சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 39)
இரவின் அமைதியை குலைத்துக் கொண்டு அந்த பைக் சென்னை ரோட்டில் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது. நள்ளிரவில் கூட சில வண்டிகள் தூக்கக் கலக்கத்தில் அலைந்து கொண்டிருக்க, சாலையிலிருந்த மெர்க்குரி விளக்குகள் தொண்ணூறு கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்தன.
காற்று தலையைக் கலைத்து விளையாடிக் கொண்டிருக்க, பைக் பில்லியனில் அமர்ந்திருந்த குரு, தனது இடுப்பைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். நெகுநெகுவென்று கூர் தீட்டப்பட்ட கத்தி, வயிற்றில் எசகுபிசகாக நெளிந்தது. இது இல்லாமல் பைக் கவரில் இரண்டு அருவாட்கள் இருந்தன.
சுலபமான வேலை தான். செங்குன்றம் குவார்ட்டர்ஸில் தங்கியிருக்கும் ஆஞ்சநேயன் வீட்டுக்குச் சென்று, இரண்டு சிலைகளை திருடி வர வேண்டும். இதற்கு லம்ப்பாக மூன்று லட்சம் விலை பேசியிருந்தான் பைக்கை ஓட்டும் மாறன்
இவர்கள் மூன்று லட்சம் சம்பாதிக்க வேண்டுமானால் நாலைந்து வீட்டையாவது கொள்ளையடிக்க வேண்டி இருக்கும். அதுவும் அந்த வீடுகளில் ஏதாவது கிடைத்தால் தான். இன்று ஒரு மணி நேர வேலையில் கிடைக்க போகிறது.
“ஆஞ்சநேயன் திருமணமாகாதவன், குவார்ட்டர்ஸில் தனியாக இருக்கிறான். நடுவில் இடையூறு ஏற்பட்டால் அவனையும் போட்டுருங்க. சிலையை கொண்டு வருவது முக்கியம். இன்னைக்கு நைட் விட்டா அப்புறம் சிலையை தூக்க முடியாது” என்று இந்த வேலையை தந்த பாலு கூறியிருந்தான்.
சிலைகளை எடுத்ததும், இரவிலேயே பாடி பிளைஓவரில் நின்றிருக்கும் பாலுவிடம் சென்று தரவேண்டும்.
வண்டியை முறுக்கிய மாறன், “அடுத்த தெரு தான் மச்சான், டைம் என்ன ஆவுது?” என்றான்.
“பன்னென்டுக்கு பத்து நிமிஷம் இருக்கு. நாலஞ்சு வீட்டுக்கு முன்னாடியே வண்டியை நிறுத்திரு”
எங்கேயாவது சிசி டீவி இருக்கா, குவார்ட்டர்சில் செக்யூரிட்டி இருக்குமிடம், பக்கத்து வீடுகள் போன்றவற்றை நேற்றே வந்து நோட்டம் விட்டு போயிருந்தனர்.
“சரி” யென்ற மாறன், கேடிஎம் பைக்கை மேம்பாலத்தை ஒட்டி திருப்புகையில், யாரோ ஹேண்டில் பாரை இறுக பிடித்திருப்பது போல திரும்ப மறுக்க, தடுமாறியபடி ஹேண்டில் பாரை வலுவாக இழுத்தான்
கை ஆக்சிலேட்டரை தானாக முறுக்க, அதிவேகமாக சென்ற பைக்கின் முன் சக்கரம் மடங்கி இருவரும் தூக்கியெறிப்பட்டனர். எதிரிலிருந்த சுவரில் அடித்த வேகத்தில் மாறனின் தலை சிதறியது.
தரையில் கிடந்த குரு, சில கணங்களுக்கு பின்னர் மெதுவாக கண் விழித்தான். என்ன நடந்தது என்று ஒன்றும் புரியாமலிருக்க, வயிற்றில் வலியை உணர்ந்தான். குனிந்து பார்க்கையில் வயிற்றை கத்தி இரண்டாக பிளந்திருக்க ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தது.
