அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் அப்பா வைக்கும் சரத்தில் ஆரம்பிக்கும் எங்கள் அன்றைய தீபாவளி கொண்டாட்டங்கள். எண்ணெய் தேய்த்து குளித்தவுடன், பழைய உடை ஒன்றில் உட்காரும் படி அப்பா சொல்வார், அப்போது தான் புத்தாடைகள் நிறைய கிடைக்குமாம்.ஏன்? எதற்கு? என்று கேள்விகள் கேட்கத் தெரியாத காலம்..:) நாங்களும் சொல்வதைச் செய்வோம்..:). புத்தாடை அணிந்து கடவுளுக்கும், பெற்றோருக்கும் நமஸ்கரிப்போம்
பட்டாசு என்றவுடன் என் நினைவுக்கு வருவது, தீபாவளிக்கு ஒரு மாதத்துக்கு முன்பே பட்டாசு லிஸ்ட் வாங்கி அதில் வேண்டியதை தம்பியும் நானும் குறித்துக் கொடுப்போம். அம்மா சென்று 100 ரூபாய்க்கு பெரிய வயர்கூடை நிறைய வாங்கி வருவார். அதை மூன்று பாகமாக பிரிக்க வேண்டும் என்பது எங்கள் வீட்டு நியதி. தம்பிக்கு, எனக்கு, கார்த்திகை தீபத்துக்கு.
நெடுநாள் வரை தீப்பெட்டி, புஸ்வானம், சங்குசக்கரம், மத்தாப்பு இவற்றோடு நிறுத்திக் கொள்வேன்..:) தம்பி தன்னுடைய பட்டாசு பங்கை கேட்காத வரை சந்தோஷமாக இருப்பான்..:)
ஒருமுறை என் சின்னஞ்சிறு வயதில் என் கையைப் பிடித்து புஸ்வாணம் வைத்த போது அம்மாவின் கையில் புஸ்வாணம் வெடித்து கை முழுவதும் புண்ணானது. இந்த சம்பவம் எனக்கு ஓரளவு தான் நினைவுள்ளது! அன்று! அம்மா பட்ட வேதனை அப்போது எனக்குப் புரியலை..:(
பலகாரங்கள் இல்லாத தீபாவளியா?? மைசூர்பாக், தேங்காய் பர்ஃபி, பாதுஷா, ரவா லாடு, மிக்சர், முறுக்கு, தட்டை என்று ஒரு வாரம் முன்பிருந்தே அம்மா செய்த பலகாரங்கள் டின்களிலும், டிரம்களிலும் வீடெங்கும் நிறைந்திருக்கும்! கடைகளில் வாங்கும் பழக்கமில்லாததால் குழந்தைகள் பத்து, பதினைந்து நாட்களாவது வைத்திருந்து சாப்பிடட்டும் என சிரத்தையாக செய்து வைப்பார்.
புத்தாடைகளும் வருடத்தில் ஒருமுறை தானே! அதனால் எப்போது அணிந்து கொள்ளப் போகிறோம் என்ற ஆவல் இருக்கும்..:) அக்கம் பக்கத்து வீடுகளுக்குச் சென்று பலகாரங்களைத் தந்து புத்தாடைகளை காண்பித்து விட்டே வீடு திரும்புவோம்..:)
தொலைக்காட்சியில் பெரிதும் ஈடுபாடு இல்லாத நாட்கள், புத்தாடை, பட்டாசு, பலகாரங்கள் என்று இவை தான் அன்றைய எங்கள் தீபாவளி கொண்டாட்டங்களாக இருந்தன.
இப்போது போல் எப்போது வேண்டுமானாலும் புத்தாடைகள், விதவிதமான இனிப்புகள், நாள் முழுக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று இருந்தாலும், அன்றைய தீபாவளியில் மனது முழுக்க மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
என் சிறுவயது தீபாவளி நினைவுகளை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததற்கு மிக்க நன்றி
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். எங்கும் மகிழ்ச்சி நிறைந்திருக்கட்டும்
சஹானா இணைய இதழின் முந்தைய மாத பதிப்புகள். இது இந்திய Amazon தளத்தின் பதிப்பு👇
ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, பிரேசில், டென்மார்க், பிரான்ஸ், மெக்ஸிகோ, யு.கே, இத்தாலி, நியூஸிலாந்து, ஜப்பான் இன்னும் பல நாடுகளின் Amazon தளத்திலும் இது கிடைக்கிறது. Sahana Govind என உங்கள் நாட்டின் Amazon தளத்தில் Type செய்தால், புத்தகங்களை நீங்கள் காணலாம். நன்றி
சஹானா கோவிந்தின் நாவல் மற்றும் சிறுகதைத் தொகுப்புகள் சில 👇
Click here to subscribe to sahanamag’s upcoming articles for FREE
என்றும் நட்புடன்,
சஹானா கோவிந்த்
ஆதியின் நினைவுகளும் அருமை! அந்தக் கால தீபாவளிக் கொண்டாட்டங்களைப் போல் இந்தக் காலத்தில் இருப்பதில்லை. அப்போதெல்லாம் எப்போப் புதிய உடையை உடுத்தப்போறோம்னு ஆவலா இருக்கும். மறுநாள் பள்ளிக்கு அதை அணிந்து செல்வதில் ஆர்வமாக இருப்போம். பக்ஷணங்களைப் பள்ளிக்கு எடுத்துச் சென்று நட்புகள், ஆசிரியர்களோடு பகிர்ந்து கொள்வோம். இப்போதெல்லாம் அவரவர் வீட்டு பக்ஷணம் அவரவர் வீட்டோடு! 🙁
உண்மை தான் மாமி, உலகம் உள்ளங்கையில் வந்த பின், உறவுகளும் சுருங்கி தான் போச்சு