www.sahanamag.com
தொடர்கதைகள்

பார்த்த முதல் நாளே ❤ (இறுதிப்பகுதி) – ✍ சஹானா கோவிந்த்

சிறிது நேரத்தில், “உள்ள வரலாமா ‘ண்ணா?” என்ற சுஜிதாவின் குரலில், கௌதமை விட்டு விலகி நின்றாள் ராதிகா

அணைப்பில் இருந்து விலகியவளிடமிருந்து, பார்வையை விலக்க இயலாமல் நின்றான் கெளதம்

“என்னண்ணா, அண்ணிகிட்ட வாங்க வேண்டிய அடியெல்லாம் வாங்கியாச்சா?” என சுஜிதா கேலியாய் சிரிக்க  

“நீ அருண் மாப்பிள்ளைக்கு குடுக்கறத விட கம்மி தான் சுஜிம்மா” என கேலியை திருப்பினான் கெளதம்

“உங்களுக்காச்சும் என் கஷ்டம் தெரியுதே கெளதம்” என்றபடி சுஜிதாவின் கணவன் அருண் பின்னோடு அறைக்குள் வர

“இப்படி சும்மாவாச்சும் சொல்லிட்டே இருங்க, ஒரு நாளைக்கு நிஜமாவே சாத்தறேன்” என்ற மனைவியின் கோபத்தை ரசித்த அருண்      

“அயம் வெயிட்டிங்” என நடிகர் விஜய் பாணியில் தலை சாய்த்து கூற, சிரிப்பலை எழுந்தது 

நீண்ட நாட்களுக்கு பின் மனம் விட்டு சிரிக்க முடிந்ததில், நிம்மதியாய் உணர்ந்தான் கெளதம். அதற்கு காரணமான தங்கை சுஜியை நன்றியோடு பார்த்தான் 

“உனக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும் சுஜிம்மா” என கெளதம் மனதார கூற 

“தேங்க்ஸ் எல்லாம் ஒண்ணும் வேண்டாம், என் பையனுக்கு கூட விளையாட ஆள் இல்ல, அதுக்கு ரெடி பண்ணுங்க” என சுஜி சிரிக்க

“நான் ரெடிப்பா” என கணமும் தாமதியாமல் உரைத்த கெளதம், விஷமக் கண்ணனாய் ராதிகாவை ஏறிட்டான்

கெளதம் சொன்னதன் அர்த்தம் புரிய முகம் சிவந்தவள், தன் உணர்வுகளை மறைக்க, அவன் சொன்னதே காதில் விழாதது போல் எங்கோ பார்க்க, சிரிப்புடன் தொடர்ந்தன கௌதமின் விழிகள் 

“நானும் ரெடி சுஜி” என தொடர்ந்து அருண் கண்சிமிட்டி கூற

கணவனை முறைத்தவள், “போதுண்டா சாமி, இந்த வாலு ஒருத்தனையே என்னால சமாளிக்க முடியல” என்றாள் சுஜி 

“அது சரி, நீ எப்படி ராதிய கண்டுபுடிச்ச?” என கௌதம் தங்கையிடம் வினவ   

“அடப்பாவமே, இவ்ளோ நேரம் பேசியும் நீ இன்னும் அண்ணிகிட்ட அதைப் பத்தி கேக்கலயா?” என நம்ப இயலாமல் விழித்தாள் சுஜிதா 

“என்ன சுஜி நீ, தனியா இருக்கறப்ப உன்னை பத்தி பேசற ஞாபகம் அவங்களுக்கு வருமா?” என அருண் கேலியில் இறங்க 

“நீங்க இதுல சீனியர், சோ நீங்க சொன்னா சரியா தான் இருக்கும் மாப்ள” என வழக்கம் போல் கேலியை அருண் பக்கமே திருப்பினான் கெளதம்

“சொல்லு சுஜி, ராதிய எப்படி கண்டுபுடிச்ச?” என மீண்டும் கேட்டான், அறிந்து கொள்ளும் ஆவலில்  

“தீபா அக்காகிட்ட நீங்க ராதினு ஒளறினதை பத்தி சொல்லி, என்ன விஷயம்னு கேட்டேன். அவங்க உங்க காதல் கதை எல்லாம் சொன்னாங்க, ஆனா என்ன பிரச்னைனால பிரிஞ்சீங்கனு தெரியலனு சொன்னாங்க. இதுக்கு மேல வெயிட் பண்ணினா வேலைக்கு ஆகாதுனு அடுத்த பிளைட்ல அண்ணிய பாக்க கிளம்பிட்டேன்” என்றவளை ஆச்சர்யமாய் பார்த்தான் கெளதம் 

அதை புரிந்தவள் போல், “வேற என்ன பண்றது? எங்கண்ணன் தேவதாஸ் மாதிரி தாடி வெச்சா பாக்க சகிக்காதே” என சுஜி கேலி செய்ய 

“தாடி வெச்சா கௌதமுக்கு நல்லாத் தான் இருக்கும்” என ராதிகா தன்னை மீறி அனிச்சையாய் சொல்லிவிட்டு, நாக்கு கடித்து நின்றாள்

அதை ரசித்து கெளதம் சிரிக்க, சுஜிதா மற்றும் அருணின் கேலி பார்வை தாங்காது கெஞ்சலாய் அவனைப் பார்த்தாள் ராதிகா 

அவளின் பார்வையை உணர்ந்தவனாய், “என்ன நடந்ததுனு சொல்ற உத்தேசம் இருக்கா இல்லயா சுஜிம்மா?” என பேச்சை மாற்றினான் கெளதம்

“சொல்றேன் சொல்றேன்” என்றவள், “தீபா அக்காகிட்ட அட்ரஸ் வாங்கிட்டு நேரா அண்ணி இருந்த அபார்ட்மெண்ட்டுக்கே போய்ட்டேன். உன் ஆளு செம அழுத்தம் அண்ணா, வாயே தெறக்கல. எப்படியோ கெஞ்சி கிஞ்சி விஷயத்தை வாங்கினேன். அப்புறம் நடந்த உண்மையை சொல்லி புரிய வெச்சேன். அப்பவும் அண்ணி இங்க வர சம்மதிக்கல, ஒரே ஒரு வாட்டி வந்து அண்ணன்கிட்ட பேசுங்க, அப்புறமும் உங்க முடிவுல மாற்றமில்லைனா நான் உங்கள தொந்தரவு செய்ய மாட்டேன்னு கெஞ்சி இழுத்துட்டு வந்தேன்” எனவும் 

“தேங்க்ஸ் சுஜி” என்றாள் ராதிகா   

“இல்ல அண்ணி, நான் தான் சாரி சொல்லணும்.  உங்களுக்குள்ள வந்த பிரச்சனைக்கு, நான் பண்ணின ஏக்சிடண்ட் தான் காரணம்னு தெரிஞ்சப்ப, ரெம்ப கில்டியா ஆய்டுச்சு. ரெம்ப சாரிண்ணா” என கண்ணீருடன் மன்னிப்பு கோரினாள் சுஜிதா 

மனைவியின் வருத்தம் தாளாமல், அவளின் தோளில் ஆதரவாய் கை பதித்தான் அருண் 

“ஏய்… என்ன சுஜிம்மா? எதுக்கு இப்ப டென்ஷன் ஆகற? அதான் இப்ப எல்லாம் நல்லபடியா முடிஞ்சதே” என தங்கையை சமாதானம் செய்தான் கெளதம்

“இன்னும் முடியல, கீழ உன் கல்யாணத்தை பத்தி பெரிய பஞ்சாயத்தே போயிட்டு இருக்கு” என சுஜிதா கூற

“பஞ்சாயத்தா?” என கெளதம் ராதிகா இருவரும் பதறினர்

“டென்ஷன் ஆகாதீங்க, கல்யாணத்த சென்னைல தான் வெக்கணும்னு அம்மாவும், இல்ல கோயமுத்தூர்ல தான் வெக்கணும்னு வாணி அத்தையும் பஞ்சாயத்து வெக்க, யார் பக்கம் தீர்ப்பு சொல்றதுனு தெரியாம நாட்டாமை டாக்டர் சந்திரசேகரன் அவர்கள் நட்டாத்துல நிக்கறார்” என சுஜியின் கேலியை ரசித்து மற்ற மூவரும் சிரித்தனர் 

“அத்தை மாமா எப்ப வந்தாங்க?” என கெளதம் கேட்க 

“நான் அண்ணி அத்தை மாமா எல்லாரும் ஒண்ணா தான் மார்னிங் பிளைட்ல வந்தோம். சரி சரி வாங்க, எல்லாரும் உங்களுக்காக வெயிட்டிங்” என்ற சுஜியை தொடர்ந்து, மற்ற மூவரும் கீழ் தளத்தில் உள்ள வரவேற்பறையை நோக்கி சென்றனர் 

ப்போதும் ராதிகாவுடன் கோர்த்திருந்த கையை கெளதம் விடவில்லை

அனைவரின் பார்வைக்கு வந்ததும், தன்னிடமிருந்து கையை பிரித்து கொள்ள முயன்றவளை, விடாமல் இன்னும் அழுத்தமாய் பற்றினான் கெளதம்

மகன் தன் மனம் கவர்ந்த பெண்ணுடன் கை கோர்த்து மகிழ்வுடன் வருவதைக் கண்டதும், கிருஷ்ணவேணியின் கண்கள் பனித்தது

அன்று துக்கம் தாளாமல் கெளதம் தன் மடியில் முகம் புதைத்து கதறிய போது, இனி அவன் வாழ்வு என்னாகுமோ என பயந்தது போல் இன்றி, முகம் கொள்ளா சிரிப்புடன் இன்று மகனை காண, பெற்ற உள்ளம் நெகிழ்ந்தது

ஆயினும், இத்தனை பெரிய விஷயத்தை தன்னிடம் மறைத்திருக்கிறானே என மனம் சுணங்கியது 

“வாடா மருமகனே, உன் மூஞ்சில இந்த சிரிப்பை பாத்து எவ்ளோ நாளாச்சு” என சந்திரசேகரன் மகிழ்வாய் கூற

“வாங்க மாமா, வாங்க அத்தை” என வரவேற்றான் கெளதம் 

“நாங்க வந்து ரெம்ப நேரமாச்சு, நீ தான் ரெம்ப பிஸி போல” என வாணி கேலி செய்ய 

“உங்க மகளை தாஜா பண்றது அவ்ளோ லேசுப்பட்ட வேலையா அத்த?” என கெளதம் சிரிக்க, அவனை முறைத்தாள் ராதிகா. அதையும் ரசித்து சிரித்தான் கெளதம்

ராதிகாவை அழைத்து தன்னருகே அமரச் செய்த கிருஷ்ணவேணி, ஆசையுடன் வருங்கால மருமகளுடன் பேசிக் கொண்டிருந்தார்

சிறிது நேரம் கழித்தே, அன்னை தன்னிடம் பேசாமல் தவிர்ப்பதை உணர்ந்தான் கெளதம்

மகன் தன்னை நோக்கி வருவதை உணர்ந்த கிருஷ்ணவேணி, உள்ளே எழுந்து செல்ல முயல, விடாமல் பற்றி அமர வைத்தான் கெளதம் 

அதோடு, அருகில் அமர்ந்து அன்னையின் தோளில் சலுகையுடன் சாய்ந்து கொண்டு, “என்னம்மா… என் மேல கோபமா?” எனவும் 

“என்கிட்ட பேசாத போடா” என முகம் திருப்பினார் கிருஷ்ணவேணி 

ஒருவழியாய் கெஞ்சி கொஞ்சி கெளதம் சமாதானம் செய்ய, “பேசியே மயக்கிடு” என செல்லமாய் பிள்ளையை நாலு அடி வைத்தார் அன்னை 

அன்னை மகனின் ரகளையை பார்த்து ராதிகா மகிழ்வாய் சிரிக்க, “என்ன அண்ணி, உங்க வேலையை அம்மா செய்யறாங்கனு ஹாப்பியா சிரிக்கறீங்க போல?” என சுஜிதா கேலி செய்ய 

“நீயும் ரெண்டு போடு ராதிகா” என்றார் கிருஷ்ணவேணி 

“ஐயோ… இது ரெம்ப ஆபத்தான கூட்டணி” என தப்பித்து தன் தந்தையும் மாமாவும் அமர்ந்திருந்த சோபாவிற்கு இடம் பெயர்ந்தான் கெளதம் 

“அப்புறம் மாப்ள, எப்ப கல்யாணம் வெச்சுக்கலாம்?” என சந்திரசேகரன் கேட்க 

“அது… மாமா… ராதிகா வீட்ல…” என கெளதம் இழுக்க, அதே நேரம் ராதிகாவும் கலக்கத்துடன் கௌதமை பார்த்தாள் 

‘எல்லாம் நான் பார்த்து கொள்கிறேன்’ என்பது போல் கண்ணசைத்து சமாதானம் கூறினான் கெளதம்

“நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருந்த கேப்ல, நடந்த விஷயத்தை எல்லாம் சொல்லி புரியவெச்சு, அந்த பேச்சுவார்த்தை எல்லாம் நாங்க முடிச்சுட்டோம். அவங்கெல்லாம் கெளம்பி வந்துட்டு இருக்காங்க” என்ற மாமாவை நம்ப இயலாமல் பார்த்தனர் இருவரும் 

“ஆமா கெளதம், இன்னைக்கி சாயங்காலம் நம்ம வீட்லயே சிம்பிளா நிச்சயம் பண்ணிக்கலாம்னு பிளான்” என மகிழ்வாய் கூறினார் கௌதமின் தந்தை ராமகிருஷ்ணன் 

இரு வீட்டார் சம்மதமும் கிடைத்ததில், ராதிகாவும் கௌதமும் மகிழ்வுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்

“அது சரி, ராதிகா சமாதானமாயிடுவானு உங்களுக்கு முன்னாடியே தெரியுமா மாமா? எந்த நம்பிக்கைல நாங்க எதுவும் சொல்றதுக்கு முன்னாடியே ராதிகா வீட்ல பேசினீங்க?” என கெளதம் வினவ 

“இதையே தான் நானும் சொன்னேன். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, அவங்க வந்தப்புறம் ராதிகா வீட்டுக்கு பேசலாம்னு. ஆனா உங்க மாமா தான் அடிச்சு சொன்னார், எல்லாம் நல்ல முடிவா தான் இருக்கும்னு” என்றார் கௌதமின் தந்தை ராமகிருஷ்ணன் 

“எப்படி மாமா இப்படி ஒரு காண்பிடன்ஸ்? எனக்கே ராதிய சமாதானம் பண்ண முடியுங்கற நம்பிக்கை இருக்கல” என்றான் கெளதம் 

“கோயமுத்தூர்ல இருந்து வர்றப்ப எனக்குமே அந்த நம்பிக்கை இல்ல கெளதம். ஆனா, இங்க வர்ற வரைக்கும் எதையோ பறிகொடுத்த மாதிரியே இருந்த ராதிகா, இந்த வீட்டுக்குள்ள வந்து ஹால்ல மாட்டி இருந்த உன் போட்டோவை பாத்ததும் ஆணியடிச்ச மாதிரி அங்கேயே நின்னுட்டா, கண்ணுல தண்ணி வேற. எனக்கு அப்பவே புரிஞ்சு போச்சு, உன்னை விட்டு அவ எங்கயும் போகமாட்டானு. அந்த நம்பிக்கைல தான் எல்லாம் பேசி முடிச்சுட்டோம்” என சந்திரசேகரன் புன்னகையுடன் கூற 

‘அப்படியா?’ என கௌதம் கேள்வியாய் ராதிகாவை பார்க்க, ‘ஆம்’ என கண்களாலேயே உரைத்தாள்  

பதிலாய் அவன் கண்கள் பொழிந்த காதலில் மனம் நிறைய, மகிழ்வாய் உணர்ந்தாள் ராதிகா

“நீ நாளைக்கு யூ.எஸ் போயே ஆகணுமாடா?” என்ற அன்னையின் கேள்வியை தொடர்ந்து, ராதிகாவும் தவிப்புடன் கௌதமை பார்த்தாள்  

அதை புரிந்தவன் போல், “அது… பேசி பாக்கறேம்மா, ஒரு ஒன் மந்த் போஸ்ட்போன் பண்ணினா ராதிகாவையும் கூட்டிட்டு போய்டலாம்னு…” என கெளதம் இழுக்க 

“அதாவது, கல்யாணத்தை உடனே வெயுங்கனு சொல்லாம சொல்றார் எங்கண்ணன்” என்ற சுஜிதாவின் கேலியில், சிரிப்பலை எழுந்தது

“இப்பதான் எல்லா பிரச்சனையும் முடிஞ்சுடுச்சே, யூ.எஸ் போயே ஆகணுமா கெளதம்?” என சந்திரசேகரன் வருத்தமாய் கேட்க 

அவர் கையை ஆதரவாய் பற்றியவன், “நான் கேட்டதும் இந்த வாய்ப்பை எனக்கு குடுத்ததுக்கு நான் மரியாதை குடுக்கனுமல்ல மாமா. ஒன் ஆர் டூ இயர்ஸ் இருந்துட்டு நம்ம ஹாஸ்பிடலுக்கே வந்துடறேன் மாமா” என்றான் சமாதானமாய் 

“ஓகே டா, நீ ஹாப்பியா இருந்தா அதுவே போதும்” என அன்பாய் உரைத்தார் சந்திரசேகரன்                         

“சாயங்காலம் நிச்சயத்தை வெச்சுகிட்டு இப்படியே உக்காந்துட்டு இருந்தா எப்படி? அண்ணிக்கு நிச்சயப்பட்டு வாங்கணும், எனக்கு வஸ்தரகலா பட்டு வாங்கணும்…” என்ற சுஜிதாவை மேலும் பேச விடாமல் தடுத்த அருண் 

“ஹலோ ஹலோ… நிச்சயதார்த்தம் உங்க அண்ணா அண்ணிக்கு, அதுக்கு உனக்கு எதுக்கு வஸ்தரகலா வராத கலா எல்லாம்” என மனைவியை கேலியாய் கேட்க 

“ஐயோ… உங்களுக்கு விஷயமே தெரியாதா அருண், நிச்சயத்துல நாத்தனார் வஸ்தரகலா பட்டு கட்டினா தான் நல்லதுனு சாஸ்தரத்துலயே இருக்கே” என சுஜி தன் பாணியில் சமாளிக்க 

“அடிப்பாவி, ஒரு பட்டு புடவைக்காக இந்த புளுகா புளுகுவ?” என மனைவியை புரிந்த அருண் வம்பு செய்தான் 

“ஒண்ணு என்ன, என் தங்கச்சி எவ்ளோ கேட்டாலும் வாங்கித் தருவேன், நீ வா சுஜிம்மா” என கெளதம் அழைக்க, கணவனுக்கு பழிப்பு காட்டிவிட்டு ஓடினாள் சுஜிதா

ராதிகாவின் நிறத்திற்கு பொருத்தமாய், தான் தேர்ந்தெடுத்த மயில் கழுத்து வண்ண நிச்சியப்பட்டில், அழகோவியமாய் நின்றிருந்தவளை விட்டு பார்வையை அகற்ற இயலாமல் தடுமாறினான் கெளதம்

அதேப் போல், ராதிகாவின் அண்ணன் பிரபு அளித்த நிச்சய பட்டுவேட்டி சட்டையில், கம்பீரமாய் நின்றிருந்த கௌதமை இமைக்கவும் மறந்து பார்த்தாள் ராதிகா

மனையில் நிச்சயத்திற்காய் ஜோடியாய் அமரவைக்கப்பட்ட பின்னும், ஓரக்கண்ணில் இருவரின் பார்வையும் தொடர, “சைட் அடிச்ச வரைக்கும் போதும், ரெண்டு பேரும் கொஞ்சம் மத்தவங்களையும் பாருங்க” என சுஜிதா அவர்கள் இருவருக்கு மட்டும் கேட்கும் வண்ணம் குனிந்து காதில் கூற, அவசரமாய் பார்வையை விலக்கிக் கொண்டனர் 

தங்கையின் மகிழ்வு அவள் முகத்தில் வெளிப்படையாய் தெரிய, அவள் வாழ்வு பற்றிய கவலை நீங்கி நிம்மதியாய் உணர்ந்தார் ராதிகாவின் அண்ணன் பிரபு

மூன்று வருடங்களுக்கு முன் நடந்த விபத்து பற்றிய உண்மைகளை அறிந்ததும், கௌதமிடம் தன் செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டார் பிரபு

“உங்க எடத்துல நான் இருந்திருந்தா இன்னும் மோசமா தான் நடந்திருப்பேன்” என அவரை சமாதானம் செய்தான் கெளதம் 

அன்னையிடம் சொன்னது போல், ஒருமாதம் கழித்து பணியில் சேர்வதாய் அமெரிக்க நிறுவனத்திடம் கூறி ஒப்புதல் பெற்றான் கெளதம்

அதைக் கேட்டதும் எல்லோரும் மகிழ்வாய் உணர்ந்தனர். யாரும் அறியாமல் கௌதமிற்கு பறக்கும் முத்தத்தை பரிசளித்து, தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள் ராதிகா

அடுத்த வாரமே திருமணம், அதுவும் கௌதமின் வீட்டிலேயே, முதல் சுற்று உறவு மற்றும் நட்பு மட்டுமே கலந்து கொள்ளும் நிகழ்வாய் இருக்குமென நிச்சயக்கப்பட்டது

அது, தன் மனம் அறிந்து கெளதம் செய்த ஏற்பாடு என்பதை உணர்ந்து, அவனை நன்றியுடன் பார்த்தாள் ராதிகா. அதை புரிந்தவனாய், அன்பாய் முறுவலித்தான்

“உங்க மகன் கல்யாணம் கிராண்டா நடக்கணும்னு ஆசைப்பட்டிருப்பீங்கள்ல அத்தை, இப்படி சிம்பிளா பண்றது வருத்தமா இருக்கா?” என நிச்சயம் முடிந்து கிடைத்த வாய்ப்பில், கௌதமின் அன்னையிடம் ராதிகா கேட்க 

“அது எல்லா பெத்தவங்களுக்கும் இருக்கற ஆசை தான் ராதிகா. ஆனா அதை விட என் மகனோட சந்தோஷம் தான் எனக்கு முக்கியம். உன்னை பிரிஞ்சு வந்து அவன் பட்ட வேதனைய கண்ணால பாத்தவ நான். இப்ப அவன் முகத்துல இருக்கற சிரிப்புக்கு ஈடா, என்னால எதையும் சொல்ல முடியாது. எனக்கு இது போதும்” என கிருஷ்ணவேணி கூற, தன் மகன் மீது அந்த அன்னை கொண்ட பாசம், ராதிகாவின் மனதை நெகிழ்த்தியது

நிச்சயம் முடிந்து எல்லோரும் மகிழ்வாய் அளவளாவி கொண்டிருக்க, “அப்ப நாங்க கிளம்பறோம் அத்தை” என ராதிகாவின் அண்ணன் கூறவும் 

“இந்நேரத்துக்கு எங்க போறீங்க? காலைல போலாம். அதுவும் போகாட்டா தான் என்ன பிரபு? இன்னும் ஏழே நாளுல கல்யாணம், இங்கயே இருந்து முடிச்சுட்டே போலாம்” என்றார் கிருஷ்ணவேணி 

“அது… அவ்ளோ நாள் எப்படி அத்தை? விஷயத்தை கேட்டதும் எல்லாம் போட்டது போட்டபடி கிளம்பி வந்துட்டோம். அதோட, ஒரு வாரமாச்சும் ராதிகா எங்களோட இருக்கணும்னு ஆசையா இருக்கு” என ராதிகாவின் அண்ணன் தன் தரப்பு ஆசையை சொல்லி சம்மதம் பெற்றார் 

“நீயும் போறியா?” என தன்னருகில் அமர்ந்திருந்த ராதிகாவிடம் மெல்லிய குரலில் கெளதம் கேட்க 

“ஆம்” என அவள் தலையசைக்கவும், கோபமாய் முகம் திருப்பி எழுந்து சென்றான் கெளதம் 

“ஒரு அஞ்சு நிமிஷம்மா, வந்துடறேன்” என தன் அன்னையிடம் கூறிவிட்டு, கெளதம் சென்ற திசையில் பின்னோடு சென்றாள் ராதிகா

இந்த நாவலை எழுதிய எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇  

                                

வீட்டின் மறுபக்கம் இருந்த புல்வெளியில் போடப்பட்டிருந்த இருக்கையில், மிட்டாய்’க்கு அடம்பிடிக்கும் சிறுபிள்ளை போல் முகத்தை தூக்கி வைத்து கொண்டு அமர்ந்திருந்த கௌதமை கண்டதும், சிரிப்புடன் அருகே அமர்ந்தாள் ராதிகா  

“என்ன சிரிப்பு இப்ப?” என முறைத்தவனை பார்த்து, இன்னும் அதிகமாய் ராதிகா சிரிக்க 

“என்கிட்ட அடிவாங்கப் போற ராதி” என்றவனின் பொய்யான மிரட்டலுக்கு 

“எங்க அடிங்க பாப்போம், அத்தை மாமா சுஜி எல்லாரையும் கூப்பிடுவேன்” என பதிலுக்கு மிரட்டினாள் அவள் 

“அடிச்சா தான கூப்பிடுவ, இதுக்கு என்ன பன்றேன்னு பாப்போம்” என, கிடைத்த சந்தர்ப்பத்தை விடாமல் அணைத்து இதழ் ஒற்ற, முயன்றும் விலக இயலாமல் நெகிழ்ந்து நின்றாள் ராதிகா 

தன்னிடம் சரணடைந்து நின்றவளை மனமின்றியே விடுவித்தவன், மெல்ல அணைத்து அவள் தலையில் தன் தாடையை தாங்கியபடி, “போயே ஆகணுமா ராதி?” என பாவமாய் கேட்டான் கெளதம் 

அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள், “ஒரு வாரம் தான கெளதம், அண்ணா சொல்லும் போது என்னால மறுக்க முடியல. இனி எப்பவும் உங்களோட தான இருக்கப் போறேன்” என சமாதான மொழி பேசியவளை, அதற்கு மேல் வற்புறுத்த மனமின்றி மௌனமாய் அணைத்து நின்றான் கெளதம்

நேற்று இதே நேரம், கண் முன்னேனும் அவள் வர மாட்டாளா என ஏங்கிய நினைவில், அவன் அணைப்பு இறுகியது

அதை புரிந்தவள் போல், “என்னை பிரிஞ்சு வந்து நீங்க ரெம்ப கஷ்டப்பட்டீங்கனு அத்தை சொன்னாங்க, சாரி கெளதம்” என மன்னிப்பு கோர

அவளின் வருத்தம் தாங்காமல், “மாமியாரும் மருமகளும் இவ்ளோ அரட்டை அடிக்கற அளவுக்கு போயாச்சா?” என கேலியாய் பேச்சை மாற்றினான் 

“ஆமா” என மகிழ்வாய் உரைத்தவள், “அது சரி, சுஜி கூட லவ் மேரேஜ் தானாமே, நீங்க என்கிட்ட சொன்னதே இல்ல” என புகார் வாசிக்க 

“எங்க சொல்றது, உன்னைப் பாத்தா தான் எல்லாம் மறந்து போகுதே” எனவும் 

“அத்தை சொல்றது ரெம்ப கரெக்ட், பேசியே மயக்கிடுறீங்க” என்றவளின் சிணுங்கலை ரசித்தவன் 

“மயங்கினதுக்கு அங்க இருந்து ரியேக்சன் ஒண்ணும் காணோமே” என்றவனின் மையல் பார்வையில் இன்னும் மயங்கியவள்

“எல்லா ரியேக்சனும் அடுத்த வாரம் வரும்” என அவன் பார்வை தவிர்த்து ராதிகா கூறவும், சிரிப்புடன் அவளை அணைத்துக் கொண்டான் கெளதம்

உலகை வென்ற உவகையுடன் அவளும் அவனுடன் ஒன்றி நின்றாள் 

பார்த்த முதல் நாளே… தன்னையும் அறியாமல் அவளிடம் மயங்கியவன், இன்று அவளை மயங்க செய்யும் மாயக் கண்ணனானான்

இனி வாழும் ஒவ்வொரு நாளும், பார்த்த முதல் நாளாய், மாறாத அன்புடன் வாழ வாழ்த்தி விடைபெறுவோம் ❤❤❤

இந்த நாவலை எழுதிய எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇  

                                

விரைவில் இந்த நாவலை புத்தகமாக்கும் எண்ணம் இருப்பதால், சில நாட்களில் சஹானா இணைய இதழ் தளத்திலிருந்து நீக்கப்படும்

கடந்த ஒன்பது மாதங்களாய், தொடர்ந்து இந்த தொடரை ஆர்வத்துடன் வாசித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். மீண்டும் ஒரு புத்தம் புது தொடருடன்,மே ஒன்றாம் தேதி உங்களை சந்திக்கிறேன். நன்றி 

என்றும் நட்புடன்,

சஹானா கோவிந்த் 

(முற்றும்) 

Similar Posts

2 thoughts on “பார்த்த முதல் நாளே ❤ (இறுதிப்பகுதி) – ✍ சஹானா கோவிந்த்
  1. அருமையான முடிவு. தர்க்கரீதியாகவும் ஏற்க முடிந்தது. நல்ல கதை சொல்லி ஆகி விட்டீர்கள். தொடர்ந்து எழுதிப் பாராட்டுகளையும் புத்தக வெளியீட்டில் முதல் இடத்தையும் பெற வாழ்த்துகள். ஆசிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: