பிப்ரவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
மற்ற பகுதிகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ஸ்டேஜிற்கு அருகில் போட்டோ எடுக்க வசதியாக முட்டி போட்டு உட்கார்ந்து கொண்டு கேமராவை சரி செய்து கொண்டிருந்தவள், “மஞ்சுளா” என்ற அழைப்பில் திரும்பிப் பார்த்தாள்
நந்தகோபால் நின்றிருந்தான்.
பார்த்து கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஆகிவிட்ட போதும், அவனிடம் பெரிதாய் எந்த மாற்றமும் இருக்கவில்லை என நினைத்தாள் மஞ்சுளா
“மஞ்சுளா, என்ன அப்படிப் பார்க்கிறாய்? யாரென்று தெரியவில்லையா? மறந்து விட்டாயா?” என்றான் நந்நகோபால்.
‘இல்லை’ என்று தலையாட்டினாள்.
‘மறக்கக் கூடிய உறவா?’ என்று நினைத்தவள், “எப்படி உள்ளே வந்தீர்கள்? உள்ளே வர எப்படி அனுமதி கிடைத்தது?” என்றாள் எந்த உணர்ச்சியும் இல்லாமல்.
“என்னுடன் வந்த சைனீஸ் டாக்டர் நண்பர், இந்தப் பள்ளியின் பிரினஸ்பாலுடைய நண்பர். அவர் மூலம் தான் உள்ளே வர முடிந்தது. மஞ்சுளா என் இருக்கைக்குப் பக்கத்தில் உனக்கும் இடம் பிடித்து வைத்திருக்கிறேன். அங்கே வந்து உட்கார்ந்து கொள்ளேன்”
“கோபியும் அவன் நண்பர்களும் பியானோ, வயலின் எல்லாம் வாசிப்பதை நான் போட்டோ எடுக்க வேண்டும். இங்கே தான் வசதி”
“என் நண்பர்களிடம், என் மகனைக் காட்டுவதாகக் கூறித் தான் அழைத்து வந்தேன். நான் அவனைப் பார்த்து பல வருடங்களாகி விட்டது. நீ என் அருகில் இருந்தால் கோப்பை சுலபமாக அடையாளம் காட்டலாம் இல்லையா? அதற்காகத் தான்” என்றான் ஏமாற்றத்துடன்.
அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்த மஞ்சுளா, என்ன நினைத்தாளோ, “சரி, வாருங்கள்” என்று அவனுடன் சென்றாள்.
மஞ்சுளாவை தன் மருத்துவ நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தினான் நந்தகோபால்.
கொஞ்ச நேரத்தில் கோபி, பியானோ வாசிக்க மேடை ஏற, மஞ்சுளா அறிமுகப்படுத்தாமலே, நந்நகோபால் சட்டென எழுந்து நின்று, உணர்ச்சி வசப்பட்டு ” கோபி” என்றான்.
“ஆம், கோபி தான். இத்தனை வருடங்கள் கழித்தும் முகம் நன்றாக அடையாளம் தெரிகிறதே” என்றாள் மஞ்சுளா ஆச்சர்யத்துடன்.
கண்கள் கலங்க, பேச வாய் வராமல் திகைப்புடன் கோபியையும், மஞ்சுளாவையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான் நந்தகோபால்.
நிகழ்ச்சி முடிவதற்குள் மஞ்சுளாவிற்கு துக்கம் தொண்டையை அடைத்தது. இருந்தாலும், தன்னை சமாளித்துக் கொண்டு நந்தகோபாலிடமும், அவன் நண்பர்களிடமும், “கோபியை அழைத்துக் கொண்டு போக வேண்டும்” என்று கூறி விடை பெற்றாள்.
கோபியை அந்த கூட்டத்தில் தேடிக் கண்டுபிடித்து அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றாள்.
அன்றிரவு படுத்தவளுக்கு, தூக்கம் தான் வரவில்லை. நந்தகோபாலை அவளால் முழுதாய் நம்ப முடியவில்லை. தேடிப் பிடித்து, ஓடி ஓடி ஒரு தலையாகக் காதலித்து , அண்ணா, அண்ணியை சமாதானப்படுத்தி, திருமணம் செய்து கொண்டான். பிறகு தன் பணத் திமிரைக் காட்டினான்.
ஒரு பெண்ணைக் கொண்டு வந்து வீட்டில் வைத்துக் கொண்டு தன்னை நிர்தாட்சண்யமாக வீட்டை விட்டு வெளியேற்றினான். விவாகரத்தும் கொடுத்து விட்டான். இப்போது மனைவி, மகன் என்று பேசுகிறான் .
இவனெல்லாம் ஒரு மனிதன். இவன் பேச்செல்லாம் ஒரு பேச்சு. இவனை முழுவதுமாக நிராகரிக்காமல், இவனைப் பற்றி தேவையில்லாமல் யோசித்துக் கொண்டு, நேரத்தையும் வீணாக்கி கொண்டு, என்று தன் எண்ணங்களை உதறி தூங்கினாள்.
அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை. மஞ்சுளா எழும் முன்பே, கோபி எழுந்து குளித்து தன் அறையில் ‘ஸ்கைப்’பில் தன் நண்பர்களுடன் வாய்ப்பாட்டு பிராக்டீஸ் செய்து கொண்டிருந்தான்
அன்று மாலை நான்கு மணிக்கு கான்கார்ட் முருகன் கோயிலுக்கு கோபியுடன் சென்றாள் மஞ்சுளா. அங்கு தான் கோபியின் பாட்டுக் கச்சேரி.
அங்கு அவளுக்கு ஒரு அதிசயம் காத்திருந்து. ஆம்… பட்டு வேட்டி, பட்டு சட்டையுடன் நந்தகோபால் வந்திருந்து, கச்சேரி நடக்கும் ஹாலை அலங்கரித்துக் கொண்டிருந்தான்.
வயதானவர்கள் உட்கார பிளாஸ்டிக் நாற்காலிகளும், சோபாக்களும் ஓரமாக வரிசையாகப் போட்டிருந்தான். கீழே பொதுவாக, எல்லோருக்கும் குஷன் வைத்த பலகைகள் வரிசையாகப் போடப்பட்டிருந்தது. கோபிக்கும் அவன் நண்பர்களுக்கும் ஒரே ஆச்சர்யம்.
மஞ்சுளாவையும் கோபியையும் பார்த்தவுடன், வேகமாக அருகில் வந்தான் நந்தகோபால். கோபியைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் பேச வராமல் அப்படியே நின்றான்.
சந்தனக் கலர் பைஜாமாவும், எம்பிராய்டரி வேலை செய்த அரக்கு நிற குர்த்தாவும் அணிந்திருந்தான் கோபி. அவனைப் பார்த்த போது, சிறுவயது புகைப்படத்தை பார்த்ததை போல் உணர்ந்த நந்தகோபால், கண்கள் கலங்க உணர்ச்சி வசப்பட்டு நின்றான்.
“நீங்கள் யார் அங்கிள்? இவ்வளவு கஷ்டப்பட்டு இதெல்லாம் ‘டெகரேட்’ செய்து இருக்கிறீர்கள்?” என்று கோபி கேட்க
“ஐ யாம் டாக்டர் நந்தகோபால் ப்ரம் இண்டியா” என்றான். மேற்கொண்டு பேச விடாமல், கோபியை அவன் நண்பர்களிடம் அழைத்துச் சென்றாள் மஞ்சுளா.
ஆனால் கோபி விடாமல், ‘அவர் யார்?’ என்றான் தன் அம்மாவிடம்
“இப்போது கவனத்தை சிதற விட வேண்டாம், பிறகு பேசிக் கொள்ளலாம். கச்சேரிக்கு நேரமாகி விட்டது பார்” என்றாள் மஞ்சுளா
கச்சேரி களை கட்டியது.
‘கஜவதனா கருணா சதனா’ என்ற விநாயகர் துதியுடன் தொடங்கிய கச்சேரி, ‘ஆடிக் கொண்டார் அந்த வேடிக்கைக் காணக் கண் ஆயிரம் வேண்டாமோ’ என்று பல பாடல்களைப் பாடினான் கோபி.
அவனுடைய நண்பர்களே வீணை, வயலின், டிரம்ஸ் எல்லாம் வாசித்தனர். கச்சேரி முடியும் வரை யாரும் அசையாமல் அமைதியாக ரசித்தார்கள்.
கச்சேரி முடிந்ததும், குழந்தைகளின் உறவினர்களும் நண்பர்களும் அவர்களுக்குப் பரிசளிக்க வரிசையில் நின்றனர்.
பலர் டாலர்களும், சிலர் பொக்கேக்களும் பரிசாக அளித்தனர். வரிசையில் வந்த நந்தகோபால், கச்சேரியில் பங்கு பெற்ற மற்ற குழந்தைகளுக்கு தலா ஐம்பது டாலர்கள் கொடுத்தான். கோபிக்கு மட்டும் தன் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அணிவித்தான் .
