இந்த தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள கதைகள், பிரபல அமைப்புகள் மற்றும் பத்திரிகை நடத்திய சிறுகதை போட்டியில் வெற்றி பெற்று பிரசுரிக்கப்பட்டவை
கதைகள் பற்றிய சில விவரங்கள் இதோ உங்களுக்காக:-
ஆசிர்வாதம்
(2012ம் ஆண்டு நேசம் பவுண்டேசன் நடத்திய சிறுகதை போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை)
இந்த கதை என் மனதுக்கு நெருக்கமான ஒன்று. ஏனெனில், இந்த கதை எழுதிய அந்த சமயத்தில், நான் கனடா நாட்டின் ‘மினிஸ்ட்ரி ஆப் ஹெல்த்’ன் (Ministry Of Health) வழிகாட்டுதலின் பேரில், குழந்தைகளுக்கான கேன்சர் பற்றிய மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஒரு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்
மருத்துவ ஆராய்ச்சி மட்டுமின்றி, மக்களிடையே ‘குழந்தைகளுக்கான கேன்சர்’ பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுதல் போன்ற செயல்களும் செய்து வரும் நிறுவனம் அது
நான் பணியாற்றியது அந்நிறுவனத்தின் அக்கவுண்ட்ஸ் பிரிவில் தான் என்றாலும், அந்நிறுவன ஊழியராய் பல்வேறு மருத்துவ கருத்தரங்குகளில் கலந்து கொள்ளும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதன் மூலம், ‘கேன்சரை வெல்ல கேன்சர் பற்றிய விழிப்புணர்வு மிகவும் முக்கியம்’ என்பதை உணர்ந்தேன்
அலுவலக சந்திப்புகள் (Meeting) நிமித்தம் சில புற்றுநோய் மருத்துவமனைகளுக்கு செல்ல நேர்ந்த போது, சின்னஞ்சிறு பிள்ளைகள் தனக்கு என்ன நேர்ந்தது என புரியாமல் அலைப்புறுவதையும், தங்கள் பிள்ளைகளின் துயர் தீர்க்க வழியின்றி பெற்றோர் தவிப்பதையும் காண மனம் வருந்தியது
அந்த சமயத்தில் தான், நேசம் பவுண்டேசன் அமைப்பு “புற்றுநோய் விழிப்புணர்வு பற்றிய சிறுகதை போட்டி”யை அறிவித்தது. சிறு பிள்ளைகளுக்கு வரும் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு நம் மக்களிடையே மிகவும் குறைவே எனத் தோன்றியதால், அந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டது தான் இந்த கதை
வெறும் டாக்குமெண்டரி போல் தகவல் சொல்லும் விதமாய் இல்லாமல், கதை போக்கில் கருத்தை வலியுறுத்தியாய் பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தது மனதிற்கு நிறைவாய் இருந்தது
நீங்களும் வாசித்து உங்கள் கருத்தை பதியுங்கள், நன்றி
எம்.குமரன் S/O மகாதேவன்
(2016ம் ஆண்டு தமிழ் வலைப்பதிவர் குழுமம் நடத்திய சிறுகதை போட்டியில் வெற்றி பெற்ற சிறுகதை)
தாய் பிள்ளையை கர்ப்பத்தில் சுமப்பது பத்து மாதங்கள் தான், ஆனால் காலம் முழுதும் நெஞ்சில் சுமப்பவர் தந்தை என தந்தைகளின் புகழ் பாடும் சிறுகதை இது
அதிலும், இந்த கதையில் வரும் குமரனின் தந்தை மகாதேவன் சராசரி தந்தைகளுக்கும் மேலானவர், கோடியில் ஒருவர் இப்படி இருந்தாலும் அதிசயமே. இதற்கு மேல் சொன்னால் வாசிப்பு அனுபவம் போய் விடும், நீங்களே வாசித்துப் பாருங்கள்
இரண்டாவது அத்தியாயம்…
(2016ல் மங்கையர் மலர் நடத்திய “ஜெயஸ்ரீராஜ் நினைவு சிறுகதைப் போட்டி”யில் பரிசு பெற்று, மங்கையர் மலரின் நவம்பர் 16, 2016 இதழில் பிரசுரிக்கப்பட்ட சிறுகதை)
இதுவும் என் மனதிற்கு நெருக்கமான ஒரு கதை தான். ஈர்ப்பும் காதலும் இளம் வயதில் இருப்பது இயல்பு தான், அதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. ஆனால், காலம் முழுதும் அது இருந்தால் மட்டுமே வாழ்வு முழுமை பெறும். அப்படிப்பட்ட ஒரு அன்பின் வெளிப்பாட்டை உணர்த்தும் கதை தான் இது
இக்கதைகளின் தொகுப்பை, மின் புத்தக (ebook) வடிவில் உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி
என்றும் நட்புடன்,
சஹானா கோவிந்த்
GIPHY App Key not set. Please check settings