டிசம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
மார்கழி மாதம் மதியவெயில் மங்கி தான் இருக்கும் என்று சொல்வது அன்று பொய்யாய் போனது, கல்லூரி முடிந்தகணமே வேகமாக பேருந்துநிலையம் வந்து அடைந்தேன்.
மதிய வெயில் சுள்ளென்று மண்டையை தொலைத்து விட்டது. திருச்சி சுப்பிரமணியபுரம் செல்லும் பேருந்துக்காக சிங்காரத்தோப்பு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன்.
நீண்ட நேர காத்திருப்புக்கு பின் நகரப்பேருந்து வந்ததும் நெத்தியில் நெளிந்து கொண்டிருந்த வியர்வையை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டே பேருந்துக்குள் ஏறி உட்கார இடம் தேடி உட்கார்ந்து கொண்டேன்.
ஏறக்குறைய அனைத்து இருக்கைகளிலும் பயணிகள் உட்கார்ந்து இருந்தனர், நடுவில் இருந்த ஒரு இருக்கையில் ஒருவர் மட்டும் அமர்ந்திருக்க, மேலும் ஒருவர் உட்கார இடம் இருந்தது.
அந்த நேரம் கல்லூரி விடும் சமயம் என்பதால் போக்குவரத்து நெரிசலாக இருந்தது, பேருந்து கொஞ்சம் நின்று மெதுவாகத்தான் சென்றது.
வெயிலில் நின்று காய்வதற்கு பேருந்துக்குள் நிழலில் அமர்ந்து செல்வதால் ஒன்றும் தெரியவில்லை. நகரத்தின் போக்குவரத்து நெரிசலுக்கு இடையே நகர்ந்து சென்ற பேருந்து காந்தி மார்க்கெட் நிறுத்தத்தை வந்தடைந்தது.
ஒரு சில பயணிகள் இறங்கியவுடன் நிறைய பயணிகள் ஏறினர். அந்த நிறுத்தத்தில் ஏறுபவர்கள் எப்பொழுதும் பை நிறைய காய்கறிகள் வாங்கிக்கொண்டு சிரமப்பட்டு ஏறுவார்கள்.
சில நேரங்களில் இரண்டு நிமிடங்கள் கூட பேருந்து அங்கே நிற்கும். முதியவர்கள் கூட காய்கறிகளை நிறைய எடுத்துக்கொண்டு ஏறுவார்கள், பாவம் அவர்களால் வேகமாக முண்டியடித்துக் கொண்டு ஏற முடியாமல் கடைசியாகத்தான் ஏறுவர்.
அப்படி ஏறிய ஒரு முதியவருக்கு நடத்துநர் நாக்கு கொடுத்த பரிசு, “யோவ்! ஒன்னையெல்லாம் யார்யா மார்க்கெட்டுக்கு வர சொன்னது … பையைத் தூக்கிக்கிட்டு வந்திருர… சீக்கிரம் ஏறு பெருசு, என் உசுர வாங்குற”
ஆனால் அந்த முதியவரோ அதை எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் இரு கட்டைப்பைகளுடன் பேருந்தில் ஏறினார். வெயில் தாங்க முடியாமல் நாக்கை தொங்கப்போட்டு மயங்கிக் கிடப்பது போல் கொத்தமல்லி ஒன்று அந்த கட்டைப்பையில் இருந்து தலையை வெளியே தொங்க போட்டுக் கொண்டிருந்தது.
அவர் ஏறிய உடன் அவர் அருகில் ஒருவர் மட்டும் உட்காருவதற்கு இருக்கை இருந்தது ஆனால் அவர் அதில் உட்காராமல் யாரையும் உட்கார விடாமல் மறித்துக் கொண்டிருந்தார்.
யாரையோ அவர் கண்கள் தேடியது. இதைப்பார்த்த நடத்துனர் எரிச்சலுடன் “யோவ்! உட்காருயா பெருசு…உன்னால பெரிய தொல்லையா போச்சு” என முணுமுணுத்துக் கொண்டே நகர்ந்தார்.
பிறகுதான் தெரியவந்தது அந்தக் காலி இருக்கையில் தன் மனைவியை உட்கார வைக்கலாம் என தேடிக் கொண்டிருந்தார். நெரிசலுக்கு இடையே ஏறிய அவர் மனைவி அருகே வந்து நின்றதும்தான் அவருக்கு நிம்மதியாக இருந்தது.
“ஏ! உட்காரு ” என்று மனைவியை உட்கார சொன்னார்.
“நீ உட்காருயா” என்று சொல்லிவிட்டு அவர் மனைவி கம்பிகளை தளர்ந்த கைகளோடு இறுக்க பிடித்துக் கொண்டு நின்றார்.
ஆனால் அந்த முதியவரோ , “ஏ! நீ உட்காரு நான் நிற்குறேன்” என்றார்.
சற்று கடுகடுத்த குரலில் அவர் மனைவி, “ஏன்யா சும்மா பைய வச்சுக்கிட்டு உட்காரு” என்றவுடன் அரைமனதோடு முதியவர் உட்கார்ந்தார்.
இரண்டு நிறுத்தங்களுக்கு பிறகு அவருக்கு எதிரே உள்ள இருக்கை காலியானது. அதைக் கண்டதும் அதில் தன் மனைவிக்குப் பதில் வேறு யாரும் உட்கார்ந்து விடக்கூடாது என, “ஏய்! அங்க போய் உட்காரு” என சத்தமாக கூறினார்.
அவர் அப்படி சொன்னது அனைவரின் கவனத்தையும் திசை திருப்பியது. அவர் மனைவி அந்த இருக்கையில் உட்காரும் வரை தவியாய் தவித்து விட்டார்.
சில நிறுத்தங்களுக்கு பின் தன் மனைவியின் பக்கத்தில் உட்கார்ந்து இருந்த பெண் இறங்கியவுடன் முதியவர் சடாரென எழுந்து தன் பைகளை அவசரமாக தூக்கிக்கொண்டு தன் மனைவியின் அருகே உட்கார்ந்துகொண்டார். பிறகுதான் அவருக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது.
அப்பாடா என்று தன் இருக்கையில் சவுகரியமாக உட்கார்ந்து கொண்டார். தன் மனைவியை பார்த்து புன்னகைத்தார்.
இந்த நிகழ்வை பார்த்துக்கொண்டிருந்த எனக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது. இன்றைய இளம் தலைமுறைகளுக்கு ஏதோ ஒன்றை சொல்வதைப் போல் இருந்தது.
அவர்கள் இருவரின் செயல்களும் அன்பு செலுத்துவதற்கும் அக்கறை காட்டுவதற்கும் வயது ஒரு பொருட்டல்ல என உணர்த்தியது. எத்தனை வயதானால் என்ன அவருக்கு அந்த மூதாட்டி மனைவிதான், அந்த மூதாட்டிக்கு அவர் கணவன் தான். நல்ல துணைகள் என்றும் இணைந்தே இருப்பர். இணைந்தே இருப்பது தானே வாழ்க்கை.
(முற்றும்)
Woww amazingly written ❤️😍 Nalla thunaigal endrum inaindhe irupar❤️❤️
மிக்க நன்றி! 😊🙏
மிகவும் அருமை வாழ்த்துகள் .
மிக்க நன்றி அப்பா! ☺🙏
Thank you Anna Good real storey for our society.
மிக்க நன்றி! ☺🙏
Good keep it up
மிக்க நன்றி! ☺🙏
மிகவும் அருமையாக இருந்தது உங்களது கதை எழுதி எழுத்தாளருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்👌👏👏👏💐
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்! ☺🙏
Well done … It shows your keen observation…
Writing in a very young age needs lot of patience and perseverance…It is evident in your work..
Keep Writing and Keep Glittering….
All the very best….
Thank you ☺🙏