in ,

எல்லோருமே சூழ்நிலைக் கைதிகள் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

  எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

வாட்சைப் பார்த்தார் வெள்ளியங்கிரி. பத்தே முக்கால். பேங்க் படு பிஸியா இருந்தது.  “இதென்ன வம்பாப் போச்சு… இவன் ரெண்டு மணிக்கு மேலே வரச் சொல்றானே?… அதுவரைக்கும் என்ன பண்றது?”.

     தஞ்சாவூரில் இருக்கும் மகளுக்கு அனுப்புவதற்காக ஐம்பதாயிரம் ரூபாய்க்கு டிராப்ட் எடுக்க பேங்க்கிற்கு வந்தார். எல்லா வேலையும் முடிந்தது ஆனால் டிராஃப்டை ரெண்டு மணிக்கு மேலதான் இஸ்யூ பண்ணுவாங்களாம்.

     பேங்க்கை விட்டு வெளியே வந்தவர், “என்ன பண்ணலாம்?… யோசித்தார். எதிரே இருந்த அந்தப் பாடாவதி தியேட்டரைப் பார்த்தார்.

            “வீட்டுக்குப் போயிட்டுத் திரும்ப வர்றது வேஸ்ட்… பேசாம படத்துக்கு போயிட வேண்டியதுதான்!” தியேட்டரை நோக்கி நடந்தார்.

     ஒரு பள்ளிக்கூட ஆசிரியராய் இருந்து கொண்டு ‘மார்னிங் ஷோ’வில் போய் உட்காருவது மனதிற்கு நெருடலாய் இருந்த போதும், பார்க்கப் போவது  “லவகுசா”என்னும் புராணப் படம் என்பதால் டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றமர்ந்தார்.

     அரங்கினுள் அவ்வளவாக கூட்டம் இல்லை. மொத்தமாகவே ஒரு ஐம்பது பேர்தான் இருப்பார்கள். “எது… எப்படியோ… இந்தக் காலத்திலும் லவகுசா படத்தைப் பார்க்க இத்தனை பேர் வந்திருக்காங்களே… அதுவே சந்தோஷப்பட வேண்டிய விஷயம்தான்!” என்று நினைத்துக் கொண்டார்.

            ஆனால் அந்த சந்தோஷத்திற்கு அல்பாயிசு என்பது படம் ஆரம்பித்த பிறகுதான்  தெரிந்தது.

     ஏகப்பட்ட விளம்பரங்களுக்கு பிறகு துவங்கிய மெயின் பிக்சர் காட்டுவாசிகளை பற்றிய ஒரு மலையாள படமாயிருக்க அதிர்ந்து போனார். “அடப்பாவிகளா “லவகுசா”ன்னு தானே போஸ்டர் ஒட்டி இருந்தீங்க?”

            ஆரம்பத்தில் எப்படி எப்படியோ போன அந்தக் காட்டுவாசி படம் போகப் போக விரசத்தின் எல்லையைத் தொட்டது.

     ஒவ்வொரு காட்சியும் முழுக்க முழுக்க அந்தச் சமாச்சாரத்திற்காகவே எடுக்கப்பட்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.

     வெள்ளிங்கிரியால் உட்கார முடியவில்லை. நெளிந்தார்.

            “ஆத்தாடி… உலகம் ரொம்பவே கெட்டுப் போயிடுச்சுப்பா” தவித்தார். ‘எப்படா இடைவேளை விடுவான்.. எழுந்து ஒரே ஓட்டமாய் ஓடிவிடலாம்’ என்று காத்திருந்தார்.

     இடைவேளை விட்டதுதான் தாமதம் வேகவேகமாக வெளியே வந்து கேட் அருகே நின்றார். பூட்டு தான் தொங்கிக் கொண்டிருந்தது.

     “அடக் கஷ்ட காலமே!… இப்ப என்ன செய்யறது?” யோசித்தபடியே கேண்டீன் பக்கம் சென்று அங்கிருந்தவனிடம் விசாரித்தார்.

            “ராமண்ணா சாவியை கொண்டுட்டு வெளியே போயிட்டான்!… அநேகமா வீட்டுக்குப் போய் இருப்பான்… படம் முடியறப்பத்தான் வருவான்!.. அதனால பெருசு போய்ப் படத்தை பாரு!” என்றான் அவன் நக்கலாய்.

     எல்லோரும் தன்னையே பார்ப்பது போலிருக்க கூனிக்குறுகி அங்கிருந்து நகர்ந்தார் வெள்ளியங்கிரி.

     “ஐயா…. நீங்க எப்படி இங்கே?” முகத்தில் கேலியையும் தேக்கிக் கொண்டு அந்த இளைஞன் கேட்க, திரும்பிப் பார்த்தார். சென்ற வருடம் தன் வகுப்பில் படித்த மாணவன்.

     “அது…வந்து… ஒண்ணுமில்லைப்பா பக்கத்து பேங்கிற்கு வந்தே… அங்கே கொஞ்சம் லேட்டாகும் போலிருந்தது… வீட்டுக்கு வரைக்கும் போயிட்டு திரும்பி வருவது வீண் அலைச்சல் என்பதால்.. இந்த தியேட்டருக்குள்ள நுழைஞ்சேன்!… வெளிய “லவகுசா”ன்னு போட்டுட்டு உள்ளார ஏதோ அசிங்கமான படத்தை போடுறானுக” என்றார்.

     அவன் அதை நம்பவில்லை, என்பது அவன் முகபாவத்திலேயே தெரிந்தது.

            அவனுடனிருந்த இரண்டு இளைஞர்கள் அவரைப் பார்த்து சிரித்தபடி தங்களுக்குள்ளாக எதையோ பேசிக் கொள்ள, தர்ம சங்கடமானார்.

     அதைச் சமாளிக்கும் விதமாய்,  “என்னப்பா என்ன விஷயம்?… ஸ்கூல்லதான் நான் வாத்தியார் வெளில நண்பன் மாதிரி” என்றார்.

     “இல்ல… இந்தப் படத்தை பார்ப்பதற்குன்னு வந்துட்டு… பேங்க்… டிராப்ட்…ன்னு ரீல் விடறீங்க!ன்னு நான் சொல்லலை… இவன் சொல்றான்” என்றான் காதணி அணிந்திருந்த ஒரு இளைஞன்.

     “நான் எப்படிப்பா இந்த மாதிரி கண்ராவிப் படத்துக்கெல்லாம் வருவேன்?… லவகுசா….ன்னு பார்த்திட்டு உள்ளார நுழைஞ்சிட்டேன்!”

     “லவகுசா அடுத்த தெருவிலிருக்கிற கிருஷ்ணா தியேட்டர்ல!”

     “என்னது?… வேற தியேட்டர்லேயா?” அதிர்ச்சியுடன் கேட்டார்.

     ”எதுக்குங்க சார் சும்மா நடிக்கிறீங்க இப்பத்தான் நண்பன் மாதிரின்னு சொன்னீங்க… அப்புறம் ஏன் ஃபிலிம் காட்டறீங்க?” தடித்த உதட்டுக்காரன் சொல்லி விட்டு சிரிக்க.

     அவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பதென்று தெரியாமல் தலைகுனிந்தபடி நடந்தார் வெள்ளிங்கிரி. முதுகுக்கு பின்னால் அந்த மூவரும் அடித்த கமெண்ட்கள் அவர் தன்மானத்தைச் சோதித்தன.

     படம் முடிவதற்கு முன்பே வெளியே வந்து, பேங்கிற்குச் சென்று ட்ராப்டை வாங்கிக் கொண்டு பஸ் ஸ்டாப்பில் வந்து நின்றார் வெள்ளிங்கிரி.

     அங்கு கல்லூரி மாணவ மாணவியர் கூட்டம் அதிகமிருந்ததால், காட்டுக் கூச்சலும்  சற்று அதிகமாகவே இருந்தது.

     எதேச்சையாக பின்புறம் பார்த்த வெள்ளியங்கிரி அந்த மூவரையும் பார்த்து துணுக்குற்றார்.  “அடப் பாவிகளா இங்கேயும் வந்துட்டீங்களா?” அங்கிருந்து நகர்ந்து  மறைந்து நின்று கொண்டார்.

     அங்கே சற்று மிகையாகவே ஈவ் டீஸிங் நடந்து கொண்டிருப்பதைக் கண்டு கொதித்தார்.  ஆனாலும் ஒன்றும் செய்ய முடியாதவராய் நின்றார்.

     நேரம் போகப் போக மாணவர்களின் கூச்சல் அதிகமாகிக் கொண்டே போனது. தவிப்பாய் நெளிந்த மாணவிகள் முகம் சுளித்தபடி பஸ் வரும் திசையையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தனர்.

      “இவனுங்களுக்கெல்லாம் மனசுல பெரிய ஹீரோன்னு நெனப்பு!… ச்சை.. ஏன்தான் இந்த பசங்க இப்படியெல்லாம் நடந்துக்கறானுகளோ?” மனசுக்குள் புலம்பினார் வெள்ளிங்கிரி.

     அப்போது, மின்னல் வேகத்தில் வந்து நின்ற போலீஸ் வேனிலிருந்து குதித்த கான்ஸ்டபிள்கள் கூச்சலிட்டுக் கொண்டிருந்த  மாணவக் கூட்டத்தைச் சுற்றி வளைக்க மிரண்டு போனது அந்தக் கூட்டம்.

     வேனின் முன்புறக் கதவை திறந்து கொண்டு இறங்கி வந்த இன்ஸ்பெக்டர், “ஸ்கௌண்ட்ரல்ஸ்!… நீங்கெல்லாம் காலேஜுக்கு படிக்க வர்றீங்களா?.. இல்ல காளித்தனம் பழக வர்றீங்களா?” கேட்டபடியே அருகில் நின்று கொண்டிருந்த மாணவனை     “பளார்”ரென்று அறைந்தார்.

     “கான்ஸ்டபிள் இவனுக அத்தனை பேரையும் வேன்ல ஏத்தி… ஈவ்டீஸிங் கேஸ்ல புக் பண்ணுப்பா!” தடித்த மீசை துடிக்க கத்தினார் இன்ஸ்பெக்டர்.

     மாணவர்கள் கதறினர்… கெஞ்சினர்… சில மாணவர்கள் அழுதே விட்டனர்.

எதையுமே சட்டை செய்யாமல் கான்ஸ்டபிள்கள் அவர்களை வலுக்கட்டாயமாய் வேனில் ஏற்ற, கண்ணீர் சிந்தியபடியே ஏறினர்.

     “அட… நம்ம கூட சினிமா பார்த்த பசங்கள்?.. ஆமாம்… அவர்களை எதுக்கு வேன ஏத்தறாங்க?.. அவங்க அமைதியாய்த்தானே நின்னுட்டிருந்தாங்க?… விடக் கூடாது!” வேகமாய் வந்து இன்ஸ்பெக்டர் எதிரில் நின்றார் வெள்ளிங்கிரி.

.
     அவரைக் கூர்ந்து பார்த்த இன்ஸ்பெக்டர்,  “ஐயா… நீங்க வெள்ளிங்கிரி வாத்தியார் தானே?” கேட்க.

     “ஆமாம்” என்றபடி இன்ஸ்பெக்டரை உற்று நோக்கினார் வெள்ளிங்கிரி.

“ஐயா… என்னை தெரியலையா நான்தான் பரசுராமன்!… உடுமலைப்பேட்டை!.. உங்க ஸ்டூடண்ட்!” என்றார் இன்ஸ்பெக்டர் பெருமிதத்துடன்.

     “ரொம்ப நல்லதாப் போச்சு!… தம்பி…. நானும் ரொம்ப நேரமா இங்கதான் நின்னுட்டிருக்கேன்!… இந்த மூணு பசங்களும் எந்த ரகளையும் பண்ணாம… அமைதியாய்த்தான் நின்னுட்டிருந்தாங்க!… இவனுகளை நீங்க கூட்டிட்டு போறது தப்பு!” என்றார் அந்த மூவரையும் காட்டி.

     “ஓ… அப்படியா?… நீங்களே சொல்லும் போது நிச்சயம் உண்மையாய்த்தான் இருக்கும்!” என்ற இன்ஸ்பெக்டர் கான்ஸ்டபிள் பக்கம் திரும்பி,  “கான்ஸ்டபிள்… அந்த மூவரையும் விட்டுட்டு மத்தவங்களை மட்டும் ஏத்துப்பா” என்று கட்டளையிட்டு விட்டு,   “ஐயா சொல்லுங்கய்யா.. எப்படி இருக்கீங்க?.. என்ன பண்ணிட்டு இருக்கீங்க?”.

வெள்ளிங்கிரி தன் சேம நலத்தைச் சொல்ல, சந்தோஷமாய்க் கேட்டு விட்டு,  “அப்ப நான் கிளம்புறேன் ஐயா!… இன்னொரு நாள் வீட்டுப் பக்கம் வரேன்!” சொல்லிவிட்டு வேனில் ஏறிப் பறந்தார் இன்ஸ்பெக்டர்.

     அந்த மூவரும் திக்பிரமை பிடித்தாற் போல் நின்றிருக்க,  “என்னப்பா சிலையாட்டம் நின்னுட்டீங்க?” வெள்ளிங்கிரி அவர்களை நெருங்கிச் சென்று கேட்டார்.

     “ஐயா!… ரொம்ப நன்றிங்க ஐயா!” கோரஸாய்ச் சொன்னார்கள்.

     “தம்பிகளா… உண்மையிலேயே நீங்க ஈவ்டீஸிங் பண்ணலை!… ஆனாலும் சந்தர்ப்ப சூழ்நிலை உங்களையும் குற்றவாளியாய் காட்டிடுச்சு!…”

மூவரும் தலையை மேலும், கீழும் ஆட்ட, “அதே மாதிரிதான் நானும் அந்த ஆபாசப்பட தியேட்டருக்குள்ளே போனது… இப்பப் புரியுதா?”.

     அவர்கள் பதில் பேச முடியாமல் நிற்க, அர்த்தபுஷ்டியான ஒரு புன்னகையோடு அங்கிருந்து நகர்ந்து, தன் பஸ் வந்ததும் ஏறிப் பறந்தார் வெள்ளிங்கிரி.

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    எதற்கும் அழாதவன் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    தல போற வேல (சிறுகதை) – முகில் தினகரன், கோவை