in

சாருவின் காரு (சிறுகதை) – ✍ நித்யா இறையன்பு

சாருவின் காரு (சிறுகதை)

மே 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

“அந்த கிரிக்கெட்டுல என்னதான் இருக்கோ? மணி பதினொன்னு ஆகியும் டிவி பார்த்துட்டு என்னை தூங்க விடாம அப்பாவும் மகளும் படுத்தறீங்க”

“உனக்கு தூக்கம் வந்தா ரூம் கதவை சாத்திட்டு தூங்கு”

“நான் தூங்கறது இருக்கட்டும், காலையில ஏழு மணிக்கு ட்ரெயின் ஞாபகம் இருக்கா இல்லையா?”

“மம்மி, முக்கியமான மேட்ச் போயிட்டிருக்கும் போது டிஸ்டர்ப் பண்ணாதீங்க”

“ஆமாண்டி நாலு மணிக்கு அலாரம் வெச்சிடு. அந்த அலாரம் கூட நான் தான் வைக்கணுமா இந்த வீட்ல?”

“அம்மாடி நானே வெச்சுக்கிறேன், டென்ஷன் ஆகாம வந்து எங்களோட ரிலாக்ஸா மேட்ச் பாரு”

“எனக்கு இந்த கிரிக்கெட் கன்றாவியெல்லாம் சுத்தமா பிடிக்காதுன்னு உங்களுக்கு தெரியாதா?”

“டாடி, மம்மிக்கு கிரிக்கெட் புரியாது, அதான் பிடிக்கலேன்னு சாக்கு சொல்ராங்க”

“அடியே மது, என்னை கிண்டல் பண்ணலேன்னா உனக்கு தூக்கமே வராதே? காலையில அஞ்சு மணி பஸ் பிடிச்சா தான் ஏழு மணி ட்ரெயினை பிடிக்க முடியும்”

“மம்மி பஸ் ட்ரெயின் எல்லாத்தயும் பிடிச்சு நாம என்ன பண்ண போறோம்?” என்று மது கைதட்டி சிரிக்க, மகளோடு சேர்ந்து கொண்டார் கதிரவன்..

“இப்போ சிரிங்க, காலையில நேரத்துல எழுந்திரிக்காம இருங்க ரெண்டு பேரும், அப்போ இருக்கு கச்சேரி”

“கூல் டவுன் மம்மி, நான் எழுந்துக்குவேன்”

“உங்கப்பா அப்படியே BMW கார் வாங்கி நிறுத்தி இருக்காரு பாரு, நம்ம இஷ்டத்துக்கு கிளம்ப”

“அதென்னடி BMW கார்ல போனா தான் கெத்தா? இந்த ஆல்டோ, நானோ கார்ல போனா மேடம் கவுரவம் குறைஞ்சிடுமோ?”

“அட்லீஸ்ட் ஆல்டோ காராவது வாங்குங்க, அப்புறம் என்னை கிண்டல் பண்ணலாம்”

“கார்ல போனா தான் மத்தவங்க மதிப்பாங்கன்னா, அந்த வெட்டி கவுரவம் தேவையே இல்லை”

“ஓஹோ அப்புறம் எதுக்கு போன மாசம் லதா பொண்ணு கல்யாணத்துக்கு மட்டும் வாடகை கார்ல கூட்டிட்டு போனீங்க? அப்போ அது கவுரவம் இல்லையா?”

“மது உங்கம்மா கார் புராணத்தை ஆரம்பிச்சுட்டா, டிவியை ஆஃப் பண்ணிட்டு வா தூங்க போகலாம்”

“ம்ம் இப்போ மட்டும் முக்கியமான மேட்ச் இல்லையாம்” என்று தோள்பட்டையை குலுக்கியவாறே வேகமாக தனது அறைக்குள் நுழைந்தாள் சாருமதி

நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சாருமதிக்கு, வசதியான மாப்பிள்ளை அமைய வேண்டும் என்ற கனவு எல்லாம் இருந்ததில்லை. கோவையில் பிரபலமான தனியார் கல்லூரியின் அலுவலகத்தில் அக்கவுண்டண்ட் வேலை பார்க்கும் கதிரவனை மணந்தாள் சாரு

கதிரவனின் பெற்றோர் விட்டுச் சென்ற சொந்த வீடு, மாத வாடகை எனும் நிர்ப்பந்தத்தை இல்லாமல் செய்தது. திருமணமான முன்றாவது மாதத்தில் கருத்தரித்ததால், தனது செவிலியர் வேலையையும் ராஜினாமா செய்ய வேண்டியதாய் போனது சாருமதிக்கு

அவளுக்கு கார் மீது அலாதி பிரியம் என்றெல்லாம் சொல்லி விட முடியாது

இரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது, அப்பிச்சிக்கு சீரியஸ் என தந்தி வர, அப்பா அம்பாசடர் கார் வாடகைக்கு எடுத்து வந்தார். அம்மாவோ அழுது அழுது அரை மயக்கத்தில் பின் சீட்டில் அக்காவின் தோளில் சாய்ந்தப்படி அமர்ந்திருக்க, தம்பி அப்பாவுடன் முன் சீட்டில், அக்காவும் கூட சோகமாக இருந்தாள்

சாருவிற்கு இது தான் முதல் கார் பயணம் என்பதால், அளவில்லாத மகிழ்ச்சியில் கார் கண்ணாடி வழியே வேடிக்கை பார்க்க ஒரே இருட்டு. ஆம் அப்போது நள்ளிரவு, தான் காரில் பயணிப்பதை தனது நண்பர்கள் உட்பட யாரும் பார்க்கவில்லை என்பது தான் சாருவின் தலையாய கவலையாக இருந்தது

அதற்குப் பிறகு காரில் செல்லும் வாய்ப்பு மீண்டும் கிட்டவில்லை

திருமணம் முடிந்து மறு அழைப்பிற்கு கூட புது மண தம்பதிகளை டெம்போவில் தான் அழைத்து சென்றார்கள்

மது பிறந்த பிறகு நடந்த சில சம்பவங்கள் தான், அவளுக்கு கார் வாங்கியே ஆக வேண்டும் என்ற மனநிலைக்கு மாற்றியது

அப்போது மதுவிற்கு மூன்று வயது இருக்கும், உறவினர் திருமணத்திற்கு நாத்தனார் ரேவதியின் காரில் சாருவும் மதுவும் பயணிக்க வேண்டியதாயிற்று. விடுமுறை இல்லாததால் கதிரவன் அவர்களோடு செல்லவில்லை

மது முன் சீட்டில் தான் அமர்வேன் என ஓடி உக்கார, ரேவதியின் ஏழு வயது மகன், “இது எங்க கார், நான் தான் இங்க உக்காருவேன்” என்று மதுவை கீழே தள்ளிவிட, மதுவை சமாதானம் செய்து கொண்டே, சாரு மனதிற்குள் இனிமேல் இவங்க கார்ல ஏறக் கூடாது என முடிவு எடுத்தாள்

அது போக நிறைய விஷேஷங்களுக்கு செல்லும் பொழுது, பெரும்பாலும் உறவினர்கள் கார், இன்னோவா, சைலோ இப்படின்னு வலம் வர, இவர்களின் குடும்பம் மட்டும் மூட்டை முடிச்சுக்களை தூக்கிக் கொண்டு பஸ் பிடிச்சு, ட்ரெயின் பிடிச்சு அலைஞ்சு திரிஞ்சு வியர்த்து விருவிறுக்க வர வேண்டி இருக்கும்

அப்போதெல்லாம் அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வரும். கதிரவன் மீது ஆத்திரமாக வரும். ஒருமுறை அவளின் அத்தை மகள் ஒருத்தி காரை அவளே டிரைவ் செய்து கொண்டு வீட்டுக்கு வந்த போது, மனம் சிறிது உடைந்து தான் போனது சாருவிற்கு

இப்படியே பதினாறு வருடங்கள் ஓடி விட்டது

நாளை மறுநாள் சென்னையில் கதிரவன் பணிபுரியும் கல்லூரி பேராசிரியர் ஒருவரின் திருமணம் சென்னையில் நடக்கவிருக்கிறது. குடும்பத்துடன் கட்டாயம் வர வேண்டும் என அவர் அன்புக்கட்டளை இட, நாளை குடும்பத்துடன் செல்ல ஆயத்தமாயினர்

டிவியை அணைத்து விட்டு அறைக்குள் நுழைந்த கதிரவன், கட்டிலில் முதுகை காட்டிக் கொண்டு படுத்திருந்த சாருவிடம் நெருங்கி அவளது வலது தோள் பட்டையை திருப்ப முயல, “எதுவா இருந்தாலும் தொடாம பேசுங்க”

“இப்போ என்னடி பிரச்சினை உனக்கு” என்று அவளை அணைக்க முயல

“நீங்க தான் பிரச்சினை” என்றவாறு கதிரை தள்ளி விட்டு எழுந்தாள் சாரு

“கார் வாங்கணும் அதானே?”

“அது தான் இந்த ஜென்மத்துல நடக்காதுன்னு தெரிஞ்சு போயிடுச்சே”

“என்னடி சூழ்நிலை புரிஞ்சு தான் பேசறியா?”

“என்ன பொல்லாத சூழ்நிலை? பதினாறு வருஷமா இதையே தான் சொல்றீங்க?”

“பொட்டப்பிள்ளையை பெத்து வெச்சிருக்கோம், இன்னும் ரெண்டு வருஷத்துல காலேஜ், ஹாஸ்ட்டல்ன்னு நிறைய செலவு இருக்கு. இருக்கறதெல்லாம் செலவு பண்ணிட்டு நாளைக்கு யார் கிட்ட கை ஏந்த முடியும்?”

“அதெல்லாம் சரிங்க, கார் இப்போ அத்தியாவசிய தேவை ஆயிடுச்சு இல்லையா?”

“கார் வாங்கறதுல ஒரு பிரச்சினையும் இல்ல சாரு, மெயின்டனன்ஸ் அப்படி இப்படின்னு நிறைய செலவு வைக்கும். அப்புறம் காரை எடுத்துட்டு தேவை இல்லாம வெளிய சுத்த சொல்லும். மாசா மாசம் லோன் கட்டணும்”

“அது வேணா அப்படித்தான்”

“மனுஷங்க நம்ம குணத்தை பார்த்து மதிச்சா போதும், வசதியா கார்ல போனாதான் மதிப்பாங்கன்னா அவங்க நட்பே தேவை இல்லை”

“உத்தரவு மஹாராஜா, அரசன் எவ்வழியோ அரசியும் அவ்வழி”

“புரிஞ்சுக்கிட்டதுக்கு தாங்க் யூ சாரு”

மறுநாள் காலை அடித்து பிடித்து கோவையிலிருந்து சென்னை செல்லும் கோவை எக்ஸ்பிரஸில் ஏறி சென்னை சென்ட்ரலை அடையும் பொழுது மதியம் மணி ஒன்று முப்பது

கால் டாக்ஸி பிடித்து மண்டபத்தை அடைந்தனர். மதிய உணவை முடித்துக் கொண்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு ஓய்வெடுக்க சென்றனர்

மாலை ரிசப்ஷனுக்கு ஹாலின் உள்ளே சென்றதும், கதிரின் சக பணியாளர்கள் அனைவரும் குடும்பத்துடன் வந்திருந்தனர்.

அவர்களுடன் உரையாடும் பொழுது, பெண்மணி ஒருவர், “மேடம் நீங்க ஏன் எங்க கூட ப்ளைட்ல வரல?”

“பிளைட்டா, என்ன சொல்றீங்க? நாங்க கோவை எக்ஸ்பிரஸ்ல தான் வந்தோம்”

அதற்குள் இடைமறித்த ஒருவர், “எங்க குடும்பத்தோட சேர்ந்து ஒரு முப்பது பேர் வரலாம்ன்னு பிளான் பண்ணிணோம். இண்டிகோல டிக்கெட் ஆபர் கிடைச்சது, அதான் ஒரு குரூப்பா கிளம்பிட்டோம். சார்கிட்ட கூட கேட்டோம் அவர் டிரெயின்ல வர்றதா சொல்லிட்டார்” என்று கூற, சாருவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க ஆரம்பித்தது

அன்றிரவு மது, “அப்பா நாமும் பிளைட்ல வந்திருக்கலாம், ஏன்ப்பா வேண்டாம்ன்னு சொன்னீங்க? செலவு அதிகம் ஆகும்ன்னா?”

“இல்லடா குட்டி, ரொம்ப வருஷத்துக்கு பிறகு நாம மூணு பேரும் ஒண்ணா வெளிய வர்றோம், அம்மா எப்பவும் பிரைவசி வேணும்ன்னு சொல்லுவா. அவளுக்காக தான் ட்ரெயின்ல வரலாம்ன்னு பிளான் பண்ணினேன். இன்னொரு நாள் பிளைட்ல நாம் மூணு பேர் மட்டும் போவோம்” என்று சமாதானம் கூறிக்கொண்டே சாருவை ஓரக்கண்ணால் பார்க்க, 

“இப்படி சொல்லி சொல்லித்தான் உங்கப்பா கிட்ட நான் சரண்டர் ஆகிடறேன் மது”

 சில வாரங்களுக்குப் பிறகு, “சாரு, எங்க காலேஜ் பிரின்சிபால் ராஜசேகர் இன்னைக்கு ரிட்டையர் ஆகிறார். ஈவினிங் சென்ட் ஆஃப் பார்ட்டிக்கு பேமிலியா வர சொல்லி இன்வைட் பண்ணிருக்காங்க. மதுவுக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்கும், அதனால் நாம ரெண்டு பேரும் போயிட்டு வந்திடலாம்”

பிரின்சிபால் குடும்பம் மிகுந்த பரிச்சயம் என்பதால், விழாவிற்கு செல்லாமல் இருப்பது மரியாதை இல்லை என்று உணர்ந்த சாரு “சரி” என்று சம்மதித்தாள்

மாலை பாராட்டு விழா முடிந்ததும், இறுதியில் உரையாற்றிய கல்லூரி முதல்வர் ராஜசேகர் அவரது இருபதாண்டு கால பணியை பற்றியும், சக பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டே ஒவ்வொருவருக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கிக் கொண்டிருந்தார்

இறுதியில்,  இந்த கல்லூரியின் வளர்ச்சியில் கதிரவனின் பங்களிப்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது என ஆரம்பித்து, கதிரவனே ஆனந்த கண்ணீரில் மூழ்கும் வண்ணம் பாராட்டி தீர்த்தார் ராஜசேகர்

தனிப்பட்ட முறையில் அவருக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். ஆகவே நானும், என் மனைவியும் அவர்தம் நேர்மையையும், கடின உழைப்பையும் அங்கீகரிக்கும் பொருட்டு அவருக்கு கவுரவ பரிசாக ஏதாவது செய்ய வேண்டுமென கலந்து பேசி ஒரு முடிவெடுத்தோம் என கூறிக்கொண்டிருக்கும் வேளையில், விழா ஒருங்கிணைப்பாளர், கதிரவன் மற்றும் சாருமதியை மேடைக்கு அழைக்க, ராஜசேகர் இருவரின் கைகளில் கார் சாவி ஒன்றை பரிசளிக்க, இருவரும் திருதிருவென விழிக்க, அரங்கத்தில் அனைவரும் எழுந்து கை தட்ட, விழா இனிதே நிறைவுற்றது.

(முற்றும்)

டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 6) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்

    பெருமாள் வைரம் (டிடெக்ட்டிவ் சிறுகதை) – ✍ ராம் ஸ்ரீதர், சென்னை