in

ஆழியின் காதலி ❤ (பகுதி 15) -✍ விபா விஷா

ஆழியின் காதலி ❤ (பகுதி 15)

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

யாகரர் கூறியதைக் கேட்ட அர்னவுக்குத் தான், இப்பொழுது தலை கிறுகிறுவெனச் சுழன்றது

‘ஒருத்தன் என்னடான்னா கேள்வி கேட்டே கொல்றான். இவரு என்னடான்னா விளக்கம் சொல்லியே கொல்றாரு. இதுல சமுத்திரா வேற, பயமுறுத்தி பயமுறுத்தியே உயிரோட கொல்றா. இதுல என் காதலிகிட்டயாவது அன்பு கிடைக்கும்னு பார்த்தா, அவ எப்பப் பாரு வேப்பங்காயத் தின்ன வெள்ளக் கொரங்கு மாதிரியே மூஞ்சிய வச்சுக்கிட்டு பதில் சொல்லாம கொல்றா. ஆனா ஒண்ணுடா சூனாபானா, உன்ன யாரவது கொல்லப் போறது மட்டும் உறுதி.. உறுதியோ உறுதி’ என மனதினுள் அர்னவ் எண்ணிக் கொண்டிருக்க

அவனது சிந்தையைக் களைத்த  சாமினி, “அடடே.. என்ன ருத்ர தேவரே? தங்கள் இன்னும் முதல் பூசைக்குத் தயாராகவில்லையா?”என்றாள்

“அதென்ன முதல் பூஜை? அதுக்குள்ளயா?” என அர்னவ் கேட்டதும்

அவனை ஏற இறங்க பார்த்தவள்,  “முதல் பூஜை என்றால், இன்று முதலே நமது நோன்பு துவங்கும். அதற்காக இறைவனின் ஆசிர்வாதத்தினைப் பெறவே இந்த முதல் பூஜை” எனவும், யோசனையின் ஊடே  தயாராகி வந்தான் அர்னவ் 

அனைவரும் ஓம்கார வனத்திற்குள் செல்ல, இம்முறையும் அர்னவும் விக்ரம் தனித் தனியாகச் செல்ல, பழையபடியே வெளியே தூக்கி எறியப்பட்டனர்

“வேற வழி இல்ல பாஸ், நீங்க காலம் பூராவும் என் கையத் தான் பிடிக்கணும். கவலைப்படாதீங்க, கடைசி வரைக்கும் உங்கள நான் கைவிட மாட்டேன். எப்பாடு பட்டாவது உங்கள கண் கலங்காம பாத்துக்கறேன்” என நக்கலடித்தான் விக்ரம்

இவ்வாறு விக்ரம் கூறியதும் கடுப்பான அர்னவ்..”நேரம்டா நேரம்.. உன்கிட்ட எல்லாம் கலாய் வாங்க வேண்டிருக்கு” என்றான்.

“ஆமாம் பாஸ்.. நீங்க பிறந்த நேரம் தான் எல்லாத்துக்கும் காரணம்” என்று மேலும் காலை வாரினான் 

“ஐயா மூப்பரே… ஏதாவது மந்திரம் கிந்திரம் போட்டு இவனோட வாயக் கட்டுங்க” என அர்னவ் கூறவும், அவனை முறைத்துக் கொண்டு வாயை மூடினான் விக்ரம்

இதையெல்லாம் பார்த்து அனைவரும் சிறு நமட்டுச் சிரிப்புடன் கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

விரைவாகக் கோவிலுக்குச் சென்று, மணம் கொண்ட மலர்களால் சிவனுக்கு அர்ச்சித்து மனதார வழிபட்டு விட்டு வந்தனர்

அனைவரும் மீண்டும் கடற்கரை வந்தடைந்ததும், அர்னவ் தன் திட்டம் தீட்டுதலைத் தொடர்ந்தான். அதாவது மூப்பர் அந்த மகுடத்தினை எடுக்கும் முறையைக் கூறியதும், அதற்கான வழியைத் திட்டமிடலானான்

ஏனென்றால், செல்லும் வழியெங்கும் அந்தச் சமுத்திராவிடம் சண்டையிட்டுக் கொண்டே சென்று, அந்த மகுடத்தினை அடைவது கடினம். அதுவும் விடிவதற்குள் எடுத்து வருவதென்பது மிகக் கடினமான காரியம் என்பதால், அதற்கென ஒரு திட்டத்தினை வகுத்தான்

“விக்ரம்… அந்தக் கிரீடத்தை எடுக்க உன்னோட உதவி தான் எனக்கு முக்கியமா தேவைப்படுது. ஏன்னா, அந்தச் சமுத்திராவை என்னால மட்டும் தான் அழிக்க முடியும். அதே சமயம், அந்தக் கிரீடத்தை எடுக்கப் போகும் போது சமுத்திராவை சமாளிச்சுட்டு என்னால மகுடத்தையும் தேடித் திரிய முடியாது. அதனால நீ தான் அந்தக் கிரீடத்தைத் தேடிப் போகணும், அந்த சமயத்துல நான் சமுத்திராவ சமாளிச்சுக்கறேன்”என அர்னவ் கூற, பயத்தினால் வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டை உருண்டது விக்ரமிற்கு

இருந்தாலும், சிறு யோசனைக்குப் பின், “சரி பாஸ்.. நான் செய்றேன்” என விக்ரம் கூறியதும், அங்கிருந்த அனைவரும் ஆனந்தப் பெருக்கில் திளைத்தனர். அதிலும் கயாவிற்குக் கண்ணீரே வந்து விட்டது

உடனே சாமினி, “மிக்க நன்றி விக்ரமரே… இந்த உதவி செய்யும் உங்களை எங்கள் இனம் என்றும் மறக்காது. உங்களை ருத்ர தேவரின் இடத்திற்கு உயர்த்தியே  நாங்கள் வழிபடுவோம்” என உணர்ச்சிப் பெருக்கில் கூறியதும்

 பதறிய விக்ரம், “ஹேய் என்ன சாமினி, நான் வெறுமனே அந்தக் கிரீடத்தைத் தேடி எடுக்கத் தான் போறேன். ஆனா பாஸ் தான் அந்தச் சமுத்திராவ எதிர்த்து நின்னு சண்டையிடப் போறாங்க. அதனால அவரு தான் உயர்ந்தவர்” என்றான் 

“இல்ல விக்கி, நான் இந்தத் தீவுக்கு இவ்ளோ தைரியமா வந்ததுக்கு காரணம் நீதான். நீ இல்லனா, என்னால ஓம்கார வனத்தையும் கண்டுபிடிச்சுருக்க முடியாது, என்னோட வாழ்க்கையோட முழு அர்த்தமும் புரிஞ்சுருக்காது” என்று கூறிக் கொண்டே வந்தவன், இறுதி வரியை மட்டும் சாமினியைப் பார்த்துச் சொன்னான்

அதைக் கண்டும் காணாதது போல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள் சாமினி

அப்பொழுது பேசிய குருநாதன், “அப்படி இல்ல அர்னவ், நீங்க ரெண்டு பேருமே ஒருத்தருக்கு ஒருத்தர் ரொம்ப முக்கியம். உங்க ரெண்டு பேருல ஒருத்தர் இல்லாட்டியும் இப்போ நடந்துருக்கற எந்த விஷயமும் சாத்தியமில்லை. அதே மாதிரி நீங்க ரெண்டு பெரும் ஒண்ணா சேர்ந்து தான் அந்தச் சமுத்திராவையும் அழிச்சு அந்த மகுடத்தையும் கைப்பற்ற முடியும். நீங்க அந்த கிரீடத்தை மீட்டுட்டு வர்றதுக்குள்ள, நான் நம்ம கப்பலை சரி பண்ணிடுவேன். அது மேஜர் இஸ்யு எல்லாம் இல்ல. அதனால் எல்லாமே பாஸிட்டிவா நடக்கும் அப்படிங்கற நம்பிக்கையோட இருங்க” என அவர் கூறி முடிக்கையில், அங்கிருந்த அனைவருக்குமே மனதில் நம்பிக்கை துளிர் விட்டது.

“கண்டிப்பா எல்லாமே நல்லதா தான் முடியும்னு எனக்கு நம்பிக்கையிருக்கு சார். ஆனா கடலுக்குள்ள போறதுக்கு நம்ம ஆக்சிஜன் சிலிண்டர் எல்லாம் போட்டுட்டு போனாலும், அதெல்லாம் நம்ம கட்டுப்பாடுல இருக்குமானு தெரியல. அதுக்குத் தான் என்ன பண்றதுன்னு தெரியல” என்று யோசனையாகக் கூறினான் அர்னவ்

அதைக் கேட்ட இளந்திரையன், “உங்களுக்கென்ன? நீங்களும் எங்களைப் போலக் கடலினுள் எவ்வித சிரமமும் இல்லாமல், எவ்வித உபகரணமும் இல்லாமல் சுவாசிக்க வேண்டும், அது தானே?” என வினவ, ‘ஆமாம்’ என அர்னவும் விக்ரமும் தலையசைத்தனர் 

“அதற்கான உபாயம் எல்லாளனிடம் இருக்கிறதே” என இளந்திரையன் கூற, அனைவரும் எல்லாளனைப் பார்த்தனர்

“கடலினுள் மனிதர்களும் சுவாசிக்க முடியும், அதற்கான வித்தை எல்லாளனுக்குத் தெரியும்” என இளந்திரையன் கூறியதும், அனைவரின் பார்வையும் எல்லாளின் மீது பதிந்தது.

அனைவரது விழிகளும் எழுப்பிய வினாவிற்கு விடையளிக்க முன் வந்தான் எல்லாளன்.

“பண்டைய காலங்களில் கடலினுள் மூச்சடக்கி முத்து குளித்த முறையைப் பற்றி அறிந்திருக்கிறீரா? அன்று பெரும்பாலும் பெண்களே முத்துக் குளிக்கச் சென்றனர். அவர்களே செய்திருக்கும் பொழுது பெண்களை விட உடல் வலிவு மிகுந்த ஆண்கள் கடலினுள் மூச்சடக்குவது என்பது பெரிய காரியமல்ல. 

ஆனால் ஒன்று, உங்களுக்கு தீய பழக்கங்கள், அதாவது சோம பானம் உபயோகித்தல், புகை பிடித்தல், மதிமயக்கி மூலிகை உட்கொள்ளுதல் போன்றவை இருந்தால், நீங்கள் கடலினுள் மூச்சடக்கி இருப்பது இயலாத காரியம்” என எல்லாளன் கூறியதும்

“சோம பானம்’னா, சரக்கு, புகை பிடித்தல்’னா சிகரெட், ஆனா இந்த மதிமயக்கி மூலிகைனா என்னனு தெரியலையே பாஸ்” என விக்ரம் அர்னவின் காதைக் கடிக்க 

“மதி மயக்கி மூலிகைனா, இந்த கஞ்சா ட்ரக்ஸ் அந்த மாதிரிடா கொஸ்டின் குமாரு. அதுமட்டுமில்லாம நீ அடுத்து கேக்கப் போற கேள்விக்கும் இப்பவே நான் பதில் சொல்லிடறேன். இந்த மாதிரி கெட்ட பழக்கங்களால நம்மளோட உள்ளுறுப்பு அதிக பாதிப்பு அடைஞ்சிருக்கும். கடலுக்குள்ள மூச்ச கட்றது சும்மா கிணத்துக்குள்ள பத்து எண்ணுற வரைக்கும் தண்ணிக்குள்ள இருக்கறது இல்ல. இந்தியப் பெருங்கடலோட ஆழம் என்னனு தெரியுமா? 23000 அடிக்கு மேல, அதுல நாம கடல் தண்ணியோட மொத்த அழுத்தத்தையும் தாங்கிகிட்டு மூச்சை கட்டி இருக்கணும்.

அதுவும் சும்மா இல்ல தம்பி, அந்தச் சமுத்திராகிட்ட சண்டை போட்டு அவளை அழிக்கணும். இதெல்லாம் வெறும் இந்த மாதிரி கெட்ட பழக்கங்கள் இல்லாம இருந்தா நடந்துடுமானு நீ கேட்கறது புரியுது. ஆனா கெட்டப் பழக்கம் இல்லாட்டி நாம கடல்ல மூச்சை கட்டுறது கொஞ்சம் ஈஸியா இருக்கும் புரியுதா…” என விளக்கமாய் கூறி முடித்தான் அர்னவ் 

“ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பாஆஆஆஆ… இப்பவே கண்ணக் கட்டுதே. ஒரே கேள்வி தான கேட்டேன், அதுக்கு இம்புட்டு பெரிய விளக்கமா?” என்றவாறு அர்னவைப் பார்த்தான் விக்ரம்

‘மவனே நீ கேள்வியா கேட்டுக் கொல்லும் போது எங்களுக்கும் இப்படித் தான இருந்துருக்கும்?’ என மனதிற்குள் நினைத்துக் கொண்டான் அர்னவ் 

அவர்கள் இருவரும் தங்களுக்குள்ளே கிசுகிசுக்கவும், சிறிது சந்தேகம் எட்டிப் பார்த்தது எல்லாளனுக்கு

“என்ன ருத்திர தேவரே, விக்ரமர் என்ன கூறுகிறார்? தங்கள் இருவருக்கும் அது போன்ற எவ்வித தீய பழக்கங்களும் இல்லை தானே?” என எல்லாளன் வினவவும்

“ச்சே ச்சே, எங்களுக்கு எந்தக் கெட்டப் பழக்கமும் இல்ல. இன்னும் சொல்லப் போனா நாங்க மூச்சுப் பயிற்சி எல்லாம் கூடச் செய்வோம்” என விக்ரம் பெருமைப் பீற்றிக் கொள்ள, அர்னவ் அவனை ஒரு மார்க்கமாய் பார்த்தான் 

அதைக் கண்டு சிரிக்க ஆரம்பித்த எல்லாளன், அருகில் இருந்த கயாவை பார்த்து, பொங்கி வரும் சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டான். விக்ரமிற்கு பரிந்து அவள் பேசும் சொற்பொழிவை கேட்க நேருமே என்ற பயம் தான்

#ad

      

        

#ad ‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அறம் செய விரும்பு (சிறுவர் கதை) – ✍ ஞானம் பிரகாசம்

    உயர்ந்தவர்கள் (சிறுகதை) – ✍ பெருமாள் நல்லமுத்து