ஜூன் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
வைத்தி வந்தான்
சிதம்பரம் கோயில்..!
ஆச்சரியம் அடங்காத கிருஷ்ணன் வேம்புவை இன்னும் கொஞ்சம் தூண்டினான். “அப்போ இதுலாந்தான் அதிசயம் ரகசியம்ன்னு சொல்றாங்களா?” என்று கேட்டான்.
வேம்புவிடம் புன்முறுவல். “இங்க இருக்குற சிவன் நடனம், பிரபஞ்ச நடனம்னு சொல்லப்படுது..! அவரோட முத்திரை பதித்த கைகளுக்கும், தூக்கி நிக்கிற காலுக்கும் நடுவுல தான் பால்வெளி மண்டலம்ங்குற பகுதி இருக்குறதாவும், பொன்னம்பலத்துக் கூத்தன் இதய பகுதில தான் சூரியக்குடும்பம் இருக்குறதாவும் சொல்றாங்க. உயிரோட்டம் உள்ள இடம் ‘சூரிய குடும்பம்’ தான்னு உணர்த்துது இல்லியா அது..! அந்த நடராஜன சுத்தி இருக்குற வட்டம் இந்தப் பிரபஞ்சத்த குறிக்கிறதாவும் சொல்லுவாங்க..! மேலும், இந்தக் கோயில்ல தான், தேவார மூவர் பேரழிவு காலத்துலர்ந்து சில ஓலைகளைக் காப்பாத்த, அதை யாருக்கும் தெரியாம ஒரு அறையில போட்டு பூட்டி வெச்சிட்டதாவும், அதை அவங்களே வந்தா தான் திறக்கணும்னு சொல்லிட்டதாவும் ஒரு வரலாறு உண்டு.
பிறகு, ஒரு அரசனாலும் அதை எடுக்க முடில. ரொம்ப வருஷங் கழிச்சி, ராஜராஜசோழனோட புத்திக்கூர்மையான யோசனையில, நால்வரோட படிமங்கள் செஞ்சி, நம்பியாண்டார் நம்பியோட உதவி கொண்டு, அந்த ஓலைகளை மீட்டெடுத்தாங்க. அது தான் திருவாசகமும் திருமுறையும். நிறைய ஓலைகள் கரையானுக்கு இறை ஆகிடுச்சு. மிச்ச இருக்குற சில ஓலைகள் மந்திர தந்திர நிறைந்ததுனு அவங்களே பூட்டி வெச்சிட்டாங்களாம்.
இப்போவே ஒருத்தன் இன்னொருத்தன கொல்ற நிலைமை இருக்கு. இன்னு மந்திரமெல்லாம் தெரிஞ்சா கலி கோரதண்டவம் ஆடும். அப்படி எல்லாம் கழிச்சி கட்டிட்டு, அவங்க எடுத்துட்டு வந்ததுதா இப்போ நம்ம படிக்கிற தேவாரமும் திருவாசகமும்..! இப்போ நீ கேட்டியே கேள்வி.. இதான் ரகசியமாம்னு. அந்தக் காலத்துல எழுதுற எழுத்து, வடிக்கிற சிற்பம்னு எல்லாமே அறிவுபூர்வமா பண்ணாங்கப்பா. அத நேர்பட புரிஞ்சிக்கிட்டாவே அது தான் பொக்கிஷம், ரகசியம் எல்லாம்” என்று முடித்து,
அவன் அடுத்த கேள்வி கேட்கும் முன், “வார ஒரு நாள் நீ என்னோட கோயில்கு கட்டாய வரணும்.. அப்ரோ பேசுவோம் இதப்பத்தி..! இப்போ வா கடைக்கு போவோம்” என்று எழுந்து நின்று கொண்டார்.
கிருஷ்ணனுக்கு கோவிலை விட்டு வெளியே செல்லும் போது, நவரசத்தில் ஒன்றான ஆச்சரியம் மேலிட்டிருந்தது. அந்தக் கோயிலை தமிழ் நாகரிகத்தின் உச்சபட்ச வடிவமாய், அவன் பார்த்தான்.
வேம்பு “நமசிவாய..” என்ற பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்துக் தெற்கு கோபுர வாசல் வழியாக வெளியேறவும் கிருஷ்ணனும் வெளியே சென்றான்.
வேம்பு நேரே கடைக்கு முன் நிற்கும் கையேந்தி பவனுக்கு சென்று, “ரவி.. இட்லியும் சாம்பாரும் கட்றா.. அப்டே புதுசா வந்திருக்கானே இவனுக்கு சேத்து கட்டிக்கோ.. கணக்கு எழுதிக்கோ..” என்று சத்தமாகச் சொன்னார்.
கிருஷ்ணனின் பக்கம் திரும்பி, “நம்ம கட இட்லி பூ மாறி இருக்கும். இனிக்கு இங்க சாப்பிட்டுக்கோ, நாளைலேர்ந்து, கோயில்கு போனோம்ல அங்க ஒரு ஹோட்டல் இருக்குது.. அங்க சாப்புடலாம்..” என்று சொல்லும் போதே ரவி குறுக்கிட்டான்.
“இந்தாங்க ரெண்டு பேருக்கும் சேத்து 20 ரூவா.. எழுதிக்கிட்டேன்..” என்று பொட்டலங்களைக் கையில் கொடுத்தான்.
வேம்புவும் கிருஷ்ணனும் அறைக்குச் சென்று சாப்பிட்டனர். வேம்பு சாப்பிட்டு முடித்துக் கிளம்பும் போது, “இனிக்கு ரெஸ்ட் எடு.. நாளைக்கு பாப்போம்.. நா செக்ஷனுக்குப் போறேன்..” என்று விடைபெற்றுக் கொண்டார்.
அவர் சென்றதும், தான் தரிசித்த தில்லை அம்பலத்தானை மனதில் இருத்தி, உறங்கச் சென்றான். அந்த அறையெங்கும் “கொர்.. கொர்..” என்று குறட்டை சத்தம்..
திருக்கடையூர் அபிராமி..!
காவி உடை மனிதர், அம்பலத்தானைத் தரிசிக்கும் வழியில் திருக்கடையூர் அபிராமி அம்மையை தரிசித்தார். 36 வயதில் வீட்டை விட்டு வெளியே வந்த அவர்க்கு இப்போது வயது நாற்பதைத் தாண்டியிருந்தது. அதை நிரூபிக்கும் வகையில் மார்பிலும், தலையிலும் நரை எட்டிப் பார்த்தது.
திருக்கடையூர் அபிராமி கோயிலில் ஒரு விசேஷமுண்டு. மிருகண்டர் என்ற முனிவர் தவம் செய்து சிவனருளால் “மார்க்கண்டேயன்” என்ற பிள்ளையை வரமாகப் பெற்றார். “என்றும் பதினாறாக” விளங்கும் வரத்தையும் மார்க்கண்டேயன் இங்கு தான் பெற்றான்.
மேலும், சிவனால் காலன் வதம் செய்யப்பட்டு, மீண்டும் உயிர்பிக்கப் பெற்றார். இதனால், அங்கிருக்கும் சிவனுக்கு, “காலசம்ஹார மூர்த்தி” என்ற பெயரும் உண்டு.
இத்தகைய சிறப்புமிக்க தலத்தில், தரிசனம் முடித்துவிட்டு, பொதுமக்களுக்குத் தொந்தரவு இல்லாமல் ஓரமாய் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் அந்தப் பெரியவர். அவர் படுத்திருந்த திசையில் விளக்கின் நிழலொன்று வேகமாக அசைந்து கொண்டிருக்க, அப்போது ஒரு காட்சி அவர் கண்முன்னே தோன்றி மறைந்தது.
உடனே வெகுண்டு எழுந்த அந்தக் காவி மனிதர், “தாண்டவ நாயகனே..! தாயினின்று பிள்ளையை ஏன் பிரித்து வைக்கிறாய்..? அபிராமி தாயே..!” என்று அலறியடித்துக் கொண்டு ஓடினார்.
நாகப்பட்டினம் கோவிலைப் போல், இந்தக் கோயிலிலும் அவரைப் பற்றி பேச்சு. ஒரு சில பத்திரிக்கை நிறுவனங்கள் அவரின் பின்னாலே ஓடத் தொடங்கின.
“ஓடும் அருள் சாமி..” என்று செய்தித் தாளில் எழுதித் தள்ளினர். ஆறு மாதத்திற்கு இவர் தான் கண்டன்ட் என்றபடி சில நிறுவனங்கள் முடிவு செய்து கொண்டன. மக்களில் ஒரு சிலர், அவரைத் தொடரவும் ஆரம்பித்து விட்டனர்.
காவி உடை மனிதர் எங்கு சென்றாலும் ஓடுவாரா? மாட்டாரா? என்பதைப் பார்க்க தனிக்கூட்டம் கட்டியது.
“ஓடினால் தான் அந்தக் கோயில் அருள் சக்தி வாய்ந்ததாம்..” இப்படி ஒரு அர்த்தம் வேறு வேர் விட்டு விட்டது.
அந்த மனிதர் இப்படி நடந்தே அம்பலத்தானைத் தரிசிக்க சிதம்பரம் மண்ணில் காலடி எடுத்து வைத்து விட்டார்….
சிதம்பரம் – லட்சுமி வீடு..!
புனிதவதி, நம்பிக்கையை இழந்திருந்தாள். பிள்ளை காணாமல் போய் 4 மணி நேரம் ஆகிவிட்டது. யாரும் சாப்பிடவில்லை. அக்கம் பக்கத்தார்க்குச் சொல்லி உதவி கேட்டனர்.
லட்சுமியும் அண்ணனும் ஒரு பக்கம் தெருவில் தேட, அப்பாவும் சின்ன அண்ணனும் ஒரு பக்கம் சென்றனர். புனிதவதி வீட்டை விட்டு வரவில்லை.
“எம் புள்ள எங்கிட்ட சொல்லாம எங்கேயு போ மாட்டான். இப்ப வந்துருவான்… பாருங்க..” என்று இழந்த நம்பிக்கையை மீட்டெடுத்து தந்தாள்.
இரவு 11.00 மணி. எல்லோரும் வீடு வந்தனர். தம்பி கிடைக்காத சோகம் அவர்களிடம் அதிகம் தெரிந்தது. கூடத்தில் மின்விசிறி போட்டு உட்கார்ந்த நொடி, வைத்தி லட்சுமி சொன்ன சோபாவிற்கு அடியிலிருந்து வெளிப்பட்டான்.
“நா உங்க எல்லாரையு கண்டுபிடிஸ்டெனே..!” என்று வெள்ளந்தியாய்ச் சொன்னான்.
அம்மா அவனை வாரி அணைத்துக் கொண்டு, “இவளோ நேர எங்கேர்ந்த டா சாமி..?” என்று கேட்க, “இங்க தான்ம்மா இருந்தே..” என்று சோபாவைக் காண்பித்தான்.
லட்சுமிக்கு பெரிய அண்ணனுக்கும் சுளீர் என்றது. அந்த சோபாவையே கவிழ்த்துப் போட்டு அல்லவா தேடினார்கள் அவர்கள்? “எப்படியோ வந்துட்டான்ல.. அது போதும்..!” ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
நள்ளிரவில் தான் அன்று அவர்கள் உணவு உண்டார்கள்.
புனிதா கணவனிடம் சொன்னாள், “ஏங்க..பசங்களோட நடராஜர் கோவிலுக்குப் போய்ட்டு வந்தா என்ன..!” கணவன் கோவிந்தனிடம் சிறிய தலையசைப்பு.
லட்சுமி இப்போதே தாவணியைத் தேர்ந்தெடுக்கச் சென்று விட்டாள். அடுத்த நாள் மாலை சுமார் 5.30 மணியளவில் புனிதவதி குடும்பம் கோவிலுக்குள் நுழைந்தது.
புனிதவதி அர்ச்சகரிடம் எல்லோருடைய நட்சத்திரத்தையும் கூறி கைக்கூப்பி நின்றாள்.
கோவிந்தன், “நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க..!” என்று முணுமுணுத்துக் கைகளை மேலே உயர்த்திக் கொண்டான். அர்ச்சகர் விபூதியைத் தந்ததும், ஒரு பட்டையை இட்டுக்கொண்டு அடுத்தடுத்த சன்னதிக்குச் சென்று வழிபட்டு முடித்தது புனிதவதி குடும்பம்.
பெரிய அண்ணன் மடப்பள்ளிக்குச் சென்று பிரசாதம் வாங்கி வந்தான். அனைவரும் பிரகாரத்தில் அமர்ந்தனர்.
அவர்களுக்கு நேரெதிரே அந்தக் காவி உடை மனிதர் அமர்ந்திருந்தார்…
சிதம்பரம் சர்வோதய சங்கம்..!
முதல் நாள் சாயங்காலம் படுத்தது தான் கிருஷ்ணனுக்கு ஞாபகம். அடுத்த நாள் வடிவேலு எழுப்பும் போது தான் அவன் விழிகள் திறக்கிறான். வடிவேலு லேசாக அவனைக் கடிந்து கொள்கிறான்.
“மொத நாளே இப்டி தூங்குனா.. எப்படிய்யா..? போ சுடுதண்ணி வெச்சிருக்கேன். வெரசா போய் குளி..!” என்றார்.
கிருஷ்ணனுக்கு கோபம் வரவில்லை. “அப்பாடா.. என்னையும் அக்கறையா எழுப்பி, சுடு தண்ணி போட்டிருக்காரே..! என்று நினைக்கையில் அவனுக்கு அவன் அண்ணன் ராதா ஞாபகம் வந்தது. துண்டை எடுத்துக் கொண்டு கிளம்பினான். வேக வேகமாகத் தயாரானான்.
வாரத்தின் முதல் நாள். அவனுக்குக் கதர் வேட்டி சட்டை கொடுக்கப்பட்டது. கொஞ்சம் தொள தொளவென்று தான் இருந்தது. அதனால் என்ன என்று, சட்டையைப் போட்டும் ஆகி விட்டது. மாடியில் இருந்து இறங்கி பிரேயருக்கு ஆஜராகி விட்டான்.
காந்தி பாட்டு முடிந்ததும் கிருஷ்ணனை அறிமுகபடுத்திக் கொள்ளச் சொன்னார் மீசைக்காரர். அவன் கொஞ்சம் பயந்து கொண்டே, “எம்.பேரு கிருஷ்ணன். நான் படிச்சது.. பி.எஸ்.சி” என்று சொல்ல வந்த நாக்கை கடித்துக் கொண்டு, “நா படிச்சது பத்தாங் கிளாஸ்…” என்று சுருக்கமாகச் சொல்லி முடித்தான்.
இவனின் தடுமாற்றத்தைப் பார்த்த வடிவேலு சூட்சமமாகச் சிரித்தான். அதை செகரெட்ரி பார்த்துவிட்டு, “என்னய்யா சிரிப்பு?” என்று கேட்டவுடன் வாயைப் பொத்திக் கொண்டான்.
செகரெட்ரி எழுந்து, “கிருஷ்ணனுக்கு கைக்குட்ட, டவல் செக்ஷன் தரலாம்னு இருக்கேன். உங்க எல்லாருக்கும் சம்மதமா?” என்று கேட்டார்.
அவர் சொல்லி வைத்தது போலவே இருவர் “சரிங்க அண்ணே..!” என்றார்கள்.
மீசைக்காரரே கிருஷ்ணனைக் கூட்டிக் கொண்டு போய் செக்ஷனில் அமர்த்தி, “பாரு பா.. வாரம் 20 துண்டு, 50 குட்டையாவது விக்கணும். இதுல 5-10 ஏறக்குறைய இருக்கலாம். மத்தபடி வேலைல லேசு இருக்கக் கூடாது. கணக்கு காட்டணும்” என்று சொல்லிவிட்டு மீசையை நீவி விட்டுக் கொண்டார்.
கிருஷ்ணனிடம் “இதை முடிக்க வேண்டும்” என்று சொல்லி விட்டால் போதும், இரவு பகல் பாராது அந்த வேலையை முடித்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பான்.
அப்படித்தான் இங்கும் ஒரு யுக்தியைக் கையாண்டான். 20 டவல், 50 கை குட்டைகளை எடுத்துக்கொண்டு, பட்டு புடவை செக்ஷனுக்குப் போய் உட்கார்ந்து கொண்டான்.
ஆளுக்கு தகுந்த மாதிரி எடுத்து வைத்துக் கொண்டான். குழந்தைகளுடன் வந்தால், பொம்மை போட்ட கர்சீப்பை எடுத்து வைத்துக் கொள்வான். அதே போல் கொஞ்சம் நடுத்தர வயது பெண்கள் வந்தால், பூக்கள் அல்லது நல்ல டிசைன் உள்ளவைகளை எடுத்து முன் வைப்பான்.
சிலர் பார்த்தும் பார்க்காத சென்றால், அவர்களை அழைத்து, “மா.. நீங்க எடுத்திருக்க சாரிக்கு இந்த டிசைன் போட்ட கர்சீப்பைக் கையில வெச்சிக்கிட்டா, பிரமாதமா இருக்கும். நீங்க வேண்ணா பாருங்களேன்..” என்று புடவை கலரில் ஒரு கைக்குட்டையை விரிப்பான். அவர்களும் அவன் பேச்சு வலையில் விழுந்தவர்களாய், மனநிறைவோடு வாங்கிச் செல்வார்கள்.
இப்படியாக, வாரத்திற்கான விற்பனையை ஒரே நாளில் முடித்து விட்டான். செகரெட்ரிக்குச் செய்தி எட்டியது. அவனை அறைக்கு வரச் சொன்னார். கிருஷ்ணனைப் பார்த்துச் சிலர் பொறாமைபட்டனர்.
“யாரிடமும் மூன்று நிமிடங்களுக்கு மேல் பேசாத சிடுசிடு மீசைக்காரருக்கு இவன் மேல் முதல் நாளிலேயே நல்ல அபிப்பிராயம் வந்துவிடுமே..!” என்று வயிறு எரிந்தனர். ஆனால், வடிவேலுவுக்கோ அப்படி ஏதும் தோன்றவில்லை. பரமபதத்தில் காய் நன்றாகவே நகர்கிறது என்று நினைத்து சிரித்துக் கொண்டான்…
(தொடரும் – வெள்ளி தோறும்)
டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings