in

ஆமென இணங்கி (பாகம் 2) – ராஷி ராய் (தமிழில் பாண்டியன் இராமையா)

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

எச்சரிக்கை:

இந்தப் புனைவு திருமண உறவின் துரோகத்தை உள்ளடக்கி எழுதப்பட்டது. அது தொடர்பான சிக்கல்களில் இருந்து மீண்டோரை இது துன்பப்படுத்தலாம். விருப்பமில்லாதவர்கள் தவிர்த்துவிடுவது நன்று. 18+

சிவம் மிகவும் மகிழ்ந்திருந்தார், ஏனென்றால் நான் கண்காட்சிக்கு சரியான நேரத்தில் அங்கு சென்றேன். மறுநாளே காலை சிற்றுண்டிக்குச் சந்தித்துக் கொண்டோம். ஒருவர் எனக்காகக் காத்திருப்பது இதுவே முதல் முறை. நான் சோர்வாக இருந்தாலும், ஜெட் லேக்-இல் தடுமாறினாலும், அந்த முழு நாளையும் அவருடன் கழிக்க விரும்பினேன்.

அவர் என்னைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார், அங்கு ஓவியங்களைத் தவிர நான் வேறு எதையும் காணவில்லை. அப்பப்பா! சுவர்கள், மேசைகள், படிக்கட்டுகள் அனைத்தும் அவரது புகைப்படங்கள் மற்றும் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. நான் வேறு ஒரு உலகத்தில் – முற்றிலும் அழகான ஒரு உலகத்தில் – நுழைந்தது போல் உணர்ந்தேன்.

கதவைத் தாழிட்ட அவர் எனக்குப் பின்னால் இருந்தவாறு என்னை அணைத்தார். அதுவே நான் பெற்ற இதமான, மிக நீண்ட அரவணைப்பு. நான் கண்ணீரில் இருந்தேன். என்னை அமரவைத்து என் கரங்களைப் பற்றினார்.

தலை கவிழ்ந்து அமர்ந்திருந்த நான் என் கரங்கள் அவருடைய கரங்களைப் பற்றியிருந்ததைக் கண்டேன் – அவை எப்பொழுதும் அப்படியே இருந்து கொண்டிருக்க வேண்டும் என்பது போல! நான் அவரைப் பார்த்தேன், நாங்கள் முன்பே சந்தித்திருக்க வேண்டும் என்று மறுகினேன். நான் என் விரல்களை அவனது செதுக்கப்பட்டது போன்ற முகத்தில் வருடி, அடர்ந்த கறுப்பு முடிக் கற்றைகளைக் கோதியவாறே, அவன் உதடுகளில் முத்தமிட முன்னோக்கி சாய்ந்தேன்.

பஞ்சணையில் வீழ்ந்த நாங்கள் மீண்டும் அணைத்துக் கொண்டோம். அவர் விரல்கள் என் முதுகில் பயணித்து என் இடை ஆடையின் நெகிழ்வில் ஓடின. நான் அவருடைய தொடுகையை உணர்ந்து அவரை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டேன். அவர் மென்மையாக அவர் என் உடல் முழுவதும் முத்தமிட்டார். நாங்கள் முன்பு எப்போதும் இல்லாத வகையில் காதல் செய்தோம்.

நான் கண்களைத் திறந்தபோது, என் வாழ்நாள் முழுவதும் நான் எதைத் தவற விட்டிருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். நான் நேசிக்கப்படுவதைத் தவற விட்டேன், நான் அக்கரை கொள்வதைத் தவற விட்டேன், மிகவும் மதிக்கத்தக்க மற்றும் சிறப்பானவளாக உணரப்படுவதை நான் தவறவிட்டேன். நான் அந்த மணித்துளிகளில் நிரந்தரமாக உறைந்துவிட விரும்பினேன். நான் இன்னொரு வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதை மறக்க விரும்பினேன்.

திடுமென, ரோஜா இதழ்கள் நிறைந்த கூடையை என் மீது கொட்டி, ரோஜா தின வாழ்த்துக்களைத் தெரிவித்தார்! கோட்டித்தனமான அவரது இந்த செய்கையில் நான் என்னைக் குழந்தையாக உணர்ந்தேன். நாங்கள் மனம் விட்டுச் சிரித்தோம்.

நாங்கள் முழு காதலர் வாரத்தையும் ஒருவருக்கொருவர் வேடிக்கையான பரிசுகளைப் பரிமாறிக் கொண்டாடினோம். நான் என்னை மீண்டும் ஒரு கல்லூரி மாணவியாக உணர்ந்தேன், என் வாழ்க்கையில் முதல்முறையாக காதலிக்கிறேனோ என மயங்கினேன்.

கண்காட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஆச்சரியப்படும் வகையில், எனது படைப்பிற்காக நான் நிறைய பாராட்டுக்களைப் பெற்றேன். நான் என் ஓவியங்களைக் காட்சிப்படுத்துவேன் என்று என் கனவிலும் நினைத்ததில்லை. என் கூட்டுக்குள் இருந்து என்னை வெளியே எடுத்து வெளி உலகத்தில் சிறகு படபடக்க பறக்க வைத்ததற்கு அவருக்கு நன்றி.

* * *

நான் நியூயார்க்கிற்குத் திரும்பிய பிறகு, நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருந்தோம்; இந்த நேரத்தில் நாங்கள் ஒருவரையொருவர் அதீத நேரங்களில் அதிக நேரம் வீடியோ அழைப்பில் இருந்தோம்.

நாட்கள் இப்படிக் கழிய, நாங்கள் இன்னும் ஆழமான அடர்த்தியான உரையாடல்களையும் நிகழ்த்த வேண்டும் என எங்கள் காலம் நினைத்திருக்க வேண்டும். அவரது பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினர், அதற்கு எனக்கு சம்மதமா எனக் கேட்டார்.

அவர் என்னை திருமணம் செய்து கொள்ள விரும்பியிருக்கிறார். நான் திகைத்துப் போனேன்; இதற்கு நான் தயாராக இல்லை, என் மனதில் ஆயிரம் கேள்விகள் எழுந்தன. நான் அவரைக் காதலித்தேனா? அவருக்காக எல்லாவற்றையும் விட்டு விடலாமா? அவர் எனக்காக காத்திருப்பாரா? நான் அவரை திருமணம் செய்து கொள்ளலாமா? என் குழந்தைகள் அவரை ஏற்றுக் கொள்வார்களா? அவர் பெற்றோர் என்னை ஏற்றுக் கொள்வார்களா? எல்லலாவற்றுக்கும் மேலாக,  இதற்கெல்லாம் நான் தயாரா?

நான் அவரை நேசித்தேன் – நிச்சயமாக! அநேகமாக நான் நேசித்த ஒரே மனிதர் அவர் மட்டுமே. ஆனால், எனக்கு மனஉறுதி இல்லை – எனது தற்போதைய வாழ்க்கையிலிருந்து விலகிச் செல்ல;  என் குழந்தைகளிடம் அவர்களின் வாழ்க்கை நிரந்தரமாக மாறும் என்று சொல்ல; அவர் மாதிரி யாரும் என்னை நேசிப்பதில்லை என்று தாயாரிடம் சொல்ல; அவர் என்னைத் தொட்டது போல் என் கணவர் தொடவில்லை என்று சொல்ல.

சமூகத்தின் எதிர்வினை, அவரது பெற்றோரின் எதிர்வினை, என் குடும்பத்தின் எதிர்வினைகளை நினைத்து நான் மருகினேன். நான் என்ன செய்ய விரும்புகிறேனோ அதைச் செய்ய போதுமான மனஉறுதி இல்லாத என்னைக் கண்டு நானே வருந்தினேன்.

ஏற்கனவே திருமணம் செய்து மற்றும் இரண்டு குழந்தைக்கும் தாயானவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பியதன் காரணமாக அவரது குடும்பத்தினர் கடும் சினத்தில் இருந்தனர். அவர் என் பெயரையோ என்னைப் பற்றிய குறிப்புகளையோ வெளிப்படுத்தவில்லை; அவரை நேசிப்பதால் நான் ஒருபோதும் சிக்கலில் சிக்கமாட்டேன் என்று அவர் வாக்குறுதியளித்திருந்தார்.

நான் எடுத்த முடிவு சரியானது என்பதை அந்த நிகழ்வு எனக்கு உணர்த்தியது. அவர் வாழ்க்கையை அழிக்க நான் யார்? அவர் ஒரு சிறந்த வாழ்க்கை துணையைத் தேர்ந்தெடுக்கத் தகுதியானவர் அல்லவா? நான் கட்டாயத் திருமணம் செய்து கொண்டது என் விதி.

அதே வேளையில், ஒரு தடவையாக இருந்தாலும் நான் அவரால் மிகவும் நேசிக்கப்பட்டிருக்கிறேன் என்பது என் பேறு.

நாங்கள் இருவரும் மிகுந்த அழுத்தத்தில் இருந்தோம், அது எங்கள் இருவருக்கிடையே இருந்த உறவையும் சிதைத்தது. அவர் தன்னுடைய வாழ்வில் தொடழ்ந்து பயணிக்க, இதை எங்காவது நிறுத்த வேண்டியிருந்தது. எதிர்காலம் இல்லா உறவில் என்னுடன் இணைந்து இருக்குமாறு அவரிடம் கேட்க எனக்கு உரிமை இல்லை. நாங்கள் இருவரும் பல மாதங்கள் அமைதியாக இருந்தோம். மனதளவில் அவர் காயமடைந்தார்; நான் நசுக்கிப் போடப்பட்டதுபோல உணர்ந்தேன்.

அவர் நியூயார்க்கில் ஆண்டு இறுதியில் தனது சகோதரியை மீண்டும் சந்தித்தார். இன்னொரு முறை சந்திக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன். நான் மன்னிப்பு கேட்க விரும்பினேன், நான் ஏன் பேசுவதைத் தவிர்த்தேன் என்று அவரிடம் சொல்ல விரும்பினேன். அவரும் ஒப்புக்கொண்டு, நாங்கள் சந்திக்க ஒரு அறைக்குப் பதிவு செய்தார்.

நான் செல்லும் வழியில், எங்களின் முந்தைய சந்திப்பு, அணைப்பு, முத்தங்கள் மற்றும் எங்கள் காதல் என எல்லாவற்றையும் நான் நினைவு கூர்ந்தேன். காலங்கள், நேரங்கள் மாறிவிட்டன என்பதையும், இந்த நேரத்தில் நாங்கள் அதுபோன்ற எதற்கும் சந்திக்கவில்லை என்பதையும் நான் உணர்ந்திருந்தேன்.

இப்படி எல்லாம் சொன்னாலும், நான் அவரை அறையில் பார்த்தபோது, அதுதான் அனைத்தும் என உணர்ந்தேன், அவர் என்னால் காதலிக்கப்பட்டவர். அணைப்பதற்காக மெதுவாக அவரை நோக்கி நகர்ந்தேன், ஆனால் இந்த முறை, அவரிடம் இருந்த இறுக்கம் அவருடைய அணைப்பிலும் பிரதிபலிந்தது.

என் விழிகள் கலங்கின; காதலும் கலந்ததாலோ என்னவோ என் கண்ணீரும் கரித்தது; நான் அவரை இழந்து விட்டேன் என்று எனக்குத் தெரியும். எந்த முடிவும் எடுக்க அவர் என்னை வற்புறுத்த விரும்பவில்லை. எனது கடந்தகால வாழ்க்கை என்னும் பொதிகளுடன் அவரது வாழ்க்கையில் நுழைய நான் விரும்பவில்லை.

எங்கள் இதயத்தின் ஆழத்தில் நாங்கள் ஆத்ம தோழர்கள் என்றும்; எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் நாங்கள் அறிந்தோம், ஆனால். ரூமி கூறியது போல், ‘காதலர்கள் எங்காவது இறுதியில் சந்திப்பவர்கள் இல்லை. அவர்கள் எல்லா நேரங்களிலும் ஒருவருக்கொருவர் உணர்ந்துகொண்டிருக்கின்றனர்.’ அவரவர் பாதைகளைப் பிரித்துக்கொண்டு நாங்கள் நண்பர்களாக இருக்க ஒப்புக்கொண்டோம், அமைதியாக!

அதிலிருந்து மூன்று வருடங்கள் ஓடிவிட்டன, இந்த ஆண்டுகளில் நிறைய மாறிவிட்டது, ஆனால் அவரது பெற்றோர்கள் இன்னும் அவருக்குச் சரியான பெண்ணைத் தேடுகிறார்கள். சில சமயங்களில், நான் அவரிடம் ‘ஆம்’ என்று சம்மதம் தெரிவித்திருந்தால், என் வாழ்க்கை எப்படி மாறியிருக்கும் என்று நான் கற்பனை செய்து பார்க்கிறேன். அவரை திருமணம் செய்வதிலிருந்து எது தடையாக இருக்கிறது என்று அறிய எனக்கு  வியப்பாக இருக்கிறது. நான் அவரை திருமணம் செய்யாமல் அவரது வாழ்வைக் காப்பாற்றினேனா அல்லது அதைக் கெடுத்தேனா? நான் ஒருபோதும் அறிய இயலாது.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

    அரிய பொக்கிஷம் (சிறுகதை) – சியாமளா வெங்கட்ராமன்

    கலைந்த மேகம் (சிறுகதை) – ராஜேஸ்வரி