in

ஆழியின் காதலி 💕(பகுதி 2) -✍விபா விஷா

ஆழியின் காதலி ❤ (பகுதி 2)

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

காருக்கு வெளியில் போக்குவரத்து நெரிசலால் இரைச்சல் இருந்த போதும், காருக்குள் பேரமைதி நிலவியது

வேலவமூர்த்தியின் பெயருக்கு பவர் எழுதி கொடுக்க வேண்டுமென அரன்வ் கூறியவுடன், எதோ யோசனையில் உழன்றவனாக மௌனமானான்

“என்ன விக்கி எப்பவும் எதாவது லொட லொடத்துட்டே வருவ? இப்ப என்னடானா ஒரே அமைதியா’ட்ட? வாட் ஐஸ் ஈட்டிங் யு மேன்?”  விக்ரமின் மௌனத்திற்கான காரணம் புரியாமல் கேட்டான் அர்னவ்.

“நத்திங் பாஸ்… இந்தக் கொரோனா பத்தி தான் யோசிச்சுட்டு இருக்கேன்” என்றான் விக்ரம்.

“அப்படி என்ன அது பத்தி இவ்வளவு சீரியஸா யோசிக்கற?” என சிறு புன்னகையுடன் அர்னவ் கேட்க 

“இப்ப இந்த கொரோனா வைரஸ் நம்ப உடம்புக்குள்ள போனா என்ன பண்ணும்? முதல்ல அது நம்ம உடம்புல ஏற்கனவே இருக்கற செல் மாதிரி தன்னை உருமாத்திக்கும். அதனால, நம்ம ரத்த வெள்ளை அணுக்களுக்கு அது வெளில இருந்து வந்து ஒரு புதிய வைரஸ்னு தெரியாது.

அதனால அத அழிக்கணும்னு நினைக்காது. ஆனா இந்தக் கொரோனா வைரஸ் ரத்த வெள்ளை அணுக்களைக் கொஞ்சம் கொஞ்சமா அழிச்சுக்கிட்டே தன்னை நகலெடுக்கவும் ஆரம்பிச்சுடும். அதனால என்ன ஆகும்? நம்ப உடம்போட எதிர்ப்புத்திறனும் குறைஞ்சுடும். அந்த வைரஸோட எண்ணிக்கையும் அதிகமாகிடும் இல்லையா” என்றான் விக்ரம்

“ஆமா அது எனக்கும் தெரியும், அதுக்கு என்ன இப்ப?” என்றான் அர்னவ் புரியாமல் 

‘ஹையோ இந்த மனுஷனுக்கு எப்படி சொல்லி புரிய வெக்கிறது’ என மனதிற்குள் புலம்பிய விக்ரம், “அது உங்களுக்குப் புருஞ்சுடுச்சா? அப்ப ஓகே பாஸ்” என பல்லைக் கடித்துக் கொண்டே கூறினான்.

“ஏன் விக்கி உனக்குத் தெரிஞ்ச யாருக்காவது கொரோனா வந்துடுச்சா?” என அர்னவ் கேட்க 

“ச்சே ச்சே… இல்ல பாஸ், உங்களுக்கு அந்த வைரஸ் பத்தி தெரிஞ்சுருக்கானு கேட்டேன், அவ்ளோ தான். ஆனா அந்த வைரஸ் மாதிரியே மனுஷங்கள்’லயும் நிறைய பேர் இருக்காங்க. நமக்கு நல்லது செய்ற மாதிரி நம்ம கூடவே இருந்துக்கிட்டு குழி தோண்டுவாங்க. அந்த மாறி ஆளுங்க நம்மகிட்ட வராம இருக்க ஒரு வேக்சின் கண்டுபிடிச்சாங்கன்னா நல்லாருக்கும்” என்றான் விக்ரம் பெருமூச்சுடன் 

“அதுக்குனு தனியா வேக்சின் வேணுமா என்ன? முகத்தைப் பார்த்ததும் அடையாளம் கண்டுபுடிக்க முடியாதா?” என அர்னவ் கேட்க 

‘ஆமாமா இவர் நல்லா அடையாளம் கண்டுப்புடிச்சுட்டார் போல’ என மனதிற்குள் நினைத்தவன்,  “உங்கள மாதிரி எல்லாரும் கண்ணுலயே ஸ்கேன் மெஷின் வச்சிருப்பாங்களா என்ன? ஹி ஹி…” என விக்ரம் சமாளிக்க, அர்னவ் மென்னகை புரிந்தான். (விக்ரம் மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டான்).

கார் நேராக அலுவலகத்தை அடைந்ததும் விக்ரமின் அலைபேசியில் அழைப்பு வந்தது. அர்னவிடம் முன்னே கூறியவன், அழைப்பை எடுத்தான் 

“ம்ம்… ம்ம்… அப்படியா? சந்தோசம். இந்த விஷயத்தை நீயே பாஸ்கிட்ட சொல்லிடு. ஆனா நான் உனக்கு மிஸ்டு கால் கொடுக்கறேன் அதுக்கு அப்பறம் சொல்லு” என்றதுடன் அழைப்பை துண்டித்தவன், அர்னவை பின் தொடர்ந்தான்.

#ad

             

         

லுவலகத்தில் வேலவமூர்த்தியும் ராகேஷும் ஒரு முறைக்கு நூறு முறை டாகுமெண்ட்ஸை சரி பார்த்துக் கொண்டிருந்தனர்

“அப்பா எனக்கு ஒண்ணு தான் இடிக்குது. அர்னவ் திரும்ப வரலைனா இந்த கம்பெனி உங்க கைக்கு வந்துடும், இதுக்கு நீங்களே பொறுப்பேத்துக்கலாம்னு போட்ருக்கீங்களே, அத அர்னவ் படிச்சுட்டா என்ன பண்றது?” என ராகேஷ் கேட்க 

“டேய் இது எவ்வளவு முக்கியமான டாக்குமெண்ட், இத எந்த முட்டாளாவது படிக்காம கையெழுத்து போடுவானா? ஆனா அந்த அர்னவ் போடுவான், ஏன்னா அவன் என்னை அந்த அளவுக்கு நம்பறான். அது மட்டுமில்லாம அவன் திரும்ப வரலைனா தான பிரச்சனையே? அவன் தான் திரும்ப வந்துடுவேன்னு அவ்வளவு நம்பிக்கையோட இருக்கானே?”  என்றார் வேலவமூர்த்தி

“அப்போ அர்னவ் திரும்ப வந்துடுவானா ப்பா?” என ராகேஷ் பாவமாய் கேட்க .

“ம்ம்.. வந்துடுவான். அவன் பேருக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு? அர்னவ்’னா ஆழிப் பெருங்கடல்னு அர்த்தம். அவன அந்தக் கடல் என்ன செய்யும்? ஆனா, அவன் திரும்பக் கரையில உயிரோட கால் வைக்க முடியாது,  நான் வெக்க விட மாட்டேன்” என்ற கணத்தில், வேலவமூர்த்தியின் முகத்தைப் பார்க்க ராகேஷுக்கே சற்று பயமாகத் தான் இருந்தது.

தே நேரம் அர்னவும், விக்ரமும் அந்த அறைக்குள் நுழைய, தந்தையும் மகனும் பேச்சை மாற்றினர்

“வா அர்னவ்… உனக்காகத் தான் காத்துட்டு இருந்தோம். இதோ நீ கேட்ட டாக்குமெண்ட்ஸ், எல்லாம் ரெடியா இருக்கு. நீ கையெழுத்துப் போடறது மட்டும் தான் பாக்கி” என ராகேஷ் சொல்லி முடிப்பதற்குள், அர்னவின் செல்பேசி சிணுங்க, அதை எடுத்து பேசியவனின் முகமலர் விரிந்தது

“அங்கிள், விக்கி.. நம்ம கப்பல் எந்த இடத்துல காணாம போச்சுனு எக்ஸாக்ட் ஸ்பாட் தெரிஞ்சுடுச்சு. நம்ம ராம் தான் இப்போ கால் பண்ணினான். இத்தனை நாளா தேடிட்டு இருந்தவங்களுக்கு இன்னைக்குத் தான் தெரிஞ்சுருக்கு. வா விக்கி உடனே நம்ப ரிசெர்ச் ஆபீஸுக்கு போலாம்” என அர்னவ் மகிழ்வுடன், விக்ரம்  மற்ற இருவரையும் திரும்பிப் பார்த்து நக்கலுடன் சிரித்து விட்டு கிளம்பினான்.

அவர்கள் அங்கிருந்து கிளம்பியதும் ராகேஷ் கோபத்தில் கத்திக் கொண்டிருக்க, வேலவமூர்த்தி அமைதியாக யோசித்துக் கொண்டிருந்தார்.

“என்னப்பா கடைசி நேரத்துல அவன் கையெழுத்து போடாம கிளம்பிட்டானேனு நான் இவ்வளவு கோபத்துல இருக்கேன். நீங்க இப்படி அமைதியா கண்ணை மூடி ரிலாக்ஸா உட்காந்துட்டு இருக்கீங்க?” என ராகேஷ் கோபமாய் கேட்க 

“அர்னவ் சாகறதுக்கு முன்னாடி விக்ரம் சாகறதுக்கு என்ன வழினு யோசிச்சுட்டு இருக்கேன்” என வேலவமூர்த்தி கூற, திடுக்கிட்டான் ராகேஷ்

“என்னது விக்ரம் சாகணுமா? எதுக்கு? ஏன்?” என்றான் புரியாமல்

“நீ எதைத்தான் முழுசா கவனிச்சுருக்க? அந்தக் கால் வர்றதுக்கு முன்ன விக்ரம் அவன் போன எடுத்து ஏதோ நோண்டினான். அதுக்கு அப்பறம் தான் அர்னவுக்கு கால் வந்துச்சு. அதுமட்டுமில்லாம அவன் வெளில போறப்ப நம்மள பாத்து ஒரு சிரிப்பு சிரிச்சான் பார்த்தியா? அதுலயே அவன் தான் இத செஞ்சதுனு எனக்குத் தெரிஞ்சுடுச்சு. அந்த விக்ரமுக்கு முன்னாடியே இந்த விஷயம் தெரிஞ்சுருக்கணும். ஆனா சரியா இந்த நேரம் பார்த்து அர்னவோட கவனத்தைக் கலைக்கறதுக்காக இந்த நேரத்துல சொல்ல சொல்லிருக்கான்.

இதுக்கு முன்னாடி அர்னவ முடிக்கற விஷயத்துல அந்த விக்ரம் நடுவுல புகுந்து குழப்பி இருக்கான். அதெல்லாம் ஏதோ எதேச்சையா நடந்திருச்சுனு நினைச்சேன். ஆனா இப்போ அவன் சிரிச்ச சிரிப்புல, அவனுக்கு நம்ம மேல சந்தேகம் வந்துடுச்சுனு நல்லா புரிஞ்சுது. அதான் விக்ரம முதல்ல முடிக்கலாமானு யோசிக்கறேன்” என்றார் வேலவமூர்த்தி

“அப்பா வேணாம். அர்னவ் கூட விக்ரம் இருந்தால் விக்ரமாதித்திய மகாராஜாவுக்கு, பட்டி துணை இருக்கற மாதிரினு எனக்கு தோணுது. ஆனா, இந்தக் கடல் ஆராய்ச்சிக்கு விக்ரமோட துணை கண்டிப்பா அர்னவுக்கு வேணும். அவங்க ஆராய்ச்சி பண்ணி அந்த கிரீடத்தை எடுத்துட்டு வந்ததுக்கு அப்புறம் நாம அவங்க ரெண்டு பேரையும் ஒண்ணா முடிச்சிடலாம்” என்றான் ராகேஷ்

“உனக்குக் கூழுக்கும் ஆசை, மீசைக்கு ஆசை இல்ல?” என வேலவமூர்த்திச் சிரிக்கவும் 

“ஹி ஹி… நான் உங்க பையன் இல்லயா’ப்பா?” என பெருமையாய் உரைத்தான் ராகேஷ் 

ங்குத் தலைமை ஆராய்ச்சியகத்தில்…

“கடலுக்குள்ள ஒரு 1500 நாட்டிக்கல் தொலைவுல, ஒரு தனித்து விடப்பட்ட தீவு இருக்கு. அந்தத் தீவுக்கு ஒரு 15 நாட்டிக்கல் பக்கத்துல தான் நம்ம கப்பல் காணாம போயிருக்கு” என ராம் கூற 

“அந்தத் தீவுல யாராவது இருக்காங்களா? அது எந்த நாட்டோட தீவு?” எனக் கேட்டான் அர்னவ்

“அது நம்ம நாட்டுக்குச் சொந்தமான தீவு தான். ஆனா அங்க யாரும் இருப்பதற்கான அடையாளம் இல்லை. அதே சமயம் அங்க போனவங்க யாரும் திரும்பி வந்ததுக்கான சான்றும் இல்ல” என ராம் கூறி, அதிர்ச்சியுடன் திரும்பினான் விக்ரம்

“அந்தத் தீவு பேரு என்ன சொன்னீங்க?” என விக்ரம் கேட்க 

“நான் இன்னும் சொல்லலயே சார்” என்றார் ராம் 

“மனசுல பெரிய சாமி பட விக்ரம்னு நினைப்பு, என்கிட்டயேவா? இந்த லொள்ளுலாம் வேண்டாம்” என்றான் விக்ரம் கடுப்பாய் 

“சாரி சார்… அந்தத் தீவு பேர் அம்பரத் தீவு” என்றதும், தூக்கிவாரிப் போட்டது விக்ரமிற்கு

விக்ரமின் அதிர்வை மனதில் குறித்துக் கொண்ட அர்னவ், அந்த ராமிடம் மற்ற விவரங்களை சேகரிக்கும்படி பணித்து விட்டு விக்ரமை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான்.

“என்னாச்சு விக்ரம்? கடலுக்குள்ள போகப் போறோம்னு சொன்னதும் சந்தோஷத்துல அந்தக் குதி குதிச்ச? இப்ப அந்தத் தீவுக்குப் போனவங்க யாரும் திரும்பி வந்தது இல்லனு தெரிஞ்சதும் பல்பு பியூஸ் போயிடுச்சா?” என அவன் பாணியிலேயே வினவ, விக்ரமிற்குச் சிரிப்பு வந்து விட்டது.

“அது இல்ல பாஸ் அந்தத் தீவு பத்தி என் தாத்தா சொல்லிருக்காரு” என்றான் விக்ரம்

“என்னடா நீ… தாத்தா, பாட்டி கதை எல்லாம் சொல்லிட்டு இருக்க? கொஞ்சம் புரியற மாதிரி சொல்லு” என சீரியஸாக வினவினான் அர்னவ் 

“என் தாத்தா என்னோட சின்ன வயசுல ஒரு குட்டி புத்தகம் படிச்சுட்டுருப்பார். அதுல என்ன தாத்தா இருக்குனு கேட்டதுக்கு, இது அம்பரத் தீவு பற்றிய கதைனு சொன்னார்

அம்பரம் னா என்ன தாத்தானு கேட்டதுக்கு, அப்படினா ஆகாயம், கடல்னு அர்த்தம் சொன்னார்.

அதெப்படி தாத்தா ஒரே சொல்லுக்கு ரெண்டு பொருள் இருக்கும்? அது மட்டுமில்லாம ரெண்டும் எதிரெதிர் துருவம் மாதிரி இருக்கு? ஆகாயம் மேல இருக்கறது,கடல் கீழ இருக்கறது, ரெண்டுக்கும் ஒரே வார்த்தையா குழப்பமா இருக்குனு சொன்னேன்

எல்லாக் குழப்பத்துக்கும் உனக்கு விடை கிடைக்கும் ஆனா இப்ப இல்ல, நீ பெருசானத்துக்கு அப்பறம்னு சொன்னார். அது மட்டுமில்லாம, அந்தத் தீவுக்கு ஒரு சாபமிருக்கு, அது ஒரு அபூர்வ மனுஷன் மூலமா தீரும்.

அவன் சிவபெருமான் மாதிரி அழிக்கும் சக்தியும் கொண்டிருப்பான், விஷ்ணு மாதிரி காக்கும் சக்தியும் கொண்டிருப்பான். அவனுக்கு நீ உதவியா இருப்பேன்னு சொன்னார்.

நான் அப்ப அவர் ஏதோ வயசான காலத்துல உளர்றாருனு நினைச்சேன். ஆனா அதே பேர்ல நிஜமாவே ஒரு தீவு இருக்கு, அதுவும் இத்தனை நாளா அந்தத் தீவு பத்தி யாருக்கும் தெரியல பாருங்களேன்” என்றான் விக்ரம் ஆச்சர்யம் மேலிட 

“டேய் உனக்கு அங்க வர்றதுக்கு பயமா இருக்குன்னா நேரா சொல்லிடு. ஆனா இந்த மாதிரி காக்கா வடை சுட்ட கதை எல்லாம் என்கிட்ட சுடாத. யார் வந்தாலும் வரலைனாலும் நான் அங்க போகத் தான் போறேன்” என அர்னவ் உறுதியாய் கூற 

“இங்க பாருங்க பாஸ், நான் உங்கள அங்க போக வேணாம்னு சொல்லல. ஆனா அங்க ஏதோ மர்மம் இருக்குனு சொல்றேன்” என்றான் விக்ரம்

“அது எப்படி மர்மம் இருக்குனு சொல்ற? அந்தக் காலத்துலயே இப்படி ஒரு தீவு இருக்குனு தெரிஞ்ச ஆளு அந்தப் புக்க எழுதி இருக்கலாம் இல்லையா?” என அர்னவ் கேட்க 

“இருக்கலாம், ஆனா அத ஏன் என் தாத்தா நான் அங்க போவேன்னு அவ்வளவே உறுதியா சொல்லணும்? அதுமட்டும் இல்லாம, மீன் மச்சம் இருக்கற ஒருத்தனால தான் அந்தத் தீவோட சாபம் தீரும்னும் சொன்னார்” என்றான் விக்ரம்.

“என்னது மீன் மச்சமா? என்ன அது? யாருக்கு இருக்காம்?” எனக் கொஞ்சம் பரபரப்புடன் அர்னவ் வினவ

“அது என்னனு முழுசா எனக்கு ஞாபகம் இல்ல பாஸ். ஆனா, அந்த மீன் மச்சம் இருக்கறவன் தான் அந்தக் கடவுள் அம்சம். அவன் மூலமா தான் அந்தத் தீவோட சாபம் தீரப் போகுதுனு சொல்லிட்டு இருந்தார்.

என் அப்பா கூட ‘ஏன் ப்பா இப்படிக் கண்ட புத்தகத்தைப் படிச்சுட்டு உளறிட்டு இருக்கீங்க’னு கேட்டார்.

அதுக்கு அவர் ‘இப்ப உனக்குப் புரியாது டா எல்லாம் நடந்து முடிஞ்சதும் தான் உனக்குப் புரியும். ஆனா அப்போ நான் உயிரோட இருக்க மாட்டேன்’னு சொன்னார்” என்றான் விக்ரம்.

“இப்ப உங்க தாத்தா உயிரோட இருக்காரா?” என அர்னவ் கேட்க 

“ஆமா பாஸ், ஆனா படுத்த படுக்கையா இருக்கார். ஸ்ட்ரோக் வந்து ரொம்ப வருஷம் ஆச்சு.” என விக்ரம் கூற, யோசனையில் ஆழ்ந்தான் அர்னவ்.

அவன் யோசனையைக் கலைக்கும் விதமாக அங்கு வேலவமூர்த்தியும், ராகேஷும்  வந்தனர்

“என்ன விஷயம் அர்னவ்? அவசரமா ரிசெர்ச் ஆபீஸ் போகணும்னு வந்தீங்க, இங்க வந்து பார்த்தா சும்மா வெளில நின்னு பேசிட்டு இருக்கீங்க?” என ராகேஷ் வினவ, ஏதோ கூறி சமாளித்தனர் இருவரும்.

ஏனோ, விக்ரம் கூறிய விஷயங்கள் வேறு யாருக்கும் தெரிய வேண்டாமென அர்னவ் நினைத்தான்

“அப்ப அந்த டாக்குமெண்ட்ஸ்ல கையெழுத்து போட்டுட்டு போய்டலாம்ல அர்னவ்?” என ராகேஷ் ஆர்வத்துடன் கேட்க 

“பவர் ஆப் அட்டர்னியா, அதுக்கு என்ன அவசியம்?” என விக்ரம் கேட்க 

“அதுக்கு என்ன அவசரமா? அதான் அந்தத் தீவு எங்க இருக்குனு தெரிஞ்சுடுச்சுல, அப்ப உடனே அங்க கிளம்பனும்னு அர்னவ் நினைக்க மாட்டானா? அதனால தான் உடனே இந்த வேலைய முதல்ல முடிச்சிடலாம்னு சொன்னேன்” என சமாளித்தான் ராகேஷ்

“நான் அதுக்கென்ன அவசரம்னு கேக்கல, அதுக்கென்ன அவசியம்னு கேட்டேன். ஏற்கனவே உன் அப்பா போர்டு மெம்பெர், இதுல எதுக்குப் பவர் வேற தனியா எழுதி குடுக்கணும். அதுக்கு வேற ஒரு நேரம் உட்கார்ந்து டைம் வேஸ்ட் பண்ணனும்” என விக்ரம் கேட்க 

ஏற்கனவே குழப்பத்திலிருந்த அர்னவ், “அதுவும் சரி தான்… நம்ம ஷிப் ரெடியா இருக்கானு பார்த்துட்டு நான் கிளம்ப வேண்டிய ஏற்பாடுகளைப் பாக்க போறேன்” என அங்கிருந்து கிளம்பினான் 

அவன் கிளம்பியதும், பார்வையிலேயே பஸ்பமாக்கி விடுவது போல் விக்ரமை பார்த்தனர் தந்தையும் தனையனும்

அவர்களை நோக்கி அதே நக்கல் சிரிப்பை உதிர்த்து விட்டு நகர்ந்தான் விக்ரம்.

ஆர்வத்துடனும் ஆர்ப்பரிக்கும் மனதுடனும் விக்ரம் அர்னவ் இருவரும் கடல் பயணம் மேற்கொள்ள புறப்பட்டுக் கொண்டிருக்க, அங்கே கடலுக்குள் அர்னவின் வருகைக்காகக் கையில் இந்திராயுதத்துடன் காத்திருந்தாள் நங்கை ஒருத்தி

#ad

              

                  

(தொடரும்… வெள்ளி தோறும்)

இந்த இணையத்தளத்தில் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய அணுகலாம்👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சிறகதனை விரித்து (ஓவியம்) – நந்தினி பாலகிருஷ்ணன் (கல்லூரி மாணவி)

    காலத்துக்கும் வாழ்த்துமய்யா எம் மனசு (கவிதை) – ✍தமிழ் முகில் பிரகாசம்