வழக்கமான மிருகக்காட்சி சாலை அல்லது சரணாலயங்களில் என்ன விலங்குகளை நாம் பார்த்திருக்கிறோம்? சிங்கம், புலி, ஓட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை….!!
ம்.. வாங்க, இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கப் போகும் விலங்குகள் எல்லாமே ஆஸ்திரேலியாவிற்கு மட்டுமே சொந்தமானவை, பல விசித்திரமானவையும் கூட
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் மட்டுமா அதிசயம்? இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கப் போகும் பல விலங்குகளும் அதிசய வகை தான்.
ஹீல்ஸ்வில் சரணாலயம் மெல்பேர்ன் நகரத்துக்கு பக்கத்தில் தான் இருக்கிறது, சுமாராக ஒன்றரை மணி நேரப் பயணம்
மெல்பேர்ன் நகர மையப் பகுதியிலிருந்து (CBD) இங்கே சென்று வர பேருந்துகளும் இருக்கின்றன
இந்த ஹீல்ஸ்வில் சரணாலயம் முற்றிலும் ஆஸ்திரேலியாவிற்கே உரித்தான விலங்குகளை காப்பதிலும், இனப்பெருக்கம் செய்யும் முயற்சியில் வெற்றி பெறுவதற்கும் பெயர் போன ஒன்று.
நாங்கள் போனது கொ.மு (கொரோனோவிற்கு முன்னான காலம் டிசம்பர் 2018)
எங்கள் நண்பர் திரு.பாலாஜியின் குடும்பத்தோடு சென்று வந்த மறக்க முடியாத பயணங்களில் இதுவும் ஒன்று.
பிளாட்டிபஸ் என்ற விலங்கைப் பற்றி நீங்கள் அறிந்ததுண்டா?
பிளாட்டிபஸ் என்ற ஜீவனை பலரும் உண்மையில் இல்லாத விலங்கு; மனிதக் கற்பனையின் விளைவு என்றே நினைத்திருந்தார்கள். அதற்குக் காரணம் அதன் உடல் அமைப்பு தான்.
புல்லாகி, பூடாகி, புழுவாய், மரமாய், பல்விருகமாய், பறவையாய், பாம்பாய் … என்று திருவாசகம் – சிவபுராணத்தில் ஒரு வரி வரும்.
இறைவன் எத்தனை பெரியவர் என்பதை சொல்லாமல் சொல்கின்றன இம்மாதிரி விலங்குகளின் அண்மை.
இந்தப் பிரபஞ்சத்தில் வாழும் பலகோடி உயிர்களில் நானும் ஒன்று என்ற பேருண்மை, பிளாட்டிபஸ் போன்றவற்றை பார்த்த மாத்திரத்தில் மனதில் நிற்கும்.
கடவுள் நம்மை யாராக வேண்டுமானாலும் படைத்திருக்கலாம். கிடைத்தற்கரிய மனிதப் பிறவி வாய்த்திருக்கிறது. அதை சரியாக பயன்படுத்துவதும் வீணடிப்பதும் நம் கையில் தான் இல்லையா?
நீர்நாய் (Otter) போன்ற உடலும், வாத்து (duck) போன்ற வாயும், கால் அமைப்பும், மரத்தில் வாழும் விலங்கு (Beaver) போன்ற தடித்த வாலும் உடைய பிராணி பிளாட்டிபஸ். உள்படம்: நீருக்குள் பிளாட்டிபஸ் (Pic Courtesy : National Geographic)
பறவைக்கும் பாலூட்டிக்கும் இடையிலுள்ள பரிணாம வளர்ச்சியில் வந்த உயிரினம். பெரும்பாலும் அதிக ஆழமில்லாத பகுதிகளில் மட்டுமே வசிக்கக் கூடியது
பிளாட்டிபஸ் பாலூட்டி வகையாக இருந்தாலும், முட்டையிட்டே இனப்பெருக்கம் செய்யும். பெண் பிளாட்டிபஸ் தன் வாலுக்குக் கீழே வைத்து முட்டையை அடைக்காக்கிறது. பத்து நாட்களில் வெளி வரும் பிளாட்டிபஸ் குழந்தை, ஒரு சிறிய விதை அளவில் தான் இருக்குமாம். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் தாயின் அரவணைப்பில் இருந்து வளர்ந்து, மெல்ல நீந்த தொடங்குமாம்.
இன்னொரு அதிசயம், பிளாட்டிபஸ் விலங்கிற்கு முலைகள் இல்லை. அதன் தோலின் வழியே சுரக்கும் பாலை அருந்தி அதன் குட்டி உயிர் வாழத் தொடங்குகிறது.
நாங்கள் பார்த்த சரணாலயத்தில், மூன்று நான்கு பிளாட்டிபஸ் இருந்தன. சர்க்கஸ் சாகசம் செய்வதை போல, ஒரு நிமிடத்தில் பலநூறு முறை தண்ணீருக்குள் சுழன்றது அது.
ஹீல்ஸ்வில் சரணாலயம் பலமுறை பிளாட்டிபஸ் உயிரினத்தை இனப்பெருக்கம் செய்யவைக்கும் முயற்சியில் வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சியான செய்தி.
#ad
கோலா (Koala)
முழுக்க முழுக்க புசு புசுவென்று பார்த்தாலே, கட்டிக் கொள்ள வேண்டும் என்று உங்களுக்கு எந்த விலங்கை பார்த்தால் தோன்றும்? பெரும்பாலும் வீட்டில் நாய், பூனை, முயல் வளர்ப்பவர்கள் இந்த ரகம்.
நாங்கள் பார்த்த கோலா, முழுவதுமாக பார்த்ததும் பிடித்துப் போகும் முசுமுசு ரகம், இது கரடி இனம் அல்ல.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா பகுதியில் உள்ள யூக்கலிப்டஸ் காடுகளில் மட்டுமே உள்ள இதற்கு வால் இல்லை
உணவே மருந்து என்று கேள்விப்பட்டிருக்கிறோம். நம் கோலா எப்போதும் யூக்கலிப்டஸ் இலைகளையே உணவாகக் கொள்கிறது. மிக சிறிய அளவே அதற்குத் தேவையான சக்தி கிடைப்பதால், பெரும்பாலும் தன் வாழ்நாளைத் தூங்கியே கழிக்கிறது
ஒவ்வொரு கையிலும் ஆறு விரல்களைக் கொண்ட கோலாவுக்கு, வயிற்றில் கங்காரூகளைப் போல பை இருக்கிறது. ஆனால் இந்த பையில் பின் வழியாகத் தான் உள்ளே வர முடியும்.
கர்ப்பகாலம் ஒரு மாதம் தான். ஆனால், தன் பிள்ளைக்கு கிட்டத்தட்ட ஓராண்டு காலத்திற்கு பாலூட்டுகிறது கோலா.
இன்னொரு அதிசயமான செய்தி. தன் பிள்ளையை பாலிலிருந்து, திட உணவுக்கு பழக்குகிறது கோலா. அதன் மலவாய் வழியாக பாதி ஜீரணிக்கப்பட்ட, சூப் போன்ற ஐகலிப்டஸ் இலைகளை கோலாவின் சிறுபிள்ளை, வயிற்றிலுள்ள பையில் இருந்தவாறே உண்டு பழகுகிறது
உள்படங்கள்: விழிப்பிலும், உறக்கத்திலும் கோலா
ஓம்பாட் (Wombat)
உங்கள் பதின்பருவப் பிள்ளையை போல சொன்னதைக் கேட்க மாட்டான் இந்த ஓம்பாட். இதற்கும் வயிற்றில் பை இருக்கிறது. பின்வழி வாசல் தான்
இது பெரும்பாலும் இரவில் வெளியே வரக் கூடிய, சைவ உணவு உண்ணும் பிராணி. இதன் மலம் எப்போதும் கனசதுரமாக இருக்குமாம். அது ஏன் என்பது இன்று வரையில் புரியாத புதிர்😊.
இது பெரிய அளவிலான பெருச்சாளி ரகம்
கீழே உள்ள படத்துல இருக்குறது யாரு? இவங்க கங்காரு இல்ல.
கங்காரு வின் ஒன்றுவிட்ட அத்தையின் பேத்தி வாலாபி. கங்காருவை விட கொஞ்சம் அளவுல சின்னதா இருக்காங்க. (உள்படம் வாலாபி)
ஆஸ்திரேலியாவுக்கு வந்துட்டு கங்காரூக்களை பார்க்காம எப்படி போக முடியும்?
சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்திலும் கங்காரூகள் இருக்கின்றன.
கங்காரு பலமான பின்னங்கால்களைக் கொண்டது. மிக வேகமாக தாவி ஒரு மணி நேரத்துக்கு 48 கிலோமீட்டர் கூட ஓடக் கூடியது. பெரும்பாலும் கூட்டமாக வாழும் இயல்புடையது கங்காரு
கங்காருவின் வயிற்றுப்பை அனைவரும் அறிந்ததே. எல்லா கங்காருகளுமே, குறைமாத பிள்ளையாகத் தான் பிறக்கின்றன. மூன்று சென்டிமீட்டர் அளவே இருக்கும் அந்த சிறிய குட்டி எப்படி தன் தாயின் பைக்குள் தானாக சென்றடைகிறது என்பது அதிசயம் தான்.
கங்காருக் குட்டிக்கு தானாக பால் அருந்தத் தெரியாது. அதனால் தாய் கங்காரு தன் தசைகளைக் கொண்டு குட்டியின் வாயில் பால் சென்று சேருமாறு செய்கிறதாம். பழுப்பு நிறம் கொண்ட மர கங்காரு (கங்காரூகளுடன் எங்கள் வீட்டு சின்ன கங்காரு)
மிருகங்கள் மட்டுமல்ல, இயற்கையில் உள்ள அனைத்தையுமே இங்கே பாதுகாக்கிறார்கள். இந்த மரம் இரு நூற்றாண்டுகள் கடந்ததாம்
அது மட்டுமல்ல, நாம் எவ்வாறு இயற்கையை பாதுகாக்க உதவலாம் என்று யோசிக்க வைக்கிறார்கள். கழிவறையில் பயன்படுத்தும் பேப்பர், மறுசுத்திகரிப்பு செய்யப்பட்டதாக பயன்படுத்துங்கள். அதன் மூலம் பல்லாயிரம் மரங்கள் உயிர் வாழும் என்றார்கள். நாங்கள் இப்போது வாழும் நாடான சிங்கப்பூரிலும் நீர்நாய்களின் வழி, மறுசுத்திகரிப்பை பற்றி அதிகம் வலியுறுத்துகிறார்கள்
விலங்குகள் மட்டுமல்ல, பல விதமான பறவைகளையும் பார்த்தோம். இங்கே ஒரு சிலவற்றை மட்டும் படமாக பதிந்துள்ளேன். பட்டுப் புடவை போல பல வண்ணக்கிளிகள்
பறவை கண்காட்சி முடிந்த பிறகு, ஒரு காணொளி காண்பித்தார்கள். எப்படி பலூன்கள் கடலில் சென்று சேர்ந்து, பல பறவைகள் அவற்றை உண்டு இறக்கின்றன என்று விரிவாகக் காட்டினார்கள். பிள்ளைகளை, தங்கள் பிறந்தநாளில், பலூன் ஊத மாட்டேன் என்று சத்தியம் செய்யச் சொன்னார்கள்.
ஆஸ்திரேலியாவில் சிங்கம் புலிகள் இல்லை.
தைலஸின் எனப்படும் விலங்கு முன்னர் தாசுமேனியா புலி என்று அழைக்கப்பட்டது. பார்க்க நாய் மாதிரி ஆனால், புலியைப் போல முதுகில் கோடுகள் இருக்கும். இந்த விலங்கு இப்போது படத்தில் மட்டும் உள்ளது. முற்றிலும் வேட்டையாடப்பட்டு இன்று ஒன்று கூட இல்லை
கையளவு கூட இல்லாத பல சிறிய வகை மிருகங்களையும் கண்டோம்.
முடிந்த வரை படம் எடுத்துக் கொண்டு, மனம் முழுக்க அதிசயப் பிராணிகளை அசை போட்ட படி நாங்கள் ஹீல்ஸ்வில் சரணாலயத்தை விட்டு வெளியே வந்தோம்.
அடுத்த நாள் நாங்கள் சென்றது, பெரிய சமுத்திர சாலை (Great Ocean Road, Victoria) என்று அழைக்கப்படும் பகுதி. உலகின் மிக அழகான சாலையாக இது இருக்கிறது.
ஏன் என்று தெரியுமா?
காதலர் தினம் படத்தில் வரும் என்ன விலை அழகே? பாடலைப் பாருங்கள் புரியும்.
243 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த சாலை, முதலாம் உலகப் போரில் உயிர் நீத்த வீரர்களின் நினைவாக ஏற்படுத்தப்பட்டது.
விக்டோரியா பகுதியில் இருக்கும் டார் கி (Torquay), அல்லன்ஸ் போர்ட் (Allansford) என்ற இரு ஊர்களையும் இணைக்கிறது. பல தேசிய பேரிடர்களைத் தாண்டியும் ஒரு நூற்றாண்டாண்டாக நம்மோடு பயணிக்கிறது இந்த சாலை.
இத்தனை பெரிய சாலையில் மாரத்தான் போட்டிகளும் நடக்கின்றன.
இந்த சாலையின் வழியே பல மழைக்காடுகளும், பன்னிரு அப்போஸ்தலர்கள் எனப்படும் செங்குத்தான பாறைகள் பாறைகளும் இருக்கின்றன.
சோழர் காலக்கோயில்களைப் பார்த்தீர்களானால், உங்களுக்கு இந்த பாறைகளின் நிறத்துக்கும், கோயில்களுக்கும் உள்ள ஓற்றுமை புரியும்.
சுண்ணாம்பு அல்லது மணற்பாறையினால் இயற்கையாக நிற்கின்ற இவ்வடிவங்கள் நாற்பத்தைந்தடி உயரத்தில் இருக்கின்றன.
இந்த பகுதியில் இந்தியாவின் பாதி பேர் இங்கே வந்துவிட்டார்களோ என்னும் அளவில் கூட்டம் இருந்தது. நாங்கள் அங்கு சென்ற நாட்கள், வருடத்தின் கடைசி வாரம்.
இருபது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இவை இருப்பதாகச் சொல்கிறார்கள்.
மிக ரம்மியமான இடம். என்றும் நினைவில் இருக்கும் ஒரு காட்சி. மேகம் சூழ்ந்த நீல நிற வானமும், கடலும், இந்த செங்குத்து பாறைகளும்!
இங்கு படங்கள் எடுத்துக் கொள்ளலாம்.ஆனால் கடல் பகுதியில் இறங்க அனுமதி இல்லை
நாங்கள் அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு பள்ளத்தாக்கு பகுதிக்கு சென்று அங்கே கடலலையில் நின்று மகிழ்ந்தோம். லோக் ஆர்ட் பள்ளத்தாக்கு: LocArd Gorge
கடல்புறா என்பது எழுத்தாளர் சாண்டில்யனின் புகழ் பெற்ற புதினம்.
உப்பங்கழி, துறைமுகம் போன்ற பகுதிகளில் இதைப் பார்க்கலாம். நாங்கள் தண்ணீரில் பிள்ளைகள் விளையாட என்று வேறொரு இடத்திலும் வண்டியை நிறுத்தினோம்.
தண்ணீர் ஐஸ் ரகம். ஆ ஆ என்று பிள்ளைகள் அலற, அவர்கள் துரத்தும் தூரத்தில் நிறைய கடல் புறாக்கள் (Sea gulls) இருந்தன. (உள்படம்: கூட்டமாக கடல் புறாக்கள்)
ஹெலிகாப்டரில் இந்த பகுதி முழுவதையும் சுற்றி காட்டுகிறார்கள். அந்த பயணத்தில் நீலத் திமிங்கிலங்களையும் கண்டு ரசிக்கலாம். எங்களால் போக முடியவில்லை. இது ஒரு கிளை செய்தி மட்டுமே
வழி நெடுக அழகான வண்ண மலர்களும், பலவகையான மாடுகள், குதிரைகள், செம்மறி ஆடுகள் இருந்தன.
இத்தனை அழகாக பூ இருந்தால் யார் தான் முகம் காட்ட மாட்டார்கள்?
கொரோனா போகட்டும். மீண்டும் சுற்றலாம் உலகை !!!
#ad
(முற்றும்)
GIPHY App Key not set. Please check settings