in ,

தெய்வமும் அன்றே கொல்லும் (சிறுகதை) – ✍ பவானி உமாசங்கர், கோவை மாவட்டம்

தெய்வமும் அன்றே கொல்லும் (சிறுகதை)

இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 96)

து என்னைப் பற்றிய கதை என்றால் நீங்கள் ஏமாந்து போவீர்கள். இது உங்களைப் பற்றிய கதை தான்

அந்த புதிய பூங்காவிற்கு காலையில் நடைப் பயிற்சிக்காகவும், மாலை பொழுது போக்கிற்காகவும் பல தரப்பட்ட மனிதர்கள் வந்து போயினர். சிறுவர்களின் சந்தோஷக்  கூச்சலும், பெரியவர்களின் சளசளப் பேச்சுமாகப் பூங்கா களை கட்டியது

சாலையோரத்தில் இருந்தவரை கிடைக்காத புதிய அனுபவங்கள், என்னையும் அந்தப் பூங்காவினுள் இணைத்த பின் அங்கு வருபவர்களால் எனக்குக் கிடைத்தது

மனித மனங்கள் தான் எத்தனை விசித்திரமானது. நிர்மலமான மனத்தில் தன் அகங்காரங்களை நிரப்பி மனிதன் அதை விகாரமாக்கி  விடுகிறானே, என்ன செய்வது?

எனக்கு வியப்பாக இருந்தது. பூங்காவினுள் ஒரு ஒரமாகயிருந்த என்னைச் சுற்றி அழகான திண்ணை ஒன்றைக் கட்டியிருந்தனர். பூங்காவிற்கு வருபவர் என் நிழலில் இளைப்பாறலாம் என்ற நல்லெண்ணமே.

அன்று வயது முதிர்ந்த இரு பெரியவர்கள் என்  நிழலில் வந்து அமர்ந்தனர்.

அவர்களில் ஒருவர், “என்ன பாலு முகம் வாட்டமாயிருக்கே என்னாச்சு?” என்றார் மற்றவரிடம்

“என்னத்தச் சொல்ல ரகு, நான் போன பிறகு உங்களுக்கு நல்ல சாப்பாடே கிடைக்காதுன்னு என் மனைவி கொடுத்த சாபம் பலிக்குதுப்பா. என் மருமக சமைக்கிறது கொஞ்சம் கூட நல்லாயில்ல.

அது மட்டுமில்லாம, நான் சாப்பிட ஆரமிக்கும் போது தான் வீட்டில அது இல்லை இது இல்லை, ரேஷன் பொருட்கள் இன்னும் வாங்கலைன்னு மருமக எதையாவது சொல்லுவா, எனக்கு சாப்பாடே இறங்காது. நான் எப்படி மகிழ்ச்சியா இருக்கறது சொல்லு” என்று திருப்பிக் கேட்டார் பாலு

“அட என்னப்பா இதுக்கெல்லாம் சங்கடப்படலாமா? என் மனைவி  இறந்த பிறகு எனக்கும் கஷ்டமாகத் தான் இருந்தது. ஆனா இப்ப சமையல் வேலைல மருமகளுக்கு உதவி செய்யறேன். காய் வெட்டித் தரது, கடை கண்ணிக்குப் போறது குழந்தைகளுக்கு படிப்பு சொல்லித் தரதுன்னு எல்லாம் செஞ்சி தரேன்

வீட்ல பொம்பளைங்களுக்கு ஆண்கள் உதவியாயிருந்தா அவங்களால நல்லா பொறுமையா சமைக்க முடியும். நமக்கும் சும்மாவே இருந்தா மனசு எதையாவது நினைக்கச் சொல்லும். எனக்கு மட்டும்தான் இப்படி நடக்குதுன்னு நினைக்காதே, உலகத்தில எல்லா தம்பதிகளும் இதை அனுபவிச்சுத் தான் ஆகணும்

யாரோ ஒருத்தர் முன்னாடிப் போகணும், மத்தவங்க இந்த சிரமத்தை  பட்டுத் தான் ஆகணும். உன் மருமகளுக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்.எல்லாத்தையும் சாதாரணமா எடுத்துக் கொள்ளப் பழகிக்கோ, மனதை வறுத்திக்காதே பாலு. சியரப், சியரப்” என்று  சிரித்தார் ரகு

பாலுவும், “ம்… நானும் பழகிக்கறேன்” என்று கூறி சிரித்தார்.

ஓ… மனிதர்களுக்கு இந்த மாதிரி எல்லாம் துன்பங்கள் இருக்கிறதா, எல்லாம் மனம் செய்யும் வேலை என் நான் நினைத்துக் கொண்டேன்.

பூங்காவினுள் சிறுவர்கள் வந்தால் எனக்கு கவலையாகி விடும். அவர்கள் என் மீது ஏறி என் விழுதுகளைப் பிடித்துத் தொங்குவதும், கால்களினால் ஒருவரை ஒருவர் இடித்துக் கொள்வதும் பார்க்கவே எனக்கு பயமாக இருக்கும்

“தம்பிகளா… கீழே விழுந்து விடாதீர்கள்” என்று நான் சொல்வது அவர்கள் காதில் விழுந்தால் தானே. சிறுமிகள் என்றால் அவர்கள் கொண்டு வந்துள்ள விளையாட்டுப் பொருட்களை வைத்து அழகாக விளையாடுவார்கள், பார்க்க ரம்யமாக இருக்கும்

னால் ஒரு நாள் என் திண்ணையில் அமர்ந்து இரு இளம் பெண்கள் பேசியதைக் கேட்டு, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது

“வீட்டுக்குப் போகவே எனக்கு வெறுப்பாயிருக்கு கீர்த்தனா” என்றாள் ஒரு பெண் தன் எதிரிலிருப்பவளைப் பார்த்து

“ரொம்ப அலுத்துக்காத ஸ்நேகா, நல்லதே நடக்கும் என்று நினை. டாக்டரிடம் போய் டெஸ்ட் எடுத்துட்டு வந்துட்டீங்க, உனக்கும் உன் கணவருக்கும் ஒரு பிரச்சினை யும் இல்லைன்னுட்டாங்கன்னு சொன்ன, இன்னும் எதுக்கு கவலைப்படறே” என்றாள் அந்தப் பெண் கீர்த்தனா

“அடிப்போடி… எங்க வீட்டுல வந்து பாரு என் மாமியார் பண்ணுற அலும்பல. எங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆகி எண்ணிப் பத்தாவது மாசம் குழந்தை வந்தாச்சு. உங்களோட கல்யாணம் ஆன எல்லாருக்கும் குழந்தை பிறந்தாச்சு.

உனக்கு இரண்டு வருஷமாகியும் வாந்தியும் வரலை மசக்கையும் இல்ல, நல்லா வந்து வாய்ச்சு இருக்கேனு, வீட்டுக்குப்  போன உடனே ஆரமிச்சிடுவாங்க. இதைக் கேட்டா என் வீட்டுக்காரர் மூடு அவுட்டாகிடுவாரு, அப்பறம் எல்லாமே ஸ்பாயில் ஆயிடும்.” என்றாள் ஸ்நேகா கவலையுடன்

“கடவுளை வேண்டிக்கோ ஸ்நேகா” என்ற கீர்த்தனாவிடம்

“அது இருக்கு நிறைய, என் அம்மாவும் மாமியாரும் மாறி மாறி வேண்டுதலும் பிரார்த்தனையுமா சொல்லி நான் செஞ்சுட்டுத் தான் இருக்கேன்” என்றாள் ஸ்நேகா அலுப்புடன்

“ரொம்ப மனசுக்கு சங்கடமாயிருந்தா உங்க அம்மா வீட்டுக்குப் போய் ஒரு பத்து நாட்கள் தங்கிட்டு வாயேன்” என்றாள் கீர்த்தனா ஆறுதலாக

“அங்க போனா என் அம்மா மூக்கைச்  சிந்தி என்னையும் அழ வைப்பாங்கடி, என்னவோ கடவுள் விட்ட வழி” என பெருமூச்சு விட்ட ஸ்நேகா, “சரி வா கிளம்புவோம், லேட்டானா அதுக்கு வேற நான் பாட்டு வாங்கணும் என் மாமியார் கிட்ட” என்றாள் சலித்தபடி

கீர்த்தனாவும், “சரி பை நாளைக்குப் பார்க்கலாம்” எனக் கூறியபடி இருவரும் வீட்டுக்குக் கிளம்பினர்

இந்த சங்கடம் மரங்களுக்கு இல்லை என நினைத்த எனக்கு சிரிப்பு வந்தது. ஆனால் இங்கே பெண்ணுக்கு பெண்ணே எதிரி, இதை என்னவென்று சொல்வது

நான்கு நாட்கள் கழித்து, அன்று காலை தான் அந்தப் பூங்காவின் வாட்ச்மேன் கந்தன் பூங்காவிற்கு வந்தார். அவருடன் சிறுமி ஒருத்தியும் வந்திருந்தாள்.

பூங்காவிற்கு நடைப்பயிற்சிக்கு வழக்கமாக வருபவர், “என்ன வாட்ச்மேன் நாலைந்து நாட்களா உங்களைக் காணோம், இது யாரு பொண்ணு” என நான் நினைத்த கேள்விகளைக் கேட்டார்

“என் பேத்திங்க, இவங்க அம்மாதான் உடம்பு சுகமில்லாம நாலு நாளைக்கு முன்ன இறந்துடுச்சுங்க. இது பாவம், வாய் பேச முடியாத பொண்ணு. இது என் மாப்பிள்ளைக்கு பாரமாயிடுச்சு போல, என் கூட அனுப்பி வைச்சுட்டாரு” என்றவர், கலங்கிய கண்களை மேல் துண்டால் துடைத்துக் கொண்டார்

“கவலையை விடுங்க, கடவுள் இருக்காரு, வயசு காலத்தில உங்களுக்கு ஒரு பிடிமானம்” என்று கூறி, ஆறுதலாக அவர் கந்தனின் தோளைத் தட்டிக் கொடுத்து விட்டு நடைப்பயிற்சியைத் தொடர்ந்தார். 

கந்தன் தன் பேத்தியிடம், “ஜோதி நீ இங்கனயே உட்கார்ந்துக்க, தாத்தா அந்தப் பக்கத்து செடிகளுக்கெல்லாம் தண்ணி ஊத்திட்டு வந்துடறேன்” என்று ஜாடையில் கூறிவிட்டு, என் சுற்று மேடையில் அவளை அமர வைத்தார்.

முதலில் ஜோதி என்னைப் பார்த்து மருண்டு விழித்தாள். அதன் பின் என்னை நன்கு நிமிர்ந்து பார்த்தவள், சிநேகமாகச் சிரித்தாள், அவள் தாத்தா கந்தனைப் போலவே

கந்தன் செடிகளுக்கு நீர் ஊற்றும் போது அவரைப்  பார்த்தால் பைத்தியம் என்றே எண்ணுவர்

“என்னம்மா வாட்டமாயிருக்க தாத்தா வர நேரமாயிடுச்சில்ல” எனச் சின்ன செடிகளைப் பார்த்துக் கேட்பார் .

அதுங்ககிட்ட, “சாப்பிடு, நல்லா சத்த ஊறுஞ்சிக்க, அப்ப தான் நீ பெரிசாக முடியும்”னு சொல்லுவார்  

பெரிய மரங்களைப் பார்த்து, “சின்னதுங்கள பயமுறுத்தாதீங்க சரியா?” என்பார்.

ஜோதி வாய் பேச முடியாவிட்டால் என்ன, அவள் மனம் என்னோடு பேசியது. என் விழுதுகளைப் பிடித்துப் பார்த்தவள், என் அருகே வந்து அமர்ந்தாள். கந்தனைப் போலவே ஜோதியும் என்னுடன் பேசினாள்

“நீ இங்கனயே தான் இருப்பியா, உன்னால நடக்க முடியாதுல்ல” என்றவள், “என்னால பேச முடியாது” என்று சிரித்தாள்

அவள் நிலை அறிந்து என்மனம் கவலை கொண்டது. மனிதர்களுடன் பழகி மனமெனும் நோய் என்னையும் பற்றிக் கொண்டது

கந்தன் மனைவியை இழந்து தனி ஆளாக இருப்பதால், அவர் தன் பேத்தி ஜோதியை பூங்காவிற்கு தன்னுடன் அழைத்து வருவது வாடிக்கையானது.

ஜோதியும் என் அருகில் அமர்ந்து விளையாடுவாள். சில நேரம் என் விழுதுகளைப் பிடித்துத் தொங்குவாள். பல நேரம் அமைதியாக என் மேல் சாய்ந்து அமர்ந்து கொள்வாள். எங்கள் மௌன மொழி யாருக்கும் புரியாது.

அன்று என் மேல் சாய்ந்து அமர்ந்தவாறே, “என் அம்மா இல்லாம எனக்கு தூக்கமே வர மாட்டேங்குது. இனிமே நீதான் என் அம்மா, உன் மடியில் படுத்துத்  தூங்கறேன்” என்றவள், கண் மூடித் தூங்கினாள். என் இலைகள் ஓசையின்றி அவள் மேல் காற்றை வீசின

அப்போது பூங்காவினுள் பறட்டைத் தலையும் சிவந்த கண்களுடன் இருந்த இளைஞன் ஒருவன் வந்து, என் திண்ணையில் அமர்ந்து ஜோதியையே பார்த்துக் கொண்டிருந்தான்

முதல் பார்வையிலேயே எனக்கு அவனைப் பிடிக்கவில்ல. சற்று நேரத்தில் வேலை முடிந்து அங்கு வந்த கந்தன், அந்த இளைஞனைப் பார்த்து, “என்ன வீரா இங்கே வந்துருக்கற என்ன விஷயம்?” என்று சற்று அதட்டலாகக் கேட்டார்

கந்தனின் அதட்டலில் திடுக்கிட்டவன், “பரீட்சை வருது அதான் இங்க வந்து படிக்கலாம்னு” என்று தயங்கிபடி கூறினான் வீரன்

“படி படி உங்க அம்மாவும் ரொம்ப கஷ்டப்படுது, நீ கொஞ்சம் பொறுப்பாயிருந்தா தானே ஆகும். நீயும் உன் பிரண்டுகளோட சேர்ந்து குடிக்கறேன்னு சொன்னா உங்க அம்மா, இதெல்லாம் நிறுத்திட்டு படிச்சு பாஸ் பண்ணற வழியைப் பாரு.” என்று கூறியவர்

ஜோதியைப் பார்த்து, “தூங்கிட்டையா நீ” என அவளைத் தூக்கித் தோளில் சாய்த்துக் கொண்டார்

அதன் பின் வீரனைப் பார்த்து, “நான் வீட்டுக்கு போகணும், பார்க் கேட் பூட்டிடுவேன். நீ வெளிய போய்க்கப்பா” என்றார் கந்தன்

“தாத்தா நான் இங்க செத்த நேரம் படிச்சுட்டு அப்புறம் வாரேன்” என்ற வீரனிடம்

“கேட் பூட்டிட்டா எப்படி வெளியே வருவ?” என்றார் கந்தன் சலிப்புடன்

அதற்கு வீரன் “அதெல்லாம் வந்துக்குவேன் தாத்தா  நீங்க போங்க” என்று கூறிச்  சிரித்தான்

“ம்… செவுரை எட்டி குதிச்சு வந்துடுவ, நீங்கெல்லாம் என்னைக்கு நேர் வழியில வந்துருக்கீங்க” என முணுமுணுத்தபடி சென்றார் கந்தன்.

அன்று மதிய நேரத்தில் கந்தன் ஜோதியைக் கூட்டிக் கொண்டு களை கொத்துடன் பூங்காவினுள் நுழைந்தார். ஜோதியை திண்ணையில் அமரச் செய்தவர் என்னை நிமிர்ந்து பார்த்தார்

“அட… இந்தக் கிளை பசங்க பாரம் தாங்காம முறியவே முறிஞ்சுடுச்சா. இந்த பசங்க இங்கே வந்தா மரத்து மேல ஏறி கிளையில் குரங்கு மாதிரி தொங்குறானுங்க, சொன்னா கேட்டா தானே. இதை சரி செய்யணுமே, இல்லேன்னா திரும்ப இதுலையே தொங்கி கிளை முழுசும் முறிஞ்சு கீழே விழுந்தா பசங்களுக்கு அடி பட்டுடுமே”  எனத் தனக்குள் பேசியவர்

என்னைப் பார்த்து, “உனக்கு வலிக்குதாம்மா,சரி செய்துடறேன்” என்று வாஞ்சையுடன் கூறினார்

அதன் பின்  ஜோதியிடம், அந்தக் கிளையின் கீழ் உட்காராதே என அவளை பத்திரப்படுத்தி விட்டு, களை எடுக்கச் சென்றார். 

சற்று நேரத்தில் பூங்காவிற்கு வந்த வீரன், ஜோதியின் அருகில் சென்று சாக்லேட் ஒன்றைக் கொடுத்தான். அதைக் கையில் வாங்கிய ஜோதி முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்து விட்டு வாயில் போடாமல் வைத்திருந்தாள்

வீரனும் கண்கள் சிவந்து ஒரு மாதிரியாக இருந்தான். எனக்கு எதுவோ தப்பாகத் தெரிந்தது. வீரன் வற்புறுத்தியதால் இனிப்பை சாப்பிட்ட ஜோதி, சிறிது நேரத்தில் துவண்டு படுத்து விட்டாள்

அதுவரை ஜோதியையே பார்த்துக் கொண்டிருந்த வீரன், அவளைத் தூக்கிக் கொண்டு எனக்குப் பின்புறம் சென்றான். எனக்கு பதை பதைத்தது, சிறுவர்கள் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடும் பொழுது ஒழியத் தேர்வு செய்யும் மறைவிடம் அந்த மூலை

‘கடவுளே இவன் ஜோதியை என்ன செய்யப் போகிறான்’ என் நெஞ்சம் நடுங்கிப் பதறியது. கல்லடி பட்டாலும் கனி கொடுக்கும் வர்க்கம் நான், இந்த கேடு கெட்ட மனிதர்களைப் பார்த்து எனக்கும் கோபம் தலைக்கேறியது.

அவன் கெட்ட காலமோ, ஜோதியின் நல்ல காலமோ வீரன் தன் புத்தகப் பையை எடுக்க எனக்கு முன் வந்தான். காற்றும் வேகமாக வீச, எனக்கு வந்த ஆத்திரத்தில் அந்தப்  பாதி முறிந்த கிளையை வேகமாக உந்தித் தள்ள, அதன் நேர் கீழே வந்த வீரனின் உச்சந்தலையில் கிளை சரியாக விழுந்தது

‘படார்’ என மரம் முறிந்த சத்தம் கேட்டு பூங்காவிற்கு மறுபுறம் இருந்து கந்தனும், சாலையில் போய்க் கொண்டிருந்த பலரும் அங்கே ஓடி வந்தனர்

வீரன் தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடப்பதைப் பார்த்த கந்தன், “ஐயோ, இந்தப் பய இங்க வருவான்னு எனக்கு நினப்பில்லையே” எனக் கதறினார்

என்னைப் பார்த்து, “இவன் மண்டைய உடைச்சுட்டையே தாயி, இவன் என்ன செஞ்சான் உன்ன” என்றார் அழுதபடி

அங்கு என் கிளையை அப்புறப்படுத்தி வீரனைத் தூக்க முயன்றனர் சிலர். அவர்களில் ஒருவர் எனக்குப் பின்புறம் மயங்கி நிலையில் இருந்த ஜோதியைப் பார்த்து, “ஐயோ இங்க ஒரு பாப்பா மயங்கிக் கிடக்குது” என சத்தம் போட்டார்

அப்போது தான் தன் பேத்தியின் நினைவு வந்தவராய், “அம்மா ஜோதி” என்று அலறியவாறு ஓடி வந்து அவளைத் தூக்கிக் கொண்டார் கந்தன்

ஜோதியின் கையிலிருந்த சாக்லேட் பேப்பரைப் பார்த்த ஒருவர் கந்தனிடம், ”ஐயா இது உங்க பேத்தியா?”என்று கேட்டார்

கந்தன் “ஆம்” எனத் தலையை அசைக்க, “பாப்பாவை மயக்கம் தெளிய டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போங்க, இந்தப் பையன் தான் சாக்லேட்டை உங்க பேத்திக்கு கொடுத்திருப்பான் போல. நல்ல நேரம், இந்த மரம் தான் உங்க பேத்தியை இந்த ராஸ்கல்கிட்டேயிருந்து காப்பாத்தியிருக்கு.

மரம் சாமி மாதிரிங்க ஐயா, தப்பு செய்ய நினைச்சதும் தண்டனை கொடுத்துருச்சு பாருங்க. மனுஷனுக்கு  தான் கோர்ட், கேஸ் எல்லாம்” என்றார் கோபத்துடன்

நடுக்கத்துடன் ஜோதியை அணைத்துக் கொண்ட கந்தன்,  நன்றியுடன் கண்கள் பனிக்க என்னைப் பார்த்தார்

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

எத்தனைக் கோடி இன்பம்!!! (சிறுகதை) – ✍ சக்தி ஸ்ரீநிவாஸன், சென்னை

தேனிலவு (சிறுகதை) – ✍ பெருமாள் நல்லமுத்து