ஜனவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
அப்பாவின் டார்ச்லைட்
பச்சை மஞ்சள் சிவப்பு நீலமென
வரிசையாய் அணிவகுக்கும்
அம்மாவுக்கென பிரத்யோகமான
அப்பாவின் பொய்கள்
எப்போதும் கைவசமிருக்கும்
அவரின் டார்ச் லைட் போலவே
எனக்குப் பிடித்தது பச்சை
தம்பிக்கு மஞ்சள்
பேட்டரி கழட்டி
பல்பு எரியவைத்து
விஞ்ஞானிகள் ஆன
நாட்கள் அவை
முகத்தில் ஒளிரும்
டார்ச் லைட் வெளிச்சம்
பிடித்த விளையாட்டு
அன்றொரு நாள்
படியேறி வந்த அப்பா
பின்வாசல் வழியே
வழிதெரியா ஊருக்குச் செல்ல
ஸ்ட்ரெச்சரில் சென்றவர் கையில்
அவருக்குப் பிடித்த டார்ச்சு இல்லை
ஒரு மழை நாளில்
ஒரு மழை
உலகையே அழகாக்கி விடுகிறது
வெறும் தூரல் தான் – ஆனாலும்
பூக்களுக்கு தான் எத்தனை சிரிப்பு
குடம் குடமாய் நீரூற்றியும்
காணாத பச்சையை
சிறுதூறல் சாதித்து விட்டது
மலர்களிலெல்லாம் முத்துக்கள்
மாஞ்செடிக்கும் அத்திக்கும்
மனங்கொள்ளா கொண்டாட்டம்
மழைநாளில் பயணம் செய்வோர்
ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்
அழகான இந்த மழை
அனைத்தையும் சுத்தமாக்கி விடுகிறது
புற அழுக்கை மட்டுமல்ல
அக அழுக்கையும் சேர்த்து
சின்னத் தமிழ் அய்யா
இடுப்பிலே வேட்டியில்லை
தோளிலே துண்டுமில்லை
படிய வாரிய தலை
நெற்றியில் குங்குமப் பொட்டு
பாக்கெட்டில் இங்க் பேனா
எப்போதும் பேண்ட் சர்ட்
காதிலே நீளும் முடிகள்
மணக்கும் அத்தர் வாசம்
காலையில் முதல் வேலை
பள்ளியை சுத்தம் செய்தல்
சற்றே தாமதமானால்
காலில் கோடிழுக்கும் ஈச்சம் பிரம்பு
ஓடித்தப்பித்தல் எங்களுக்கு
தினந்தோறும் விளையாட்டு
மரத்தடியில் தமிழ் படிக்க
பாக்கியம் செய்திருந்தோம்
எப்போதும் எனைப் புகழ
காற்றிலே மிதப்பேன் நானும்
பள்ளி இறுதி வகுப்பில்
சற்றே மதிப்பெண் குறைய
இன்னும் அழுகிறேன் நான்
தம்பியின் திருமணத்தில்
கம்மிய குரலில் சொன்னார்
‘நான் உங்களையெல்லாம்
அப்படி கஷ்டப்படுத்தியிருக்க வேண்டாம்’ என
மனசிலே உயர்ந்து நிற்க
அனைவரும் வீழ்ந்தோம் காலில்
இக்கவிதையும் கூட
தாங்கள் இட்ட பிச்சை
எத்தனை பிறவி எடுத்தும்
ஈடு செய்ய இயலாதய்யா
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings