in

அக்னிப் பிரவேசம் (சிறுகதை) – ✍ சியாமளா வெங்கட்ராமன்

அக்னிப் பிரவேசம் (சிறுகதை)

ஆட்டோ அந்த தெருவில் ஒரு வீட்டின் முன் நின்றது

வாசலில் பளபளவென மின்னிய பெயர் பலகையில் ‘பவித்ரா எம்.ஏ.பி.எல் – அட்வகேட்’ என்ற பெயர் மின்னியது

சாமிநாதனும் சீதாவும் ஆட்டோவிலிருந்து இறங்கி, வீட்டிற்கு முன் இருந்த காலிங் பெல்லை அழுத்த, “யாரது?” என குரல் கொடுத்துக் கொண்டே நடுத்தர வயது பெண்மணி வெளியே வந்தார்

அவரைப்  பார்த்தால், அந்த வீட்டில் வேலை செய்யும் பெண்மணி போல் தெரிந்தது

“மேடத்திடம் இன்று அப்பாய்ட்மெண்ட்” என சாமிநாதன் கூற

 “வாங்க வந்து உக்காருங்க” என உள்ளே அழைத்துச் சென்றார்

சாமிநாதனும் சீதாவும் ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தனர்

சிறிது நேரத்தில் உள்ளே இருந்து மிடுக்கான தோற்றத்துடன் ஒரு பெண்மணி ஹாலுக்கு வந்து, “குட் மார்னிங் நான் பவித்ரா… வாங்க” என வரவேற்றார்

“குட்மார்னிங்” என கை கூப்பினார்கள் சாமிநாதனும் சீதாவும்

அவர்களை தனது அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றார் பவித்ரா

உள்ளே நுழைந்ததும், “உக்காருங்க” என்று கூறிவிட்டு அமர்ந்தவர், “என்ன, பாகப்பிரிவினை விஷயமா?” எனவும்

 “விவாகரத்து” என்றார் சாமிநாதன்

அதைக் கேட்ட பவித்ரா “என்ன விவாகரத்தா?” என சீதாவை ஆழமாகப் பார்த்தார்

“இவ என் பெண் சீதா, இவளுக்கு தான் விவாகரத்து வேணும்” என்றார் சுவாமிநாதன் 

“என்ன இந்த பொண்ணுக்கா? கழுத்துல தாலி சரடு புதுசா இருக்கு, கைல மெஹந்தி இன்னும் மங்கல” என்றார் வியப்பாய் 

“ஆமா இவளுக்கு தான்” என்றார்  சாமிநாதன் அழுத்தம் திருத்தமாக 

 “சரி…சொல்லுமா என்ன விஷயம்?” எனவும், கண்ணீர் மல்க பேச ஆரம்பித்தாள் சீதா 

“என் பேர் சீதா, என் கணவர் பெயர் ராஜாராமன்” என்றதும் 

“வெரிகுட் நல்ல பெயர் பொருத்தம்” என பவித்ரா தனிச்சையாய் கூற 

“பெயர் பொருத்தம் இருந்து என்ன பிரயோஜனம்” என முணுமுணுத்தார் சாமிநாதன்

“மேல சொல்லுமா சீதா” என்றார் பவித்ரா 

“எங்க ரெண்டு பேருக்கும் போன மாசம் தான் கல்யாணம் நடந்தது. கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரம் கழிச்சு நாங்க ரெண்டு பேரும் ஊட்டிக்கு ஹனிமூன் போனோம். அங்க ஒரு ஹோட்டலில் ரூம் புக் செஞ்சு தங்கினோம்.  தினம் ஒரு இடம்னு சந்தோஷமா சுத்தி பாத்தோம். 

சம்பவம் நடந்த அன்னைக்கி, போட்டிங் போய்ட்டு வரும் போது, லேசா இருள் கவிழ ஆரம்பிச்சது. திடீர்னு ஒரே கூச்சல், ஒரு கூட்டம் இன்னொரு கூட்டத்த துரத்திட்டு வந்தது. அவங்க கைல ஆயுதங்கள் இருந்தது. நாங்க ரெண்டு பேரும் ஒருத்தர் கையை ஒருத்தர் கெட்டியா பிடிச்சுட்டு ஓரமாக போக பாத்தோம்

அப்ப ஓடி வந்த கூட்டம் எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல வர, நாங்க பிரிஞ்சுட்டோம். அதுக்கப்புறம் என்ன நடந்ததுனு எனக்கு தெரியாது, நினைவு வந்தப்ப போலீஸ் ஸ்டேஷன்ல இருந்தேன்

சப் இன்ஸ்பெக்டர் ‘பேரென்ன?’னு கேட்டார், ‘சீதா’னேன். ‘நீ ஏன் அங்கு போன?’னு கேட்டார். ‘எங்க’னு நான் கேட்க, பக்கத்திலிருந்த லேடி இன்ஸ்பெக்டர் ‘உன்னை அழைச்சுட்டு வந்தமே அந்த வீட்டுக்கு’னார் 

எனக்கு ஒண்ணும் புரியல. நீங்க சொல்றது எனக்கு புரியலைனு சொன்னேன்.  அந்த நேரத்துல என் கணவரும் மாமனாரும் ஸ்டேஷனுக்கு வந்தாங்க. நான் ஓடிப் போய் என் கணவரை கட்டிட்டு அழுதேன் 

என்னை விட்டு எங்க போனீங்க, நான் எப்படி இங்க வந்தேன்னு அழுதுட்டே கேட்டேன். அதுக்கு என் கணவர் ஒண்ணும்  சொல்லல. இன்ஸ்பெக்டர்கிட்ட ‘இவ தான் என் மனைவி இதோ பாருங்க’னு எங்க கல்யாண போட்டோ காட்டினார். அப்புறம் ஆதார் கார்டு, அவர் வேலை செய்யற பேங்க் விலாசம் வீட்டு விலாசம் எல்லாம் குடுத்து போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து என்னை வெளியே அழைச்சுட்டு வந்தார் 

அங்க நின்னுட்டு இருந்த சுமோ கார்ல என்னை ஏத்தினாங்க. கார்ல என் அம்மா அப்பா இருந்தாங்க, என்னைப் பாத்ததும் என் அம்மா கட்டி பிடிச்சு அழுதாங்க.

‘எங்கடி இருந்த மூணு நாளா?’னு கேட்டாங்க. அப்ப தான் எனக்கு நான் கீழ விழுந்தது, என் கண்ணை ஒருவர் கட்ட நான் மயங்கியது, எல்லாம் மங்கலா ஞாபகத்துக்கு வந்தது.  ஆனா மூணு  நாட்கள்?

உடம்பு பூரா காயம் வலி. நடந்தத சொல்லி, மூன்று நாட்கள் நான் எங்க இருந்தேன்னு தெரியல. போலீஸ் ஸ்டேஷன்ல மயக்கம் தெளிஞ்சப்ப தான் நினைவு வந்ததுனு சொல்லி அழுதேன்.

‘சரி சரி உயிரோட கிடச்சியே அதே போதும், எங்களுக்கு பழி இல்லாம போச்சு’னு  சொன்னார் என் மாமனார்

 ஒருவழியா சென்னை வந்து என் கணவர் வீட்டுக்கு போனேன். என் கணவர் வழில எதுவும் கேக்கல.

வீட்டுக்கு வந்ததும், என் மாமியார் ‘போய் தலைக்கு குளிச்சுட்டு வா’னு சொன்னாங்க. சொன்னபடி செஞ்சேன். சாப்பிட்டதும் என்னை வீட்டு கூடத்துல உக்கார வெச்சு, எல்லாரும் சுத்தி உக்காந்தாங்க. 

நான் என் கணவரை பாத்து “என்னை விட்டு எங்க போனீங்க?”னு கேட்டேன். 

என் கணவர் கண்ல கண்ணீரோட, “நீயும் நானும் வந்தப்ப அந்தக் கூட்டம் நம்மள கீழ தள்ளி விட்டுட்டு ஓடிருச்சு. நான் சுதாரிச்சு எந்திரிச்சு பாத்தப்ப உன்னைக் காணோம். எல்லா பக்கமும் தேடினேன், எங்கயும் காணோம். சரி நீ ஹோட்டலுக்கு போய் இருப்பேனு அங்க போய் பாத்தேன், அங்கேயும் உன்னை காணோம். எனக்கு என்ன செய்யறதுனு தெரியல. என் பிரெண்ட் ஒருத்தன் மேட்டுப்பாளையத்துல இருக்கான். அவனுக்கு போன் போட்டு விஷயத்தைச் சொன்னதும் வந்தான். போலீஸ் ஸ்டேஷன் போய்  கம்ப்ளைன்ட் எழுதிக்  கொடுத்தோம். இரண்டு நாள் கழிச்சு தான் அப்பா அம்மாகிட்ட விஷயத்தைச் சொன்னேன். எல்லாரும் அடிச்சு பிடிச்சு ஊட்டி வந்து சேந்தாங்க”னு சொன்னார் 

இதைக் கேட்டதும் நான் அழ ஆரம்பிச்சேன். அப்ப என் மாமனார் என் கணவர்கிட்ட “ராஜாராமா, நீ என்ன சொல்ற? சீதா காணாம போன மூணு நாள் எங்க இருந்தா அதைச் சொல்லு”னு கேட்டார் 

 என் கணவர் பதில் எதுவும் சொல்லாம தலை குனிஞ்சார்

அதுக்குள்ள என் நாத்தனார், “மூணு நாள் காணோம்னதும் அக்கம் பக்கத்துல சீதா யாரோடவோ ஓடிட்டானு பேசறாங்க. என்ன நடந்ததுனே அவளுக்கு தெரியல, எப்படி அவ சுத்தமானவனு சொல்ல முடியும்”னு கேட்டா 

நான் என் கணவரைப் பாத்து, “உங்கள் எண்ணம் என்ன?”னு கேட்டேன் 

அவர் எதுவும் பேசாம தலை குனிந்து உட்கார்ந்திருந்தார் 

நானும் அஞ்சு நிமிஷம் அமைதியா இருந்தேன், அப்புற என் கணவர்கிட்ட, “உங்களுக்கு என் மேல் சந்தேகமா?”னு கேட்டேன். அதுக்கும் அவர் பதில் சொல்லல

“உங்களுக்கு என் கூட சேர்த்து வாழ விருப்பமில்லைனு தெரியுது. இன்னைக்கி என் மேல் வந்த சந்தேகம் வாழ்நாள் பூரா உங்க மனசுல இருக்கும். என்னோட உங்களால சந்தோசமா இருக்க முடியாது, நான் உங்களை விவாகரத்து செய்றேன்”னு சொன்னேன் 

இதைக் கேட்ட என் அம்மா அப்பா, “யானை தன் தலையில் மண்ணை வாரி இறைக்கற மாதிரி நீயே உன் வாழ்க்கையை அழிச்சுக்கற”னு திட்டினாங்க 

ஆண்கள் எவ்வளவு நாள் வீட்டை விட்டு போனாலும் யாரும் அவங்க  கற்பை சோதிக்கறதில்ல.

ஆனா… ராமபிரானின் மனைவி சீதாதேவி இராவணனின் அரண்மனையில் இருந்ததற்கு, ஊருக்காக தான் கற்புடையவள்னு நிரூபிக்க அக்னி பிரவேசம் செய்தா. அவளுக்கே அந்த நிலைமைனா என்னைப் போன்ற பெண்களுக்கு ஏற்படும் நிலைமையை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

என் கணவருக்கு என் மேல் ஏற்பட்ட சந்தேகத்திற்கு தினம் தினம் நான் அக்னி பிரவேசம் செய்ய முடியாது. அந்த நரக வேதனையை என்னால் சகிச்சுட்டு வாழ முடியாது. அதனால தான் நான் விவாகரத்து முடிவுக்கு வந்தேன்” என கூறி முடித்தாள் சீதா 

இதைக் கேட்ட வக்கீல் பவித்ரா, “நீ எடுத்த முடிவு சரியானது தான். நீ படிச்சவ, ஒரு நல்ல வேலையை தேடிக்கிட்டு வேறு ஊருக்கு போய் சந்தோஷமான வாழ்க்கையை ஆரம்பி. உன்னோட விவாகரத்து வழக்கை நான் எடுத்து நடத்தறேன்” என்றார் 

பவித்ராவுக்கு நன்றி கூறிவிட்டு, மன நிம்மதியுடன் வெளியேறினாள் சீதா 

“சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

3 Comments

  1. அருமையான கதை . சீதாதேவி தாயார் பட்ட கஷ்டங்கள் இன்றளவும் பெண்களுக்கு இருக்கிறது .

  2. கதை நன்றாகவே இருக்கிறது. கதாநாயகி சீதாவின் முடிவும் சரியானதே! ஆனால் காவிய நாயகி சீதா தேவி கணவனால் கஷ்டப்பட்டாள் என்பது சரி அல்ல என்பது என் தனிப்பட்ட கருத்து. ஆனால் உதாரணம் காட்டும்போது சீதையின் அக்னிப்ரவேசமே காட்டப்படுகிறது.

அன்னபூரணி (சிறுகதை) – ✍ லக்ஷ்மீஸ் பவன்

கண்ணான கண்ணா (கவிதை) – ✍ ராணி பாலகிருஷ்ணன்