சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 26)
வழக்கம் போல் வேலை முடிந்ததும், உடனே கிளம்பாமல், சற்று நேரம் கல்லூரியிலே ஓய்வெடுத்துக் கொண்டாள் சந்தியா
என்னவோ தெரியவில்லை. அன்று அவள் தன்னிலைக்கு வர, வெகு நேரமாயிற்று
கல்லூரி முழுவதும் மாணவர்கள் குழுமி நின்று கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தனர். தீபாவும் இப்படித் தான் இந்நேரம் கல்லூரியில் இருப்பாள் என நினைக்கையில், சந்தியாவின் உள்ளத்திலிருந்து ஏக்கப் பெருமூச்சு வெளிப்பட்டது.
அருமையான பெண்… அவளை எவ்விதத்திலும் தொந்தரவு படுத்தியதில்லை. தனக்கு இது வேண்டும் அது வேண்டும் என கேட்டதேயில்லை. ஆனாலும் மகள் கேட்காமலே அவளின் தேவைகளை முடிந்தவரை நிறைவேற்றி வைப்பாள் சந்தியா
இந்த வேலையில் கிடைக்கும் வருமானத்தை தவிர, வீட்டில் இருக்கும் தையல் மிஷினில் மற்றவர்களுக்கு ஆடைகள் தைத்துக் கொடுப்பாள். பண்டிகை காலங்களில் பட்சணங்களை வீட்டிற்கே சென்று செய்து தருவாள்
எல்லா வகையிலும் உழைத்து தான் இந்த இருபது வருடங்களை இன்னல்களோடு கடந்து வந்திருக்கிறாள்
நேரம் நான்கை கடந்து விட்டது. இப்போது கிளம்பினால் தான் சரியாக இருக்கும்.
அவளின் வீடு நகரை விட்டு தள்ளி புறநகரில் வெகு தொலைவில் இருக்கிறது. கூண்டு வடிவிலான சிறிய அறையும் கூடமும் தான் அவளும் மகளும் புழங்குமிடம்.
அதிலேயே சிறிதாக தடுத்த சிறு பகுதியை குளியலறையாக மாற்றியாயிற்று. தெருமுனையில் இருக்கும் குழாயில் தான் தண்ணீர் பிடித்துக் கொள்ள வேண்டும்.
பலவகை சிரமங்களை தாங்கியபடி வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. பலவற்றையும் அசை போட்டபடி அவள் பேருந்து நிறுத்தத்தை வந்து அடைவதற்குள், வானம் கருத்து மழை கொட்டத் தொடங்கி விட்டது.
அரைமணி நேரம் கொட்டித் தீர்த்த மழைக்கு பின், நிறைமாத கர்ப்பிணியாய் வந்த நாலைந்து பேருந்துகள் நிற்காமலே சென்றன. ஒருவழியாய் நின்ற பேருந்தில், முண்டியடித்து ஏறி நின்றதும் மூச்சு வாங்கியது
ஒருமணி நேர பயணத்தில், கடைசி வரை உட்கார இடம் கிடைக்கவே இல்லை. கசங்கிய மலராய் துவண்டு போனாள் சந்தியா.
தள்ளாட்டத்தோடு நின்ற பேருந்திலிருந்து தள்ளாடியபடி இறங்கினாள் சந்தியா. ஏனோ இன்றைய தினம் மிக சோர்வாக இருந்தது
எதுவரை இந்த வேலையைத் தொடர வேண்டுமோ? அதுவரை உடல் ஒத்துழைக்குமா? அடிக்கடி மனதில் பதட்டம் பரவுவதை சந்தியாவால் உணர முடிந்தது.
ஆயிற்று… தீபா, இந்த வருட படிப்பை முடித்து விட்டால் போதும்.. அப்புறம் எதைப் பற்றியும் கவலையில்லை. வீட்டிற்கு செல்லும் வழியில் காய்கறி கடையில் நுழைந்து மறுநாளுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கினாள்.
திரும்புகையில், பிரியாணி வாசம் நாசியைத் தீண்டியது. பாய் கடையில் நுழைந்து, தீபாவிற்கு பிடித்த பிரியாணியை வாங்கி கொண்டாள். வழியில் எதிர்பட்டார்,மல்லிகா அக்கா.
“சந்தியா உன்னைப் பார்க்கத் தான் வீட்டுப் பக்கம் வந்துட்டிருந்தேன்… நல்லவேளை இங்கேயே பார்த்துட்டேன். நம்ம வீட்ல நெருங்கின சொந்தத்துல வளைகாப்பு பண்றாங்க, வீட்லயே ஸ்வீட்ஸ் பண்ணணுமாம். கேட்டதை கொடுத்துடுவாங்க, நீ சரின்னு சொன்னா வர்ற ஞாயிற்றுக்கிழமை நம்ம வீட்லயே பண்ணிடலாம்…என்ன சொல்ற சந்தியா…?”
“அதுக்கென்ன அக்கா… நாளைக்கு வேலைக்கு போறதுக்கு முன்ன வீட்டுக்கு வரேன்…லிஸ்ட் போட்டுடலாம்… எல்லாத்தையும் வாங்கி வெச்சுடுங்க… ஞாயிற்றுக்கிழமை காலையில ஆரம்பிச்சு எல்லாத்தையும் பிரமாதமா பண்ணிடலாம்…”
பதில் சொல்லியபடி நடந்தாள். இந்த வேலையில் கிடைக்கும் பணத்தில், நல்லதாய் நாலைந்து சுடிதார் வாங்கி தீபாவிற்கு கொடுக்க வேண்டும்.அவளின் ஆடைகள் எல்லாம் பழசாகி விட்டது. மனதில் எண்ணங்கள் வேகமாய் ஓடின.
சிறு மழைக்கே திட்டு திட்டாய் தண்ணீர் தேங்கி நின்றது சாலையில்…விரைவாக நடந்து வீட்டிற்குள் நுழைந்ததும் அப்பாடா என்றானது.
அம்மாவைக் கண்டதும் முகமலர்ந்து திரும்பினாள் தீபா. “ஏம்மா இவ்வளவு நேரம்…கொஞ்சம் சீக்கிரம் வரக்கூடாதா…தனியா இருக்க போரடிக்குது வீட்ல…”
“என்ன பண்றது…திடீர்னு மழை வந்துடுச்சு…அப்புறம் போக்குவரத்து நெரிசல்… … கொஞ்சத்துல பஸ் நகரலை… நத்தை மாதிரி ஊர்ந்து நம்ம ஸ்டாப் வர்றதுக்குள்ள நொந்து போயிட்டேன்…வர்ற வழியில கடைக்கு போயிட்டு வந்தேன்…சரி நான் குளிச்சுட்டு வந்துடறேன்.. சூடா பாய்கடை பிரியாணி வாங்கிட்டு வந்திருக்கேன் சாப்பிடும்மா.. “
குளியலறைக்குள் நுழைந்து தண்ணீரில் நனைகையில் மீண்டும் பொங்கிய கண்ணீரை தடுக்கவில்லை சந்தியா. உடலெங்கும் கம்பளிப்பூச்சி ஊர்வது போன்ற உணர்வு.
ஒருவழியாய் தணிந்த மனதுடனும் உடலுடனும் வெளியே வந்தாள். நேராய் சுவாமி படத்திற்கு முன் சென்று மனமுருகி கடவுளை வேண்டினாள்.
“இறைவா….என் மகளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடு… எனக்கு இந்த வேலையிலிருந்து விடுதலை கொடு… ” மனதார பிரார்த்தனை செய்தாள்.
அம்மாவைப் பார்க்கையில் தீபாவிற்கு வேதனையாக இருந்தது. தனியொரு மனுசியாக வாழ்க்கையில் போராடிக் கொண்டிருக்கிறாள். பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்ததும் தானும் வேலைக்குச் சென்று அம்மாவிற்கு தோள் கொடுக்க தீபா விரும்பினாள். ஆனால் அம்மா அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.
“வேண்டாம் தீபா… சரியான கல்வித்தகுதி இல்லாம நான் பட்ட கஷ்டம் போதும்.. நீயாவது படிச்சு நல்ல நிலைக்கு வரணும்…”
பிடிவாதமாய் மறுத்து விட்டாள். ஆயிற்று, இன்னும் ஆறு மாதம்தான்… தீபாவின் பட்டப்படிப்பு நிறைவடைந்து விடும். நல்ல வேலை கிடைத்ததும் அம்மாவை வேலைக்கு போகாமல் வீட்டோடு இருக்கச் சொல்ல வேண்டும்.
சூடாய் காபி போட்டு எடுத்து வந்து அம்மாவின் கையில் கொடுத்தாள்.
“ஏம்மா ரொம்பக் களைப்பா இருக்கியே…வேலை ஜாஸ்தியா? பெருக்கிக் கூட்டற வேலை தானே… கூடுதலா வேலை தர்றாங்களா என்ன…? இன்னும் பல வேலைகளை ஏத்துக்காதேன்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்கற… லீவுலயும் வீடு வீடா போயி சமைச்சுக் கொட்டற…
பத்தாதுக்கு அப்பப்போ தையல் மிஷின்ல வேற உட்கார்ந்துடற…நான் வேணும்னா பார்ட் டைம் வேலைக்கு போகட்டுமா…உன் கஷ்டத்தை பார்த்தாலே என் கண்ணு கலங்குதும்மா…”
“அவசரப்படாதே தீபா… வெண்ணெய் திரண்டு வர்ற நேரத்துல தாழியை உடைச்சுடாதே… இத்தனை வருச உழைப்பு வீணாகிடக் கூடாது…நீ படிப்பை மட்டும் பாரு…கவனத்தை சிதற விடாதே…நான் பார்க்காத வேலையா… அதே வேலைகளைத் தான் இப்பவும் செய்யறேன் தீபா. வயசு ஆகுதே… அதான் உடம்பு கேட்க மாட்டேங்குது…எல்லாம் சரியாயிடும். இதையெல்லாம் உன் மனசுல வெச்சுகிட்டு வெசனப்படாதே…”
“சரிம்மா… ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம்…நான் வேலைக்கு போக ஆரம்பிச்சதும் நீ வேலையில இருந்து நின்னுடணும். உன்னை ராணி மாதிரி உட்கார வெச்சு பார்த்துக்கறேன்…”
“சரி சரி… நீ போய் படிம்மா…நான் கொஞ்சம் ஓய்வெடுத்துட்டு வீட்டு வேலையை பார்க்கறேன்…” தீபாவிடம் வாய் வார்த்தை பேசினாலும், பெற்ற மகளிடம் பொய் பேச வேண்டிய சூழ்நிலையை எண்ணினாள். மனதிற்குள் தாங்க முடியாத பாரம் கண்களில் கண்ணீராய் வெளிப்பட்டது.
இந்த வாழ்க்கை அவளைப் பொறுத்தவரை தாங்க முடியாத வலிகளையும் வேதனைகளையும் ஏமாற்றங்களையும் பரிசாக கொடுத்துள்ளது. இருப்பினும் தீபாவை கடவுள் கொடுத்த வரமாக கருதி அவள் பயணத்தை தொடர்கிறாள்.
பிறந்தவுடன் தாயை இழந்த துர்பாக்கியவதி அவள். குடிகார தந்தையிடம் போராடியபடி இளமைக் காலம் கழிந்தது. அந்த வாழ்க்கையில் இருந்து தப்பிக்க எண்ணி இனம் புரியாத பருவ வயதில் அகம் தெரியாது வஞ்சகன் ஒருவனிடம் மனதை பறிகொடுத்தாள்
அவனோ… அவளை அழைத்துச் சென்று திருமணம் என்ற பெயரில் ஏமாற்றி மூன்று மாத குடித்தனம் நடத்தி வயிற்றில் சுமையை தந்து விட்டு ஓடிப் போனான். திரும்பி வருவான் என்ற எதிர்பார்ப்பில், மாதங்கள் கரைந்தன. வயிற்றுச்சுமையும் இறங்கி குழந்தையும் பிறந்தது.
கைக்குழந்தையுடன் நிர்க்கதியாய் தனித்து நடுத்தெருவில் நின்ற போது, வாழ வழிதெரியாது தவித்துப் போனாள். தனித்து இருந்தால் இறந்து போயிருப்பாள், பிறந்த குழந்தையின் முகம்பார்த்து மனதை தேற்றினாள்.
பக்கத்து வீட்டு தேவி தான் இந்த வழியைக் காட்டினாள். முதலில் தயக்கமாக இருந்தாலும், தீபாவின் எதிர்காலம் அவளை இந்த வேலையை ஏற்றுக் கொள்ள வைத்தது.
கண்ணை மூடிக்கொண்டு தொழிலில் இறங்கினாள். மீன் விற்ற காசு நாறாது என்பது போல உடலை விற்ற காசில் மானத்துடன் பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கிறாள். அம்மா கூட்டிப் பெருக்கும் வேலைக்காரி… சமையல்காரி என்று மட்டும் தான் தீபா நினைத்துக் கொண்டிருக்கிறாள்.
அக்கம் பக்கமும் அப்படித் தான் சொல்லி வைத்திருக்கிறாள். தேவியும் இந்த தொழிலை விட்டு விட்டு, தூரத்து சொந்தக்கார வீட்டில் சமைக்கும் வேலைக்கு சென்று பெங்களூரில் தங்கி விட்டாள். அதனால் அவளைப் பற்றி தெரிந்தவர்கள் அக்கம் பக்கம் யாருமில்லை.
தீபாவிற்கு உண்மை தெரியக் கூடாது என்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறாள். சொந்தமகளே அவளை வெறுத்து விட்டால், அதை தாங்கிக் கொள்ளும் சக்தி சந்தியாவிற்கு கிடையாது.
அந்த சூழ்நிலை வருவதற்குள் இந்த தொழிலிலிருந்து விடுபட்டுவிட வேண்டும். நினைவுகளில் இருந்து விடுபட்டு இரவு நேர உணவை தயாரிக்க முனைந்தாள்.
மறுநாள் காலை பத்து மணி
“வாங்க சந்தியா… என்ன இன்னைக்கு இவ்வளவு நேரம் தாமதம்… சீக்கிரம் தயாராகி வாங்க…உங்களுக்காக மாணவர்கள் காத்துகிட்டிருக்காங்க…” பேராசிரியர் செல்வராஜ் சொன்னதும் மௌனமாய் தலையசைத்து உள்ளறைக்குள் சென்று வேகமாய் உடைகளை களைந்தாள்.
வழக்கம் போல் எழுந்த குற்ற உணர்ச்சியை மென்று விழுங்கி நிர்வாணக் கோலத்துடன் வகுப்பறைக்குள் நுழைந்தாள். எப்போதும் போல் அந்த நிலையில் ஜடமாய் நின்ற போதும், உணர்வுகள் அலைகளாக நெஞ்சில் மோதின.
கிட்டத்தட்ட மூன்றுமணி நேரம் மாணவர்கள் விரும்பியக் கோலத்தில் நின்றவள், போதும் என்றதும் சட்டென உள்நுழைந்து சேலையைச் சுற்றிக் கொண்டாள். கையில் இருந்த பணம் கனத்தது போலவே மனமும் கனத்து போயிருந்தது.
காலம் வேகமாய் ஓடியது. ஏனோ சந்தியாவின் உடலிலும் தளர்ச்சி கூடியது. வெகுநேரம் நிற்கையில் உடல் நடுங்கியது. பிடிவாதமாய் வேலையைத் தொடர்ந்தாள். இன்னும் கொஞ்ச காலம் தானே என மனதை சமாதானப்படுத்திக் கொண்டாள்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒருநாள், அன்று வீட்டிற்கு வந்ததும், அவளை உற்சாகமாய் வரவேற்றாள் தீபா
“அம்மா… இன்னைக்கு உனக்கு சந்தோசமான செய்தியை சொல்லப் போறேன். எனக்கு கல்லூரியில் நடந்த நேர்முகத் தேர்வுல வேலை கிடைச்சிருக்கு. ரொம்ப பெரிய கம்பெனி, ஆரம்ப சம்பளமே அம்பதாயிரம். இந்த மாசமே வேலையில சேரச் சொல்லிட்டாங்க. இதோ பாரம்மா அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர், இந்த மாசத்தோட வேலையிலிருந்து நீ நின்னுடும்மா ப்ளீஸ்”
சந்தியா தலையாட்டினாள். அவளும் இதைத் தானே எதிர்பார்த்திருந்தாள். தீபாவின் மகிழ்ச்சி சந்தியாவையும் தொற்றிக் கொண்டது
“கொஞ்சம் இரு வந்துடறேன்…”
அவசரமாய்க் குளித்து ஈரக்கூந்தலுடன் சுவாமி படத்துக்கு முன் விளக்கேற்றினாள். கடவுளுக்கு நன்றி சொல்லி கடிதத்தை பிரித்து பார்த்தாள். பெரிதாய் ஏதும் புரியவில்லை என்றாலும், மகளின் பெயரைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனாள். இனி வாழ்க்கையில் அவளுக்கு வேறெதுவும் தேவையில்லை.
நாட்கள் நகர்ந்தன. தீபா வேலைக்குப் போக ஆரம்பித்து விட்டாள். அவளுக்குப் பிடித்ததைச் செய்து கொடுத்து வேலைக்கு அனுப்பி வைக்கவும் அவள் திரும்பி வந்து சொல்லும் கதைகளைக் கேட்பதிலும் சுவாரசியம் கூடியது சந்தியாவிற்கு
தனக்கு அலுவலகத்தில் கொடுத்த மடிக்கணினியை இயக்குவதற்கு அம்மாவுக்கும் சொல்லிக் கொடுத்தாள் தீபா. சந்தியாவுக்கு எல்லாமே புதுமையாகவும் இனிமையாகவும் இருந்தது.
ஏற்கனவே முடிவு செய்தபடி, தான் இனி நிர்வாண மாடலாக இருக்கப் போவதில்லை என்னும் விவரத்தைச் சொல்ல ஓவியக் கல்லூரிக்குச் சென்றாள் சந்தியா.
என்ன இருந்தாலும் இரண்டுபேர் வயிற்றை மானத்தோடு நிரப்ப உதவிய இடமாயிற்றே. நல்லபடியாய் சொல்லிக் கொண்டு தான் விடைபெற வேண்டும்.
தீபா படிப்பு விஷயத்தில் நல்ல பள்ளியில் சேர்க்கவும் கல்லூரியில் இடம் கிடைக்கவும் உதவியவர், பேராசிரியர் செல்வராஜ். பலமுறை இக்கட்டான தருணத்தில் உதவிய நல்ல மனிதர். கனிவும் கருணையும் மிகுந்தவர்
அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.மகளுக்கு கடைசிவரை அவள் இந்த வேலை செய்தாள் எனத் தெரிந்துவிடக் கூடாது. அதற்கு முன் எல்லாவற்றையும் முடித்து விட வேண்டும்.
இன்று ஓவியக் கல்லூரியில் நுழையும் போது, மனம் இலேசாக இருந்தது. தெளிவான மனத்துடன், பேராசிரியர் செல்வராஜை சந்தித்து விவரத்தைச் சொல் விட்டாள்.
“நல்லதும்மா, இருபது வருடமா எங்களுக்கு மாடலா இருந்து உதவி இருக்கீங்க, இப்ப நீங்க எடுத்த முடிவு சரிதான். கடைசியா நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை சரியா காலை பதினொரு மணிக்கு நீங்க இங்க வரணும். உங்களை மரியாதையோட வழியனுப்ப. நினைக்கறேன், என் அழைப்பை தட்டாம ஏத்துக்கோங்கம்மா”
அவர் சொல்ல, மறுக்க மனமின்றி தலையாட்டினாள் சந்தியா.
அன்றைய தினம் தீபா காலை ஏழு மணிக்கே வேலைக்கு புறப்பட்டு விட்டாள். அவள் சென்றதும் இருப்பதில் நல்லதாய் தேர்வு செய்து எளிமையான ஆரஞ்சு நிற காட்டன் சேலையை தேடிப் எடுத்து உடுத்தியபடி கல்லூரிக்குப் புறப்பட்டாள்.
ஓவியக் கல்லூரியை அடைந்ததும் வாசலில் நின்றிருந்த மாணவர்கள் சந்தியாவை முகமலர்ச்சியுடன் வரவேற்றனர்.
“வாங்கம்மா… உங்களை அழைச்சிட்டு வரச் சொன்னார் ஆசிரியர்…”
சந்தியாவிற்கு ஒன்றும் புரியவில்லை. இந்த கல்லூரியில் ஓவியம் வரையும் அறையைத் தவிர வேறு எங்கும் சந்தியா இதுவரை சென்றதில்லை. இப்போது எங்கே அழைத்துச் செல்கிறார்கள் எனப் புரியாமல் குழம்பினாள்.
சிறியதொரு விழா அரங்கத்துக்கு மாணவர்கள் அழைத்துச் செல்ல அவள் உள்ளே நுழைந்ததும் அங்கிருந்த கூட்டம் எழுந்து நின்று கைதட்டி சந்தியாவை வரவேற்றது. செல்வராஜ் கைகுவித்து வரவேற்று மேடையில் நடுநாயகமாய் இருந்த நாற்காலியில் சந்தியாவை அமர வைத்தார். தயக்கத்துடன் அமர்ந்தாள் சந்தியா.
சற்று நேரத்தில் கல்லூரி முதல்வர் விழா அரங்கில் நுழைந்து ஒலிபெருக்கியின் முன் நின்றார்.
“மகளிர் தினத்தன்று வருடந்தோறும் விழா நடத்தி ஏதேனும் ஒரு துறையில் சாதனை படித்த சிறந்த பெண்மணியை வரவழைத்து மரியாதை செய்வது நம் கல்லூரியின் வழக்கம். இந்த வருடம் யாரை அழைக்கலாம் என யோசித்த போது, செல்வராஜ் தகுதிவாய்ந்த நபரை அடையாளம் காட்டினார். அவர் வேறு யாருமில்லை, இதோ இங்கே அமர்ந்திருக்கும் சந்தியா அவர்கள் தான்.
நம் கல்லூரி மாணவர்களுக்காக கடந்த இருபது வருடங்களாக மாடலாக இருந்தவர். செய்யும் தொழிலை புனிதமாக கருதி முழு அர்ப்பணிப்புடன் சேவை ஆற்றியவர். தாய்மையின் இன்னொரு வடிவில் அவரைக் காண்கிறேன். அவரின் தன்னலமில்லா சேவைக்கு தலைவணங்கி கல்லூரியின் சார்பாக சிறந்த பெண்மணி விருதை வழங்கி சிறப்பிப்பதில் பெருமகிழ்வு அடைகிறேன்”
பொன்னாடை போர்த்தி விருதை வழங்கினார். அதை வாங்கும் போது சந்தியாவின் கரங்கள் நடுங்கின. கண்கள் கலங்கின.
அரங்கு நிறைந்த கரவொலிக்கு நடுவே அவள் விருதைப் பெற்றுக் கொண்டதும், அவளைப் பேச அழைத்தார் செல்வராஜ். என்ன பேச வேண்டும் என தெரியாத போதும் ஒலிபெருக்கி முன் வந்து நின்றாள் சந்தியா
“எல்லாருக்கும் வணக்கம். இந்த நிமிசம் என்ன பேசணும்னு யோசிக்காம மனசில பட்டதைப் பேசறேன். இது தான் என் முதல் மேடை. செல்வராஜ் ஐயாவுக்கு வாழ்நாள் முழுக்க நன்றிக்கடன் பட்டிருக்கேன். கையில பச்சைப்புள்ளையோட நின்னபோது பொழைக்க வழி காட்டினாரு. ரொம்ப படிக்காத நான் வேற வழியில்லாம தான் இந்த வேலையை ஏத்துகிட்டேன்.
இதுவரை இந்த வேலையை செய்யும்போது குற்ற உணர்வு என்னுள்ளத்தில் இருக்கும். இப்படிப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டோமேன்னு வருத்தப்பட்டிருக்கிறேன். இப்போது தான் உணர்கிறேன், தாயொருத்தி பாலூட்டுகையில் அந்த குழந்தை தாயை நோக்கும் மனநிலையில் தான் இங்கிருக்கும் மாணவர்கள் என்னை பார்த்தனர் என்பதை.
சமூகம் எப்படி வேண்டுமானாலும் பார்க்கட்டும், இங்கு யார் மனதிலும் களங்கமில்லை. இப்போது என்மனதிலும் குற்ற உணர்வில்லை. இருபது வருடங்களாக என்னையும் என் மகளையும் காப்பாற்றிய தொழிலை தெய்வமாக கருதுகிறேன். கலையை கலையாக மட்டுமே பார்க்க வேண்டும் என்ற மனமுதிர்ச்சியோடு உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்”
சந்தியா பேசி முடித்ததும் மீண்டும் கரவொலி. மாணவர்கள் அவளின் ஆளுயர ஓவியத்தை வரைந்து பரிசாக கொடுத்தனர்.
“சந்தியாம்மா இது எங்களின் நினைவுப் பரிசு” மாணவர்களின் அன்பில் அவள் மனம் நெகிழ்ந்தது. அந்த கூட்டத்தின் மூலையில் இருந்த தீபாவிற்கும் கண்கள் பனித்தது.
மூன்று மாதத்திற்கு முன் எதேச்சையாக அம்மாவைப் பார்க்க வந்த இடத்தில், அவள் உண்மையைத் தெரிந்து கொண்டாள். முதலில் அதிர்ச்சியாக இருந்தாலும் அம்மாவின் தியாகம் பெரிதாகத் தெரிந்தது.
அம்மாவைக் கேள்வி கேட்டு சங்கடத்தில் ஆழ்த்த அவள் விரும்பவில்லை. அம்மாவின் பணிக்கு கிடைத்த கௌரவம் அவளுக்கும் மகிழ்ச்சியே
செல்வராஜ் சாரிடம் அம்மாவிடம் இதைப் பற்றி சொல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டாள். வந்த சுவடே தெரியாமல் வெளியேறினாள்
இன்று கூட அவர் கொடுத்த தகவலின்படி தான் விழாவிற்கு வந்தாள். கூட்டத்தில் ஒரு ஓரமாய் அமர்ந்தபடி அம்மாவையே பார்த்தபடி இருந்தாள்.
நல்லவேளை அம்மா இப்போதும் அவளை பார்க்கவில்லை. மகளுக்கு தன்நிலை தெரியக்கூடாது என்று நினைத்த அம்மா, விரும்பிய போது அவளிடம் இதைச் சொல்லட்டும் என்ற எண்ணத்துடன் மௌனமாக அங்கிருந்து வெளியேறினாள் தீபா.
அவள் மனதில் அம்மா இன்னும் ஒருபடி உயர்ந்து தெய்வமாகத் தெரிந்தாள். கலை சிந்தனையோடு நோக்குகையில், இந்த தொழிலும் புனிதம் தானே
(முற்றும்)
#ads – Best Deals in Amazon 👇
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
உண்மை. நல்ல கதை. அருமையான கரு.