பிப்ரவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
எழுபது தீபாவளிகளைக் கண்ட எனக்கு பள்ளி, கல்லூரி நாட்களில் கொண்டாடிய தீபாவளிகள் மிகவும் பசுமையாக மனதில் நிற்கிறது. தொ(ல்)லைக் காட்சியின் குறுக்கீடு இல்லாமல் ஒரு குடும்பமாக அளவளாவி, விருந்துண்டு, இந்த நேரத்தில் தான் வெடிக்க வேண்டுமென்ற நியமம் இல்லாமல் நண்பர்களுடன் வெடி வெடித்து மகிழ்ந்த காலம் அந்தக் காலம்.
தீபாவளி என்றவுடன் நினைவிற்கு வருபவை புத்தாடைகள், தின்பண்டங்கள், பட்டாசு, தீபாவளி விருந்து, தீபாவளியில் வெளிவரும் புதுப்படங்கள், வார, மாத இதழ்களின் வண்ண மயமான தீபாவளி மலர்கள்.
எங்கள் குடும்பம் பெரிய குடும்பம். எல்லோருக்கும் உடை எடுப்பது அம்மாதான். அம்மாவின் செலக்சன் நன்றாகவே இருக்கும். இன்றைய காலம் போல பெரிய ஷாப்பிங் மால்கள் கிடையாது.
பெரிய துணிக் கடைகள், அதுவும் மூன்று அல்லது ஆறு மாதத் தவணையில் பணம் செலுத்தும் வசதியுள்ள கடைகளில் தான் வாங்க வேண்டும். பேண்ட், ஷர்ட் எதுவென்றாலும் துணி வாங்கித்தான் தைக்க வேண்டும்.
முன்பே தைத்து வைத்த பேண்ட், ஷர்ட், டி ஷர்ட் கிடைக்காது. பெண்களுக்கு புடவை அல்லது பாவாடை, தாவணி. சூடிதார், சல்வார், கம்மீஸ் போன்ற வட மாநிலத்தவர் உடை கிடைக்காது. துணி வாங்கியவுடன் டெய்லர் வீட்டிற்கு வந்து தைப்பதற்குத் தேவையான அளவை எடுத்துச் செல்வார்.
ஷர்ட் எடுப்பதற்கு எடுத்த துணியில் “அன்னை இல்லம்” படத்தில் சிவாஜி போட்டுக் கொண்ட டீ ஷர்ட், “பெரிய இடத்துப் பெண்” பாடல் காட்சியில் எம்ஜிஆர் அணிந்து வந்த டி ஷர்ட் என்று அதை விவரித்து அதைப் போல தைக்கச் சொல்ல வேண்டும். அவர் புரிந்து கொண்டது போல தைத்துத் தருவார்.
எங்களுடைய டெய்லர் எம்ஜிஆர் படத்தில் கடைசி சீனில் வருகின்ற போலீஸ்காரர் மாதிரி. தீபாவளிக்கு முதல் நாள் இரவு 9 மணிக்கு மேல்தான் துணி தைத்துக் கொண்டு வருவார். ஒருமுறை தீபாவளியன்று அதிகாலை நான்கு மணியளவில் தைத்த உடுப்புக்களைக் கொண்டு வந்து கொடுத்தார்.
அம்மா குறைந்தது ஐந்து வகைப் பட்சணங்கள் செய்வார். இனிப்பு இரண்டு, கார வகைகள் மூன்று. தீபாவளி பட்சணத்தில் மைசூர்பாக்கு, ரிப்பன் பொக்கடாம், முள்ளுத் தேங்குழல் கட்டாயம் உண்டு. லட்டு அல்லது பாதுஷா, முறுக்கு, மிக்சர், ஓமப்பொடி இந்த மூன்றில் ஏதாவது இரண்டு என்று வீட்டுப் பட்டிமன்றத்தில் முடிவு செய்யப்படும்.
உறவினர், நெருங்கிய நண்பர்கள் தவிர வீட்டு வேலை செய்யும் பெண்மணி, வீட்டிற்குக் கறிகாய் கொண்டு வந்து தருபவள், துப்புரவுத் தொழிலாளி என எல்லோருக்கும் கொடுக்க வேண்டுமென்று அம்மா தின்பண்டங்களை அதிகமாகவே செய்வார்கள்.
தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னதாகவே இந்த தின்பண்டம் செய்யும் வேலை ஆரம்பமாகி விடும். அந்த காலத்திலேயே வாயில் போட்டால் கரையும் மைசூர்பாக்கு செய்யும் நிபுணர் அம்மா.
அடுப்பில் பாகு வைத்து நிறைய நேரம் கிளற வேண்டியிருக்கும். என் அண்ணாவும், அக்காவும் அம்மாவிற்கு இதற்கு உதவி செய்வார்கள். மைசூர் பாக்கு வில்லைகள் போட்டவுடன் பெரிய சம்படத்தில் எடுத்து வைப்பதற்கு நான் உதவி செய்வேன். அம்மாவின் கவனம் சிதறும் போது சம்படத்திற்கு பதில் ஓரிரு வில்லைகள் என்னுடைய வாய்க்குள் சென்றுவிடும்.
அப்பா மனமிரங்கி பட்டாசு வாங்க 10 ரூபாய் கொடுக்க அண்ணா கெஞ்சி கெஞ்சி அதை 20 ரூபாய் ஆக மாற்றி மேலும் தன் கையிலிருந்தும் காசு போட்டுப் பட்டாசு வாங்கி வருவான். வாங்கி வருகின்ற பட்டாசுகளை எடுத்து வைக்க இரண்டு கைப்பெட்டிகள் தேவைப்படும்.
எங்கள் வீட்டு ஜான்சிராணி (அக்கா) ஊசிப்பட்டாசு கையில் வைத்து கொண்டு வெடிக்க அனேகமாக நாங்கள் எல்லோரும் பட்டாசு வெடிப்பதில் கலந்து கொள்வோம், ஒருவரைத் தவிர.
அந்த ஒருவர் மாடியில் நின்று கொண்டு இரண்டு காதையும் பொத்திக் கொண்டு “கிட்டக்கப் போகாதே, பார்த்து வெடி” என்று அசரீரியாகக் குரல் கொடுப்பார். அவர்தான் என் சின்ன அண்ணா.
இப்போதுள்ள ராக்கெட் வெடி போல ஏரோப்ளேன் என்ற வெடி உண்டு. திரியைக் கொளுத்தினால் மேலே சென்று உயரத்தில் வெடிக்கும். ஒரு முறை அண்ணா கொளுத்திய ஏரோப்ளேன் “டேக் ஆப்” ஆகாமல், தரையில் ஓடி, நடந்து சென்று கொண்டிருந்த ஒருவர் பக்கத்தில் வெடித்தது.
“ஏன் சார்… பார்த்து வைக்கக் கூடாதா” என்று அவர் அண்ணாவைப் பார்த்துக் கேட்க
“உங்களைப் பார்த்துத் தான் வைத்தோம், ஆனால் நீங்க தப்பிச்சிட்டீங்க” என்று நான் முணுமுணுத்ததும், அண்ணா என்னை முறைத்ததும் நினைவிருக்கிறது.
தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் மத்தாப்பு, பட்டாசு பெட்டிகளை வைத்து நாற்காலி, மேஜை செய்வோம். மத்தாப்பு பெட்டிகளை வைத்து அண்ணா செய்த வீடு இன்னும் என் கண் முன்னே நிற்கிறது. பல வருடங்கள் அந்த வீடு எங்கள் நவராத்திரி கொலுவை அலங்கரித்தது.
தீபாவளியன்று அதிகாலையில் எழுந்து தலையில் சிறிதளவு எண்ணெய் வைத்துக் கொண்டு குளிப்போம். பின்பு புத்தாடை அணிந்து கொண்டு வீட்டுப் பெரியவர்களின் ஆசி பெற்று, காலை சிற்றுண்டி. தீபாவளிக்குச் செய்த இனிப்பு, மல்லிகைப் பூ இட்லி, தேங்காய் சட்னி, மிளகாய்ப் பொடி, பில்டர் காபி இதுதான் காலை சிற்றுண்டி.
பின்பு உறவினர்கள் வீட்டிற்கு தீபாவளி பட்சணங்கள் கொண்டு சென்று கொடுப்போம். மதியம் தீபாவளி விருந்தில் பருப்பு, சாம்பார், ரசம், பச்சடி, கறி, கூட்டு, பாயசம் என்று விருந்து அமர்க்களப்படும். விருந்துச் சாப்பாட்டில் தேங்காய் அரைத்துவிட்ட தக்காளி சாம்பார், உருளைக்கிழங்கு காரக்கறி அனேகமாக இருக்கும். இவை இரண்டும் அம்மாவின் ட்ரேட் மார்க் ஐட்டம்.
இன்றைய காலம் போல தொலைக் காட்சி இல்லாததால் தீபாவளிப் பொழுது போக்கின் முக்கிய அம்சம் அன்று வெளிவருகின்ற புதுப் படங்கள். முன்னணி நடிகர்களின் படங்களுக்கும், சிறந்த இயக்குனர் படங்களுக்கும் பலத்த எதிர்பார்ப்பு இருக்கும்.
ஆனால் ரசிகர் மன்றத்தைச் சார்ந்தவராகவோ, படம் வெளியாகும் திரையரங்குகளில் நண்பர்களோ இருந்தால் தான் டிக்கெட் கிடைக்கும்.
சென்னையில் நாங்கள் இருந்த பகுதியில் நான்கு திரையரங்குகள் இருந்தன. இவற்றில் இரண்டு அரங்குகள் ஒரே தெருவில் அடுத்தடுத்து இருந்தன. ஒரு அரங்கில் எம்ஜிஆர் படமும் மற்றொன்றில் சிவாஜி படமும் தப்பாமல் இந்த அரங்குகளில் தீபாவளியன்று வெளி வரும்.
1964ஆம் வருடத்தில் தீபாவளியன்று ஒரு திரையரங்கில் எம்ஜிஆரின் “படகோட்டி”, மற்றொரு அரங்கில் சிவாஜியின் “நவராத்திரி”, மூன்றாவதில் சிவாஜியின் “முரடன் முத்து” வெளியாயிற்று.
பொதுவாக அந்த கால வார, மாத இதழ்களில் சினிமாவைப் பற்றிய செய்திகளும், துணுக்குகளும், கிசுகிசுப்பும் அவ்வளவாக இடம் பெறாது. சினிமா விமரிசனங்கள் மட்டும் வரும். தனியாக பேசும் படம், பொம்மை, குண்டூசி என்ற சினிமா பத்திரிகைகள் உண்டு.
படங்கள் திரையில் வெளி வருவதற்கு முன்னால் அப்படப் பாடல்கள் இந்திய வானொலி அலைவரிசைகளில் ஒலிபரப்பாகாது. புதுப் பாடல்கள் கேட்பதற்கு இலங்கை வானொலியை நாட வேண்டும்.
ஆனந்தவிகடன், குமுதம், கல்கி போன்ற வார இதழ்களில் புதுப்படங்களின் திரைவிமரிசனம் புதுமையாகவும், அழகிய நடையிலும் இருக்கும். ஆனந்த விகடனில் சிவாஜி படங்கள் ஒரு குடும்பத்தினர் படத்தைப் பார்த்து அதைப் பற்றி அளவளாவது போலவும், எம்ஜிஆர் படங்கள் இரு நண்பர்கள் படத்தைப் பற்றி விவாதிப்பது போலவும் இருக்கும்.
சில சமயம் படத்தில் வரும் பாடலைப் போல பாடல், படத்தை கிண்டல் செய்யும் வகையில் விமரிசனமாக அமையும். படகோட்டி படத்தில் எல்லாப் பாடல்களுமே இனிமையாக இருந்தது. “கொடுத்ததெல்லாம் கொடுத்தான்” என்ற பாடல் மிகவும் பிரபலம் அடைந்தது. படகோட்டி படத்திற்கு விமரிசனம் எழுதிய ஆனந்த விகடன் பின்வரும் பாடலை எழுதியது.
“ எடுத்ததெல்லாம் எடுத்தான், அவன் யாருக்காக எடுத்தான். எல்லோருக்குமாகவா எடுத்தான், இல்லை சிலருக்காக எடுத்தான்.”
“அரச கட்டளை” படத்திற்கு விமரிசனம் செய்த குமுதம் “ஆயிரம் பேர் அரையிருட்டில் அமர்ந்து கொண்டு தலைமயிரைப் பிய்த்துக் கொண்டிருந்தால் அவர்கள் அரசகட்டளை படம் பார்ப்பதாக அர்த்தம்” என்று எழுதியது.
மாலையில் வீட்டு வாசலில் அண்ணா தன்னுடைய நண்பர்களுடன் தீபாவளிப் படங்களைப் பற்றிய பட்டிமன்றம் நடத்துவார். சிலசமயம் பட்டிமன்றம் இரண்டு மணி நேரம் கூட செல்லும்.
புத்தகப் பிரியர்களுக்கு வார மாத பத்திரிகைகளின் தீபாவளிமலர் முக்கியமான ஒன்று. பெரிய அளவிலான புத்தகங்கள், தடித்த தாள்களில் இறைவனின் வண்ணப் படங்கள், ஆன்மீகவாதிகள் மற்றும் சான்றோரின் அறிவுரைகள், சிறுவர் தொட்டு முதியவர் வரை எல்லா வயதினருக்கும் ஏற்ற கதைகள், கட்டுரைகள், சிரிப்பு வெடிகள் என்று மலர் ஜனரஞ்சகமாக இருக்கும். தீபாவளி மலர் இதழ் வேண்டுமென்றால் முன்பதிவு செய்ய வேண்டும். இல்லையேல் கிடைப்பதரிது.
வீட்டில் செய்த பட்சணங்களையும், உறவினர் வீடுகளில் இருந்து வந்த பட்சணங்களையும் கொரித்தபடி தீபாவளி மலர் படிப்பது ஒரு சுகானுபவம்.
அந்தக் காலங்களில் நிறைய அலுவலகங்களில் வார, மாத இதழ்கள் வாங்கி அங்கே பணிபுரிபவர்களுக்குப் படிக்கக் கொடுப்பதற்கு குழுக்கள் உண்டு. படித்து மூன்று அல்லது நான்கு நாட்களில் திருப்பிக் கொடுத்து வேறொரு பத்திரிகை எடுத்துக் கொள்ளலாம்.
தமிழ், ஆங்கிலம் தவிர பணியாளர்களின் தாய் மொழியைப் பொருத்து மற்ற மொழி பத்திரிகைகளும் இருக்கும். இந்த அலுவலக குழுக்கள் வாயிலாக நாங்கள் அனைத்து தீபாவளி மலரும் படித்து விடுவோம்.
மறக்க முடியாத மற்றுமொரு தீபாவளி நான் பணியில் அமர்ந்த போது. பொறியியல் படித்து ஹைதராபாத் நகரத்தில் பணியிலிருந்தேன். தீபாவளி பண்டிகைக்கு சென்னைக்கு வருவதற்கு ரயிலில் பயணச்சீட்டு கிடைக்கவில்லை. ஹைதராபாத் நகரத்திலிருந்து விஜயவாடாவிற்கு பேருந்தில் பயணம் செய்தேன்.
விஜயவாடாவிலிருந்து சென்னைக்கு நேரடி பேருந்து இல்லாததால் திருப்பதி செல்லும் பேருந்தில் ஏறினேன். நெல்லூரில் இறங்கி அங்கிருந்து சென்னை செல்வதாகத் திட்டம்.
விஜயவாடாவிலிருந்து நெல்லூர் செல்லும் பாதையில் கனமழை காரணமாக மரம் விழுந்திருந்தது. இருபுறமும் மேலே செல்ல முடியாமல் வாகனங்கள் நின்றிருந்தன. மரத்தை அகற்றாவிட்டால் வண்டிகள் செல்ல முடியாது.
யார் வந்து மரத்தை அகற்றப் போகிறார்கள், எப்போது வருவார்கள் என்பது தெரியாது. இரவுக்குள் சென்னை செல்ல வேண்டும் என்ற ஆசையினால் நான் வண்டியிலிருந்த மற்றவர்களை அணுகி எல்லோருமாக மரத்தை அகற்ற முயற்சி செய்யலாம் என்று கூறினேன்.
எதிர் பக்கத்திலிருந்த வண்டியிலிருந்தும் உதவ பலர் இறங்கி வந்தனர். எல்லோருமாக மரத்தைப் பாதையின் ஓரத்தில் தள்ளி வண்டிகள் போவதற்கு ஏற்றவாறு பாதையில் வழி வகுத்தோம்.
இதனால் பேருந்து இரண்டு மணி நேரம் தாமதமாக நெல்லூர் சென்றடைய சென்னை செல்லும் கடைசிப் பேருந்து புறப்பட்டுச் சென்று விட்டது. பேருந்தின் ஓட்டுனரும், நடத்துனரும் திருப்பதியிலிருந்து சென்னை செல்லும் வண்டி எதிர் திசையில் வரும் என்று சொல்ல அந்த வண்டியிலேயே பயணத்தைத் தொடர்ந்தேன்.
சென்னை செல்லும் தமிழக அரசுப் பேருந்து எதிர் திசையில் வந்தது. அமருவதற்கு இருக்கை இல்லையென்றும், படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்வதானால் வரலாம் என்று கூற படிக்கட்டில் அமர்ந்து சென்னை வந்து சேர்ந்தேன்.
நான் சென்னையில் வீட்டை அடைய தீபாவளி முதல் நாள் இரவு பத்து மணி ஆயிற்று. தொலைபேசி வசதியில்லாததால் என் வருகையைக் குறித்த கவலையில் அனைவரும் இருந்த நிலையில் வீடு போய்ச் சேர்ந்தேன்.
இன்றைய சூழ்நிலையில் தீபாவளியன்று உறவினர்கள் வீடு, கோவில் என்று செல்லாமல், தொலைக்காட்சி எதிரே அமர்ந்து பட்டி மன்றம், தீபாவளி சிறப்புப் படங்கள், இணைய தளத்தில் புதிய படங்கள் பார்ப்பது என்று நேரம் கழிந்து விடுகிறது.
உறவையும், நட்பையும் தவிர்த்து கைப்பேசியும், தொலைக்காட்சியும், சமூக வலைத்தடங்களும் வாழ்க்கையில் முக்கியமான அங்கங்களாக மாறி வருகின்றன.
அது ஒரு கனாக் காலம்.
‘சஹானா’ சிறுகதைப் போட்டி 2021 முடிவுகள் அறிய இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings