பிப்ரவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
இறுதி ஊர்வலத்திற்கு இன்னும் நேரம் இருந்தது. அவனோ நிம்மதியாய் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்தால் அப்படித் தான் தெரிந்தது. ராஜா மோகன் என்பது அவனுக்கு பெற்றோரால் வைக்கப்பட்ட பெயர், ஆனால் அனைவருக்கும் அவன் ராஜா தான். பெயரைப் போலவே அவனும் ராஜ மரியாதையோடு தான் அனுப்பப்படுகிறான் இடுகாட்டுக்கு.
எவ்வளவு சுலபமாய் முடிந்து போனது முற்றுப் பெறாத ஓர் ஓவியம். வாழ்க்கையில் எதிலும் முதலாய் வந்தவன். பிறந்த பொழுதும் சரி, படித்த போதும் சரி, இப்போது போகும் போதும் சரி, அவன் எல்லோரையும் முந்தி செல்கிறான்.
தொடரும் ரயில் பெட்டிகளாய் வாழ்க்கை, அவரவர் இடம் வந்ததும் இறங்கி செல்வதும், பயணம் மட்டும் தொடர்ந்து இலக்கு இல்லாமல் பயணிக்கிறது.
இன்றும் அவன் எங்களுக்கு கன்னிப் பையன் தான். எவரிடமும் பேச மாட்டான். நத்தை கூட்டுக்குள் தலையை இழுத்துக் கொள்வது போல் அடிக்கடி சுணங்கி விடுவான்.
அவர்கள் வீட்டில் அவனை வேளாண்மையில் பட்டம் பயில அனுப்பினார்கள், அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு. அவனும் படித்து பட்டம் பெற்று வந்தான்.
வீட்டில் நிலபுலன் இருப்பதால், அதில் அவன் புதிதாய் படித்த படிப்பை வைத்து ஏதேனும் பரிசல் பண்ணுவான் என்று எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் தான், அவன் தீர்மானமாய் ஒரு முடிவை சொன்னான்.
சென்னையில் திரைப்பட கல்லூரியில் பயின்று ஒரு சிறந்த இயக்குனராக விரும்புவதாக சொன்னான். வீட்டில் அனைவரும் திகைத்து போயினர். எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. கடைசியில் அவனது விருப்பமே வென்றது.
ஆயிரமாயிரம் அறிவுரைகள் சொல்லி அவனை அனுப்பி வைத்தனர். அதற்கு முன்னால் அவனுக்கு இந்த மாற்றத்திற்கான காரணத்தை கேட்டு அறிந்தனர்.
ராஜா மோகன் கல்லூரி இறுதியாண்டு படிக்கும் சமயம், கல்லூரி விழாவில் அவன் எழுதிய நாடகத்திற்கு முதல் பரிசு கிடைத்தது. அதோடு நில்லாமல் அவனுக்கு நெருக்கமான பேராசிரியர் அவனை சென்னையில் உள்ள திரைப்படக் கல்லூரியில் பயின்று உன்னால் சிறந்த இயக்குனராக முடியும் என்ற நம்பிக்கையை அவனுள் விதைத்தார்
போதாதா? வீட்டில் அனைவரும் அந்த பேராசிரியரை மனதிற்குள் சபித்தனர். இருந்தாலும் மகனுக்காக தாயும் அதை பொறுமையாய் ஆமோதித்து அவனை சென்னைக்கு அனுப்பி வைத்தாள்.
வீட்டில் பெரிய பையன் என்பதால் அவனுக்கு ஏராளமான சலுகைகள். இவனுக்கு அடுத்து பிறந்தவர்கள் அனைவரும் பெண்களாய் இருந்ததால், இவனுக்கு கூடுதல் கவனிப்பு வேறு.
அடுத்தடுத்து ஐந்து பெண்களுக்கு பிறகு தான் இரண்டு மகன்கள் பிறந்தனர். நெல்லை சீமையில் அவனது தந்தை காவல்துறையில் பெரிய பதவியில் இருந்ததால், அவனுக்கு எல்லாமே எளிதில் கிடைத்தது.
அதுவே அவனுக்கு பெரிய தூண்டுகோலாய் அமைந்தது. எதையும் சாதித்து விடலாம் என்ற எண்ணத்தில் சென்னைக்கு ரயிலேறினான். விதியும் அவனோடு சேர்ந்து ஏறியது அவனறியாமலே.
‘கெட்டும் பட்டணம் போய்ச் சேர்’ என்பது சொலவடை. அது தெரியாமல் ராஜா மோகனும் சென்னைக்கு வந்து சேர்ந்தான்.
திரைப்படக் கல்லூரியில் அவனுக்கு சிபாரிசு கடிதம் கொடுத்து அனுப்பியதால், எளிதாய் இயக்குனருக்கு படிக்கும் படிப்பு கிட்டியது. அப்போதே அவன் இயக்குனர் ஆகிவிட்டதை போல் உணர்ந்தான்.
கல்லூரி விடுதியில் மாணவ மாணவியரின் கும்மாளத்தை பார்த்து அரண்டு போன ராஜா, தன்னுடைய ஜாகையை ஆதம்பாக்கத்துக்கு மாற்றினான். தனியாக ரூம் எடுத்து தங்கினான்.
உடன் படிக்கும் மாணவர்களோடு, “ஹலோ… ஹாய்…” அவ்வளவு தான்.
கல்லூரியில் முதலாம் ஆண்டு அனைவரும் ராகிங் பண்ணும் போது அதை சகஜமாக எடுத்துக் கொள்வர். ஆனால் ராஜா மோகனுக்கு எரிச்சலானது. இதே போல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்த போது, தந்தையிடம் சொல்லி ஸ்டேசனில் இருந்து போலீஸார் வந்து சீனியர் மாணவர்களை கண்டித்து சென்றனர்.
ஆனால் இப்போதோ நிலைமை தலைகீழ், இவன் அடம் பிடித்து வந்ததால் அப்பா இவனோடு பேசுவதை நிறுத்தி விட்டார். அம்மாவிடம் சொன்னாலோ அவ்வளவு தான், ‘படித்தது போதும் பேசாமல் கிளம்பி வா’ என்று சொல்லி விடுவார்களோ என்ற அச்சம், அனைத்தையும் சகித்து கொண்டு வாழ கற்றுக் கொண்டான்.
சென்னைக்கு புதிதாய் யார் வந்தாலும் நிச்சயம் பிரமித்து போவார்கள், ராஜாவும் விதிவிலக்கல்ல. சென்னையில் யாரோடும் ஒட்டாமல் ஒரு தனித்தீவாய் வாழ்ந்து வந்தான்.
எல்லோரையும் ஒரு சந்தேகத்தோடு பார்க்க ஆரம்பித்தான், விளைவு இவனுடன் எவரும் பழக விரும்பவில்லை. தூரமாக வைத்திருந்தனர். ஏதோ தீண்ட தகாதவனாக தன்னை உருவகப்படுத்தி விட்டதாக சில சமயம் என்னோடு பேசும் போது சொல்லுவான்.
அவனுடைய பால்ய கால நண்பன் என்பதால் எதையும் என்னிடம் மறைத்ததில்லை. அதோடு நில்லாமல் புகைப்பிடிக்கவும் கற்றுக் கொண்டான்.
“என்னடா இது புதுப் பழக்கம்?” என்று கேட்ட போது
“சினிமாவில் இதெல்லாம் சகஜம்” என்றான்
மது, மாது, புகை இல்லாத சினிமா இல்லை என்றான். இவையெல்லாம் பெரிய மனித தோரணை என்று எனக்கே அறிவுரை கூறுவான்.
அவன் திரைப்பட கல்லூரியின் கடைசி வருடத்தில் இருந்தான். சென்னைக்கு வரச் சொல்லி என்னை அழைத்தான். வீட்டில் பெரியவர்களை கவனித்து கொண்டிருப்பதால் என்னால் அவனுடைய அழைப்பை ஏற்க முடியவில்லை. இருந்தாலும் அவ்வபோது அவனை சென்று பார்ப்பதுண்டு.
அப்போதெல்லாம் கதை விவாதத்திற்கு என்னையும் சேர்த்து கொள்வான். காரசாரமாக நடக்கும். இவனுடைய குரல் ஓங்கி ஒலிக்கும். கதை சொல்வதில் சமர்த்தன். எப்போதும் தன்னை ‘ஒன் மேன் ஆர்மி’ என்று சொல்லிக் கொள்வான்.
எனக்கு தமிழில் தட்டச்சு செய்ய தெரியும் என்பதால், அவனுடைய கதையை என்னிடம் கொடுத்து கணினியில் சேமித்து வைக்க சொல்லியிருந்தான்.
ஊருக்கு வரும் சமயம் அது குறித்து என்னோடு விவாதம் செய்வான். ஏதேனும் பிழை இருந்தால் அதை சரி பார்த்து திருப்பி அடிக்க சொல்லுவான். படங்கள் பற்றி நிறைய பேசுவோம். ஒரு படத்தை பார்த்து விட்டு வந்து மணிக்கணக்கில் பேசிய காலங்கள் உண்டு.
ஒருமுறை “நியூ” படம் பார்த்து விட்டு வந்து, ஏறக்குறைய நடுநிசி வரையில் பேசிய அனுபவம் உண்டு.
அவனுக்கு கால அவகாசம் போடுவது பிடிக்காது. இயக்குனருக்கு இந்த இடத்தில் இப்படி செய்திருக்கலாமே என்று சொல்லுவான்.
“5 ஆண்டுகள் கழித்து / 8 மாதங்கள் கழித்து/ 2 வருடங்கள் கழித்து இப்படி கேப்ஷன் போடுவதெல்லாம் எஸ்கேபிசம்” என்று சொல்லுவான்.
அப்போதெல்லாம் அவனிடத்தில், “இயக்குனர் எதை நினைத்து அப்படி செய்திருப்பார் என்று தெரியாது, ஆனால் அவர் ஒரு தயாரிப்பாளரிடம் இந்த கதையை சொல்லி ஒப்புதல் வாங்கி, அதற்கு ஊதியமும் வாங்கி, இன்று பட்டி தொட்டியெல்லாம் பாராட்டி கொண்டிருக்கிறது” என்று சொன்னால் கோபித்து கொள்வான்.
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் அவனுடைய கதையிலும் அப்படி ஒரு சூழல் வந்த போது, அவனிடம் கேட்டேன்
சிரித்து விட்டு, “அது அவரவர் விருப்பம்” என்று மட்டும் சொன்னான்.
பின்னொரு சமயம் எனக்கு போன் செய்து அவனுடைய கதை ஒரு நாளிதழில் பிரசுரம் ஆகி இருப்பதாகவும், நேரம் கிடைக்கையில் தவறாது படிக்கவும் என்று கூறி இருந்தான்.
அதிர்ஷ்டவசமாய் அந்த நாளிதழ் எங்கள் வீட்டிலும் வாங்குவதால் அந்த கதையை படித்தேன் நன்றாகவே இருந்தது. உடனே அவனை அழைத்து பாராட்டினேன். மிகவும் சந்தோசமடைந்தான்.
அவனிடத்தில் நிறைய கதைகள் இருப்பதாகவும் அதையெல்லாம் இயக்குனரான பின்பு நிச்சயம் வெளியிடுவதாகவும் சொல்லியிருந்தான். நிச்சயம் நடக்குமென்று அவனுக்கு நம்பிக்கையுரைத்தேன்.
அவனுக்குள்ளும் சில குறைகள் இருந்தது. எல்லோரும் அவன் சொல்வதை ஒத்துக் கொள்ள வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பான். தான் சொல்வது மட்டுமே சரி என்று சரிக்கு சரி வாதிடுவான். எவரையும் எடுத்தெறிந்து பேசி விடுவான்.
அதற்குப் பின் வருத்தப்பட்டு என்ன பிரயோசனம், அதை மாற்றிக் கொள்ள சொல்லி அவனிடம் பலமுறை சொல்லியதுண்டு. ஒருமுறை இப்படித் தான் எனக்கு நன்கு அறிமுகமான ஒரு தயாரிப்பாளரிடம் ராஜா மோகனை அழைத்து சென்றிருந்தேன்.
மரியாதை நிமித்தமாக, அவரிடம் “என் நண்பன்” என அறிமுக படுத்தினேன். இவரிடம் கதைகள் இருப்பதாகவும் கேட்க விருப்பப் பட்டால் இவர் சொல்வார் என்றும் சொன்னேன்.
அவரும் உடனே சரி என்று சொல்லி விட்டார். இதை நானே எதிர் பார்க்கவில்லை. ராஜாமோகனும் கதையை அவரிடம் சொல்ல ஆரம்பித்தான்.
அவரும் மிகவும் பொறுமையாக கதையை கேட்டார்
டைட்டில் கார்டிலிருந்து… எண்டு கார்டு போடும் வரை கதையை சொல்லி முடித்தான், ஏறக்குறைய 2 மணி நேரம். கதையை சொல்லி முடித்ததும், அவர் ராஜா மோகனிடம் கதையில் சில திருத்தங்கள் செய்ய சொன்னார்.
அப்போது தான் யாரும் எதிர்பாரா வண்ணம் ஒரு விசயம் நடந்தது. எப்போதும் போல் ராஜா மோகன் தன்னுடைய இன்னொரு முகத்தை அவருக்கு காட்டினான்.
“சார், நீங்க படம் தயாரிக்கிறீங்கன்னா அத்தோடு நிறுத்திக்குங்க. என் கதைல ஏதாவது திருத்தம் சொல்ற வேலையெல்லாம் வச்சிக்காதீங்க” என்று சற்றே எரிச்சலான தொனியில் சொன்னான்.
அவர் அப்படியே வெல வெலத்து போனார், நானும் தான். இதை நானே எதிர்பார்க்கவில்லை. அவர் அமைதியாக என்னைப் பார்த்தார். அந்த பார்வையில் ஆயிரம் அர்த்தம் பொதிந்திருந்ததை என்னால உணர முடிந்தது
அப்படியே வெட்கி தலை குனிந்து நின்றேன். அவர் என்னருகில் வந்து, “நல்ல நண்பனை எனக்கு அறிமுகப்படுத்தின” என்று ஒருமையில் சொல்லி விட்டு சென்று விட்டார்.
அதுவரை அவர் என்னிடம் அப்படி பேசியதில்லை. அவரை காயப்படுத்தியது என்னையே காயப்படுத்தியது போல் உணர்ந்தேன். அவனுடைய அறைக்கு செல்லும் வரையில் இருவரும் பேசிக் கொள்ளவில்லை.
அவனை அவனது அறையில் விட்டுவிட்டு எதுவும் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பி வந்து விட்டேன்.அவனிடம் இருந்து போன் வருவது நின்று போனது.
அலுவல் நிமித்தமாக சென்னைக்கு வந்திருந்தேன் சென்று பார்க்கலாம் என அவனுக்கு போன் செய்தேன். அவன் ஊரில் இருப்பதாக சொன்னான். அவனுடைய குரலில் ஒரு கலக்கம் இருந்ததை உணர முடிந்தது. அப்புறம் அதை மறந்தே போனேன்.
அதன் பின் ஒருநாள் அவனிடமிருந்து எனக்கு போன் வந்தது. என்னை பார்க்க விரும்புவதாக கூறினான். அவனைப் போய் பார்த்த போது ஆளே மாறி போயிருந்தான், இல்லையில்லை உருக்குலைந்து போயிருந்தான்.
பதறிப் போனேன், “என்னடா?” என்று கேட்ட போது, தனக்கு ஆட்கொல்லி நோய் (கேன்சர்) வந்திருப்பதாக கூறினான். அதோடு நில்லாமல் மஞ்சள் காமாலையும் சேர்த்து வாட்டி வதைக்கிறது என்றும் கூறினான்.
என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை இன்னும் சிறிது நேரம் அங்கு நின்றிருந்தால் அழுது விடுவேன் என்றெண்ணி வீட்டில் அப்பாவிற்கு மாத்திரை கொடுக்க வேண்டும் என்று சொல்லி விட்டு வந்தேன்.
ஆனாலும் அன்று முழுதும் அவன் என் மனதில் நிழலாடி கொண்டிருந்தான். அவனுடைய தங்கைகள் அனைவருமே மருத்துவக் கல்வி பயின்றவர்கள், நிச்சயம் அவனை காப்பாற்றி விடுவார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் இதோ இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள வந்திருக்கிறேன்.
கல்லூரியில் படிக்கும் காலத்திலும் சரி, சென்னையில் இருந்த காலத்திலும் சரி, காதல் குறித்து நிறைய பேசுவான், ஆனால் வெளியில் சொல்ல மிகவும் தயங்குவான்.
கனவுகளில் புதைந்து போனான், தன்னுடைய முதல் காதலை இந்த உலகத்து சொல்லாமலே…
(முற்றும்)
‘சஹானா’ சிறுகதைப் போட்டி 2021 முடிவுகள் அறிய இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings