ஜூன் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
கண்ணனின் கைவிரல்
சிதம்பரம் கோயில் பிரஹாரம்
கோவிலில் புனிதவதி குடும்பத்தாரும் அந்தப் பெரியவரும் காலம் செய்த சூழலில் எதிரெதிரே அமர்ந்திருக்கிறார்கள். ஏனோ தெரியவில்லை..? அந்தப் பெரியவர் லட்சுமியை அழைத்தார். அவள் அம்மாவிடம் போய் ஒட்டிக் கொண்டாள்.
புனிதவதி எழுந்து, அந்தப் பெரியவரிடம் செல்கிறாள். அங்கிருந்த அனைவரும் அந்தச் சாமியாரையும் அவளையும் பார்க்கிறார்கள். அவள் அதை ஏதும் சட்டை செய்யவில்லை.
ஏதோ ஒரு ஞாபகத்தில், வைத்தி தொலைந்ததைச் சொல்லி முடிக்கிறாள். லட்சுமியும் அவள் அப்பாவும் புனிதாவை அதிசயித்துப் பார்க்கிறார்கள்.
அவள் பொதுவாக புதிதான நபரிடம் பேசவே மாட்டாள். குடும்பத்தார் இவ்வாறு அடுத்தத்து யோசிப்பதற்குள் பெரியவரின் பேச்சு தொடங்கிவிட்டது.
“என்னமோ தெரில. இதுவரிக்கு யார்கிட்டயும் பேசனும்னு தோணுனதுல்ல. உங்ககிட்ட சொல்லணும் இருக்கோ என்னமோ? தொலைஞ்சு போய் கிடைச்ச பையந்தான் உங்க வீட்ல நிறைய படிப்பான். உங்க வீட்ல புண்ணியம் பண்ணவங்க னா… உங்க பொண்ணு லட்சுமி தான். அதுக்கும் கொஞ்ச சாமர்த்தியம் வேணும். இன்னு ரெண்டு மூணு வருஷத்துல வேற வீட்டுக்குப் போயிடும். அப்பப்போ அப்பன் நடராஜன வந்து பாத்துட்டு போங்க. ரெண்டு வருஷத்துக்கு அப்ரோ லட்சுமி இங்க வர வாய்ப்பிருக்கு. உங்களுக்கெல்லாம் குடுப்பன இல்ல..” என்று சொல்லிவிட்டு எழுந்து போய் விட்டார். புனிதவதிக்கு கிளுக்கென்றது. அவள் ஏதும் பேசாமல், மௌனத்தோடு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.
பெரியவரின் மனம் ஏதோ ஒன்று நிகழப் போகிறது என்று சொல்லிக் கொண்டே இருந்தது. மனதில் அவ்வப்போது, கண்ட காட்சிகளை மீண்டும் நினைவுபடுத்தினார்.
“அப்பப்பா..! எங்கோ வெளிநாட்டில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக, தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் மிகப்பெரிய ஆழிஅலை வருகிறதே..! ஐயோ.. பாவம்.. எப்போதும் போல நடைபயணம் செல்ல வந்தவர்களும், கடற்கரையையே வீடாய்க் கொண்டிருந்தவர்களும் கடல் நீரில் மீனாய் தத்தளிகின்றனரே..! பல உயிர்களை வழித்து எடுத்துக் கொண்டு, கடல்நீர் ஊர்ப் பரப்பினுள்ளே வருகிறது…! எத்தனை உயிர்கள்..! அய்யோ..! நடராஜா..!” என்று சொல்லி அடுத்த காட்சியை நினைத்துப் பார்க்கிறார். அதை நினைக்கும் போது, ஈரக்குலை நடுங்குகிறது அவருக்கு.
ஐம்பூதங்களில் நிலம், நீர், காற்று என்ற மூன்றும் தன்னிலை தடுமாறி, கோர ஆழிப்பேரலையாய் உருவெடுத்து, பாதி ஓய்ந்த நிலை. பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டவர்க்கு உதவிக்கரம் நீட்டுகின்றன.
அப்போது, சில வருடங்களுக்கு முன்பு என்னை வீட்டை விட்டு போவென்று அறியாமல் சொன்ன ராமலிங்கம், தன் வம்சம் தழைக்க, தவமாய் தமிருந்து பெற்ற ஒரே ஒரு குழந்தையை ஒருவருக்குத் தானமாக வழங்குகிறான். அவன் விழிகளில் அப்படி ஒரு ஏக்கமும் துக்கமும் நிறைந்திருக்கிறது.
சிதம்பரம் சர்வோதய சங்கம்..!
கிருஷ்ணன் செகரெட்ரி கூப்பிட்டதற்கிணங்க, அவர் அறைக்குச் சென்றான்.
மீசைக்காரர் மீசையை நீவிவிட்டு, “நல்ல வேலை பாக்குறவே நீ..! ஒரே நாள்லே அம்புட்டு வித்துட்டியாம்..! பொழக்க தெரிஞ்ச புள்ள” என்று அவர் சொல்கையில், பேச்சில் மதுரைத்தமிழ் வாசம் வீசியது.
கிருஷ்ணன் புன்னகைத்தான். செகரெட்ரி அவனிடம், “இந்தா பா.. வேலை முடிச்சிட்டேன்னு இருக்கக் கூடாது.. முடிஞ்சா, மத்த செக்ஷனுக்கும் போய் இருக்குற வேலையைப் பாக்கணும்..” என்று விரட்டினார். கிருஷ்ணனும் பவ்யமாக அங்கிருந்து நகர்ந்தான்.
அன்று மாலை வடிவேலு ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு தன் தலைமுடிகளை ஒவ்வொன்றாக கிள்ளி எரிந்தான். கூடவே சில காகிதங்களும் எரியப்பட்டன.
கிருஷ்ணன் அறைக்குள் நுழைகையில் இப்படி வீசுவதைப் பார்த்துவிட்டு, “ஏண்ணே இப்டி தூக்கி போட்டுட்டிருக்க? என்ன ஆச்சு?” என்று கேட்டான். வடிவேலுவின் முகத்தில் சுரத்தே இல்லை.
கிருஷ்ணனைப் பார்த்து, “மாச பொறந்துச்சுல.. சம்பளம் போடுவாங்க. இப்போ கணக்கு வழக்கு எழுதி கொடுக்கணும். விக்காமயே நா என்னத்த எழுதுறது..? அதுவுமில்லாம எனக்கு கணக்குலாம் வராது. ஆனா, அந்த செகரெட்ரி கரெக்டா என்னாண்டையே குடுத்துறார்..” என்று சடைத்துக் கொண்டான்.
கிருஷ்ணன் அந்தப் புத்தகத்தைப் பார்த்தான். லெஜ்ஜர் நோட்டு மாதிரி இருந்தது. கூடவே விற்பனை செய்த கணக்கையும், எழுதிய நோட்டு ஒன்று இருந்தது. சாராயக் கம்பெனியில் எடுத்த பயிற்சி வீண் போகவில்லை என்று நினைத்துக் கொண்டான்.
வடிவேலுவை நோக்கி, “சரி.. முதல்ல வாங்க, ஒரு டீ சாப்பிடுவோம்.. மத்தத அப்ரோ பேசிக்கலாம்..” என்று வடிவேலுவை வராத குறையாக மாடியிலிருந்து இறக்கிக் கொண்டு வந்தான்.
ரவி சுடசுட கீரை வடை சுட்டுக் கொண்டிருந்தார். கூட்டம் அலை மோதிக் கொண்டிருந்தது. கிருஷ்ணன் வடிவேலுவைத் துரிதப்படுத்தினான்.
“வாங்கன்னே.. இப்போவே போய் ரெண்டு சாப்பிடுவோம். அப்ரோம் கெடக்காது..” என்று சொல்லி, “ரவி அண்ணே..! எங்க ரெண்டு பேருக்கும் வட கட்டி கொடுண்ணே..” என்றான்.
ரவி எடுத்துக் கொடுக்க, கிருஷ்ணன் மட்டும் அதை ரசித்து ருசித்துச் சாப்பிட்டான். வடிவேலுவுக்கு ஏனோ மனம் இடம் கொடுக்கவில்லை.
நான்கு வடையை ஏப்பம் விட்ட கிருஷ்ணன், “வாண்ணே..! அப்படியே காலாற நடராஜர் கோயில்கு போவோம்..” என்று வடிவேலுவுக்கும் சேர்த்து அவன் நடக்க ஆரம்பித்தான்.
கோவில் இல்லையா? வரவில்லை..! என்று சொல்ல மனங் கேட்கவில்லை. இருவரும் தரிசனம் முடித்து, அங்கேயும் பிரசாதம் வாங்கிக் கொண்டு, சாப்பிட அமர்ந்தார்கள். நேற்று இதே இடத்தில் தான் விதி லட்சுமியின் குடும்பத்தை அமர வைத்தது.
“அப்போ சாமியார் எதிர்ல இருக்கணுமே..?” என்று வாசகர் கேள்வி புரிகிறது. ஆனால், கிருஷ்ணனுக்கு எதிரில் யாருமில்லை. அவனுக்குப் போர் அடித்தது. வடிவேலுவிடம் பேச்சு கொடுத்தான்.
“அண்ணே மொத தடவ வேம்பு ஐயா கூட்டிட்டு வந்தப்போ நிறைய விஷயம் சொன்னாரு.. இந்தக் கோவில் பத்திக் கேக்குறப்போ அப்டே ஆச்சரியப்பட்டு பூட்டேன்..! இனிக்கு உனக்கு தெரிஞ்சத சொல்லேன்..” என்றான்.
வடிவேலுவுக்கு மூக்கு வியர்த்தது. “சொல்றேன் டா. நேத்து கனவுல நீயும் நானும் இதே போல கோவிலுக்கு வந்தோமா.. இனிக்கு போலவே நேத்து கீர வட சாப்பிட்டோமா.. அப்ரோ போய் இட்லி பூரிலாம் சாப்பிட்டு படுத்துட்டோம்.. அடுத்த நாள் காலைல என்ன செகரெட்ரி வெளுவெளுன்னு வெளுக்குறாரு. டேய்..! இனிக்கு நீ எம் பொறுமைய ரொம்ப சோதிக்கிறடா. வாடா போய் கணக்கு எழுதணும்..” எனக் கூப்பாடு போட்டு, தர தரவென்று இழுத்துப் போனான்.
எதிர்பாராமல் வழியில் அந்தக் காவி உடை பெரியவர் மீது இருவரும் மோதி விடுகிறார்கள். “மன்னிச்சிடுங்க சாமி..” என்று அவசரமாகச் சொல்லிவிட்டு, கிருஷ்ணனை ஒரு கையில் பிடித்துக் கொண்டு வடிவேலு நகர்கிறான்.
கிருஷ்ணனுக்கு ஏனோ அந்தப் பெரியவரைப் பார்த்ததும் அப்பாவின் நினைப்பு வந்தது. அவருக்கும் அப்போது ஒரு காட்சி கண்முன் தேங்கியது. தேங்கியது காட்சி மட்டுமா? இருபது வருடங்களாய், விழியில் சிறிதும் சேராத நீரும் தான்…
சிதம்பரம் – லட்சுமி வீடு..!
லட்சுமியின் அப்பாவை அந்தச் சாமியாரின் பேச்சு உலுக்கியது. அன்று முடிவு செய்தார். “எந்த ஊருக்குச் சென்றாலும், அங்கிருக்கும் சிவன் கோயிலுக்கு ஏதாவது செய்வது” என்று உறுதி பூண்டு கொண்டார்.
காவி மனிதரின் உரை, லட்சுமியின் வீட்டில், ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாகப் பாதித்திருந்தது. வீடு சென்று, பழைய நிலைக்குத் திரும்ப அனைவர்க்கும் வெகு நேரமாயிற்று.
புனிதவதி தீவிர யோசனைக்குப் பின், லட்சுமியின் பக்கம் திரும்பி, “இன்னு ரெண்டு வருஷத்துல பி.எட் முடிச்சிடு டி… அப்ரோ வரன் பாத்தா கரெக்டா இருக்கும்..” என்று சொன்னாள்.
லட்சுமிக்கு அதில் ஏதும் ஆட்சேபனை இல்லை. ஏனெனில் இன்னும் இரண்டு வருடம் இருக்கிறதல்லவா என்ற அலட்சியம் அவள் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.
காலத்தைப் பற்றி சரியாக அறிந்து கொள்ளவில்லை அவள். நமக்கு வேண்டுமென்றால் முயலாகவும், வேண்டாமென்றால் ஆமையாகவும் மாறிவிடும் அது. இந்தக் காலச் சக்கரத்தை யாரும் வேகத்தடை போட்டு நிறுத்த இயலுமோ? அது வேகமாக சென்றால், உடன் நாம் விவேகமாகக் சென்று ஆக வேண்டியதை முடித்துக்கொள்ள வேண்டும். அஃது தானே புத்திசாலித்தனம்.
ஆம்! மேற்சொன்ன நிகழ்வுகள் துரிதமாய் நடந்து, இப்போது லட்சுமி பி.எட் முடிக்க இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. படிப்பு இறுதியாண்டிலேயே புனிதவதி அவள் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்திற்கு அடித்தளம் போட்டுவிட்டாள். புரியவில்லை? வரன் தேடுவதில் இறங்கி விட்டாள்…
சர்வோதயா..!
வடிவேலு எப்படியோ அறைக்குக் கூட்டி வந்து விட்டான். கிருஷ்ணன் விடாப்பிடியாக இரவு உணவிற்கு அப்புறம் தான் கணக்கு என்று சொல்லிவிட, வடிவேலுக்குச் சலிப்பு தட்டியது. எப்படியோ சாப்பாட்டு நேரமாகி, சமாதானமும் ஆகி, கிருஷ்ணன் கணக்கு எழுத உட்கார்ந்தான்.
வேம்பு அறையில் இல்லை. ராமலிங்கம், கிருஷ்ணன் கணக்கு போடுவதைப் பார்த்துவிட்டு, “டே தம்பி.. நீ பத்தாங் கிளாஸ் தான.. தேவையில்லாம இதுல கைவெச்சி மீசைக்காரன்கிட்ட வாங்கி கட்டிக்காத..” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, கிருஷ்ணனின் கைவிரல்கள் அந்தக் கணக்கு நோட்டு புத்தகத்தில் விளையாடிக் கொண்டிருதந்தது.
வடிவேலு கிருஷ்ணனை மலங்க மலங்கப் பார்த்தான். அன்று நாம் கணக்கிட்டது போல இவன் கணக்கு தெரிந்தவன் தான். கணக்கச்சிதமாக இவன் ஏதோ சில காரணங்களுக்காக, பொய் கூறி வேலைக்குச் சேர்ந்திருக்கிறான் என்று முடிவு செய்து விட்டான். ராமலிங்கத்தின் விழிகள் இரண்டும் கிருஷ்ணனின் கைவிரல்கள் மேல் ஒட்டிக்கொள்ளாத குறையாய், பதிந்து விட்டிருந்தது.
கிருஷ்ணன் யாரையும் கவனிக்கவில்லை, கவனம் முழுதும் நோட்டிலே இருந்தது.
நடுவில் வடிவேலுவிடம், “இதுவர என்ன வித்துதோ அதோட பில் கொண்டாங்க. கூடவே பற்றுச்சீட்டு கொஞ்ச கொண்டாங்க..” என்றான். வடிவேலு சட்டென்று எழுந்து சிட்டாய் வேலையை முடித்தான்.
ராமலிங்கத்துக்குப் புரிந்துவிட்டது. இங்கிதம் பாராமல் நேரடியாகக் கேட்டே விட்டார். “டேய் கிருஷ்ணா! நீ பத்தாங் கிளாஸ்ன்னு சொன்ன.. இப்போ நீ கணக்குல ஜோருன்னு உன் விரலே ஜோசியம் சொல்லிருச்சு..! பாரு அஞ்சாறு நாள் வேலைய, ரெண்டு மணி நேரத்துல முடிச்சிப்புட்ட.! நாளைக்கு மீசைக்கார காதுக்கு விஷயம் போச்சுன்னா அம்புடுத்தான்..” என்ற கடைசி வார்த்தைகள் கிருஷ்ணனைத் திடுக்கிடச் செய்தன.
“அண்ணே நீங்க ரெண்டு பேரும் சொல்லாம இருந்தா போதும்.. ண்ணே..! நானே வேலை கிடைக்காம நொந்து போய் இங்க வந்திருக்க. இந்த ஊரும் சரி, மனுஷாலும் சரி..! இப்பதா எனக்குப் பிடிக்க ஆரம்பிச்சிருக்கு. என் அம்மாக்கு சொந்தக் காசுல எதுனா செய்யணும்னே..” என்று சொல்லி, லேசாக கண்கள் கலங்கினான்.
ராமலிங்கமும் வடிவேலுவும் ஆறுதல் சொன்னார்கள். மேலும், இதை வெளியில் சொல்ல மாட்டோம் என்றும் கண்ணியமாகச் சத்தியம் செய்தார்கள்.
அன்றிலிருந்து அவர்கள் மூவரும் நண்பர்கள் ஆனார்கள். எத்தனையோ முறை பகலவன் உதித்து மறைந்து விட்டான். கிருஷ்ணனும் அப்படியே நாட்களைத் தள்ளி விட்டான்.
செகரெட்ரி சொன்ன வேலைகளைச் சமத்தாகச் செய்து முடித்து, அவ்வப்போது தன் இரு அத்யந்த சிநேகிதர்களுக்கும் உதவி செய்வான். ராமலிங்கம் திருமணம் ஆனவன். குடும்பஸ்த ஞானத்தை, கிருஷ்ணன் பெற்றுக் கொள்ள அவன் புலம்பல் உதவியது…
(தொடரும் – வெள்ளி தோறும்)
டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings