பிப்ரவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
“ஷ்ரவந்தி எழுந்திரும்மா, மணி 7 ஆகப்போகுது. எவ்வளவு நேரமா எழுப்பறது” என்று மாலதி குரல் கொடுத்தபடியே அவளருகில் வந்தவள், கையில் டம்ளரிலிருந்த தண்ணீரை கொஞ்சமாக எடுத்து ஷ்ரவந்தியின் தூக்க கலக்கமான கண்களின் மீது லேசாக தடவி விட்டாள்.
“அம்மா, என்னம்மா இன்னைக்கு சன்டே தானே. இன்னும் கொஞ்ச நேரம் ப்ளீஸ்மா. கரெக்டா 8 மணிக்கு நானே எழுந்திருவேன்” என்று சொல்லியபடியே போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டாள்.
கொஞ்சம் சலிப்புடன் மாலதி முதலில் ஏ.சி. யை ஆஃப் செய்து பிறகு பேனையும் ஆஃப் செய்தாள்.
மகளிடம் கொஞ்சலாகவும், கெஞ்சலாகவும், “குட்டிமா எழுந்திருடா, இன்னைக்கு என்ன தேதி தெரியுமா? அக்டோபர் 2. கல்யாணத்திற்கு இன்னும் ஒரு மாசம் தான்டா இருக்கு. இன்னும் எவ்வளவு வேலை பாக்கி இருக்குடா. அப்பா ஊரில் இருந்தால் எவ்வளவு உதவியாக இருந்திருக்கும். இந்த சமயம் பார்த்து ஆபிஸ் டூர் போயிட்டார். பாட்டியை பார்த்துக்கணும், பாட்டிக்கு வேண்டியதை பண்ணனும். இதுக்கு நடுவுல பத்திரிக்கை கொடுப்பது, ஷாப்பிங், டெய்லர், முடியலைடா. கொஞ்சம் எழுந்து அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணுடா”
“அம்மா நாளைலேர்ந்து ஆபீஸ் லீவு தானே. இன்னைக்கு கொஞ்ச நேரம்மா ப்ளீஸ்” என்று மீண்டும் பேன் ஸ்விட்சை போட்டாள்.
“ஷ்ரவந்தி, இந்த ஒரு மாசமும் சீக்கிரம் எழுந்து பழகுடா. குளிச்சிட்டு உன்னால் என்ன ஹெல்ப் பண்ண முடியுமோ அதை பண்ணி பழகு. ஓரளவு சமைக்க தெரிஞ்ச நீ, மாப்பிள்ளையிடம் பேசும் போது அவருக்கு என்ன பிடிக்கும்னு கேட்டு தெரிந்து அதை கத்துக்கோ. மாமியார், மாமனார் பத்தி தெரிஞ்சுக்கிட்டு, என்ன பிடிக்கும் என்ன பிடிக்காதுன்னு கேட்டுக்கோ. கொஞ்சம் மாத்திக்கணும்டா குட்டிம்மா. அப்போ தான் மாமியார் வீட்டிலே போய் குடும்பம் நடத்தும் போது ஈஸியா இருக்கும்”
அடுக்கிக் கொண்டே போன அம்மாவை, “ஒகே மாலதி டார்லிங், நீ சொன்னபடியே செய்கிறேன். ஆனா இன்னைக்கு சன்டே. நாளைலேர்ந்து ஆரம்பிச்சிப்போம், ஓகேவா. போ டார்லிங், போய் சூப்பரா ஒரு கப் காபி போடு. பத்து நிமிஷத்தில பல் தேய்ச்சிட்டு வரேன்” என்று சொன்னபடியே வந்தவளிடம் காபியை கொடுத்தவள்,
“ஷ்ரவந்தி விளையாட்டுத்தனம் போதும்டா. நாளைக்கு உன் மாமியார் வீட்டில என்னைத் தான் குறை சொல்லுவாங்க, ஞாபகம் வச்சுக்கோ”
“சரிம்மா, நீ கவலையே படாதே. நான் குட் கேர்ள்னு உனக்கு தெரியாதா. எவ்வளவு சூப்பரா பெண்ணை வளர்த்துருக்கீங்கன்னு என் மாமியாரே சொல்லும்படி நடந்துப்பேன் போதுமா. சரி வா, இன்னைக்கு என்ன டிபன். எனக்கு பிடித்த சேவை, குருமா தானே” என்றபடியே சாப்பிட உட்கார்தவள், அம்மா சொல்வதை எல்லாம் யோசித்து பார்த்தாள்.
‘கொஞ்சம் பயமாத் தான் இருக்கு. ஒகே, இன்னும் ஒரு மாசமிருக்கே. அதுக்குள்ள கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டு விடலாம். அம்மா சொன்ன எல்லா விஷயங்களை விட காலை சீக்கிரமா எழுந்திருப்பது தான் கொஞ்சம் கஷ்டமான டாஸ்க்காக தெரியுது. மொபைல் போன் அலாரம் ஹெல்ப் பண்ணும். மத்தபடி, பரத்திற்கும், மாமனார், மாமியாருக்கு பிடிச்ச அயிட்டங்களை தெரிஞ்சுக்கிட்டு, போன உடனே செய்து மூன்று பேரையும் அசத்தி விட வேண்டியது தான்’
தடபுடலாக திருமணம் நடந்து, ஷ்ரவந்தியும் கொஞ்சம் சிரிப்பும் நிறைய அழுகையுடனும் அம்மா வீட்டிலிருந்து மாமியார் வீடு வந்து சேர்ந்தாள்
நிச்சயதார்த்தம் ஆன நாள் முதல் பரத்துடன் என்ன தான் போனில் பேசி பழகியிருந்தாலும், மாமியார் வீடும் அங்குள்ளவர்களும் கொஞ்சம் அந்நியமாக தான் பட்டனர்.
நடுநடுவே, காலையில் சீக்கிரம் எழுந்துக்கணும் என்ற படபடப்பு மனசுக்குள் இருந்து கொண்டே தான் இருந்தது
ஒருபுறம் அப்பா, அம்மா, பாட்டி, பிறந்த வீடு எல்லாவற்றையும் விட்டு விட்டு வந்த வருத்தம். எல்லாம் கலவையாக வந்து வந்து போனாலும் லைட்டான அசட்டு சிரிப்புடன் அந்த வீட்டில் உள்ளவர்களை உபசரித்து கொண்டும் பேசியபடியும் இருந்தாள்.
மறுநாள் காலை, அவள் பயந்தபடியே அடித்த அலாரத்தை ஆஃப் செய்துவிட்டு நன்றாக இழுத்து போர்த்திக் கொண்டு தூங்கியவளை, மனதில் அடித்த அலாரம் எழுப்பியது.
‘ஏய் ஷ்ரவந்தி, இது உன் அம்மா வீடு இல்லைடா, மாமியார் வீடு. அம்மா கிட்ட வாய் கிழிய பேசினியேடி, முதல் நாளே கோட்டை விட்டுடாதே, ஹூம் எழுந்திரு’ என்ற எண்ணம் உசுப்ப
அலறி அடித்துக் கொண்டு எழுந்தவள், மடமடவென குளித்து ஹாலுக்கு தயங்கியபடியே வந்தவளை மாமியார் சாந்தி, “குட்மார்னிங் ஷ்ரவந்தி. இந்தாடா காபி” என்று நீட்ட ஒரு செகண்ட் அம்மா மாலதியின் முகம் கண் முன்னே வந்து போனது.
ஷ்ரவந்தி இதை எதிர்பார்க்கவேயில்லை.
“அத்தை ஸாரி… கொஞ்சம் தூங்கிட்டேன். நாளை முதல் சீக்கிரமா எழுந்திருவேன்” என்றவளை சாந்தி குறுக்கிட்டு
“எதுக்குடா ஸாரி, புது இடம். தூக்கம் வரவும், பழகவும் கொஞ்ச நாளாகும். உன் வீட்டில் எப்படி இருந்தியோ அப்படியே இந்த வீட்டிலும் இரு. ஒரு மாற்றமும் வேணாம் சரியா.
இங்க பார் ஷ்ரவந்தி, என் மாமியார் என்கிட்டே ரொம்ப அன்பா நடந்துப்பாங்க. என்னை தன் பெண் போலத் தான் பார்த்தாங்க. மருமகள் என்ற எண்ணமே அவங்களுக்கு வந்தது இல்லை.
அதனாலேயே அவங்ககிட்ட எனக்கும் சீக்கிரமே ஓட்டுதல் வந்துடுச்சி. மாமியார்னா என்னடா கொம்பா முளைச்சிருக்கு. மாமியார் மெச்சிய மருமகள்னு கேள்வி பட்டிருப்பே. ஆனா நான் மருமகள் மெச்சிய மாமியார்னு சர்டிபிகேட் வாங்கணும். சரி சரி வா. உனக்கு பிடிச்ச சேவை குருமா பண்ணியிருக்கேன்”
ஷ்ரவந்திக்கு ஒன்னும் புரியவில்லை. முதல்ல அம்மாவுக்கு போன் பண்ணி எல்லாத்தையும் சொல்லணும் என்று ஓடியவள், கட்டிலிலிருந்து கீழே விழவும், “ஷ்ரவந்தி எழுந்திருடா இன்னும் ஒரு மாசம் கூட இல்லை உன் கல்யாணத்திற்கு” என்ற மாலதியின் குரல் கேட்டது
(முற்றும்)
‘சஹானா’ சிறுகதைப் போட்டி 2021 முடிவுகள் அறிய இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings