in

குணசித்திரங்கள் (கேரக்டர்கள்) – (சிறுகதை) – ✍ ரமணி

ஏப்ரல் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

“அத்தை… போயிட்டு வரேன்” சுநந்தா மயிலாடுதுறை அத்தை வீட்டிற்கு குறுகிய பயணமாக வந்துவிட்டு சென்னைக்கு திரும்பினாள். அவள் கல்லூரியில் ஊடகத்துறையில் படிக்கிறாள்.

“பத்திரமா…. லக்கேஜ் எல்லாம் ஜாக்கிரதையா பாத்துக்கோ…. அப்பா ஸ்டேஷனுக்கு வருவாரில்லையா…. போனவுடனே ஃபோன் பண்ணு” 

“சரி அத்தே…. கவலைப்படாதீங்க… நான் எத்தனையோவாட்டி தனியா போய் வந்திருக்கேன்….பை….பை”

மாமா தனது ஸ்கூட்டியில் அவளை ஸ்டேஷனில் கொண்டு விட்டார். “ரயிலுக்கு இன்னும் ஒரு மணிநேரம் இருக்கு. ஸாரி….. எனக்கு நிக்க நேரமில்லை. அவசர வேலையா போக வேண்டியிருக்கு. நீ ஜாக்கிரதையா போயிட்டு வா…..”

மாமா போய் விட்டார். 

மயிலாடுதுறை ஸ்டேஷன் பகல்மணி 12. சென்னை ரயில் 10 நிமிடம் தாமதம். பிளாட்பாரத்தில் எங்கெங்கே எந்தப் பெட்டி வரும் என டிஜிட்டல் ஃபோர்டு காட்டியது.

எஸ்2…. சுநந்தா ஏற வேண்டிய பெட்டி. அது வரும் இடத்தில் போய் நின்று கொண்டாள். லக்கேஜ் ஒரு தோள் பையும், புகைப்படக் காமிராவும் மட்டுமே. சுற்றுவட்டத்தில் பார்த்தாள்.

அங்கு பெஞ்சில் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். சுமார் 40 வயதிருக்கும். இவளைப் பார்த்துச் சிரித்தாள். பக்கத்தில் ஒரு சூட்கேஸும் ஒரு பையும் இருந்தன.

“ஏம்மா நிக்கறே…. இப்படி உக்காரு….வா….” போய் உட்கார்ந்தாள் சுநந்தா.

அந்தப் பெண் சுநந்தாவிடம் “சென்னைக்கா….?” என்று கேட்டாள்.

“எஸ்” என்று ஒரு வார்த்தையில் பதில் கூறிவிட்டு பிளாட்ஃபாரத்தை நோட்டம் விட்டாள்.

இன்னும் சிலர் குடும்பத்துடன், ஏராளமான சுமைகளுடன், சிறு குழந்தைகளுடன்…. ஒன்றிரண்டு இளைஞர்கள் தோள் பையுடன் அங்குமிங்கும் நடந்து கொண்டு…. இவர்களுக்கிடையில் ஒன்றிரண்டு நாய்கள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டு…. ஒரு நொண்டிப் பிச்சைக்காரர் கையில் அலுமினிய தட்டில் சில்லரைக்காசுகளைக் குலுக்கிக் கொண்டு…

“ஏம்மா…. படிக்கறயா” அந்தப்பெண் தொடர்ந்தாள்.

“ஆமாம்” இப்பவும் ஒரே வார்த்தையுடன்.

“என் பேரு வனஜா…. அம்மாவுக்கு உடம்பு சரியில்லே… பாத்துட்டுப்  போலாம்னு வந்தேன்… திரும்பி சென்னைக்குப் போறேன்….அவர் ஸ்டேஷனுக்கு வருவார்.”

 “ஓ….” சுநந்தா மேலே எதுவும் பேசவில்லை.

பிளாட்ஃபார்ம் பரபரப்பானது. ரயில் வருகிறது. அந்தப் பெண் “ப்ளீஸ்…. உனக்கு சிரமமில்லேன்னா இந்த பையைக் கொஞ்சம் தூக்கிக்கறயா….”

“ஓ…. அதனாலென்ன” இப்போது இரண்டு வார்த்தைகள்.

எஸ்2 பெட்டியில்  இவளது இருக்கையில் வேறொரு பெண் தனது மூன்று குழந்தைகளுடன் உட்கார்ந்திருந்தாள். கைக்குழந்தை தாய்ப்பால் குடித்துக் கொண்டிருந்தது.

எதிர்இருக்கையில் இவளோடு ஏறிய வனஜாவும் வேறொரு தம்பதியினரும். சுநந்தா ஸைட் பெர்த்தைப் பார்த்தாள் காலியாக இருந்தது.  அங்கே மேல் பெர்த்தில் ஒரு இளைஞன் காதில் இயர்ஃபோனுடன் கைபேசியில் இந்திப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

இவள் அங்கே உட்காரப்போகும் போது அவசர அவசரமாக ஒரு நடுத்தர வயதுப் பெண் தன் ஐந்து வயதுப் பையனுடன் ஏறி அமர்ந்தாள். சுநந்தா பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். ரயில் நகர்ந்தது.

சுநந்தா பையிலிருந்து ஒரு புத்தகத்தை கையிலெடுத்துப் பிரித்தாள்.  ஏதோவொரு பக்கம். மனிதர்களின் குணாதிசயங்களைக் கூறும் பகுதி. சிறிது மேய்ந்து கொண்டிருக்கும் போது அந்தப் பெண்ணின் இரண்டு குழந்தைகளும் அங்குமிங்கும் ஓடி விளையாடின. 

முந்தானைக்குள் தூங்கிய குழந்தையை எடுத்து இருக்கையில் படுக்க வைக்க… மற்றொரு குழந்தையின் கை பட்டு கைக்குழந்தை விழித்துக் கொண்டு அழத் தொடங்கியது.

சுநந்தா அதைக் கவனித்தாள். பாவம் அந்தப் பெண்ணால் மூன்று குழந்தைகளையும் சமாளிக்க முடியவில்லை. 

“உஷ்…. பேசாம ஒரெடத்துல உட்காருங்க” அப்பர் பெர்த்திலிருந்து ஒரு குரல் குழந்தைகளை அதட்டியது. வேறு யாருமல்ல அந்தக் குழந்தைகளின் தந்தைதான். மிக சாமர்த்தியமாக மேல் பெர்த்தில் சயனித்துக் கொண்டு, மொபைலை நோண்டிக் கொண்டு. 

சுநந்தா பார்த்தாள்… ‘சே…. இப்படியா…. மனைவி படும் பாட்டை ரசித்துக் கொண்டு….. காலம் மாறினாலும் கோலம் மாறினாலும் சில ஆண்களைத் திருத்தவே முடியாது’.

டி.டி.ஆர் வந்தார். சுநந்தா மொபைலில் டிக்கட்டைத் தேடிக் கொண்டிருக்கும் போது அவள் பக்கத்திலிருந்த பெண் தன் மகனுடன் டாய்லெட்டில் நுழைந்து விட்டாள். டி.டி.ஆர் யாரையும் டிக்கட் கேட்காமல் கடந்து போய் விட்டார்.

சிறிது நேரம் கழித்து டாயலெட்டிலிருந்து மெதுவாக எட்டிப் பார்த்துவிட்டு டி.டி.ஆர் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு வெளியே வந்தாள் அந்தப் பெண். சுநந்தா அவளைக் கவனித்தாள்.

“ஏம்மா…. எங்கே போறே…..”.  அந்தப் பெண் அசடு வழிந்து கொண்டே “விழுப்புரம்”

“டிக்கட் இல்லையா” ‌பதில் அசட்டுச் சிரிப்பு.

“ஏம்மா… டிக்கட் இல்லே…. இது ரிசர்வேஷன் பெட்டி…. எப்படிம்மா ஏறினே…. தப்பில்லே….”

“இது இங்கே வழக்கமான ஒன்று…. யாரும் கண்டுக்க மாட்டாங்க….. பகல் வண்டின்னாலே…. இப்படித்தான்.” ஸைட் அப்பரிலிருந்த வாலிபன் சொன்னான்.

குரல் வந்த திசையில் நிமிர்ந்து பார்த்தாள் சுநந்தா. கண்கள் முதன் முறையாக மோதிக் கொண்டன. அந்தப் பெண் படபடவென இருக்கையை விட்டு எழுந்தாள். 

“ஏம்மா எழுந்திருக்கறே… வண்டி போயிட்டிருக்கு… ஒக்காரு…. சாப்பிட்டையா…” பையிலிருந்து பிஸ்கட் பாக்கெட் ஒன்றை எடுத்து நீட்டினாள். அவள் வாங்கத் தயங்கினாள்.  அவளது பையன் ‘லபக்’கென வாங்கிக் கொண்டான்.

பாவம் பசிபோல இருக்கு… இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வனஜா எழுந்து இவளருகில் வந்து அமர்ந்தாள். சுநந்தா திரும்பவும் புத்தகத்தை புரட்டத் தொடங்கினாள். வனஜா கேட்டாள், “என்னம்மா படிக்கிறே” 

“இங்கிலீஷ் கதை” 

“இல்லேம்மா, நீ எந்தக் காலேஜுல என்ன படிக்கிறேன்னு கேட்டேன்”

“பி.ஏ. ஜெர்னலிஸம்” 

“சென்னைல எங்கே?”

“எம்.ஸி.ஸி”. கூறிவிட்டு எழுந்தாள் சுநந்தா. 

‘ஓ…. நாம்ப கேட்டது புடிக்கலே போலிருக்கு’ என்று நினைத்துக் கொண்டே வனஜா தன் இருக்கைக்கு  திரும்பினாள். சுநந்தா கதவை நோக்கிப் போய்…. கதவில் சாய்ந்து கொண்டு வெளியே இயற்கையை ரசிக்கத் தொடங்கினாள்.

வண்டி வேகம் குறையத் தொடங்கியது. ஓ… ஏதோ ஸ்டேஷன் வருகிறது…. சிதம்பரம்…. வண்டியிலிருந்து வனஜாவின் பக்கத்திலிருந்த தம்பதியினர் இறங்கினர். அவர்களுக்குள் ஏதோ கருத்து வேறுபாடு போலும் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டே இறங்கினர்.

அப்போது கொஞ்சம் தடிமனான ஒருவர் மூச்சிறைக்க ஓடி வந்து ஏறினார். கையில் ஒரு பை வைத்திருந்தார். அவர் ஏறுவதற்கு வழிவிட்டு சுனந்தா நின்று கொண்டாள்.

எளியவர் பதட்டமாக, குழந்தைகளுடன் அமர்ந்திருந்த பெண்ணிடம் “இது என் சீட்டும்மா…. நீங்கு….” என்றார்.

வனஜா அவரிடம், “சார்…. இங்கே காலியாத்தான் இருக்கு…. இங்கே உட்காருங்க” என்று தனது பக்கத்து இருக்கையைக் காட்டினாள். 

அவரோ அவளை முறைத்து விட்டு, “இது என் ரிசர்வேஷன் சீட்டு… ஜன்னல் பக்கமா கேட்டு வாங்கிருக்கேன்…. நீங்கும்மா”

பாவம், அந்தப் பெண் சீட்டில் படுக்க வைத்திருந்த குழந்தையைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு ஒதுங்கி அவருக்கு இடம் கொடுத்தாள். உட்கார்ந்தவர் தன் பையிலிருந்து லேப்டாப்பை வெளியே எடுத்து மடியில் வைத்துக் கொண்டு நோண்டத் தொடங்கினார். 

வண்டி மிக வேகமெடுத்து போய்க் கொண்டிருந்தது. திடீரென குளிர்காற்று டன் மழை தூறல் தொடங்கவே எல்லோரும் கண்ணாடிகளை இறக்கினர். சுனந்தா மீண்டும் அவளிடத்தில் வந்து உட்கார்ந்தாள். பையனுடன் அமர்ந்திருந்த அந்தப் பெண்ணைக் காணவில்லை. சிதம்பரத்தில் இறங்கி வேறுபெட்டியில் ஏறி இருப்பாளோ.

இப்போது மேல் பெர்த்திலிருந்த இளைஞன் இறங்கி இவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டான். அந்த ஜன்னலோர இருக்கையில் அமர்ந்த புதியவர் கண்ணாடியை இறக்காமல் ஷட்டரை இறக்கி விட்டு லேப்டாப்பில் மூழ்கினார்.

இரண்டு குழந்தைகளும் ஓடும்போது அவரைத் தட்டி விட்டது. “அட…ஷட்…” என்று குழந்தைகளை முறைத்தார் அவர். குழந்தைகள் பயந்து அம்மாவை அணைத்துக் கொண்டன.

இவற்றையெல்லாம் பார்த்தும் பார்க்காதது போல் அப்பர்பெர்த்தில் படுத்தவாறே தன்மொபைலில் மூழ்கி இருந்தான் அவள் கணவன். 

சுநந்தா கீழே வைத்திருந்த புத்தகத்தை எடுத்துப் பார்த்த இளைஞன் “ஓ…. நல்ல புக்” என்றான். 

சுநந்தா முதன்முறையாகப் புன்னகைத்தாள் அவனைப் பார்த்து. “நிறையப் படிப்பீங்களோ?” அவன் தொடர்ந்தான். 

“எஸ்…. ஐ லைக் ஸோஷியல் ரிவல்யூஷன்ஸ்” என்றாள் சுநந்தா.

“நோ….நோ….. இட்ஸ் இம்பாஸிபில்…. இன்றைய சமூகம் இப்படித்தான் இருக்கும்… எவராலையும் திருத்த முடியாது….”

“எதை வைச்சு சொல்றீங்க?”

இவன் அந்தக் குழந்தைகளுடன் இருந்த தாயையும் அவள் கணவனையும் கண்ணால் ஜாடை காட்டினான். சுநந்தா சிரித்துக் கொண்டாள்.

“நீங்க நினைக்கிறது தப்பு…. அவங்களுக்கு என்ன பிரச்சினையோ…” மெதுவாகச் சொன்னாள் சுநந்தா.

தொடர்ந்து, “கல்யாணமானா நாம் எப்படி இருப்போமோ. ஒரு சாம்பிளை வைச்சண்டு மொத்த சமூகத்தையும் எடை போட முடியாது” 

“நீங்க ஜேர்னலிஸம் ஏன் செலக்ட் பண்ணினீங்கன்னு இப்ப புரியுது… உங்களை மாதிரி எல்லாவற்றையும் ஜஸ்ட் லைக் தாட்னு பார்க்க எல்லாராலையும் முடியாது. அதுக்கு ரொம்பப் பொறுமை வேணும்”

“நோ ஸார்…. பிரச்சினைகள் என்பது நாமாக உருவாக்கறதுதான். ஒருத்தரை ஒருத்தர் அட்ஜஸ்ட் பண்ணிட்டு, விட்டுக் கொடுத்து வாழ்ந்தா லைஃப் ஸ்மூத்தாக போகும். அதற்கு மெச்சூரிட்டி வேணும்”

இவர்களது விவாதம் இந்த மாதிரி எதில் எதிலோ நுழைந்து வந்தது.  இருவரும் மிக சகஜமாகப் பேசினர். ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏராளம். ஒரு நிலையில் விவாதத்தை நிறுத்திக் கொண்டு சுநந்தா கதவருகில் போய் நின்று கொண்டாள்.

இளைஞன் அவளைத் தொடர்ந்தான். ஆனால் அவள் “ஸாரி…. லீவ் மி ஃப்ரீ” என்றாள். அவன் திரும்பிப் போய் மேலே ஏறி படுத்துக் கொண்டான். 

இப்போது சுநந்தா சிந்திக்கத் தொடங்கினாள். விழுப்புரம் தாண்டியதும் வண்டி மிக வேகமெடுத்தது.  இந்த வேகத்தில் போனால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னாலேயே சென்னை எழும்பூர் சேர்ந்துவிடும்.

வந்து தனது இருக்கையில் அமர்ந்து எல்லோரையும் பார்த்தாள். அந்தக் குழந்தைகள் அம்மாவின் கைபேசியை உண்டு இல்லையென விளையாடிக் கொண்டிருக்க, அவளது கணவன் நல்ல தூக்கத்தில் ஆழ்ந்திருக்க, அந்தப் பெரிய மனுஷன்…. லேப்டாப்பில் இயர் போனுடன் ஏதோ ஆங்கிலப்படத்தை ரசித்துக் கொண்டிருக்க… வனஜா எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க… சுநந்தா ஏனோ மீண்டும் அந்த இளைஞனை நோக்கினாள்.

அவன் மொபைலில் இந்திப் பாட்டை ரசிக்க…. இத்துனூண்டு கம்பார்ட்மென்டுக்குள் இத்தனை கேரக்டர்கள் என்றால்…. முழு ரயிலில்…. நகரங்களில்…. தமிழ் நாட்டில்….. இந்தியா முழுவதிலும்…. உலகம் முழுவதிலும்….? அவளது பார்வை விரிந்தது.

ஆம் அப்படித்தான்…. எல்லாம் அப்படித்தான்…. சுநந்தா தனது புத்தகத்தில் பார்வையை ஓட்ட…. எதைப்பற்றியும் கவலையின்றி தன் கடன் பயணமே என ரயில்வண்டி பலவகை குணசித்திரங்களுடன் சென்னையை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது…!

(முற்றும்) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    “அம்மா! ❤” (கவிதை) – ✍ மரு உடலியங்கியல் பாலா, சென்னை

    உன் வாழ்க்கை உன் கையில் (நாவல் – நிறைவுப் பகுதி) – ✍ ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை