தின் நிலை சரியில்லை. ‘அந்நிய தேச ப்ராஜெக்ட் எதுவும் புதிதாக கையிருப்பில் இல்லை. முடித்த சேவைப் பணிகளுக்கான தொகையையும் ஏராளாமாக தாரளமாக வாடிக்கையாளர்கள் கொரோனா காரணமாக நிறுத்தி வைத்துள்ளனர். கடினமான சூழ்நிலை காரணமாக…   மின்னஞ்சல் சுற்றி வளைத்து அடுத்த மாதம் முதல் வேலை இல்லை’ என்று ஓலைச் சங்கதியை பட்டவர்த்தனமாக எடுத்துரைத்தது.

ஜூன் மாதம் பதினைந்தாம் தேதிக்குப் பிறகு மனம் எப்போதும் அமைதியின்றித் தவித்தது. லாக் டவுன் தளர்வுக்குப் பின் தமிழகத்தில் அதிகரித்த தினசரி மரணங்கள் ஒருபக்கம் பதற்ற மனநிலை சரியாமல் பார்த்துக் கொண்டன.

குளித்து முடித்தவுடன் அவன் அம்மா பூஜை ரூமில் சொல்வதைப் பார்த்து கேலி செய்ததை எல்லாம் மறந்துவிட்டு

‘கஜானனம்…

ஓம் நம சிவாய…

புத்திர் பலம்…

நமஸ்தே துளசி ரூபே…

ஜெய் ஸ்ரீ ராம்…

அர்க்க சோம…’

குளித்த பின் அவனும் தினசரி பூஜை அறைக்கு சென்று சொல்ல பழக்கிக் கொண்டான்  

இரவு எட்டரை முதல் அதிகாலை நாலரை வரை நித்திரை பழக்கமாகிப் போனது. அந்த வெள்ளிக்கிழமை காலை நாலரை மணிக்கு எழுந்து ஐஸ் வாட்டரை வாய் திறந்து சரித்துக் கொண்டு தாக சாந்தி முடித்த போது, பால் பாக்கெட் வாங்க வேண்டும் என்பதை ஃப்ரிட்ஜ் கம்பார்ட்மெண்ட் உணர்த்தியது.

இருட்டை விரட்ட லைட்டை போட்டு ரெஸ்ட் ரூம் போகும் போது, தானியங்கி இயந்திரமாக விழிகள் ஜன்னலை கவனித்தன.

விளக்கு ஒளிர்ந்தபடி இருந்தது. ராகவ் யோசித்தான். அறை லைட்டை அணைத்து ஒரு முறை ஆன் செய்தான். மூன்று முறை தொடர்‌‌‌ந்‌‌‌து செய்தான். எதிர் வீட்டிலும் இரு முறை லைட் ஆஃப் ஆகி ஆன் ஆனது.

ஜன்னலருகே வந்த வயதானவர் ராகவைப் பார்த்து பாந்தமாக சிரித்தார். இருட்டில் முகம் சரியாகத் தெரியவில்லை. பதிலுக்கு இவனும் சிரித்தான்.

இன்று எப்படியாவது அவரைப் பார்த்து விட வேண்டும். நிறைய பேச வேண்டும். தொடர் விசாரிப்புகள் மூலம் தம் கேள்விகள் அனைத்திற்கும் விடைகளை அடைந்து விட வேண்டும். அவரை வீட்டுக்கு அழைத்துத் தேநீர் உபசரிப்பு முடிக்க வேண்டும்.

ஒரு புறம் இத்தனை சங்கதிகளை செயல்படுத்த துடித்தாலும், ஏன் இப்படிப்பட்ட சிந்தனை என்றும் கேள்வி எழுந்ததை தவிர்க்க முடியவில்லை.   

ஐந்தரை மணி வரை நெட்டில் மேய்ந்தபடி இருந்தான். பல் தேய்த்து இஞ்சி எலுமிச்சைத் துண்டு சுடுநீர் குடித்து பால் வாங்கக் கிளம்பியவன், வெளியே பார்க்கிங் போய் வாகனத்தை எடுக்காமல் வீட்டின் பின்பக்கம் சென்று லைட் ஜன்னல் வீட்டைப் பார்த்தான். அமைதியாக இருந்தது. வண்டியை வெளியே எடுக்கப் போகும் போது அசோசியேஷன் ப்ரெசிடெண்ட் தென்பட்டார்.

வழுக்கை இல்லாத தலை. வகிடெடுத்து வாரிய தலைக் கேசம். அனாவசியமாக ஒரு வார்த்தை கூட உதிர்க்காத அதரம், எப்போதும் முகச்சவரம் செய்த மீசை, தாடியற்ற வழ வழ முகம், சாயம் இல்லாத தலையில் ஆங்காங்கே வெளிப்பட்ட வெள்ளை நிறம்…

மகன் அயல்நாட்டில் ஏதோ வேலைக்கு சென்று விட்டான். மருமகள் பேரன் பேத்தி என சொந்தங்கள் அனைத்தும் தூரதேச வாசியாகி விட்டனர்.

மனைவியை இழந்து தனியாளாகிப் போன அந்த மனுஷன், பிடிவாதமாக அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்க்கையைத் தொடர்கிறார்.

இவர் போஜனத்திற்கு என்ன செய்கிறார்? லாக் டவுனை எப்படி எதிர் கொள்கிறார்? டிவி பார்ப்பாரா? அரசியல் அபிமானம் கொண்டவரா? வலது சாரியா? திராவிட ஆசாமியா? தோழரா?

சேமிப்பில் நிறைய இருப்பு உள்ளதா? நிலபுலன்கள் உள்ளவரா? மகன் மாதா மாதம் செலவுக்கு தாரளமாக பணம் அனுப்புகிறானா?

தனியொருவர் என்பதால் ஃபிளாட் ஆசாமிகள் ஏக மனதாக இவரை பொறுப்பில் உட்கார வைதுவிட்டர்களா? இவரே விரும்பி ஏற்றுக் கொண்டாரா? இது போல ஒரு முறை கூட ராகவ் யோசித்ததில்லை. ஒப்புக்கு கூட அவரிடம் விசாரித்ததில்லை.

மனித மனம் ஏன் இப்படி இருக்கிறது? இந்த சூத்திரம் மட்டும் பிடிபட்டால் போதும். கடவுளாகி விடலாம்! இதைத் தான் பிரம்ம சூத்திரம் என்று சொல்கிறார்களா?   

ப்ரெசிடெண்ட்டிடம் பேச்சுக் கொடுத்தான். பெரியவர் வீட்டை விசாரித்தான். ஏழெட்டு அடி தள்ளி நின்றபடி க்ளவுஸ் அணிந்த இரு கரங்களையும் அசைக்கப் பயன்படுத்திப் பேசினார்.

டெசிபல் குறைவாக இருந்ததால் மாஸ்க் பின்னாலிருந்து அவர் உதடுகள்  உற்பத்தி செய்யும் வார்த்தைகளை ஆழ்ந்து கவனித்துக் கேட்க வேண்டி இருந்தது.

“ச்சும்மா” என்று சொல்லி வாகனத்தை ஸ்டார்ட் செய்தான். அந்த வீட்டு வாசல் வழியாக சென்றான்.

வீட்டுக்கு வெளியே “கொரோனா வீடு, தடை” என்ற போர்ட் பெரிதாக மாட்டப்பட்டு இருந்தது.

“பெரியவருக்கு பாஸிட்டிவ் ரிசல்ட் வந்து நாலு நாளைக்கு முன்ன ஹாஸ்ப்பிட்டல்ல அட்மிட் ஆனார், மேற்கொண்டு தகவல் எதுவும் தெரியல, அவர் யூஸ் பண்ற ரூம் அது, இப்போ யாருமே போகாம சாத்தியே கிடக்கு, ஆமா நீங்க ஏன் தம்பி, விசாரிக்கறீங்க?” சற்று முன்‌‌‌ ப்ரெசிடென்ட் பேசியது செவியில் மீண்டும் ஒலித்தன

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads – Best Deals in Amazon Deals 👇


 

#ads  தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

 சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

 

             

                         

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

உய்வுண்டு செய்நன்றி கொன்ற மகற்கு (சிறுகதை) – ✍சின்னுசாமி சந்திரசேகரன், பெரியசெட்டிபாளையம், ஈரோடு

இதுவும் புனிதமே …! (சிறுகதை) – ✍ கி.இலட்சுமி, மண்ணடி, சென்னை