~கருப்புக்கண்ணாடி~
ஒரு வாரத்திற்குப் பிறகு
இன்றுதான் சூரிய வெளிச்சத்தைப் பார்க்கிறேன்
நீ பேசாமல்
திருப்பிக்கொண்ட முகத்தில்
கிழிக்கப்படாத
என் நாட்காட்டித் தாள்கள்
உன் குறுஞ்செய்தி
பதிலுக்காகக் காத்திருக்கும்
துருப்பிடித்த பற்சக்கரங்களுடன்
சுழலும் என் கடிகாரம்
உள்ளிருந்து நான்
உறக்கக் கூச்சலிட்டும்
வெளியே கேட்காதபடி
கான்கிரீட்டால் நீ மூடிச்சென்ற
ஒரு பாழுங்கிணறு
நீ தாழ்ப்பாளிட்டுச்சென்ற
கதவுகளைத் தட்ட
எத்தனிக்கும்
அன்பின் கூர்வாளால்
துண்டாடப்பட்ட என் கரங்கள்
ஒரு பாலைவனப் புயலில்
உன்காலடிகளைத் தேடித்
தட்டழியும்
திரை விழுந்த என் கண்கள்
பல வருட சூன்யத்திற்குப்பிறகு
இன்றுதான் நம்பிக்கை வந்தது
நம் நாட்கள் இனி திரும்பாதென்று!
சூரிய வெளிச்சம்
கண்ணைக்கூசுவதாக
பொய் சொல்லி
இந்த கருப்புக் கண்ணாடியை
அணிந்து கொள்கிறேன்
நிரந்தரமாக!
~மழைவரக்கூடும்~
மழைவரக்கூடும் என்றதும்
மண்வாசனையை முந்திக்கொண்டு
மொட்டைமாடித் துணிகளின் ஈரநெடியே
முதலில் மனதை வந்தடைகிறது
யாரோ ஒருவர்,
தனிமையின் பிடியில் தவிக்கும்
வயோதிக நோயாளியின்
சந்திப்பை தள்ளிப்போடுகிறார்
மூக்கின் மேல் விழுந்த
முதல்துளியை மட்டும்
சுருக்குப்பைக்குள் முடிந்துகொண்டு
சுமையோடு வீடுதிரும்புகிறாள்
நடைபாதையில் காய்கறிவிற்கும்
கூன் கிழவியொருத்தி.
அதுவரை
காலியாக இருந்த பாத்திரங்களெல்லாம்
இந்தவருடத்தில் முதன்முதலாக
நிரம்ப காத்திருக்கின்றன
மழைநீரொழுகும் குடிசைகளில்
நேற்றுவரை
கண்டும் காணாமலும் வந்த
சாலைப் பள்ளங்களையெல்லாம்
தன் ஞாபகப்பள்ளத்திலிருந்து தோண்டியெடுத்து
கயிற்றில்நடக்கும் குழந்தையின்கவனத்தோடு
ஊர்ந்து செல்கிறார்
இருசக்கர வாகனஓட்டிஒருவர்
மழையில் நனைவது பிடிக்கும் என்று
பிரமாணபத்திரம் தாக்கல் செய்தவர்களெல்லாம்
மறக்காமல் கலர்கலர் குடைபிடித்து
எட்டி நடக்க
யாருமே கொண்டாடாதபோதும்
அவசரங்களின் நகரமெங்கும்
சடசடவென அடித்துப்பெய்கிறது
ஓர் மாமழை..!
~சுயஇறங்கற்பா~
தன்னைத்தானே வாசித்துக்கொள்ளும்
ஒரு வயலின் சிற்பம் கண்டேன்
தனிமையின் அகாலத்தில்
என்னுடன் நான்
பேசிக் கொள்வது போல்
எனக்கு நானே
ஜோக்குகள் சொல்லிக்கொள்வது போல்
என்னைப்பார்த்து நானே
புன்னகைத்துக் கொள்வது போல்
என் தோளில் நானே
விழுந்து உடைந்து அழுவது போல்
எனக்கு நானே
முடி திருத்திக்கொள்வது போல்
சர்க்கரையில்லாத தேனீரை
என்னுடன் நானே அருந்துவது போல்
எனக்காக நானே
ஒரு நூடுல்ஸ் சமைப்பது போல்
என் செருப்பை நானே
பழுது பார்ப்பது போல்
அறுந்த என் பொத்தான்களை
நானே தைத்துக் கொள்வது போல்
குளியலறையில் தவறி விழும்போது
எனக்கு நானே கைகொடுத்து தூக்குவது போல்
என் அறையை நானே
சுத்தம் செய்வது போல்
என் காயங்களை
எனக்கு நானே காண்பித்துக் கொள்வது போல்
எனக்கு நானே எழுதிய கடிதத்தை நானே படித்து
கண்ணீர்மல்க நெஞ்சோடு அணைத்துக் கொள்வது போல்
என் கண்ணீரை
நானே துடைத்துக் கொள்வது போல்
எனக்கு நானே
அன்பு செய்வது போல்
என்னை நானே
வெறுப்பது போல்
என்னை நானே
ஆறத்தழுவி தேற்றுவதுபோல்
ஒருகட்டத்தில்
என்னை நானே கைவிடுவது போல்
அவ்வளவு எளிதல்ல
எனக்கு நானே
ஒரு இரங்கற்பா இசைத்துக் கொள்வது..!
Gift your better half these Romance Novels for Valentines Day – Amazon India Site👇
Gift your better half these Romance Novels for Valentines Day – Amazon.com (USA) Site👇
GIPHY App Key not set. Please check settings