in

ஆழியின் காதலி ❤ (பகுதி 14) -✍ விபா விஷா

ஆழியின் காதலி ❤ (பகுதி 14)

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“ஆமா அர்னவ் கொஞ்சம் டயர்ட் தான், நான் அப்பறமா உன்கிட்ட மத்த விஷயத்தை எல்லாம் சொல்றேன்” என்ற குருநாதன், அங்கிருந்து செல்லும் முன், விக்ரமை ஒரு அர்த்தப் பார்வை பார்த்தார் 

அதைப் புரிந்த கொண்ட விக்ரம், லேசாகத் தலையசைக்க, அவர் அங்கிருந்து கிளம்பிய பத்து நிமிஷத்தில், அவர் முன் நின்றான் விக்ரம்

“நான் உன்கிட்ட என்ன கேக்க போறேன்னு உனக்கே தெரியும்னு நினைக்கறேன்” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார் குருநாதன்

“எனக்குத் தெரியும் சார். அந்த வேலவமூர்த்தியும் ராகேஷும் சேர்ந்து தான் உங்கள கொல்ல முயற்சி செஞ்சாங்கனு நல்லா தெரிஞ்சுருந்தும் கூட, ஏன் அர்னவ்கிட்ட உண்மைய சொல்ல வேண்டாம்னு சொன்னேன்னு தான கேக்க போறீங்க?” என விக்ரம் வினவ

“ஆமா” என தலையசைத்தார் குருநாதன்

“அது ஏன்னா, உங்ககிட்ட அவங்க தான் அதை செஞ்சாங்க அப்டிங்கறதுக்கு எந்த ஆதாரமும் இல்லனு எனக்குத் தெரியும். ஆதாரம் இல்லாம, அந்தக் கடவுளே வந்து வேலவமூர்த்தி மேலயும், ராகேஷ் மேலும் குற்றம் சொன்னாலும் அர்னவ் அதை நம்ப மாட்டார்னு எனக்கு நல்லாவே தெரியும். இதுக்கு முன்னாடி, ஆதாரம் இல்லாம அவங்க மேல குற்றம் சுமத்துனவங்கள இவர் எவ்வளோ வெறுத்தார்னு கண்ணால பார்த்தவன் நான்” என்று விக்ரம் கூறியதும், அதிர்ந்து நோக்கிய குருநாதனிடம், மேலும் சில விவரங்கள் கூறலானான் விக்ரம்

“ஆமா சார் அப்போ திவாகர் சார்… அதான் பாஸோட அப்பா, அவர் இறந்த புதுசுல நடந்த விஷயம் இது. அவர் அப்பா தான் சாகறதுக்கு முன்னாடியே பாஸுக்கு நிச்சயம் பண்ணின பொண்ணு யமுனா. கொஞ்ச நாளுலேயே அந்தப் பொண்ணு ராகேஷ் பத்தி தெரிஞ்சுக்கிட்டா. அவ தெரிஞ்சுக்கிட்ட விஷயத்தை அர்னவ்கிட்ட சொன்னப்ப, அவளைக் கேவலமாக ஓர் பார்வை பார்த்துட்டு, 

‘உன்கிட்ட எந்த ஆதாரமும் இல்லை தான’னு கேட்டார்

அந்தப் பெண்ணும் இல்லைனு சொல்ல ‘அப்படின்னா உனக்கும் இந்த வீட்டுல இடம் இல்ல வெளில போ, இதோட எல்லா விஷயமும் முடிஞ்சு போச்சு’னு கத்திட்டார் 

நான் கூட அப்ப அர்னவ்க்கிட்ட விசாரிச்சேன், அதுக்கு அவர், ‘இதெல்லாம் சும்மா ஒரு சாக்கு, அவரை நம்பக் கம்பெனிய விட்டு துரத்தணும் அவளுக்கு. அதான் இப்படியெல்லாம் வந்து சொல்றா. அந்த ஆண்டவனே வந்து அவருக்கு எதிரா சொன்னாலும் நான் நம்ப மாட்டேன்’ னு சொன்னார் 

“அடப்பாவமே” என குருநாதன் அங்கலாய்க்க 

“முழுசா கேளுங்க. நான் கூட ஏதோ கோபத்துல சொல்றார், மறுபடி அந்த பொண்ணோட சமரசம் ஆகிடுவாருனு தான் நெனச்சேன். அடுத்தச் சில நாள்ல அந்தப் பெண்ணும் இறந்தப்ப தான், அவருக்கு அந்த பொண்ணு மேல இருந்து வெறுப்போட அளவு புரிஞ்சது. துக்கம் கேட்க கூட அவர் போகல, என்னையும் போக விடல. 

எல்லாத்துக்கும் மேல, ‘இந்த மாதிரி பொய் சொல்லி எல்லாரையும் ஏச்சுகிட்டு இருக்கறவளுக்கு இது தான் கதி’னு வேற சொன்னார்” என விக்ரம்  பழைய நிகழ்வுகளை கூறவும், அதிர்ந்து போனார் குருநாதன்

“அப்ப அவங்கள நம்மளால எதுவுமே பண்ண முடியாதா விக்ரம்?” என வருத்தமாய் வினவ 

“ஏன் முடியாது? நாம ஊருக்குத் திரும்பினோம்னா, அந்த நாள் தான் அவங்களுக்குத் தீபாவளி” என கொலை வெறியுடன் கூறினான் விக்ரம்

குருநாதனிடம் பேசிவிட்டு வந்த விக்ரமைப் பார்த்து, அர்னவும் எல்லாளனும் சிரி சிரி எனச் சிரிக்க… சாமினியும் சிரிப்பை அடக்கப் பார்த்து தோற்றுக் கொண்டிருந்தாள்

அதைப் பார்த்து விக்ரமிற்கு மிகவும் வெட்கமாகி விட்டது. சிறிது சிரித்துக் கொண்டே வந்தவனை மற்றவர் பார்க்கக் கண்ட அந்த மீன்விழிகள் இரண்டும், கோபத்தில் இரத்த வரியோடிக் காணப்பட்டன

“எதற்காக அனைவரும் அவரைப் பார்த்து இவ்வாறு இடி இடியென நகைக்கிறீர்கள்? ஒருவர் ஆர்வ மிகுதியால் சில பல கேள்விகள் கேட்டால், அது நகைப்புக்குரியதாகி விடுமோ? அதிகமாகக் கேள்வி கேட்கும் குழந்தைகள் தான் பிற்காலத்தில் மிகுந்த அறிவாளிகளாக வருவார்கள். அதை நீங்கள் எவரேனும் அறிவீரா? விக்ரமர் இவளவு சிந்தித்துக் கேட்ட கேள்விகளைக் கண்டு இப்படி நிந்திக்கிறீரே?

ஏன் உங்கள் யாருடைய மூளையிலும் இவர் கேட்ட கேள்விகள் எழவில்லையா? உங்கள் அனைவர் சார்பாகத் தானே இவர் தாமே முன்வந்து தன் ஐயப்பாட்டினை விளக்கிக் கொள்ளும் பொருட்டு வினா எழுப்பினார்? அதற்குப் போய் இவ்வாறு அவரைப் பார்த்து நகைக்கிறீர்கள்?”என்று பொரிந்து தள்ளியது கயா தான்

அவள் பேசி முடித்ததும், ஒரு பெருத்த சூறாவளியில் சிக்கி மீண்டு விட்ட உணர்வு அனைவருக்கும் எழுந்தது 

இமைக்க மறந்து அனைவரும் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, கதவுடைக்கக் காத்திருக்கும் பெரும் வெள்ளத்தினைப் போல, இதழை மீறி பீறிட்டு வரும் பெருஞ்சிரிப்பை மறைத்து, குறும்பு மிளிரும் கண்ணனாய் குமிழ் சிரிப்பினை உதிர்த்தவாறு நின்றிருந்தான் விக்ரம்

‘எந்த சூழ்நிலையிலும் நிதானம் இழக்காதவள், இந்த அளவிற்கு வார்த்தையாடுகிறாளே? அதுவும் யாருக்காக? விக்ரமருக்காக. இது என்னமோ சரியாகப் படவில்லையே?” என யோசித்தான் எல்லாளன் 

“இதெல்லாம் சிறு விளையாட்டு தானே கயா, இதற்குப் போய் ஏன் இவ்வாறு உணர்ச்சிவசப்படுகிறாய்?” என சாமினி ஆச்சர்யம் விலகாத குரலில் வினவ

“என்ன சாமினி நீயும் இவர்களுடன் இணைந்து கொண்டு..” என்ற கயாவை இடைமறித்த விக்ரம்,  “கயா.. நீ போய் நல்லா ஜில்லுன்னு..” என விக்ரம் கூறி முடிக்கும் முன்

“தண்ணென்றிருக்கும் தண்ணீர் கொண்டு எம் தணல் தணிக்கவியலாது விக்ரமரே” என சட்டெனப் பதிலுரைத்தாள் கயா

“ஹையோ இல்ல கயா மா… எனக்குக் கொஞ்சம் ஜில்லுனு தண்ணி கொண்டு வரியா?” என்றதும் 

உடனே எழுந்த கயா, “இதோ விக்ரமரே… உடனடியாக எடுத்து வருகிறேன்” என சிட்டாக அங்கிருந்து பறந்தாள்

கயா அங்கிருந்து சென்றதும், மீண்டும் அனைவரும் விக்ரமைப் பார்த்து நகைத்தார்கள். ஆனால் இம்முறை அவர்கள் நகைப்பில் இருந்தது… மகிழ்ச்சி

விக்ரமைப் புரிந்து கொண்டதன் அடையாளமாக வெளிப்பட்ட மனதின் மகிழ்ச்சி, மேலும் நிம்மதியும் கூட

இவ்வளவு ஏன், அங்கிருந்த இளந்திரையன் கூட, இந்தக் காதல் நாடகத்தினைக் கண்டும் காணாதது போல் விட்டு விட்டார்

பின்பு கயா வந்ததும், அது இதென்று பேசி அவளைச் சமாதானப்படுத்தி விட்டு, எவ்வாறு அந்த மயதேவனின் மகுடத்தினைச் சமுத்திராவிடமிருந்து கைப்பற்றுவதென அனைவரும் பேசிக் கொண்டிருக்கையில் அங்கு வந்தார் காயகர மூப்பர்

வந்தவர் கூறிய செய்தியில், அதிர்ந்து போய் மிடறு விழுங்கிக் கொண்டு நின்றான் அர்னவ் 

பின்னே என்னவாம்? அந்தச் சமுத்திராவை அழிப்பதில் தான் அபாயம் இருக்கிறதென்றால், சிவனுக்குப் பூஜை செய்வதிலுமா அபாயம் இருக்க வேண்டும்?

பதினெட்டு நாட்கள் ஒருவேளை உணவருந்தி, இருவேளை குளித்து, முக்கண்ணன் நினைவை, சிந்தை நான்கிலும் கைக்கொண்டு,  ஐம்பூதங்களுக்கும் சேர்த்து, ஆறு காலப் பூஜை செய்ய, எழுவகை மலர் கொண்ட எழுநூறு தொகுப்பினை, எண்திசை தேடி எடுத்து வந்து, ஒன்பது கோளும் நேர்கோட்டில் சந்திக்கும் நேரத்தில், புவியின் நேரம், காலம், வேகம், சுழற்சி  என அனைத்தும் சுழியமாகும் வேளையில், மயனின் மகுடம் தரித்து, மன்னவன் சிவனுக்குப் பூஜை செய்திட வேண்டுமாம்

இதென்னடா கொடுமையென அர்னவ் யோசிக்க, அவனது யோசனையைக் கலைத்தது மூப்பரின் குரல்

“என்ன ருத்ர தேவரே? மிகக் கடுமையாக இருக்குமென எண்ணுகிறீரா? ஆனால் இதை விடவும் கடுமையான காரியங்கள் தங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன. ஆமாம் அப்பா… எம் அய்யன், அந்த ஈசன் தன் குழந்தைகளை என்றும் வதைப்பதில்லை. அதனாலேயே இவ்வளவு எளிதான விரத முறைகள்

ஆனால் அந்தச் சமுத்திராவை அழிப்பது எளிதான காரியமல்ல. முதலில் நீர் ருத்ர கடகத்தினைத் தொடவே உமக்கு உடலில் மட்டுமின்றி மனத்திலும் திடம் வேண்டும். பின்பு அதனைக் கொண்டு எளிதாகச் சமுத்திராவை அழித்து விடலாம் என்று எண்ணிவியலாது. ஏனென்றால் பன்னெடுங்காலமாக இந்த ஒரு தருணத்திற்காகவே காத்துக் கொண்டிருப்பவள் அவள். அதுவும் பல கொலைகளை இரக்கமின்றிச் செய்து, தன் பலத்தினைப் பலநூறு மடங்காகப் பெருக்கி வைத்திருப்பவள் அந்த சமுத்திரா

அதோடு, அவளது மனோதிடமும் தோல்வியை ஒப்புக் கொள்ளாத  பிடிவாதமும், அவளே அழிந்து விட்டாலும் அமரத்துவமாய் நிலைத்திருக்கக் கூடிய ஒன்றாகும். அப்படியே நீர் அவளை அழித்தாலும், இந்தாருங்கள் உங்கள் மகுடமென்று தன் கையிலேயே அதை வைத்துக் கொண்டிருக்க மாட்டாள். கருங்குளத்தில் இருக்கும் சுரங்கத்தில் தான் வைத்திருப்பாள்

மேலும் நம் பூசை சிவராத்திரி இரவில் தான் துவங்க வேண்டும். எனவே நீர் அவளை இராப்பொழுதில் தான் அழிக்கவியலும். அப்பொழுது உமது வலிமை மட்டுமின்றி, அவளது சக்தியும் கூடி இருக்கும். அதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

அந்தக் கருங்குளத்தின் அடி ஆழத்திற்கு நேரடியாகச் சென்றிட இயலாது. அது சமுத்திரா கடலினுள் வசிக்கும் இடத்தினைத் தாண்டி, கடலடி சுரங்கம் ஒன்று உள்ளது. அதன் முடிவில் தான் கருங்குளம் அமைந்துள்ளது. அதன் ஆழத்தில் தான் அவள் அந்த மகுடத்தினை  வைத்திருப்பாள். எனவே நீர் சமுத்திராவைத் தாண்டிய பின்பே, உம்மால் மகுடத்தை அடைய இயலும். அதன் பின்னே எம் சிவனுக்கு உம்மால் பூசை செய்து அவன் கோபம் குறைத்து எம் இனத்திற்கு விமோச்சனம் அளிக்கவியலும்” என கூறி முடித்து அங்கிருந்து அகன்றார் கயாகரர் 

அவர் கூறியதைக் கேட்ட அர்னவுக்குத் தான், இப்பொழுது தலை கிறுகிறுவெனச் சுழன்றது

(தொடரும்)

#ad ‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

#ad

      

        

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நாட்டை காக்கும் பணியில் மருத்துவர்கள் (பென்சில் ஓவியம்) By Krithik – School Student

    எதுகை மோனை (சிறுகதை) – ✍ A.H.யாசிர் அரபாத் ஹசனி