மெதுவாக உயிர் பிரிகையில், சில மணி நேரங்களுக்கு முன்னால் நடந்ததை நினைத்துப் பார்த்தான் மருது
#ads – Best Deals in Amazon 👇
மெல்லிதான இருளில் பார் மூழ்கியிருக்க, சில இடங்களில் சிகரெட் விழித்திருந்தது. நாலைந்து டேபிள்கள் காலியாக இருக்க, சிலர் சத்தமாக பேசிக் கொண்டிருந்தனர்
“கையில மாட்டுனான், அவனை வெட்டியேப் புடுவேன்” என்று சலம்பிக் கொண்டிருந்தான் ஒரு காலேஜ் பையன்
சுவற்றில் மாட்டியிருந்த பெரிய டீவியில் யாரோ ஒருத்தி இரவுக்கு அழைத்துக் கொண்டிருந்தாள். புளித்த வாடை அடித்துக் கொண்டிருக்க, சுவரை ஒட்டியிருந்த டேபிளில் மூன்று பேர் அமர்ந்திருந்தனர்.
பார் மேன், “சொல்லுண்ணா” என்றதும்
“ஒரு பெக்கார்டி புல், ஸ்பிரைட் ஒண்ணு, சோடா ஒண்ணு. அதோட தண்ணி பாட்டில்” என்றான் பாலு
‘பெக்கார்டி பாலுன்னு சரியாத் தான் பேரு வச்சிருக்காங்க’ என்று நினைத்தனர் அவனருகில் அமர்ந்திருந்த மாறனும் குருவும்.
“வேலைய செய்யச் சொல்லிட்டாங்க. நான் நேத்து குடுத்த அட்ரஸில் ஆளையும் எடத்தயும் பார்த்து வச்சிட்டீங்களா?” என்று பாலு கேட்க
“பாத்துட்டண்ணா” என்றான் மாறன் பவ்யமாக
“ஆஞ்சநேயன் அறநிலையத்துறையில் ஆபீஸராம். நேத்து தொல்பொருள் ஆராச்சியாளருங்க சிலை ஒரிஜினலுனு சர்டிபிகேட் கொடுத்ததும், அவரு வீட்டில கொண்டு போயி வச்சிருக்காரு. ராமரும், சீதாவும் நிக்கிற சிலை ஒன்னு, லட்சுமணன் நிக்கிற மாதிரி இன்னொன்னு. நாளைக்கு காலைல போலீஸ் காவலுடன் சேலத்துக்கு போயிருமாம். இன்னைக்கு நைட்டு விட்டா அப்புறம் தூக்குறது கஷ்டம்”
“போலீஸ் செக்யூரிட்டி இல்லையாண்ணே?”
“நைட்டு பன்னெண்டுல இருந்து ஒரு மணி வரைக்கும் அங்கிருக்கிற போலீஸை வேறு எங்காவது அனுப்பிருவாங்க, அந்த டைம்ல காரியத்தை முடிச்சாகணும்”
“போலீசையே போவ வைக்கறாங்கன்னா, இதுக்கு பின்னாடி பெரிய கையி இருக்கு போல”
“அதுக்கு நீ ஏன் கவலைப் படுறே, வேலய கரெக்ட்டா முடிக்கப் பாரு”
பார் மேன் பாட்டிலுடன் வந்து மூன்று கிளாஸில் ஊற்ற, “நாங்க மிக்சிங் பண்ணிக்கிறோம்” என்றான் பாலு. மற்றொருவன் ஸ்னாக்ஸ் கப்புகளை வைத்து விட்டு விலகினான்
“சிலைகளை எடுத்துட்டு பாடி பிளைஓவருக்கு வந்துரு, நான் வெயிட் பண்றேன். உடனே காசு குடுத்துடுறேன்”
“காசு என்னண்ணே காசு. இன்னக்கி போவும் நாளக்கி வரும். பக்காவா முடிக்கிறோம், அடிக்கடி வேல குடுண்ணே”
“நீங்க நம்பிக்கையான ஆளுங்க. தொழில் சுத்தமாக இருக்கும்னு முத்து சொன்னதாலத் தான் உங்களுக்கு இந்த வேலைய குடுக்குறேன். கமுத்துராதீங்க”
“அதெல்லாம் நீட்டா நடக்கும். ஆஞ்சநேயன் குறுக்கால வந்தா என்னா பண்ண?”
