2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“ஏ..மச்சான், இந்த வாட்டியாச்சும் என்னோட ஆச நெறவேறுமா” என்றாள் செவந்தி சந்தேகக் குரலில்.
“என்ன புள்ள இப்படிக் கேட்டுப்புட்டே. நான் யாரு, என்னைக்காவது நீ ஆசப்பட்டத நான் இதுவரை எப்படியாச்சும் செய்யாம விட்டுருக்கேனா” என்றான் கருப்பன்.
“என்னமோ போ மச்சான். நீயும் தான் நம்ம பண்ணையார் வீட்டுல ஒவ்வொரு வாட்டியும் கல்யாணம், காட்சின்னு வரும் போது எல்லாம் இப்படி அடிச்சுப்பேசி உதாரு வுடறே. ஆனாக்கா, ஒவ்வொரு வாட்டியும் நீ சொல்றது என்னமோ நடக்கத்தான் மாட்டேங்குது” என்றாள் சலிப்புடன்.
“என்ன புள்ள இப்படிச் சடக்குனு சொல்லிப்புட்டே, இந்த வாட்டி உன்னோட மச்சானோட தெறமயப் பார்த்துட்டு, நீயே எப்படி வாயப் பொளக்கப் போறே பாரு”
“ஹூக்கும்.! போ மச்சான். நான் ஆசப் படறது என்னைக்குத்தான் நடக்குமோ” என்றாள் தன்னோட நீண்ட கூந்தலை அள்ளி முடிந்து கொண்டே.
அப்போது அவளது பின்னழகு, பேரழகாக ஜொலிக்க, கிறங்கிப் போன கருப்பன், “ஏ புள்ள, ஏய்.. செவந்திக்குட்டி! இங்கே பாரேன்! இப்படி கெண்டக்கால் வரைக்கும் தொங்கற உன்னோட தலமுடியை, சீவி முடிச்சு சிங்காரிச்சு பின்னல் போட்டு ஜடையாகத் தொங்கவிட்டீன்னா, ஒரு தனி அழகு தான், ஆனா அதையே அள்ளித் தூக்கி முடிஞ்சு கொண்டை போட்டீன்னா பேரழகுடீ” கருப்பன் நேருக்கு நேராக அவளைப் புகழ, முகம் சிவந்தாள் செவந்தி.
“போ மச்சான், உனக்கு வேற வேலையில்ல!” செல்லமாகச் சிணுங்கிய செவந்தியை ஆசையாய் தழுவிக் கொண்டான் கருப்பன்,
அவன் காதருகே மெல்ல, “மச்சான், இந்த வாட்டி நம்ம பண்ணையாரு ஃபோட்டோ புடிக்கிற விசயத்திலே என்ன ஐடியா பண்ணப் போறாருங்கறத எனக்கு மட்டும் ரகசியமா வந்து சொல்லிடுவே தானே” என்றாள் தன் மீது கிறக்கத்தில் இருந்த மச்சானிடம்.
ஆனால் செவந்தியின் பின்னழகிலே கிறங்கிப் போன கருப்பனிடமிருந்து“ ம்ம்…ம்ம் ..” என்ற சப்தமே, பதிலாகக் கிடைத்தது.
முண்டாசுப்பட்டியை முன்னுதாரணமாகக் கொண்டு வாழும் அவங்க கிராமத்தில் இறந்த போன சவத்தைத் தவிர, உசுரோட உள்ளவங்களைப் புகைப்படங்கள் எடுக்கும் பழக்கம் என்பது எள்ளளவும் இல்லவே இல்லை.
ஆனால் அந்த ஊரின் பண்ணையார் வீட்டிலோ, அவர் தன்னோட மக்களை வெளியூர் அனுப்பி படிக்க வைத்த காரணத்தால், வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விசேஷங்களிலும் புகைப்படங்கள் எடுப்பது என்பது தவறாம இருக்கும்.
ஆனாலும் பண்ணையார் ஊரோட கட்டுப்பாட்டை ஒருபோதும் மீறுவதே இல்லை. ஏதாவது தந்திரம், மாயம் செய்தாவது அவர் பெற்ற மக்களையும், தன் ஊரோட மக்களையும் ஒருசேர காப்பாற்றி விடுவார்.
இந்தத் தடவை நடக்கப் போகும் திருமணத்தில், அதிலும் முக்கியமாக ஃபோட்டோ புடிக்கிற விசயத்திலே ஐயாவின் ஐடியா என்னவாக இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளவேதான், நம்ம செவந்தி கருப்பனிடம் இப்படிக் கெஞ்சுவதும், கொஞ்சுதும்.
ஆனால் இந்த ஆசை நம் செவந்திக்கு மட்டுமல்ல. அவ்வூரிலுள்ள ஆணு, பொண்ணு பேதமின்றி ஊரோட அனைத்து இளவட்டங்களுக்குமே இருந்து வந்தது.
ஆனாலும் என்ன செய்ய, விரும்பியும் விரும்பாமலும், அவங்க ஊரிலே விடாம கடைபிடிக்கப்படும் பழகிப்போன இந்தப் பழக்கத்தை துணிந்து மீற முடியாமல் ஒருவித ஏக்கத்துடனே தவித்து வந்தனர்.
எந்த நேரமும் ஊரின் பண்ணையாரின் காலைச் சுத்திச் சுத்தியே வரும் கருப்பனுக்கு அவர் இந்த முறை செய்திருக்கும் ஏற்பாடு முதலிலேயே தெரிய வந்தது ஒருவித சந்தோஷம்னா, அதிலும் அந்த ஏற்பாடு அவனுக்கு மிகவும் பிடித்த மாதிரியே அமைந்து போனது பரம சந்தோஷம்.
வீட்டுக்கு வந்த கருப்பன் செவந்தியிடம், விபரம் அனைத்தும் முழுமையாகச் சொல்லாமல், “செவந்தி கல்யாணத்துக்கு வரச்சே உன்னோட இந்த நீண் தலைமுடியைத் தூக்கிக் கொண்டை மட்டும் போட்டுக்கிட்டு வந்திரு புள்ள போதும்.” என்றான் ரகசியமாய்.
திருமணத்திற்கு கிளம்பிய செவ்வந்தி, தன் நீண்ட தலைமுடியை பின்னலாகப் போடாமல், வரிஞ்சு கொண்டையாக முடிந்து அதில் பூக்கள் செருகிக் கொண்டு கிளம்பினாள்.
கல்யாணத்திற்குப் பின்னல் மட்டும் போட்டு வந்திருந்த மற்றவர்கள், செவந்தி செய்து வந்த அலங்காரத்தில் மயங்கிப் போய், சட்டென்று ஒருவர் மற்றவருக்குத் தெரியாமல், அனைவரும் தங்களது பின்னலைத் தூக்கிக் கொண்டையாகப் போட்டுக் கொண்டனர்.
கல்யாண வீட்டிலோ, பண்ணையாரின் கட்டளைப்படி அனைவரும் அமர்ந்திருந்த இடத்திற்குப் பின்புறமாக வந்த புகைப்படங்கள் எடுப்பவர், அமர்ந்துள்ளவர்களின் முகங்கள் தெரியாதபடி பின்னாடி இருந்தே புகைப்படங்கள் எடுக்கத் தயாரானார்.
இதை ஏதும் அறியாத செவந்தி தன்னோட ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் திளைக்க, எல்லாம் அறிந்த கருப்பனோ செவந்தியின் பின்னழகு புகைப்படமாகக் கிடைக்கும் மகிழ்ச்சியில் திளைத்தான்.
அன்று புகைப்படங்கள் எடுப்பவரிடமிருந்து அந்த ஒரு படத்தை மட்டும் தனியாகப் பிரிண்ட் போட்ட கருப்பன், அதை அங்கேயே திறந்து பார்க்காமல் தன்னோட செவந்தியுடனே தான் சேர்ந்து பார்க்க வேணும்ங்கிற ஆசையில், வேகமாக வீட்டுக்குத் திரும்பினான்.
“ஏய் செவந்தி, உன்னோட ஃபோட்டோ வந்திருச்சு. கையக் கழுவிட்டு சீக்கிரமா ஓடிவா புள்ள, ரெண்டு பேரும் சேர்ந்தே பார்க்கலாம்” என்று கூப்பிட, துள்ளிக் குதித்து ஓடி வந்தாள் செவந்தி.
இருவரும் சேர்ந்து புகைப்படத்தைச் சுற்றியுள்ள காகிதத்தை விலக்கிப் பார்க்க, அதில் அன்று கல்யாண வீட்டில் வரிசையில் அமர்ந்திருந்த பெண்களின் விதவிதமான கொண்டைகள் மட்டுமே கண்ணில் பட்டது. அந்தப் புகைப்படத்தைப் பார்த்த கருப்பன் திருதிருவென்று விழிக்க, செவந்தியோ குலுங்கிக் குலுங்கி அழத் தொடங்கினாள்.
“ஏண்டி பத்மா, உன்னை எத்தனை தடவை தான் கூப்பிடறதோ. சித்த முன்னாடி எங்களோட கல்யாண ஆல்பத்தைப் பார்த்துட்டு சும்மா விழுந்து விழுந்து சிரிச்சிட்டு இருந்தயேன்னு பார்த்தா, இப்போ ஏதோ பயங்கர யோசனையில் ஒரேயடியா மூழ்கிப் போயிட்டியே ” என்ற என்னோட அக்காவின் குரல் என்னை கற்பனை உலகத்திலிருந்து நிஜ உலகத்திற்கு அழைத்து வந்தது.
அக்காவின் திருமண ஆல்பத்தில் இருந்த ஒரு புகைப்படத்தில் முழுவதும் கொண்டை போட்ட பெண்களின் தலைகள் மட்டுமே காணப்படவே, என்னுடைய கற்பனைக் குதிரை தறிகெட்டு ஓடத் தொடங்கி விட்டது.
சும்மா சொல்லக்கூடாது, புகைப்படம் எடுக்கும் நுணுக்கம் தெரியாத அந்தக்கால ஃபோட்டோ கிராஃபரின் அந்த ஒரு புகைப்படம், என்னையொரு அழகான கற்பனை லோகத்திற்கே கூட்டிச் சென்று விட்டது.
“நான் ஒண்ணுமில்லக்கா, சும்மா தான்,” என்று பதில் சொன்னாலும், ‘கருப்பன் செவந்தியை எப்படிச் சமாதானம் செய்தானோ?’ என்ற முடிவு தெரியாத வருத்தம் மட்டும் ஏனோ என் மனதின் ஓரத்தில் இழையோடியது.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings