sahanamag.com
சிறுகதைகள்

ஆட்டுக்கறி (சிறுகதை) – ✍ சுபா செல்வகுமார்

மாதப் போட்டிக்கான பதிவு – நவம்பர் 2021

“அம்மா… அன்னிக்கு ஒருநா கோவாலு மாமா வூட்ல இருந்து தந்தாங்களே. நாங்கூட அவுக் அவுக்னு அள்ளி அள்ளி சாப்புட்டனே, அதே ஆட்டுக்கறியா இன்னைக்கு தருவாங்கம்மா..?”

“ஆமாடா ராசா.. அதே தான்”..

“அய்ய்யா.. அப்போ ஜாலி தான். ஏம்மா இந்த நல்லா ஒரு மாதிரி மணக்குமே, நம்ம ஆச்சி உசிரோட இருந்தப்போ நாம ஒரு தடவை ஊருக்கு போனப்போ வச்சுக் குடுத்தாளே, அந்த ஆட்டுக்கறி தான”

“ஆமா கண்ணா அதே தான், நீ தொண தொணன்னு பேசாம கொஞ்சம் வெரசா நட”

ஏழு வயது மகனை கையில் பிடித்தபடி வேகமாக நடந்து கொண்டிருந்தாள் சுந்தரி.

கட்டியவன் சரியில்லாத காரணத்தால், இவள் வீட்டு வேலைக்குப் போய் கொண்டு வரும் அந்தக் காசும் சாராயக் கடைக்கே சரியாய் போய் விடும். பசியும் பட்டினியுமான ஜீவனம்

தன்னையும் நம்பி தன் வயிற்றில் வந்து பிறந்த விட்ட இந்த ஒற்றை மகனுக்காக தான் அவள் உயிர் வாழ்வதே. எப்படியாவது கஷ்டப்பட்டு, அவனை நல்லபடியாக வளர்த்தெடுக்க வேண்டும் என்பதையே லட்சியமாய் நினைத்து உயிர் வாழ்கிறாள்.

இவளுக்குத் துணையாய் இருந்த ஒரேயொரு ஜீவன், இவளின் தாய் தான். அவளும் இரண்டு மாதங்களுக்கு முன் போய்ச் சேர்ந்து விட்டாள்

” அம்மா அம்மா… அந்த ஆட்டுக்கறி இருக்குல்ல அதுல”

“டேய் கண்ணா, கொஞ்சம் பேசாம வெரசா நடடா நேரமாச்சு. இல்லாட்டி அங்கன போய் நாந்தான் ஏச்சு வாங்கணும்”

அவள் வேலை பார்க்கிற வீட்டில் இன்று விருந்தினர்கள் நிறைய பேர் வருவதால் கொஞ்சம் சீக்கிரம் வர சொல்லியிருந்தார்கள். இன்று மதியம் ஆட்டுக்கறி விருந்து என்று அவர்கள் பேசியது இவள் காதில் விழ, ஒருநாளும் இல்லாமல் இன்று தன் மகனையும் அழைத்துக் கொண்டு செல்கிறாள்

அங்கு போய் சேர்ந்ததும் மகனிடம், “இங்க பாரு ராசா, நீ பேசாம அந்த மரத்தடியில் போய் ஏதாவது வெளையாடிட்டு இருக்கணும். அவுங்க என்னை சாப்பிட கூப்பிடும் போது நா உன்ன கூப்புடுவேன். நீ அப்போ தான் வரணும் சரியா” என்று சொல்லி மகனை முத்தமிட்டு விட்டு வீட்டுக்குள் நுழைந்தாள்

“என்னடி சுந்தரி.. என்னிக்கு சீக்கிரம் வான்னு சொல்றனோ..அன்னிக்குத் தான் நீ கரெக்டா லேட்டா வருவே..ஆமா அது யாரு..உம் மவனா..” கிரிஜாம்மா கேட்க.

“ஆ.. ஆமாம்மா.. எப்பவும் பக்கத்து வூட்டு பசங்க கூட வெளையாட சொல்லிட்டு நான் இங்கன வேலைக்கு வருவேன்.. இன்னிக்கு அவுக எல்லாம் ஒரு கண்ணாலத்துக்குப் போயிட்டதால..இவன் தனியா இருப்பானேன்னு கூட கூட்டியாந்தேன்”.

“சரி சரி.. சும்மா புள்ளைய கொஞ்சிட்டு இருக்காம கடகடன்னு வேலையைப் பாரு..கறிக்கு அரைக்க வேண்டிய மசாலால்லாம் அங்க அம்மிகிட்ட வச்சிருக்கேன்..போய் மொதல்ல அதை அரைச்சு எடுத்திட்டு வா”..என்று அதட்டலாய் சொல்லி விட்டு போனார்.

போய் பார்த்தவளுக்கு மயக்கம் வராத குறை தான்.. பக்கத்திலேயே இரண்டு பேர் நின்று கறியைக் கழுவுவதையும் பார்த்தாள்.

“அடேங்கப்பா..இவ்ளோ கறியா? எப்படியும் ஒரு அஞ்சு கிலோ இருக்குமோ!!” இவள் என்றைக்கு இவ்வளவு கறியைப் பார்த்தாள்.. அதனால் தான் பத்து கிலோ கறியை பாதியாய் எடை போட்டு அதற்கே மலைத்துப் போனாள்.

“இத்தனைக்கும் இவ்வளோ கறிக்கும் மசாலா தனியா நானே அரைக்கணுமா’ நினைத்தவளுக்குத் தலையே சுற்றியது..

‘சரி யோசித்தால் வேலைக்கு ஆகாது’ என்று தன்னைத் தானே தேற்றியவள், சேலையை தூக்கிக் சொருகிக் கொண்டு அரைக்கத் தொடங்கினாள்

பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா என்று மசாலாவை அரைக்க அரைக்க மணம் வீட்டையே தூக்கியது

வெளியே நின்று விளையாடிக் கொண்டிருந்த கண்ணனுக்கு அந்த வாசமே பசியையும் ஆசையையும் தூண்ட, மெதுவாக நடந்து சமையலறைப் பக்கம் வந்தான்

“அம்மா, ஆட்டுக்கறி குழம்பு வாசம் தூக்குதும்மா, அன்னிக்கு சாப்புட்ட அதே வாசம் அதுக்கப்புறம் இன்னிக்கு தான் வருதும்மா” அம்மாவிடம் ஆசையாய் சொல்ல, இவளுக்கு கண்கள் கலங்கியது.

‘ஒத்தப் பிள்ளை ஆசப்படுறத கூட வாங்கி குடுக்க முடியாத பாவியா இருக்கனே நா.. கோவாலு அண்ணன் வூட்ல கெடா வெட்னப்போ கறி குடுத்துச்சு. அதை சாப்பிட்டு ரெண்டு வருசமாவப் போகுது, அதையே நினைச்சிட்டு இருக்கானே புள்ள’ என்று வருந்தியவள், மகனைப் பார்த்து சிரித்தாள்.

“ஏய் அங்க என்னடி கொஞ்சல்? இங்கன எம்புட்டு வேலை இருக்கு. சீக்கிரமா வந்து வெங்காயம் பூண்டு எல்லாம் உறிச்சு இவங்ககிட்ட குடு” கிரிஜாம்மா அதட்ட

மகனை “ஓடு ஓடு… அங்க போய் உட்கார்ந்துக்கோ” என்று சைகை செய்தவள், கடகடவென பூண்டு வெங்காயம் எல்லாம் உறிக்கத் தொடங்கினாள்.

கண்ணன் மரத்தடியில் உட்கார்ந்து அணில் குருவியெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க, இங்க சமையல் வேலை விறுவிறுவென நடந்து ஒருவழியாக முடிந்தது

காலையில கொஞ்சம் கஞ்சி குடிச்சிட்டு வந்தது, அவளுக்கு ஒரு மாதிரி தலையை சுற்றிக் கொண்டு வர, ஏதாவது கொஞ்சம் சூடாக குடித்தால் கொஞ்சம் தெம்பாக இருக்கலாம் என்று தோன்றியது.

யாரிடம் கேட்க எப்படி கேட்க என்று யோசித்தே, கடைசியில் கேட்கவே வேண்டாம் என்று முடிவுக்கு வந்தவள், வெளியே போய் பைப்பில் தண்ணீர் பிடித்து குடித்து விட்டு முகத்திலும் நன்கு தண்ணீரை அடித்து தெளித்து கழுவி கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு வந்தாள்.

பூண்டும் வெங்காயமும் நிறைய உரித்ததில், நகங்களில் வேறு எரிச்சலும் வலியுமாய் இருந்தது.

விருந்தினர்கள் வந்தாச்சு பந்தி தொடங்கியது, எல்லாரும் சாப்பிட்டு முடித்த பின் தான் இவளுக்கு கொடுப்பார்கள். அதுவும் இவளுக்கு மட்டும் தான், வீட்டுக்கு எல்லாம் கொடுத்து விட மாட்டார்கள். இவளும் கேட்பதற்கு கூசி எதுவும் கேட்க மாட்டாள்

இவளுக்கு கொடுக்கும் தோசை இட்லிகளை அங்கு நிற்கும் வாழைமரத்தில் ஒரு இலையைப் பறித்தோ, அல்லது சமயத்தில் இவள் சேலையில் வைத்தோ வீட்டுக்கு கொண்டு வந்து மகனுக்கு கொடுப்பாள்.

ஆனால் இன்னிக்கு ஆட்டுக்கறி விருந்து என்பதால் அவர்களை கேட்காமலேயே, மகனைக் கூட்டிக் கொண்டு வந்து விட்டாள். ‘முப்பது பேர் சாப்பிடும் இடத்தில் ஒரு சின்ன குழந்தைக்கு தர மாட்டார்களா?’ என்ற எண்ணத்தில்

வந்தவர்கள்  எல்லாரும் சாப்பிட்டு முடியவும், “சுந்தரி” என்று அழைத்தாள் கிரிஜாம்மா

“என்னம்மா?” என்று அவசரமாக ஓடினாள். அம்மாவை அவர்கள் கூப்பிட்ட சத்தம் கேட்டு கண்ணன் ஓடி வந்தான். சமையலறை வாசலில் நின்று எட்டிப் பார்த்தான்.

எப்போதும் இவளுக்கு கொடுக்கும் பீங்கான் தட்டில் நிறைய சோறை அள்ளி வைத்து கறிக்குழம்பை அப்படியே எலும்போடும் கறியோடும் அள்ளி ஊற்றினாள் கிரிஜாம்மா

தட்டில் சோற்றை விட கறித்துண்டுகளே அதிகம் தெரிய, கண்கள் விரிய ஆசையோடு பார்த்தான் கண்ணன், சுந்தரிக்கே ஆச்சர்யம்

‘ஏ அப்பா எவ்ளோ கறி… கண்ணனும் நானும் நல்லா வயிறு நிறைய சாப்பிட்டாலே மிச்சம் வரும் போலிருக்கே” என்று மனதுக்குள் குதூகலித்தாள். கண்ணனை திரும்பி பார்த்தாள். அவன் சிரிக்க, இவளும் சந்தோஷமாய் சிரித்தாள்.

“ஏய்… இங்க என்ன மசமசன்னு நின்னுட்டு இருக்கே, அங்க எல்லாரும் சாப்ட்டாச்சு. போய் அந்த இலைகளை எடுக்க வேண்டாமா ஓடு” என்று விரட்ட

“இ..இதோ..போறேம்மா” என்று ஓடியவள்,

‘சரி அவங்க குடுக்கிறதை வாங்கி மொதல்ல கண்ணன் சாப்பிடட்டும், நாம இதை முடிச்சிட்டு போவோம்’ என்று எண்ணி அவசரமாக இலையெல்லாம் எடுத்து வெளியே குப்பைக் கூடையில் போட்டவள் கண்ணனைப் பார்த்தாள்

அவன் பசியோடு இவளை பரிதாபமாக பார்க்க “என்னடா.. சாப்பாடு தரலையா?” என்று கண்களாலேயே இவள் விசாரிக்க

  அவன் பார்வை போன இடம், கிரிஜாம்மா கொஞ்சி கொஞ்சி ஆசையாய் வளர்க்கும் டாபர்மேன் டைகரின் தட்டு

இவளுக்கு அதைப் பார்த்ததும் தான் ஞாபகம் வந்தது, இவளின் தட்டும் டாபர்மேனின் தட்டும் ஒண்ணு போல ஒரே மாதிரியான பீங்கான் தட்டுகள்

‘ஓ இதுக்கு தான் அப்படி அள்ளி அள்ளி வச்சாங்களா? இது தெரியாம நான் வேற லூசு மாதிரி ச்சே.. ஆனாலும் பாவம் புள்ள பசியோட இருக்கானே’னு மனதில் மறுகிப் போனாள்

கண்ணனைப் பார்த்தாள், பசியிலும் ஏமாற்றத்திலும் முகம் வாடிப் போய் இருந்தான். அப்படியே மரத்தடியிலே படுத்துக் கொண்டான். இவளுக்கு அழுகையாக வந்தது.

“ஏய்..சுந்தரி” என்று திரும்பவும் இவளை அந்தம்மா அழைக்க, உள்ளே போனாள்

“இந்தா இது நிறைய சோறு வச்சிருக்கேன், கறிக்குழம்பு சரியா தீர்ந்து போச்சு, அதனால ரசம் ஊத்தியிருக்கேன். மிளகு ரசம்டி, உடம்புக்கு நல்லது. ரெண்டு அவிச்ச முட்டையும் வச்சிருக்கேன், நீயும் உன் பிள்ளையும் நல்லா சாப்பிடுங்க”  தட்டை கையில் வைத்து விட்டு அவள் போய் விட்டாள்.

நடுங்கிய கைகளால் தட்டை பிடித்துக் கொண்டாள். கண்களில் கண்ணீர் பொங்கி, தட்டில் என்ன இருக்கிறதென்பதே தெரியாமல் கண்ணீர் மறைத்தது.

‘வெளியே ஆட்டுக்கறி சாப்பிட ஆசையோடும் பசியோடும் காத்துக் கொண்டு இருக்கும் என் பிள்ளைகிட்ட நான் என்ன சொல்லுவேன்’

அழுது கொண்டே வெளியே வந்தாள், கண்ணன் பசி மயக்கத்தில் தூங்கி விட்டான்

டைகரின் தட்டில் பாதிக்கு மேல் சாப்பாடும் கறித்துண்டுகளும் அப்படியே இருந்தது. அதைப் பார்த்ததும் அவளுக்கு இன்னும் அழுகை பொத்துக் கொண்டு வந்தது.

‘இந்த நாய்க்கு கிடைக்கும் பரிவு கூட ஒரு மனுசிக்கு இல்லையா..ஏன்?? நான் ஒரு ஏழை, காசு பணமில்லை. அதுக்காக இப்படியா என்னை என் மனசை என் உணர்வுகளை கசக்கிப் பிழிவாங்க?’

 தனக்குள் நொந்து நடக்க முடியாமல் நடந்து வந்து தூங்கிக் கொண்டு இருந்த கண்ணனை எழுப்பினாள்.

பாதி தூக்கத்தில் இருந்தவன் தட்டைப் பார்த்து விட்டு அவசரமாக ஆசையோடு எழுந்து உட்கார, மனதைக் கல்லாக்கிக் கொண்டு ரச சாதத்தையும் முட்டையையும் எடுத்து ஊட்டினாள்

“அம்மா… ஆட்டுக்கறி?” என்றவன், அழுது சிவந்திருந்த அவள் கண்களைப் பார்த்ததும் அந்த சிறுவனுக்கு என்ன புரிந்ததோ, “ஆட்டுக்கறி இல்லன்னா பரவாயில்லம்மா, இந்த சாப்பாடு கூட கிடைக்காம எத்தன பேர் பட்டினியா இருப்பாங்க. நீ அழாதம்மா, நான் படிச்சு பெரியவானாயி வேலைக்குப் போயி நெறய காசு சேர்க்கிறேன். அப்ப உனக்கும் எனக்கும் மட்டுமில்ல, நம்மள மாதிரி கஷ்டப்படுற நிறைய பேருக்கு நல்லா சாப்பாடு போடுவோம்மா” என்று அவளை ஆறுதல்படுத்த

“என் தங்கமே” என மகனைக் கட்டிக் கொண்டு ‘ஓ’வென்று அழுதாள் அவள்

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

 

Similar Posts

One thought on “ஆட்டுக்கறி (சிறுகதை) – ✍ சுபா செல்வகுமார்
  1. மனதை பிசைந்து ஏதோ செய்து விட்டது.ஆட்டுக்கறி சிறுகதை..என்ன ஒரு அழகான வறுமை எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.மனிதன் பசிக்கு உணவு இல்லை.நாய் உண்டு நிம்மதியாக உறங்கும் பணக்கார வர்க்க ஈவு இரக்கமற்ற மனித ஜென்மங்கள்..எத்துனை காலங்கள் ஆனாலும் இந்த நிலை மாறாதா என நினைத்து வேதனை பட வைக்கும் கதை கரு.சிறப்பாக எழுதியிருக்கிறார்.எழுத்தாளர்.பாராட்டுக்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!