அந்தச் சங்கிலி அவன் எம்.பி.பி.எஸ் முடித்து எப்.ஆர்.ஸி.எஸ். சேர்ந்த போது அவன் தாத்தா அளித்த பரிசு.
மஞ்சுளாவிற்கு அது நன்றாகத் தெரியும். குளிக்கும் போது கூட அதைக் கழற்ற மாட்டான், கர்ணனின் கவச குண்டலம் போல். அதை அவன் கோபிக்குப் போட்டவுடன் மஞ்சுளாவிற்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது .
“தங்கச்சங்கிலயெல்லாம் வேண்டாம் அங்கிள்” என்று மறுத்தான் கோபி
“அங்கிள் இல்லைடா கண்ணா, நான் தான் உன் டாடி” என்றான் நந்தகோபால் மெதுவாக.
கோபி சந்தேகத்துடன் தன் அம்மாவைப் பார்க்க, ‘ஆம்’ என்று உணர்ச்சியற்ற முகத்துடன் மெதுவாகத் தலையசைத்தாள்.
நாற்காலிகள், கீழே உட்காரும் பலகைகள் எல்லாவற்றையும் எடுத்து அடுக்கி விட்டு ஹாலை சுத்தப்படுத்தினான் நந்தகோபால். மஞ்சுவும் , கோபியும் அவனுக்கு உதவினர்.
எல்லாம் முடிந்த பிறகு, “கோபி கிளம்பு, வீட்டிற்குப் போகலாம்” என்ற மஞ்சுளா, நந்தகோபாலிடம், “நாங்கள் போய் வருகிறோம்” என்றாள்.
“ஒரு வேண்டுகோள், எனக்கு மிகவும் பசிக்கிறது. என் அறையில் ஃப்ரிட்ஜில் ஒன்றும் இல்லை, கொஞ்சம் களைப்பாக இருக்கிறது. உன் காரில் போய் நல்ல ஹோட்டலில் சாப்பிட்டு வரலாம். பிறகு இங்கு டிராப் செய்து விடு. நான் என் காரை எடுத்துக் கொண்டுப் போகிறேன்…ப்ளீஸ்” என்ற நந்தகோபால்
கோபியிடம் திரும்பி, “கோபி கண்ணா, நாம் ரெஸ்டாரன்டில் சாப்பிடலாமா?” எனக் கேட்டான்.
“ஓ எஸ்… அம்மா, சிப்போட்லே போகலாமா?” என்றான் ஆர்வத்துடன்
பிள்ளையின் சந்தோசத்தை கலைக்க மனமின்றி, உணவகத்திற்கு வண்டியை செலுத்தினாள் மஞ்சுளா
ஆனால் ஹோட்டலில் மஞ்சுளா தான் பணம் கொடுத்தாள். நந்தகோபால் எவ்வளவோ சொல்லியும், பணம் வாங்க மறுத்து விட்டாள். பிறகு நந்தகோபாலை கோயிலில் அவன் கார் அருகில் இறக்கி விட்டு வீடு திரும்பினாள் .
மஞ்சுளாவிற்கு இதெல்லாம் எதுவும் பிடிக்கவில்லை. எப்படி உதாசீனப்படுத்தினான், இப்போது வலிய வந்து பழகுகிறான். எப்படியும் இன்னும் பத்து நாட்கள் தானே
‘கோபிக்கு அவன் தந்தையிடம் ஓர் ஒட்டுதல் இருக்கிறது. நமக்குத் தான் விவாகரத்து. குழந்தைக்கு அவன் தந்தை தானே, நாம் ஏன் அவர்களைப் பிரிக்க வேண்டும்?’ என்று நினைத்தாள்.
அடுத்த இரண்டு நாட்கள் நந்தகோபாலிடமிருந்து எந்த தகவலும் இல்லை. பழகுவதும் பிரிவதும் அவனுக்குக் கை வந்த கலை. அதனால் மறந்திருப்பான் என்று நினைத்து, தன் வேலையில் கவனம் செலுத்தினாள் மஞ்சுளா.
குழந்தை கோபி தான் இவளுடைய செல்போனை மாறி மாறி ‘செக்’ செய்து கொண்டிருந்தான்.
“என்ன கோபி, போனையே பார்த்துக் கொண்டிருக்கிறாய்? என்ன விஷயம்?”
“டாடி இரண்டு நாட்களாக ஏன் போன் செய்யவில்லை?” என்றான் வாடிய முகத்துடன் .
“அவர் டாக்டரல்லவா! ஏதாவது பிஸியாக இருப்பார். நீ பள்ளிக்குக் கிளம்பு” என்றாள் .
“அவருக்கு உடம்பிற்கு ஏதாவது முடியாமல் இருக்குமோ அம்மா?” என்றான் கோபி மிகுந்த கவலையுடன்.
‘பல வருடங்களாக பார்க்காமல், முகம் கூட மறந்த போன ஒரு தந்தையின் மேல், கோபி உள்ளத்தில் எழுந்த பாசத்தை உணர்ந்து ஆச்சரியம் அடைந்தாள். தான் ஆடாவிட்டாலும், தன் சதை ஆடும் என்று பெரியவர்கள் சொல்வது உண்மை தான்’ என்று புரிந்து கொண்டாள்.
‘கோபியைப் புரிந்து கொள்வது இருக்கட்டும். ஆனால் அவளையே அவளால் புரிந்து கொள்ள முடியுவில்லையே. ஒரு மனம் அவனை நிந்தித்தாலும், இன்னொரு மனம் அவன் ஏன் போன் செய்யவில்லை என்று சதா நச்சரிக்கின்றதே’ என்று நினைத்துக் கொண்டாள். அந்த நினைப்பில் அவளுக்கு பெரிதாய் சமையல் செய்யவும் தோன்றவில்லை.
கோபிக்கு பிரட் சாண்ட்விச், கொஞ்சம் ஆப்பிள், ஒரு ஆரஞ்சு பழம், கொஞ்சம் திராட்சை என்று மதிய உணவு கட்டினாள். தனக்கும் அதையே எடுத்துக் கொண்டாள்
அந்த நேரம் அவள் வீட்டு தொலைபேசி அழைத்தது, நந்தகோபால் தான் பேசினான்.
“மஞ்சு… எனக்கு நேற்று திடீரென்று நல்ல ஜுரம் வந்து விட்டது. நண்பர்கள் தான் உடன் இருந்தனர். மருந்து மாத்திரையெல்லாம் சாப்பிட்டதில் நேற்று இரவு முதல் ஜுரம் இல்லை. ரொட்டியும், கஞ்சியும் சாப்பிட்டு நாக்கே மரத்து விட்டது. எனக்குக் கொஞ்சம் சாதமும், ரசமும் செய்து தர முடியுமா?” என்று கேட்டான்.
“சரி” என்று கூறி விட்டு, அவன் தங்கியிருக்கும் அபார்ட்மென்ட் முகவரியை தன் செல்போனில் குறித்துக் கொண்டாள். அருகில் நின்று எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த கோபி, தாயைப் பார்த்து சந்தோஷமாக சிரித்தான்.
புதியதாகத் தக்காளி ரசமும், சாதமும், புதினாத் துவையலும் செய்தவள். பிரிட்ஜில் இருந்து பிஞ்சு கத்தரிக்காய்களும், முருங்கைக்காயும் தொக்காக செய்து அதிலும் கொஞ்சம் எடுத்துக் கொண்டாள்.
எல்லாவற்றையும் சூடாக ஒரு ஹாட் பேக்கில் அடுக்கிக் கொண்டு கிளம்பினாள். போன உடனே சாப்பிடுவதற்கு நான்கு இட்லிகளும், தக்காளிச் சட்னியும் செய்து எடுத்துக் கொண்டாள்.
‘இவனே இந்தியாவில் ஒரு பெரிய டாக்டர், போதாதற்கு அவன் பெற்றோரும் பெரிய டாக்டர்கள். இங்கே வந்து யாருமில்லாத அநாதையாக நல்ல சாப்பாட்டிற்கு ஏங்குகிறான்’ பாவமாக இருந்தது மஞ்சுளாவிற்கு.
அவள் வீட்டிலிருந்து கல்லூரிக்குப் போகும் வழியில், டப்ளின் என்னும் ஊரில் தான் நந்தகோபால் ஒரு அபார்ட்மெண்ட்டில் தன் சைனீஸ் நண்பர்களுடன் தங்கியிருந்தான். மிக சுலபமாக அவன் அபார்ட்மென்டைக் கண்டுபிடித்தாள்.
(தொடரும் – புதன் தோறும்)
‘சஹானா’ சிறுகதைப் போட்டி 2021 முடிவுகள் அறிய இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings