சஹானா
சிறுகதைகள்

என் உயிர் ஷைலு (சிறுகதை) – ✍சுஸ்ரீ

Offer Extended Till August 31, 2021

Make Use of this Scholarship 👇

ப்ப குடி வந்திருக்கறது புது ஃபிளாட், கிழக்கு கடற்கரை சாலைல , பெயர் பெற்ற பில்டரோட 22 மாடி கட்டிடம்.

கிங்ஸ் டவர், பெரிய காம்ப்ளெக்ஸ். நீச்சல் குளம் என்ன, உடற் பயிற்சி கூடம் என்ன, உள்ளேயே சின்ன சிவன் கோவில், சாய்பாபாவுக்கும் அதுல இடம்

நடை பயிற்சிக்கு சுற்றி சுற்றி பாதை, மினி தியேட்டர்… என்ன இல்லை இங்கே?

சொல்லாம விட்டது குழந்தைகள் விளையாடற விஸ்தாரமான பார்க், அங்கே சறுக்கு, ஊஞ்சல், குழந்தைகள் உயர உயர குதிக்குமே அது என்னவோ சொல்வார்களே… ஹாங் டிரம்போலின்

மூணு குட்டிகள் அதில் குதித்து விளையாடறது எங்க 4 வது மாடி பால்கனில இருந்து தெரியறது

எல்லாம் இருக்கு என்ன பிரயோஜனம், என் ஷைலு குட்டி இல்லையே. நினைக்கறப்பவே கண் நிறைந்தது, நெஞ்சு அடைத்தது

பாத்தீங்களா என்னைப் பத்தி சொல்லாம என் கஷ்டத்தை மட்டும் சொல்றேன். பழைய காலப் பேர் தான்… பார்வதி

பிறந்து வளர்ந்தது பாலக்காடு பக்கத்துல ஒட்டப்பாலம். கோயமுத்தூர்ல நர்சிங் டிகிரி. இப்ப தமிழ் நல்லாயிட்டு பரையும்

டிகிரி முடிச்சவுடனே கோயமுத்தூர்லயே சங்கர் நர்சிங்ஹோம்ல ஜோலி கிட்டி. பாக்க சராசரியாயிட்டு இருப்பேன்

ரெண்டு வருஷத்தில அப்பா பாத்து வச்ச வரனோட விவாகம் செய்து, பர்த்தா குமார் என்ஜினியராணும், சென்னைல ஜோலி

அப்பறம் குமார் வளர உஷாராக்கும், அடுத்த வருஷம் கைல குட்டி

நான் இப்ப வேலைக்கு போறதில்ல, தமிழ் சுத்தமா வருது. அப்ப குரோம் பேட்டைல வாடகை வீடு. பக்கத்து வீட்டு பானுமதி மாமி தமிழ் கத்துக் கொடுத்தா. படிக்க கூட செய்வேனாக்கும்

அந்த சுவர்ல உள்ள போஸ்டர் படிக்கவா? த…சா…வ…தா….ர….ம். தசாவதாரம் கமல் ஆக்ட் கொடுத்தது சரியா?

ஷைலு பிறந்தவுடனே வாழ்க்கையே மாறிப் போச்சு. அடுத்த 3 வருஷம் எனக்கும் குமாருக்கும் எப்பவும் ஷைலு, எதுலயும் ஷைலு

அந்த ஆகஸ்டு மாசம் எங்க வாழ்க்கைல கஷ்ட மாசம். ஷைலுவுக்கு லேசா காய்ச்சல்.

பல்லாவரம் சைல்டு ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் வைஷ்ணவி சிதம்பரம் எம்.பி.பி.எஸ், டி.சி.எச்., “ஏம்மா பயப்படறீங்க? சாதாரண காய்ச்சல், மருந்து சாப்பிட்டா ரெண்டு நாள்ல சரியாயிடும்”னு சொன்னாங்க

ஆனா மூணாவது நாள், அது எம்.பி.பி.எஸ், டி.சி.எச்’க்கு புரியாத விதியானது

அன்னைக்கு  ராத்திரி, வெள்ளை துணில பொட்டலாமா போனா எங்கள் உயிர் ஷைலு

இந்த நாலு வருஷத்துல, அதுல இருந்து மீள முடியலை

குமார் ஈ.சி.ஆர்’ல வீடு வாங்கி இப்ப இங்கே வந்துட்டோம். பால்கனில இருந்து குழந்தைங்க விளையாடறதை பாத்தா, ஷைலு ஞாபகம் ஜாஸ்தி வருது

இப்ப இருந்தா ஏழு வயசு, பக்கத்துல இருக்கற இன்டர்நேஷனல் ஸ்கூல்ல ரெண்டாவது படிப்பா

எதுத்தாப்பல தெரியுதே அந்த டிரம்போலின்ல பந்தா எகிறுவா. பக்கத்து வீட்டு ரமேஷ்கிட்ட இருக்கற மாதிரி கேம் விளையாட ஆப்பிள் ஐபேட் கேப்பாளோ?

எண்ணங்கள் பறக்க இலக்கே இல்லை, கண்ணில் சுரக்கும் நீருக்கும் கணக்கே இல்லை

‘டிங் டிங் டிங்… பிளீஸ் ஓபன் த டோர்’ காலிங் பெல் ரெண்டு முறை அழைத்தவுடன் கதவை திறந்தேன்

இரண்டு இளம் பெண்கள் நின்றிருந்தனர். நடுத்தர வயது, கையில் நோட்டு, பேப்பர் சகிதமாய் சிரிப்பை ஒட்டிக் கொண்டு நின்றனர்

நான் கதவை திறந்தவுடன், “உள்ளே வரலாமா மேடம்?” என்றார் அந்த நடுத்தர வயது பெண்

நான் உதடு பிரியாத ஒரு புன்னகையுடன் ஒதுங்கி உள்ளே வர அனுமதித்தேன்

“மேடம் நாங்க பக்கத்துல ஒரு அனாதை குழந்தைகள் பாதுகாப்பு இல்லம் இந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கறோம். பயப்படாதீங்க இப்ப பணம் கேக்க வரலை. புது கட்டடத்துல தொடங்கறதால பக்த்துல உள்ள எல்லாரையும் இன்வைட் பண்றோம். குழந்தைகள் நிகழ்ச்சி இருக்கு, நீங்க உங்க மிஸ்டர் குழந்தைகளோட ஃபங்ஷனுக்கு வரணும்” மூச்சு விடாம சொல்லி நிறுத்தவும்

கூட வந்த பெண் ஒரு சிக்கனப் பத்திரிகை கொடுத்தாள் ‘மிஸ்டர் அன்ட் மிஸஸ் குமார்’ என பெயரிட்டு

நான் பதில் சொல்லும் முன், மீண்டும் பல் தெரிய புன்னகைத்து வெளியேறினார்

குமாருக்கும் குழந்தைகள்னா பிடிக்கும்

ஞாயிற்றுக் கிழமை சரியான நேரத்துக்கு அந்த அனாதை குழந்தைகள் இல்லத்தை அடைந்தோம்

சட்னு போற தூரம். ஐந்து நிமிஷ நடை இந்த காம்ப்ளக்ஸிலிருந்து

ஆரவாரமற்ற சின்ன ஃபங்க்‌ஷன். பத்து குழந்தைகள் இருந்தா அதிகம்

இன்னிக்கு தானே ஆரம்பம், நாள் போனால் இன்னும் பிள்ளைகள் சேருமோ என்னமோ

குமாரும் நானும் இருக்கைகளில் அமர்ந்தோம். சின்ன மேடையில் பாட்டு, பேச்சு, டான்ஸ்னு அந்த குழந்தைகள் ஏதோ செஞ்சிட்டு போச்சு

இதில் கலந்து கொண்டவர்களும் அதிகமில்லை. காம்ளக்ஸ் ஆட்கள் தான் ஒரு 20 பேர், திறப்பு விழாவுக்கு வந்த பழைய கால நடிகை ஒருவர், ஒரு குட்டி ஆளுங்கட்சி தலைவர் அவ்வளவு தான்

ஒரு டீ, ஸ்நாக்ஸ் என முடிந்தது விழா

குமாரும் நானும் கடைசியில், இல்லத்தின் தலைவி சித்ராம்மாவை அவருடைய அலுவலக அறையில் சந்தித்து ஒரு கண்ணியமான தொகை நன்கொடையாய் அளித்தோம்

சித்ராம்மா 45வயது கேரள பெண், கணவனால் கைவிடப்பட்டவர்.

தன் தாய் வழி சொத்து பூராவும் பொது சேவையில் முடக்கினவர். இந்த இடம், கட்டிடம் அனைத்து செலவுகளும் அவர் சொந்தப் பணம்

அவரை பாத்தவுடன் எனக்கு பிடிச்சுப் போச்சு. அவருக்கும் அப்படியேனு நினைக்கறேன்

புறப்படறப்ப என்னை கட்டிப் பிடிச்சிட்டு, ”டைம் கிடைக்கறப்பல்லாம் வாம்மா, உனக்கு தெரிஞ்சதை இந்த குழந்தைகளுக்கு ஒரு தாயா இருந்து கத்துக் கொடு. என் கிட்ட நிறைய ஸ்டாஃப் இல்லை” எனவும், என் கண் கலங்கியது

“தினமுமே வரேன் மேடம், எனக்கும் இது ஒரு வடிகால்” கண்களை யாருக்கும் தெரியாமல் புடவை தலைப்பில் துடைத்துக் கொண்டேன்

“மேடம் இன்னொரு தடவை குழந்தைகளை பாக்கணுமே” என நான் கேட்க

“இனிமே அவங்க உன் குழந்தைகள், நினைச்சப்ப பாக்கலாம்” என்கிறார் சிரித்தபடி

குமாருக்கு ஏதோ ஃபோன் கால் வர எழுந்து வெளியே சென்றார்

நெஞ்சம் படபடக்க குழந்தைகள் இருந்த அறையை அடைந்தேன்

பெரிய அறை, அதில் டார்மெட்டரி டைப் ரெட்டை அடுக்கு கட்டில்கள். வசதியான விசால அறைதான்

இருந்த அத்தனை குழந்தைகளும் வெவ்வேறு விளையாட்டுகளில். எல்லாரும் 5 முதல் 10 வயதுக்குள்

நான் உள்ளே போனவுடன் அனைத்து பிள்ளைகளும் என்னை சூழ்ந்தன

“ஆண்ட்டி… நீ புது டீச்சரா எங்களுக்கு”ன்னது ஒரு 7 வயது வாண்டு

“நீ அழகா இருக்கே, தினம் கதை சொல்றயா”ன்னு
ஒரு சுட்டிப் பெண்

இன்னுமொரு பெண் குழந்தை பக்கத்தில் வந்து மிருதுவாக கையை பற்றிக் கொண்டது

மொத்தமே 3 பசங்க 6 பெண் குழந்தைங்க தான். ஒரே ஒரு 6 வயது பெண், கட்டில் ஓரமாய் நின்று, கரும் கண்கள் பளபளக்க என்னையே பாத்தபடி இருந்தாள்

பக்கத்தில் போய் அவளை அணைத்துக் கொண்டே, “உன் பேர் என்னம்மா”னு கேட்டேன்

“தெரியாது”  என்றது

ஒரு பையன் அருகில் வந்து, “புதுசா சேந்த பொண்ணு டீச்சர், பேரே இல்லை” என்றான்

“ஹெட் மேடம் எங்களையே பேர் வைக்க சொன்னாங்க” என்றது ஒரு பிள்ளை

“இப்ப நாம பேர் வைக்கலாமா? ஷைலஜா ஓகேயா”னு எல்லாரையும் பார்த்து கேட்டேன்

“ஷைலஜா”னு எல்லோரும் ஒரு சேர கத்தினர்

அந்த 6 வயது குட்டிக்கு என்ன தோன்றியதோ சட்டென என் கழுத்தை கட்டிக் கொண்டாள்

காதோடு மிருதுவான தேன் குரலில், “நீ என் அம்மாவா”னு கேட்டா கண்கள் பளபளக்க

என் தொண்டையில் பந்தாக ஒரு அடைப்பு

 “ஆமாண்டா செல்லம்” என்றேன்

என் உயிர் ஷைலு, எனக்கு திரும்ப கிடைச்சிட்டா

#ad

      

        

#ad

              

          

Similar Posts

4 thoughts on “என் உயிர் ஷைலு (சிறுகதை) – ✍சுஸ்ரீ
  1. என் உயிர் ஷைலு அற்புதமான கதை இந்த கதையின் வரிகளில் நான் சிறிது நேரம் என் வாழ்வு புத்தகத்தை முன் பக்கமாக புரட்டி பார்த்தேன்..என் வீட்டிலும் ஒரு ஷைலு உண்டு…
    அழகான கதை …எழுத்து நடை சிறப்பு…
    எடுத்துக் கொண்ட கரு அருமை..மொத்தத்தில் கடைசியில்…கண்களை துடைத்துக் கொண்டேன்…யாரும் அறியாமல்…

  2. என் உள்ளம் வரை ஊடுருவி தாக்குதலை ஏற்படுத்திய அற்புதமான படைப்புகளுள் இதுவும் ஒன்று..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: