தமிழ்ப் புத்தாண்டு வரப் போகிறது. பண்டிகை நாட்களில் செய்ய ஏற்ற பாயசம் ஒன்றைத் தான் பார்க்கப் போகிறோம். செய்முறை மிகவும் எளிது.
சுவை ஜோராக இருக்கும். வெல்லம் சேர்த்து செய்யும் பாரம்பரிய இனிப்பு இது. வாங்க! அதன் செய்முறையைத் தெரிந்து கொள்வோம்.
தேவையானப் பொருட்கள்
பச்சரிசி – 50 கிராம்
தேங்காய் – ஒரு மூடி
வெல்லம் – 150 கிராம்
ஏலக்காய் – நான்கு
காய்ச்சிய பால் – அரை லிட்டர்.
முந்திரி, திராட்சை – சிறிதளவு
நெய் – ஒரு ஸ்பூன்
செய்முறை
- அரிசியை நன்கு களைந்து அரை மணிநேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- தேங்காயைத் துருவி ஏலக்காயுடன் மிக்சியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- இதனுடன் ஊறிய அரிசியை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
- அடி கனமான பாத்திரத்தில் அரைத்த அரிசி, தேங்காய், ஏலக்காய் விழுதைச் சேர்த்து, அதனுடன் தண்ணீரும் சேர்த்து அடுப்பில் வைத்து, நிதானமான தீயில் கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்
- சிறிது கவனமில்லாமல் விட்டு விட்டால் கட்டி தட்டி விடும். அரிசி நன்கு வெந்து இருக்க வேண்டும்.
- பக்கத்தில் ஒரு பாத்திரத்தில் வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து, வெல்லம் கரைந்ததும் வடிகட்டி அரிசி தேங்காய் கலவையுடன் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்
- வெல்லத்துடன் சேர்ந்து நன்கு வெந்து விட்டது என்று தெரிந்ததும் அடுப்பை நிறுத்தி விடலாம்
- ஒரு வாணலியில் நெய்யை விட்டு முந்திரி, திராட்சயை வறுத்து பாயசத்தில் சேர்க்கவும்.
- காய்ச்சிய பாலை தேவையான அளவு சேர்த்துக் கொள்ளலாம்.
சுவையான அரைத்து விட்ட அரிசி தேங்காய் பாயசம் தயார். நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பாருங்களேன்.
பின்குறிப்பு
இதே செய்முறையில் வெல்லத்திற்குப் பதிலாக சர்க்கரை சேர்த்தும் செய்யலாம்.
அரைத்த விழுதை பாத்திரத்தில் போட்டு விட்டு மிக்சி ஜாரில் தண்ணீர் விட்டு அதையும் பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். விக்கிற விலை வாசியில் எதையும் வீணாக்கக்கூடாது இல்லையா!
மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்
திருவரங்கம்.
இந்த ரெசிபியை பகிர்ந்த ஆதி வெங்கட் நம் “சஹானா இணைய இதழ்” YouTube சேனலில் பகிர்ந்த அரிசி வடாம் ரெசிபி 👇
இந்த ரெசிபியை பகிர்ந்த ஆதி வெங்கட் எழுதிய சமையல் புத்தகங்கள்👇
அரிசி தேங்காய் பாயாசம் சூப்பர்.
ஆதி சூப்பர் பாயாஸம்…..வாழ்த்துகள்!!
கீதா