ஜூலை 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
தற்செயலாக தன்னுடைய வகுப்பு ஆசிரியை சாரதா டீச்சரைப் பார்த்ததும் மாலதிக்கு மகிழ்ச்சி.
ஓடிச்சென்று அவர் முன்னால் நின்று, “டீச்சர்….. என்ன அடையாளம் தெரியுதா?”
“நீ… மாலதி தானே?”
“ஆமாம்…. எப்படி இருக்கீங்க?”
“நல்லா இருக்கேன் மா….நீ எப்படி இருக்கே? என்ன பண்ற?”
“நானும் டீச்சராதான் இருக்கேன்….வாங்க வீடு பக்கம்தான் பேசிட்டே போவோம்.”
“இல்லமா …இன்னொரு நாள் வரேன்…”
“அதெல்லாம் முடியாது… நீங்க வந்தே ஆகணும் ”
பள்ளிக் காலத்துப் பழங்கதைகளைப் பேசிக்கொண்டே ஐந்து நிமிட நடையில் மாலதியின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
“டீச்சர்….உட்காருங்க…. காப்பி கலந்து எடுத்து வரேன்” என்று குடிக்க தண்ணீர் கொடுத்துவிட்டு சமையலறைக்குச் சென்றாள்.
காப்பியுடன் மீண்டும் உரையாடல் தொடங்கியது….
“மாலதி……உன் வீட்டுக்காரர் …என்ன வேலை செய்யறாரு?”
சிரித்துக் கொண்டே”நான் கல்யாணமே செஞ்சிக்கல”
“கல்யாணம் செஞ்சுக்கலையா ?…ஏன்?
“அதுக்கு நீங்க தான் காரணம் ?”
அதிர்ச்சியில் ….”நானா ?”
“ஐயோ டீச்சர்… அதிர்ச்சியாகாதீங்க. நீங்க கல்யாணமே செஞ்சுக்காமா, எங்களைப் போன்ற அனாதை குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்க உங்க வாழ்க்கையே தியாகம் பண்ணீங்க. அத முன்மாதிரியா நான் எடுத்துக்கிட்டு வாழுறேன்”
அப்பொழுது வீட்டிற்கு வெளியே இருந்து, “அம்மா…” என்று கூப்பிட்டுக் கொண்டே சிறுவனும், சிறுமியும் ஓடிவந்து மாலதியைக் கட்டி அணைத்துக் கொண்டனர்.
குழப்பமடைந்த சாராத டீச்சர் சந்தேகத்தோடு மாலதியைப் பார்க்க, “உங்க சந்தேகம் புரியுது டீச்சர், நானே விளக்குறேன். அழகான காதல் தம்பதியினருக்கு பிறந்த குழந்தைகள் ராகவி, ராகுல். ஒரு நாள் நான் பள்ளியில் இருந்து திரும்பும் பொழுது இவர்கள் பெற்றோருடன் காரில் பயணம் செய்துக் கொண்டிருந்தனர். அப்போ எதிர்பாராத விதமாக சாலையின் மறுபுறம் தாறுமாறாக சென்ற கார், சாலை நடுவே இருந்த தடுப்பு சுவரை தாண்டிவந்து இவர்களின் கார்மீது மோதியதில் இவர்கள் பெற்றோரை இழந்தனர்”
பரிதாபத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார் சாரதா…
மேலும் மாலதி தொடர்ந்தார், “காவல்துறையின் மூலமாக இந்த குழந்தைகளின் உறவினர்களைத் தொடர்புக் கொண்டால் இவர்களின் பெற்றோர் செய்த காதல் பாவத்திற்கு இவர்களை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டனர். அனாதை ஆசிரமத்தில் சேர்க்கச் சென்றபோது அம்மா என்று என்னை கட்டிக் கொண்டனர். அதனால் நானே இவர்களைத் தத்தெடுத்துக் வளர்க்கிறேன்”.
கண்களில் நீர் கசிய….மாலதியை இறுக அணைத்தார் சாரதா.
ஜன்னல் அருகே வெளியே பார்த்துக்கொண்டிருந்த குழந்தைகள் ஒருசேர “அம்மா… அப்பா அம்மா வந்துட்டாங்க…” என்று குரலெழுப்பினர்.
மாலதியும், “அவர்களிடம் பேசிக் கொண்டிருங்கள்” என்றார்.
“அது ஒன்னுமில்லை டீச்சர்… அம்மா அப்பா எங்கே?… என்று கேட்டுக் கொண்டே இருந்தாங்க. சமாதனப்படுத்த தினமும் அந்த மரத்திற்கு வரும் இருகுருவிகளை அம்மா அப்பா என்று சொன்னேன் அதேயே பிடித்துக் கொண்டார்கள்”
குழந்தைகள் எதோ சொல்ல…பதிலுக்கு குருவிகளும் எதோ கீச்சிடத்…. தென்றல் காற்று ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்ததில்… மரத்திலிருந்து உதிர்ந்த பூக்கள் ஆகாயத்தில் இருந்து தூவியது போல் மாலதியின் தலைமீது விழுந்தன.
கனத்த இதயத்துடன் சாரதா கிளம்பினாலும், தன் மாணவியின் நிறைகுணத்தினை எண்ணியபடியே நடந்தார்.
(முற்றும்)
” அந்தக் குழந்தைகள் ஒரு சேர… ‘அம்மா …. ‘அவங்க அம்மா, அப்பா வந்தூட்டங்க என்று சிலேடையாக (சிலேடையின் பொருள் கூடப் புரியாமல்) குரலெழுப்பிச் சொன்னது சாலப் பொருத்தமேயாகும். இதை எழுதிய கதாசிரியர் ”மலர் மைந்தன்’ அவர்களுக்கு என் ‘முக நூல்’ சார்பாக நல் வாழ்த்துக்கள்.
– “மண்டகொளத்தூர் சுப்ரமணியன்.”
ஜூலியட் தெரு,
சேப்பல் ஹில், வடக்கு கரோலினா,
USA.
பேரன்பு நன்றி சோதரரே !
தங்களின் வாழ்த்து எனக்கு மனநிறைவையும் மேலும் எழுத வேண்டும் என்ற ஆவலையும் தூண்டுகிறது .’
என்றும் நேசமுடன் .
மலர் மைந்தன் ,
கல்பாக்கம்
தமிழ்நாடு .
The store you have written very super, gives humanity feeling of the human beings
Thanks a lot Sir