“என்னமோ பண்ணுங்க. எனக்கு சிலைகள் வேணும்”
“ரைட்டுணே”
“இங்கயே சாப்பிட்டுருங்க” என்ற பாலு இன்னோரு ஆஃப் பெகார்டி, மூன்று பிரியாணி, வஞ்சிரம் மீன் மூணு பிளேட் ஆர்டர் தர, ஒரு மணிநேரம் மெதுவாக கழிந்தது
“அதிகம் கேள்வி கேட்காத” என்று முத்து எச்சரித்து அனுப்பியிருந்ததால் மாறன் அமைதியாய் இருக்க, குருவும் எதுவும் பேசாமல் சாப்பிட்டு முடித்தான்.
“டைம் ஆயிருச்சு. கெளம்புங்க. போறதுக்கு எப்புடியும் அரை மணி ஆவும்” என்று பாலு சொன்னதும் மூவரும் எழுந்தனர்.
பார்க் செய்திருந்த காரில் ஏறி கதவை சாத்திய பாலு, இருவரும் பைக்கிலேறிச் செல்வதைப் பார்த்தபடி இருந்தான். இருவரும் எமகாதகர்கள். இவர்களால் ஆகாத வேலையே கிடையாது என்று முத்து சர்டிபிகேட் தந்திருந்தான்.
காரை ஸ்டார்ட் செய்வதற்கு முன்னர் வக்கீல் இளங்கோவுக்கு போன் செய்தான் பாலு. இரண்டு ரிங்கில் போனை எடுத்த இளங்கோ, போனில் ஒளிர்ந்த பெயரைப் பார்த்து விட்டு “சொல்லு” என்றார்.
“பையனுங்க கெளம்பிட்டாங்க. நைட்டு ரெண்டு மணிக்கு அப்புறம் சரக்கை வீட்டுக்கு எடுத்துட்டு வரேன்” என்றதும்
“சரி” என்ற இளங்கோ போனை கட் செய்தார்.
‘நைட்டு பொருளை வாங்கி காலையில் கை மாற்றி விட்டா லம்ப்பா ஒரு அமௌன்ட் பாத்தரலாம்’ என்று நினைத்த இளங்கோ, சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்ததை நினைத்துப் பார்த்தார்.
“இன்டர்நெஷனல் கோர்ட்ல கேஸ் பைல் பண்ண இந்தியா ஸ்டெப்ஸ் எடுத்ததும், இங்கிலாந்து வேற வழியில்லாம சிலைகளை திருப்பி தர ஒத்துக்கிட்டாங்க. பத்து, பாஞ்சு நாளுல சிலைகளை பிளைட்ல அனுப்பி வைக்கிறாங்க. இந்த விஷயத்தை பத்தி ஏதாவது தெரியுமா?” என்று கேட்டார் போலீசில் உயர் பதவியில் இருந்த கோபி.
“இல்ல தெரியாது” என்றார் வக்கீல் இளங்கோ.
ஹோண்டா சிட்டியின் முன்னிருக்கையில் இருவரும் அமர்ந்திருக்க, ஏசியின் வேகத்தை குறைத்தார் கோபி
“ரெண்டு சிலைகளும் பஞ்சலோக சிலைகள். பல வருடங்களுக்கு முன்னர் சேலத்துல இருக்க கோவிலில் இருந்து திருடி வெளிநாட்டுக்கு வித்துருக்காங்க. இங்கிலாந்து போலீஸ் அதைக் கைப்பற்றி அவங்க மியூசியத்தில் வச்சிருந்தாங்க.
தமிழர்கள் அதை போட்டோ எடுத்து வாட்சப்பிலும், பேஸ்புக்கிலும் வெளியிட்டதுல இந்தியாவுக்குத் தெரிய வந்தது. அப்புறம் தமிழ் எம்பிக்கள் டெல்லிக்கு பிரஷர் குடுத்து இங்கிலாந்தோட பேச வச்சாங்க. ஒரு வழியா சிலைகள் திரும்ப வருது”
இளங்கோ அமைதியாய் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்க, கோபி தொடர்ந்தார்.
“அந்த சிலைகளை நாம மறுபடியும் கடத்தி தந்துட்டா பணம் குடுக்க ஒரு பார்ட்டி ரெடியா இருக்கு. உன்னோட ஆட்களை வச்சு சிலைகளை தூக்க முடியுமா?”
“சிலைகள் வரும் போதே பெரிய அளவில் பேப்பரில் நியூஸ் வந்துருமே”
“அதான் இல்ல. உடனே வெளிய சொல்லாம கோவிலில் கொண்டு போய் பிரதிஷ்டை பண்ணி கும்பாபிஷேகம் செய்யும் போது பிரஸுக்கு நியூஸ் கொடுக்கலாம்னு முடிவு பண்ணிருக்காங்க”
“அப்ப அரசியல்வாதிங்களுக்கும் இதில் சம்பந்தம் இருக்கா?”
“ஆமாம். அதனால வெளம்பரம் ஏதும் இருக்காது. திருப்பி தூக்கிட்டாலும் யாராலயும் வெளிய சொல்ல முடியாது. அடுத்து வர்ற எலெக்சன் பரபரப்பில் எல்லாரும் மறந்துருவாங்க. உன்னால கடத்த முடியுமா?”
“வக்கீல், போலீஸ், அரசியல்வாதிகள் சேர்ந்து செய்ய முடியாத வேலை இந்தியாவுல கிடையாது. எப்பனு சொல்லுங்க”
“இந்தியாவுக்கு சிலைகள் வந்ததும் எங்க வச்சிருப்பாங்க, எத்தனை நாள் இங்க இருக்கும், எப்ப தூக்கணும்னு நான் சொல்றேன். வேலைய சரியா செஞ்சி சிலைகளை கொண்டு வந்துட்டா, உங்களுக்கு தனியா இருபது லட்சம் தர்றேன். இதுக்கு ஆவும் செலவை தனியா குடுத்தர்றேன்”
“பஞ்சலோக சிலைகள் பல கோடி போகுமே?”
“தூக்குறது பெரிய விஷயமில்ல. அதுக்கப்புறம் பாதுகாத்து வெளிநாட்டுக்கு கொண்டு போறது தான் சிக்கல். அங்க கள்ள மார்க்கெட்டில் விற்கிறது சாதாரண விஷயமில்லை. அதற்கும் நிறைய செலவு ஆகும்”
“ஒரு நாப்பதாவது வாங்கி குடுங்க”
“கஷ்டம், முப்பதுக்கு முடிக்க பார்க்கிறேன். ஆனால் பிரச்சனை இல்லாம வேலை முடியனும். பிரச்னை ஆயிட்டா யாரு பேரும் வெளிய வரக்கூடாது”
“அத நான் பார்த்துக்கிறேன். நீங்க டீடெய்ல்ஸ் மட்டும் தாங்க”
“சரி. எல்லாம் ஓகே ஆகிருச்சினா மறுபடியும் கான்டெக்ட் பண்றேன். நீங்க ரெடியா இருங்க” என்று கோபி கூறியதும்
“ஓகே” என கூறிவிட்டு கார் கதவை திறந்து கீழிறங்கிய இளங்கோ தொலைவில் பார்க் செய்யப்பட்டிருந்த தனது காரை நோக்கி நடந்தார்.
தொல்பொருள் இலாக்காவில் சிலைகளை மாற்றித் தரேன்னு சொல்லியிருந்த மற்றொரு பார்ட்டி ஏதோ சிக்கலில் மாட்டி வேலையிலிருந்து சஸ்பெண்ட் ஆகி விட, இளங்கோவை பயன்படுத்த முடிவெடுத்திருந்தார் கோபி.
ஏற்கனவே ஓரிரு வேலைகள் இளங்கோ செய்து தந்திருக்கிறார். நம்பகமான பார்ட்டி. விஷயம் வெளியே கசியாது. எப்படியும் தனக்கு ஒரு ஐம்பது லட்சம் நிற்குமென நினைத்தவர், சில மாதங்களுக்கு முன்னர் நடந்ததை நினைத்துப் பார்த்தார்.
பாண்டிச்சேரி ப்ளூமூன் ரிஸார்ட்டில் மினிஸ்டர் முத்துசாமி தங்கியிருக்க, எதிரே கோபி அமர்ந்திருந்தார்
“ட்ரிங்க்ஸ் சாப்பிடுறியா?”
“இல்ல வேணாம் சார்”
“சாப்பிடுவ இல்ல”
“எஸ் சார்”
கோபிக்கும் ஒரு பெக் ஊற்றிய முத்துசாமி “மனசுல ஒரு கவலை இருக்கு கோபி”
“என்ன சார்?”
“சேலத்துக்கு பக்கத்திலிருக்கும் அயோத்யப்பட்டினத்தில் ராமர் கோவில் ஒன்னு இருக்கு. அங்கிருந்த சிலைகள் இரண்டு காணாப் போயி அப்புறம் இங்கிலாந்துல இருக்கிறதை கண்டு பிடிச்சாங்க. திருப்பி தந்துடறோம்னு அவங்க மினிஸ்டர் நம்ம மினிஸ்டரிடம் சொல்லிருக்கார். அவங்களோட சட்ட சிக்கலெல்லாம் சரியாகி தமிழ் நாட்டுக்கு வந்து சேர எப்படியும் சில மாசமாகும். அதை பத்திரமா கொண்டு போயி கோவிலில் சேர்க்கணும்”.
“பாதுகாப்பா கொண்டு போயிரலாம் சார்”
“அதை ஏற்கனவே இங்க இருந்த சில அரசியல்வாதிங்க போலீஸ் டிபார்ட்மென்ட்ல சிலரை சேர்த்துட்டு கடத்தியதா தெரியுது. அதான் யோசனையா இருக்கு”
“பெருசா விளம்பரம் பண்ணுனாத் தான் மேட்டர் வெளிய லீக்காகும். கோவிலுக்கு போயி கும்பாபிஷேகம் செய்யும் போது பிரஸ்ஸுக்கு சொல்லிக்கலாம் சார்”
“அதான் கரெக்ட். நான் சொல்லிடுறேன். சிலைகள் வரும் போது உங்களுக்கு சொல்றேன். தனிப்பட்ட முறையில் இதை பார்த்துக்குங்க. சிலைகள் கோவிலுக்கு வந்து சேர்ற வரை விஷயம் வெளில வர வேணாம். கவனம்.”
“கண்டிப்பா சார்”
“தேங்க்யூ” என்று முத்துசாமி கூற, சல்யூட் ஒன்றை உதிர்த்து விட்டு கோபி வெளியே வந்தார்
நான்கு ரூம்கள் தள்ளியிருந்த தனது அறைக்கு வந்தவர் போனை எடுத்து ஒரு நம்பரை அழைத்தார்
“பார்ட்டி சொன்னது கரெக்ட். இந்தியாவுல இருந்து போன சிலைகள் திரும்பி வருது”
“சரி எப்படி சிலைகளை தூக்கறது?”
“முதல்ல அந்த சிலைகளோட போட்டோ வாங்கி அதே மாதிரி பிளாக் மெட்டலில் ரெண்டு சிலைகள் செய்ய சொல்லிடு. சிலைகள் வந்ததும் தொல்பொருள் இலாகா ஆபீசர்ஸ் அதை செக் பண்ணி உறுதி பண்ணுவாங்க. அவங்க கன்பார்ம் பண்ணியதும், அங்க இருக்கிற நம்மாளுகிட்ட சொல்லி சிலைகளை மாத்திடுவோம். யாருக்கும் தெரியாது”
“அப்ப பார்ட்டிக்கிட்ட சொல்லிடட்டுமா?”
“சொல்லி ரேட் பேசிடு. போன தடவையை விட இந்த தடவை ஒண்ணு அதிகம் தரணும்னு”
“சரி” என்று எதிர்முனை கூறியதும் போனை வைத்த கோபி, வக்கீல் இளங்கோவிடமும் சொல்லி தயாரா இருக்க சொல்லணும். ஒண்ணு மிஸ் ஆனாலும் இன்னொன்னு ஆகக்கூடாது. அதே மாதிரி ஒருத்தருக்கு தெரியற விஷயம் இன்னொருத்தருக்கு தெரியாம பாத்துக்கிறது தான் பிசினெஸ்ஸோட வெற்றிக்குக் காரணம்.
ஆண்டவனே ஆனாலும் அரசியல்வாதிக்கு கீழ தான். முடிஞ்சா ராமர் தப்பிக்கட்டுமென நினைத்துக் கொண்டார்.
அறையில் அமர்ந்திருந்த முத்துசாமிக்கு, அவரது தந்தை சில வருடங்களுக்கு முன்னால் கூறியது நினைவில் வந்தது.
ஹாஸ்பிடல் ஐசியூவில் படுத்திருந்த தந்தையின் அருகில் முத்துசாமி நின்றிருந்தார். ‘சிவியர் ஹார்ட் அட்டாக்’ என்று முதல் நாள் இரவு சேர்த்திருந்தனர்.
“கொஞ்சம் சீரியஸ் தான்” என்று மருத்துவர்கள் கூறியிருக்க, முத்துசாமியின் தந்தை மினிஸ்டராக இருந்ததால், சீப் மினிஸ்டரின் ஆபிசிலிருந்து உடல்நிலை குறித்து கேட்க அடிக்கடி போன் வந்தவாறு இருந்தது.
முகத்தில் மாட்டியிருந்த ஆக்சிஜன் மாஸ்க்கை கழற்றியவர் நடுங்கும் கைகளுடன் “உன்கிட்ட ஒரு உண்மையை சொல்லிடணும்ப்பா, நான் ஒரு தப்பு பண்ணிட்டேம்ப்பா” என்றார்.
“என்னப்பா?” என்றார் முத்துசாமி.
“ரெண்டு வாரம் முன்னாடி ஒரு பார்ட்டி வந்தாங்க. சேலத்திலிருந்து ரெண்டு சிலைகள் கடத்திட்டு வர்றோம். அதை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க உதவி செஞ்சால் நிறைய பணம் தர்றேன்னு சொன்னாங்க. நேத்து சென்னை கைவினைப் பொருட்கள் இங்கிலாந்துக்கு ஒரு எக்ஸ்சுபிஷனுக்காக போறது தெரிஞ்சதும் சிலைகளையும் சேர்த்து அனுப்ப சொல்லிட்டேன். மினிஸ்டர் ரெகமெண்டஷன் இருந்ததால அதிகம் செக்கிங் இல்லாம போயிருச்சு” என்றவர் மூச்சு விட சிரமப்பட
“அதனால உங்களுக்கு இப்படி ஆகலப்பா. நீங்க மனச போட்டு குழப்பிக்காதீங்க” என்றார் முத்துசாமி.
“நேத்து சிலைகளை ஏர்போர்ட்ல குடுத்துட்டு திரும்பி வந்த ரெண்டு பேரும் லாரி அடிச்சி செத்துட்டாங்க. அப்பவே எனக்கு பகீர்னு இருந்தது. நைட்டு எனக்கு ஹார்ட் அட்டாக் வந்துருச்சி. நான் பிழைக்க மாட்டேன். நீ எப்படியாவது அந்த சிலைகளை திரும்ப வரவழைக்கணும்” என்றவர் அதிகம் மூச்சு வாங்க
“நீங்க அமைதியா இருங்க. நாளைக்கு பேசலாம்” என்ற முத்துசாமி ஆக்சிஜன் மாஸ்க்கை முகத்தில் பொருத்தினார்
“மாஸ்க்கை கொஞ்சம் கீழ் இழுத்தவர், “நீதான் முயற்சி செஞ்சி கொண்டு வரணும்” என்று சொல்ல
யார், என்ன என்றும் எதுவும் தெரியாத முத்துசாமி, “கொண்டு வரேன். நீங்க ரெஸ்ட் எடுங்க” என்றார். அன்றிரவு தந்தை இறந்து விட அதன் பின்னர் நடைபெற்ற இடைத் தேர்தலில் ஜெயித்தார்.
சிலை எங்கே போனது யார் வாங்கியது, யார் உதவியது என்று எதுவும் தெரியாமலிருக்க, நடுவில் ஆட்சி மாறியது. மீண்டும் இவர்களுடைய கட்சி ஆட்சியை பிடித்த சில வருடங்களில் சிலைகள் இங்கிலாந்தில் இருப்பது தெரிய வந்தது.
ஆட்சி மாறுவதற்குள் எப்படியும் சிலைகளை மீட்க வேண்டுமென்று போராடிக் கொண்டிருந்தார். சிலைகளை கடத்த உதவியதால் தனது தந்தையின் உயிர் போனதென்று முத்துசாமி கொஞ்சமும் நம்பவில்லை. அது ஒரு கோ இன்சிடென்ஸ். ஆனால் தந்தைக்கு தந்த வாக்கினை காப்பாற்ற நினைத்தார். கோபியிடம் கூறியதும் மனதில் நிம்மதி ஏற்பட்டது.
அயோத்தியப்பட்டினம் ராமர் கோவிலில் சிலைகளை மீண்டும் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்து கொண்டிருக்க, கோவிலுக்கு வெளியே நின்றிருந்த ஒரு பெரியவர் கண் கலங்கினார்.
“என் வாழ்க்கையில் ராமரை திரும்ப பார்ப்பேன்னு நம்பிக்கை இல்லாமலிருந்தது. சிலைகள் காணாப் போயி கரெக்ட்டா பதினாலு வருசமாச்சு. கலிகாலத்துல மறுபடியும் ஒருவாட்டி நாட்டை விட்டு வனவாசம் போக ராமர் நினைச்சிருக்கார். அவர் நினைச்சா யாரால நிறுத்த முடியும். திரும்பி வரணும்னு நினைச்சா யாரால தடுக்க முடியும். கடவுளுக்குக் கீழதான் எல்லாரும்” என்று கூறிக் கொண்டிருந்தார்
வெண்ணிற கழுத்தையுடைய கருடன் ஒன்று, கோபுரத்தைச் சுற்றி வட்டமிட்டபடி பறந்து கொண்டிருந்தது
(முற்றும்)
#ads – Best Deals in Amazon 👇
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
வனவாசம் இராமனுக்கு மட்டுமல்ல ராமன் சிலைக்கும் கூட என்ற கதைக் கருவில் அமைந்த கதை..நிகழ்வுகள் ஒவ்வொன்றும் சங்கிலித் தொடர் போல அமைந்து இருப்பதும், எழுத்து நடையும் சிறப்பு. வாழ்த்துகள் 💐💐
வனவாசம் கதைக்கு பொருத்தமான தலைப்பு…
சிலை கடத்தச்செல்லும் நபர்களின் பின்னே ஆரம்பிக்கும் துவக்கப்புள்ளி பின்னலாய் பிளாஷ்பேக்கில் எந்த சிக்கலுமின்றி வளைந்து நெளிந்து இறுதியில் மீனாட்சி அம்மன் கோவிலில் வரையப்பட்ட அழகிய கோலமாய் முடிகிறது.. மிகவும் நேர்த்தியான கதையமைப்பு..
அரசியல்வாதி, வக்கீல், சிலை கடத்தும் கும்பல் என அத்தனைபேரின் திட்டங்களையும் தாண்டி ராமர் தமக்கான இடத்தில் வந்து நிலைகொண்டதாக கதையை முடித்தது வெகு சிறப்பு..
வாழ்த்துகள்💐💐💐
சங்கிலி போல பின்னோக்கி நகரும் கதை. ஒன்றோடொன்று பின்னிக் கொண்ட நிகழ்வுகள் என்பது சிறப்பான உத்தி. ராமரின் வனவாசத்தை சிலை திருட்டு கான்செப்ட் இல் பிணைத்து நேர்த்தியாக கதை வடித்த விதம் பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள்