in

இங்கிதம் (சிறுகதை) – ✍ வித்யா அருண், சிங்கப்பூர்

ஏப்ரல் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

“ஹாய்! நீங்க தமிழா?” பெரிய கண்களில் குவிந்த எதிர்பார்ப்போடு  நிற்பவளைப் பார்த்தேன். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைக்களுக்கான சிறிய நீச்சல் குளத்தில், அவள் மகளும், என் மகனைப்போல குதியாட்டம் போட வந்திருக்கிறாள்.

“ஆமாங்க, நான் பிரேமா. எனக்கு தஞ்சாவூர், இது என் பையன் ரிஷப்”

“நான் கவிதா, எனக்கு ஊர் திருநெல்வேலி. நாங்க சிங்கப்பூர் வந்து ஐஞ்சு வருஷமாச்சு”

“அப்டிங்களா! வேலைக்குப் போறீங்களா கவிதா?”

“இல்லங்க. எங்க வீட்டுக்காரர் வீட்டைப் பாத்துக்கிட்டாலே போதும்னுட்டார். அவரு ஐடி’ல வேலை பாக்குறாரு. நான் எம்.எஸ்.சி படிச்சிருக்கேன். நீங்க?”

“நான் இங்க வந்ததுலேந்து வேலைக்குப் போய்க்கிட்டு தான் இருக்கேன். பீஷான்ல ஒரு கட்டுமானத்துறை நிறுவனத்துல பொறியாளரா இருக்கேன்”

“என்னது சிவில் எஞ்சினீரா?” முகத்தில் நம்பமுடியவில்லை என்று எழுதி ஒட்டியிருந்தது.

அடுத்தடுத்த சந்திப்புகளில், தன் மகளின் பிறந்தநாள் விழாவிற்கு அழைத்தாள் கவிதா. கணவரையும், ரிஷபையும் அழைத்துக்கொண்டு போனேன். வீடு முழுக்க ஆட்களாக இருந்தார்கள். கொஞ்ச நேரத்தில், கேக் வெட்டி முடித்து, குழந்தைகள் சாப்பிட ஆரம்பித்தார்கள்.

பிறகு பெண்களில் ஒவ்வொருவரின் காதிலும் போய், “நாம பிறகு சாப்பிடலாம்” என்று தகப்பன் சாமியாக மந்திரம் ஓதினாள் கவிதா.

ஆண்களுக்கான பிரத்யேக கவனிப்புப் பந்தி. அசைவத்தில் சில வகைகளும், சைவத்தில் சிலவுமாக இருந்தன. தான் மட்டும் பரிமாறாமல், தன் தோழிகள் சிலரையும் சேர்த்துக் கொண்டாள்.

பிறகிருந்த மிச்சங்களை மேசையின் நடுவில் வைத்துக் கொண்டு, பெண்கள் அனைவரையும் வேறொரு அறையில் சாப்பிட அழைத்தாள் கவிதா. கையேந்தியபடி நாங்கள் நின்றபடி சாப்பிட்டோம்.

கவிதாவின் கணவர் குகன், தப்பித் தவறிக்கூட பெண்கள் உணவருந்தும் போது என்ன வேண்டும் என்று கேட்க வரவில்லை. என் கணவர் உள்பட சிலர் எழுந்த போதும் அமுக்கி வைத்திருக்கிறார்.

ஒரு வீட்டின் விருந்தோம்பலில், அவர்களைப் பற்றிய மதிப்பீடுகளும் நம் மனதில் ஆழப்பதியும். அப்படித்தான் ஆனது இந்த நிகழ்வு. அதன் பிறகு கவிதாவை சந்திப்பதை நானாகவே குறைத்துக் கொண்டேன்.

பிறகொரு நாள் டிக்டாக் செயலியில், கவிதாமகளோடு தோன்றி, சிலம்பம் சுற்றினாள். மகளுக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறாள். சிங்கப்பூரில் பிரபலமான மரீனாபே வட்டாரத்தில், வானுயர்ந்த கட்டிடங்கள் புடைசூழ தங்கள் வீரத்தைப் படமெடுத்திருந்தார்கள்.

பிறகொரு நாள், ஈரச்சந்தையிலிருந்து காய்கறி வண்டியோடு நடந்த என்னைத் தொடர்ந்து தன் பிறந்த வீட்டுப் பெருமையை நான் கேட்காமலேயே அள்ளி வழங்கினாள்.

அப்பாவும், அண்ணனும், பல ஆண்டுகளாக வளைகுடா நாடுகளில் வேலை பார்ப்பதால், மாதம் அவள் செலவுக்கென ஆயிரம் வெள்ளி தருகிறார்களாம்.

“நான் வேலைக்குப்போகணும்னு அவசியமே இல்லங்க, எல்லாருக்கும் அப்படி முடியாது” என்று வசனம் பேசினாள்.

ஆண் பெண் சமத்துவம் என்பது கம்பு சுற்றுவதோடு அவள் வரையில் முடிந்து விட்டது. வேலைக்குப்போவதும், வீட்டில் இருப்பதும் அவரவர் விருப்பம். ஆனால், வேலைக்குப் போகும் பெண்களை உற்சாகம் இழக்க வைப்பதாகப் பேசுவது எப்போதும் கவிதாவின் வாடிக்கை.

என் வேலையும், பணம் சம்பந்தமான சுயசார்பும் எப்போதும் முக்கியமாகவே இருந்திருக்கின்றன. என் கணவரோடு நானும் குடும்ப வடத்தை சேர்ந்து இழுப்பதால், யார் தோளிலும் அதிக பாரம் இல்லாமல் இருக்கிறது என்பது எனக்கு மகிழ்ச்சி தான்.

ரிஷப் பிறந்த போதிருந்த சுவாசக்குழாய் சிக்கல்களால் எங்களுக்கு இன்னொரு குழந்தை வேண்டுமென்ற எண்ணம் போய்விட்டது.

கவிதா தொலைபேசியில் அழைத்து தான் சூலுற்றிருப்பதாகச் சொன்னாள். வீட்டில் வாங்கி வைத்திருந்த தின்பண்டங்களோடு சென்று பார்த்தேன். அவ்வப்போது ஏதாவது வேண்டுமென்றால், வேலைக்கு போகாத தோழிகள், சுதா, புவனா இருவரையும் கேட்டுக் கொண்டாள்.

எல்லாருடைய வீடும் பக்கத்திலேயே இருப்பதால், கவிதாவுக்கு வாழ்க்கை சுலபமாகியிருந்தது. ஏழாம் மாதத்தில் வளைகாப்பு என்று அழைத்தாள். எப்போதும் சமையலறை பக்கம் போகாத குகன், ஒன்பது வகை சாதமும், இணையத்தின் புண்ணியத்தில் கற்றுத் தேர்ந்திருந்தார்.

கவிதாவின் அம்மா இரண்டு நாட்கள் முன்பு தான் ஊரிலிருந்து வந்திருந்தார். அவர் முகத்தில் ஒட்டி வைத்த புன்னகையைத் தாண்டி ஒரு சோகம் படர்ந்திருந்தது.

குகன் இணையத்தில் தேடி தானாக கற்றுக்கொண்ட சடங்குகளைத் தன் குடும்ப வழக்கத்தை மீறி செய்தார். என் முறையை அழைத்தபோது, சந்தனம் தடவி, குங்குமம் வைத்து, வளையலைப் போட்டேன். கடைசியாக கவிதாவின் மகள் அபராஜிதாவை அழைத்தார்கள்.

அபராஜிதா என்பது சங்குப்பூ. அன்றே மலர்ந்து மாலைக்குள் மங்கிவிடும் மென்மையான பூ. அந்த பெயருக்குப் பொருத்தம் தான் அவளும்.

“தம்பிப் பாப்பா வரப்போறாரு அப்பு உனக்கு”

ஏதோ பல பேரரசுகளை வென்ற மாவீரன் அலெக்ஸாண்டரைப் போல எல்லாருக்கும் கேட்க, உரக்க வேண்டுமென்றே சொன்னார் குகன். ஒரு சில நீல பலூன்களை அங்கிருந்த குழந்தைகள் எல்லாருக்கும் கொடுத்து, எல்லாருமாக நீல வண்ண கேக்கை வெட்டினார்கள்.

ஓரமாக நின்றிருந்த புவனா தண்ணீர் குடிக்கும் சாக்கில் சமையலறைக்குள் நுழைந்தாள். கையிலிருந்த கோப்பையோடு, கண்ணீரும் கலந்தது.

புவனா மட்டும் உதவியிருக்காவிட்டால், கவிதாவின் நிலை சிக்கலாகியிருக்கும். தனக்குத் தேவை என்ற போது மட்டும் உதவி கேட்ட குஹனும் கவிதாவும், குழந்தை ஆண் என்று தெரிந்ததுமே, புவனாவை ஓரம் காட்டுகிறார்கள். புவனாவுக்கு மூன்று பெண் பிள்ளைகள்.

வீட்டை சுத்தம் செய்வதில் உதவி கேட்க தெரிந்த குகனுக்கு, வளையல் போடும் போது மட்டும், புவனா கண்ணிலிருந்து மாயமாகியிருந்தார்.

புவனாவின் கணவர் கலகலப்பானவர். ஊர் விட்டு ஊர் வந்த இடத்தில், நண்பர்களே சொந்தம். யாரிடமும் குற்றம் பார்க்கக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர். புவனாவுக்கு என்றுமே உதவிசெய்து தான் பழக்கம்.

“ஆம்பளப் புள்ள பொறந்திருக்கு” என்று பார்ப்பவர்களுக்கு எல்லாம், 4Dஇல் மொத்த பரிசு விழுந்ததைப்போல சாக்லேட் கொடுத்து சொல்லிக் கொண்டிருந்தார் குகன்.

அபராஜிதா புவனாவின் வீட்டில் இருக்கிறாள். கவிதாவின் அம்மாவும், குஹனும் கே.கே மருத்துவமனையில் உடன் இருக்கிறார்கள்.

குழந்தை பிறக்கும் வரை பல்லைக் கடித்தபடி ஒட்டிய கவிதாவின் அம்மா, குழந்தைக்கு ஒரு மாதம் இருக்கும்போது ஊருக்குக் கிளம்பத் துடித்தார்.

ஒரு நாள் நீச்சல் குளத்திற்கு அபராஜிதாவோடு வந்து கரையில் அமர்ந்திருந்தார்.

“இரண்டாவது பிள்ளை பிரசவமும் எங்க செலவு மாதிரி செய்ய வெச்சுட்டாரு. ரொம்ப வேலை வாங்குராமா கவி. திருநெல்வேலில என் வீட்ல ஆள் இருக்காங்க. நீங்க பார்ட் டைம் வேலைக்காவது எடுங்கன்னு பலமுறை சொல்லிட்டேன். அத்தை அத்தைனு கூப்பிட்டு வேலை சொல்லிகிட்டே இருக்காரு மாப்பிள்ளை. நான் பெத்த பொண்ணு, மாப்பிள்ளைக்கு மேல இருக்கா. அவளா செய்ய முடியற வேலையைக் கூட செய்ய மாட்டேங்குறா. என் மகனுக்குக் கல்யாணம் முடிக்கணும்னு பாக்குறேன். ஆனா, தட்டிகிட்டே இருக்கா. எனக்கு மருமக வந்திட்டா, நான் அவளோட சந்தோஷமா இருப்பேன்” என்று கொட்டித் தீர்த்தார். 

இதய நோயாளியான அம்மாவை அதிக வேலை வாங்கிகிறோம் என்ற எண்ணம் அவளிடம் துளியும் இல்லை. எப்போதும் பிறந்த வீட்டில், தன் கணவனை மதிக்க வேண்டும் தன்னைத் தாங்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் பெண்கள், இனி வரும் காலங்களில், தன் வீட்டுக்கு வரும் பெற்றோரை எப்படி நடத்துகிறார்கள் என்பதை வைத்தும் அவர்களுக்கான மரியாதை மாறும் காலத்தில் இருக்கிறோம்.

ரிஷப் பிறப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னரே நான் முழு நேர பணியாளை அமர்த்திக் கொண்டேன். அதற்கு என் பொருளாதார சுதந்திரமும் கை கொடுத்தது. என் அம்மாவும், அப்பாவும் பிரசவ நேர உதவிக்கென அருகில் இருந்த போதும் அவர்களிடம் நான் எதிர்பார்த்தது அரவணைப்பை மட்டும் தான். திரை செலுத்தவதைப் போல இவர்கள் கேட்கும் மாதம் தோறும் வசூலிக்கும் ஆயிரம் வெள்ளியை அல்ல.

புவனா எப்போதாவது ஒரு முறை போனாலும், கவிதா தன் மகனான த்ரிநயனை தொட விடுவதில்லையாம். கால நேரம் பார்க்காமல் செய்த உதவிக்குக் காட்டும் பிரதிபலன் இது தான்.

குகன் பகுதி நேரமாக மேற்படிப்பு படிக்கிறார். எதைத் தின்றால் பித்தம் தீரும் என்பதைப்போல, என்ன செய்தால், தன் குடும்பத்துக்கு நிரந்தர குடியிருப்பு அட்டை கிடைக்கும் என்று முயற்சி செய்கிறார்.

இந்த ஆண்டில் ரிஷபுக்கு மட்டுமே சிங்கப்பூர் பள்ளியில் இடம் கிடைத்தது. அபராஜிதாவுக்கு மாதம் ஆயிரம் வெள்ளிக்கட்டணம் கொண்ட தனியார் பள்ளியில் சேர்க்க வேண்டியதாயிற்று.

அரசாங்கம் வேலைக்குப் போகும் தம்பதிகளுக்குத்தான் விசா விஷயத்தில் கருணை காட்டுகிறார்கள். கால் மடித்து, தொலைக்காட்சி பார்த்து, பிறந்த வீட்டுப்பணத்தில் குதிரை ஓட்டுபவர்களுக்கு அல்ல.

அடுத்து பார்க்கும் போதெல்லாம், உள்ளூர எரியும் பொறாமையை வெளியே காட்டாதவாறு, “ரிஷப் எப்படி படிக்கறான்? இங்கெல்லாம் ஒழுங்கா பிடிக்கலைன்னா டிகிரி வாங்க முடியாதில்ல?” என்று கேட்டாள் கவிதா.

பின்னர் பிறந்த ஆண் குழந்தைக்குக் கொடுத்த கவனத்தில், அபராஜிதம் வாட ஆரம்பித்திருந்தது. ஆரம்பத்தில், இனிமையானவளாக இருந்தவள், இப்போதெல்லாம் வார்த்தைக்கு வார்த்தை முகம் காட்டுகிறாள். அடிக்கடி நண்பர்களோடு சண்டை, சில நேரங்களிலும் கோபம் மீறி அடிக்கவும் செய்கிறாள்.

கோவிட் வந்து ஆடிய ஆட்டத்தில், கவிதாவுக்கு பிறந்த வீட்டிலிருந்து மாதம் தோறும் பிடுங்கும் பணம் ஆயிரம் வெள்ளி, வராமலே போனது. ஊர் திறந்ததும் கவிதாவின் அண்ணனுக்கும் திருமணம் ஆனது.

வருடந்தோறும் நீட்டிக்க வேண்டிய மாணவர் விசாவில் படிக்கிறாள் அபராஜிதா. மூன்று முறைக்கு மேல், நிரந்தர குடியிருப்பு அட்டை நிராகரிப்பு செய்யப்பட்டு விட்டது. இனிமே சில ஆண்டுகளுக்கு முயற்சி செய்யக் கூட முடியாது.

ஊருக்குப் போயிருந்த ஒரு மாத விடுமுறைக்குள், அபராஜிதா ஒன்பதே வயதில் பருவம் எய்திவிட்டாள். எதிர்பாராத அதிர்ச்சியாக இருந்தது, கவிதாவுக்கும், குஹனுக்கும். ஊர் மெச்ச அங்கேயே சடங்கு செய்ததில், அபராஜிதா இன்னும் பயந்து போய் இருந்தாள்.

ஆயிரம் வெள்ளியையும், அதற்கு மேல் ஆகும் செலவினங்களை சரிக்கட்ட குகன் புதுவழியை தேர்வு செய்திருக்கிறார். மகளையும், மனைவியையும், தன் மாமியார் வீடு பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே அந்த திட்டம்.

ஊரில் படித்தால், அவளுக்குப் பாதுகாப்பு. பெண் பிள்ளை எந்த ஊரில் படித்தால் என்ன? போன்ற வசனங்கள், கவிதாவைத் தலையாட்ட வைத்தன.

எங்கள் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல், கவிதா தன் இருபிள்ளைகளோடு ஊருக்குப் போய் விட்டாள். ஆண் பிள்ளை பள்ளியில் சேர இன்னும் நான்காண்டுகள் இருக்கின்றன.

தனியாக இருக்கும் குகன், வீட்டைத்தன் நண்பர்களுக்கு உள்வாடகை விட்டு, அவர்களோடு, குடியும் குடித்தனமுமாக வாழ்வாங்கு வாழ்கிறார். இந்த ஞாயிறு தீபாவளிக் கொண்டாட்டம். ஆளுக்கு ஒரு பண்டமாக பகிர்ந்து விருந்து தயாரிக்கிறோம்.

“ஷாஹி துக்கடா” எனும் புதுவகை இனிப்போடு குடும்பத்துடன் சென்றேன்.

சற்று நேரத்தில், அபராஜிதாவோடு வந்த கவிதா, எல்லாரிடமும், “ஊர் படிப்பு மாதிரி வராது. இங்க உள்ள அளவு அழுத்தம் இல்லை. நான் எங்கம்மா வீட்டுல ராணி மாதிரி இருக்கேன்” என்றாள்.

இக்கரைக்கு அக்கரை பச்சை தத்துவம் தெரியாத சிலர், அவள் பேச்சுக்கு மண்டையை ஆட்டினர். செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பாள் அல்லவே?

திருநெல்வேலி வட்டாரம் மாப்பிள்ளையை முகம் மலர வைக்கும் நோக்கில் பல சடங்குகளையும், உணவு முறைகளையும் வைத்திருக்கிறது. உறவு என்பது ஒரு வழி பாலம் அல்லவே.

ராணி மாதிரி இருக்கிறாளோ, கோணி மாதிரி இருக்கிறாளோ? தெரியாது. எனக்கு வளைகாப்பின் போது சோர்ந்திருந்த கவிதாவின் அம்மையின் முகம் நினைவுக்கு வந்தது.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அவள் வீடு (சிறுகதை) – ✍ மலர் மைந்தன், கல்பாக்கம்

    “அம்மா! ❤” (கவிதை) – ✍ மரு உடலியங்கியல் பாலா, சென்னை