ஏப்ரல் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
“அம்மா!”
நான் அழ நீ சிரித் “தாய்”
நான் பிரசவித்தபோது!
நான் புசிக்க நீ பசித் தாய்
நான் முலையமுது உண்டபோது!
நான் உயர நீ உழைத் தாய்
நான் பள்ளி சென்றபோது!
நான் துடிக்க நீ துதித் தாய்
நான் துன்புற்றபோது!
நான் மகிழ நீ நெகிழ்ந் தாய்
நான் சிறப்புற்றபோது!
நான் உறங்க நீ விழித் தாய்
நான் நோயுற்றபோது!
நான் மணக்க நீ முயற்சித் தாய்
நான் ஆளானபோது!
ஆனால் நீ முதுமையால் முடங்கியபோதோ…
நான் எங்கோ? ஏனோ?யாருடனோ?
ஓதுங்கி ஒளி(ழி)ந்து விலகிப்போனேன்!
கைதியாய்(சூழ்நிலை)!
கையாலாகாதவனாய்!!
“என்ன தோன்றும்?”
விவசாயியிடம் பேசினால்
தற்கொலை செய்ய தோன்றும்!
வியாபாரியிடம் பேசினால்
இலாபம் குவிக்க தோன்றும்!
விஞ்ஞானியிடம் பேசினால்
வினாக்கள் எழுப்ப தோன்றும்!
வக்கீலிடம் பேசினால்
பொய் சொல்ல தோன்றும்!
வாத்தியிடம் பேசினால்
மாணவனாகிட தோன்றும்!
வைத்தியனிடம் பேசினால்
நோயுற்றதுபோல் தோன்றும்!
வப்பாட்டியிடம் பேசினால்
காமம் கொள்ள தோன்றும்!
வாக்கப்பட்டவளிடம் பேசினால்
மட்டமான மடையனாய் மாறிவிட்டதுபோல் தோன்றும்!
“முகமூடிகள்”
கிரகணமெனும் முகம்மூடி
ஒளிந்துகொள்ளும் ஆதவன்!
முகில்களெனும் முகம்மூடி
மகிழ்கின்ற நீள்விசும்பு!
பனிக்கட்டியெனும் முகம்மூடி
பயணிக்கும் ஆழிநீர்!
தென்றலெனும் முகம்மூடி
கொந்தளிக்கும் சூறாவளி!
மரங்களெனும் முகம்மூடி
மறைந்தொழுகும் மாமலைகள்!
பூமியெனும் முகம்மூடி
பூரிக்கும் பூகம்பம்!!
வண்ணமெனும் முகம்மூடி
வடிவுபெறும் வானவில்!
நிலமென்னும் முகம்மூடி
எழுகின்ற எரிமலைகள்!
அப்பப்பா இயற்கைக்கு,
அளவில்லா அழிவில்லா,
எத்தனை எத்தனை…
எண்ணிலடங்கா முகமூடிகள்!
“ஒருநாள் கணக்கு”
ஈராறு எண்களில்
இருமுறை இணையும்
பெருசிறு முட்களே
ஒருநாள் கணக்கு!
நிலமகள் சுழற்சி
ஒருமுறை முடியும்முன்,
ஓராயிரம் மணித்துளிகள்
ஒனக்காகவே காத்திருக்கு!
நீயதனை நேர்த்தியாய்
நிர்வாகம் செய்திடின்,
நின்வாழ்வு ஆங்கோர்
நல்வாழ்வு கண்டிடுமே!
சொப்பனம் பலகண்டு,
சோம்பித் திரிந்து,
உதவாக்கரையாய்
ஊர்சுற்றி வந்திடின்…
காலம் உன்னை
கழுவிக்கழுவி ஊற்றி,
கண்டனம் செய்துனக்கு
தண்டனை தந்திடுமே!
‘Enna thondrum?’ poem is very interesting. The humor is the most attractive part.