சஹானா
சிறுகதைகள்

நாளைக்கு (சிறுகதை) – ✍ ஸ்ரீவித்யா பசுபதி

#ad 

                      

             

 

ரவு உணவுக்காக, தோசைக்கு சட்னியை அரைத்துக் கொண்டிருந்தாள் மாலதி.

எட்டாவது படிக்கும் மகள் நிமிஷாவும், மூன்றாவது படிக்கும் மகன் ரோஷனும் ஹாலில் டிவியை அலற விட்டுக் கொண்டிருந்தார்கள்.

திடீரென ரோஷன், “அம்…மா…” எனக் கத்தினான்.

மிக்சி சத்தத்திலும் அவன் கத்துவது கேட்டதால், “சண்டை போடாம டிவி பார்க்கச் சொன்னா ரெண்டு பேரும் கேக்கறதில்ல. இதோ வரேன்… ரெண்டு பேருக்கும் இருக்கு இப்ப” என்று பதிலுக்குக் கத்தினாள் மாலதி

இவ்வளவு சத்தத்திலும் எதுவுமே நடக்காத மாதிரி, மொபைலில் மூழ்கி இருந்தான் மாலதியின் கணவன் சுந்தரம்.

மறுபடியும் ஹாலிலிருந்து “அம்…மா…” அலறல் சத்தம். இம்முறை கத்தியது நிமிஷா.

கோபத்தில், மாவைக் கலக்கிக் கொண்டிருந்த கரண்டியோடு ஹாலுக்கு விரைந்தாள் மாலதி. கிச்சனிலிருந்து போகும் போதே கத்திக் கொண்டே போனாள்.

“என்ன அங்க ஒரே கூப்பாடு. ரெண்டு பேரும் என்னை நிம்மதியா ஒரு வேலை செய்ய விடறீங்களா? எதுக்குடி இப்படித் தொண்டை கிழியக் கத்தறே? அவன் தான் சின்னப் பையன், கத்தறான்னா… நீயும் சேர்ந்து கத்திட்டிருக்கே?

எங்க உங்கப்பா? உலகமே அழிஞ்சாலும் அவருக்குத் தெரியாதே…. மொபைல்ல மூழ்கிட்டா உங்களுக்கு சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியாதா…? என்னைக்கு ஆத்திரத்துல அந்த மொபைலைப் புடுங்கி குப்பைல போடப் போறேனோ தெரியல. பசங்க கத்தறாங்க… வந்து என்ன, ஏதுன்னு பாத்தா என்ன?”

கத்திக் கொண்டே வந்தவள், டிவியைப் பார்த்ததும் அதிர்ந்து போய் அப்படியே பேச்சு, மூச்சற்று நின்று விட்டாள். கையிலிருந்த மாவுக் கரண்டி, அவளையும் அறியாமல் கீழே விழுந்தது.

கரண்டி விழுந்த சத்தம் தூக்கிவாரிப் போட, மொபைலை அப்படியே போட்டு விட்டு, பக்கத்து அறையிலிருந்து சுந்தரமும் ஹாலுக்கு வந்தான்.

மனைவியும், இரண்டு குழந்தைகளும் உறைந்து போய் நிற்பதைப் பார்த்து விட்டு, “என்ன… லண்டன் விளையாடத் தான் இவ்வளவு ஆர்ப்பாட்டமா? நான் கூட என்னவோ ஏதோனு கேமைப் பாதியில போட்டுட்டு வந்தேன்” என்றான்

யாரிடமும் சலனம் இல்லை. டிவியைப் பார்த்தபடி அப்படியே இருந்தார்கள். ரோஷன் வாய் திறந்து அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தான்.

சுந்தரமும் குழப்பத்துடன் டிவியைப் பார்த்தான். டிவியில் ஃப்ளாஷ் நியூஸ், கொட்டை எழுத்தில் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது.

“சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நோய்த் தொற்றின் தாக்கம் குறைந்து, கட்டுக்குள் வந்து விட்டதால், நாளை திங்கட்கிழமை முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும், தனியார் மற்றும் அரசு அலுவலகங்களும் வழக்கம் போல் இயங்கத் தொடங்கும். ஆனால் ஒரு வாரத்திற்கு அனைவருக்கும் முககவசம் கட்டாயமாக்கப்படுகிறது.”

“என்ன மாலு… நாளைல இருந்து ஆபீசா? என்ன திடீர்னு சொல்றாங்க? கார் க்ளீன் பண்ணணும், காத்தடிக்கணும், டீசல் போடல…”

“அம்மா… என் யூனிஃபார்ம் அயர்ன் பண்ணியிருக்கா? ஸ்கூல் பேக் கிழிஞ்சிருந்துதே… அதை சரி பண்ணிட்டீங்களா?” என்றாள் நிமிஷா.

“அம்மா… நாளைக்கு மண்டேல்ல… வைட் ஷூ பாலிஷ் போடணுமே…. அது ஒரே அழுக்கா, ப்ரௌன் கலர்ல இருந்துது…” என்றான் ரோஷன்.

மூன்று பக்கத்திலிருந்து வந்த தாக்குதலால் தலை சுற்றியது மாலதிக்கு.

“கடவுளே… எவ்வளவு விஷயங்களைத் தயார் செய்ய வேண்டியிருக்கு. இன்னைக்கு சிவராத்திரி தான்” என்றாள் மாலதி.

மணி இரவு 8:45

“மூணு பேரும் முதல்ல வந்து சாப்பிடுங்க. டின்னர் கடையை க்ளோஸ் பண்ணிட்டு, எல்லாத்தையும் ரெடி பண்ணலாம்” என்றாள் மாலதி.

மளமளவென டின்னர் வேலைகள் முடிந்தன. மணி 9:10.

“எல்லாரும் அவங்கவங்களுக்குத் தேவையானத பாத்து, சீக்கிரம் ரெடி பண்ணுங்க. கடகடனு வேலையாகணும்” என்றாள் மாலதி.

அதன் பின் தான் ரணகளமே ஆரம்பமானது.

“அம்மா… என் புக்ஸ் எல்லாம் எங்கே இருக்குமா? பென்சில் பாக்ஸ் வேணும்”

“ரோஷன்… எல்லாம் உன் ஷெல்ஃபுல தான் இருக்கும் பாரு”

“அம்மா… ட்ரை மேக்ஸ் பென் ரீஃபில் எல்லாம் காலிமா. புதுசு எங்கே இருக்கு? ஐயோ… என் மேத்ஸ் நோட்டுக்கு இன்னும் கவர் போடலையே…”

ரீஃபிலைத் தேடி எடுத்துக் கொடுத்தாள் மாலதி. “மேத்ஸ் நோட்டுக்கு டக்னு கவர் போடு… இந்தா கவரும், கத்திரிக்கோலும்”

“மாலு…. என் லேப்டாப் பேக்ல ஆஃபீஸ் ஐடி கார்ட் இல்ல. கொஞ்சம் எங்கே இருக்குன்னு பாரேன்”

“பேக்லயே இருக்கும்’ங்க… நல்லா பாருங்க. ஐடி கார்ட் நீங்க வெளிலயே எடுக்கலையே” என சொல்லிக் கொண்டே தேடினாள். ஒருவழியாக டிவி ஸ்டாண்டில் இருந்தது.

இதைப் பார்த்ததும் நிமிஷா, “ஆமா… என் ஐடி கார்ட் எங்க? இங்கேயே தான் வச்சிருந்தேன். டேய் ரோஷன் நீ பார்த்தியா?” என்றாள்

“உன்னோடதை நான் ஏன் எடுக்கப் போறேன், நான் பார்க்கலப்பா”

“சரி, சரி… ரொம்பப் பண்ணிக்காதே. உன் ஐடி கார்ட் இருக்கானு முதல்ல பாரு”

“இதோ இருக்கே. நான் எல்லாம் உன்னை மாதிரி இல்ல, பொறுப்பா, பத்திரமா வச்சிருக்கேன் பாரு… அம்மா… நான் குட்பாய் தான”

“டேய்… ஓவரா ஆடாதே… எங்கே காமி உன் ஐடி கார்டை?” என்று வாங்கிப் பார்த்தாள் நிமிஷா.

“டேய்… ரொம்பத் தான் பீத்தினியே… இது செகண்ட் ஸ்டாண்டர்ட் ஐடி கார்டுடா. ஒழுங்காப் பாரு, போன வருஷத்து கார்டு. இதப் போட்டுட்டுப் போனா, உன்னை உள்ளேயே விட மாட்டாங்க”

“அம்மா… பாருமா அக்காவ”

“ரெண்டு பேரும் சும்மா நொய்நொய்னு நச்சாம எல்லாத்தையும் ரெடி பண்ணுங்க”

“மாலு… மாலு… இங்க கொஞ்சம் வாயேன். சீக்கிரம் வா.”

“என்னாச்சு? ஏன் இப்படி அலற்ரீங்க?” என்று கேட்டுக் கொண்டே ரூமுக்குள் போனாள் மாலதி. கணவன் நின்ற கோலத்தைப் பார்த்து, சிரித்து விட்டாள்.

“ஏய்… மாலு… உனக்கு சிரிப்பா இருக்கா? நாளைக்கு ஆஃபீசுக்கு இந்த வைட் ஷர்ட் தான் போடணும்…. இப்ப என்ன பண்றது?”

சிரிப்பை அடக்க முடியவில்லை மாலதிக்கு.

“என்ன பண்ண முடியும்? மூணு மாசம் வீட்டுல இருந்து நல்லா சாப்பிடறது, மொபைல், இல்லேன்னா லேப்டாப், அப்புறம் டிவின்னு உட்கார்ந்து உட்கார்ந்தே பொழுதைக் கழிச்சீங்க. இப்ப நீங்க ஆறு மாசம் முழுகாம இருக்கற மாதிரி தொப்பையை வளர்த்து வச்சிருக்கீங்க. உங்க ஆஃபீசுல மண்டே யூனிஃபார்முக்குக் கொடுத்த வைட் ஷர்ட் தொப்பையைக் கவர் பண்ண மாட்டேன்னு அடம் புடிக்குது. இதுக்கு என்ன பண்ண முடியும்… அதுவும் திடீர்னு?”

“ஏதோ அவசரமா கூப்பிடறீங்களேனு பதறியடிச்சு ஓடி வந்து பார்த்தா, இப்படிக் கவர்ச்சியா போஸ் கொடுத்துட்டு நிக்கறீங்க… சிரிப்பு வருமா, வராதா? எக்ஸர்சைஸ் பண்ணுங்க, வாக் போங்கன்னு முட்டிக்கிட்டேன், கேட்டீங்களா? நாளைக்கு ஒரு நாள் வேற ஷர்ட் போடுங்க. அநேகமா ஆஃபீசுல நிறைய பேர் இப்படித் தான் வருவாங்க.”

“டாடி, டோண்ட் வர்ரி டாடி. உள்ள ஒரு டி ஷர்ட் போட்டு, வெளில இந்த வைட் ஷர்ட் போடுங்க. பட்டன் போட வேண்டாம். சும்மா அப்படியே ஸ்டைலா போட்டுட்டு போங்க. ஃபேனுக்கு நேரா போகும் போது, விஜய் அங்கிள் மாதிரி இந்த ஷர்ட் காத்துக்கு அப்படியே பறக்கும். செம்மையா இருக்கும் டாடி” என்றான் ரோஷன்.

“டேய்… விஜய்யா…? விஜய்க்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சுது…. அவ்வளவு தான். விஜய்’க்கு எந்த காலத்துலடா தொப்பை இருந்துச்சு?” என்று மாலதி சொல்ல, நிமிஷா விழுந்து விழுந்து சிரித்தாள்.

ரோஷன் தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்தவன், சட்டென்று, “அம்மா… ஹேர்கட் பண்ணலையே…. இப்படியே போனா பிடி சார் திட்டுவார். க்ரௌண்டைச் சுத்தி ஓடச் சொல்லுவார்மா.”

“ஆமா மாலு…. நானும் ஹேர்கட் பண்ணலையே…. இந்த ஹேர் ஸ்டைலோட எப்படி ஆஃபீஸ் போக முடியும்?”

“டாடி… உங்களையும் உங்க பாஸ் க்ரௌண்டைச் சுத்தி ஓடச் சொல்லுவாங்களா? அய்ய்ய்…. சேம் பின்ச்…..டாடி… அப்போ கவலையே இல்லையே… க்ரௌண்டைச் சுத்தி ஓடினா தொப்பை கம்மியாயிடும். ஷர்ட் ஈசியா போட்டுக்கலாம்”

“டேய்… ஓடுறா வெளில. நீ போதும் என்னை டேமேஜ் பண்ண…”

“அம்மா… லன்ச் பேக் எங்கே இருக்கு? லன்ச் பாக்செல்லாம் வாஷ் பண்ணணுமா? வாட்டர் பாட்டில் எடுத்து வைக்கணும் மா.”

“ஐயோ… அடுக்கிக்கிட்டே போகாதே நிமிஷா. எனக்குப் பைத்தியம் பிடிக்கற மாதிரி இருக்கு.”

மாலதி கிச்சனுக்குள் நுழைந்து, வெண்கலக் கடைக்குள் யானை புகுந்தது போல், எல்லாவற்றையும் உருட்டி, மூன்று பேரின் லன்ச் பாக்ஸ், லன்ஸ் பேக் எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள்.

இரவு மணி 10:30

வீடு போர்க்களம் போல் இருந்தது.

“ஈஸ்வரா… என்னால முடியல. இன்னும் நாலு கை இருந்தா, எல்லா வேலையும் சீக்கிரம் முடிச்சுடலாம். பகவானே கொஞ்சம் கருணை காட்டேன்.”

“ஓ காட்…. நோ… நோ… ப்ளீஸ்” என்றான் ரோஷன்.

“ஓ மை கடவுளே… நீங்க தூங்கிட்டீங்கன்னு சொல்லிடுங்க… ப்ளீஸ்,” என்றாள் நிமிஷா.

“ஹேய்… குட்டீஸ். கடவுள் உங்க அம்மா கேட்ட மாதிரி எக்ஸ்ட்ரா கையெல்லாம் குடுக்க மாட்டார். டோண்ட் வர்ரி.”

“என்ன… மூணு பேரும் சேந்து என்னைக் கிண்டல் பண்றீங்களா? இருங்க வரேன்…”

“அம்மா… நீங்க மட்டும் அப்பா தொப்பையைக் கிண்டல் பண்ணீங்களே…”

“அப்படிப் போடுறா… நீதாண்டா கரெக்டா கௌண்டர் குடுக்கறே… ஹேய்… மாலு… நோ டென்ஷன்… நாங்க கிண்டல் பண்ணல. இன்னும் நாலு கை வேணும்னு நீ கேட்டியா… உன்னை இன்னும் நாலு கையோட கற்பனை செஞ்சோமா… பயந்துட்டாங்க குழந்தைங்க. அதான் சமாதானப்படுத்தினேன். ரெண்டு கையை வச்சுட்டே பத்ரகாளி மாதிரி சிலசமயம் ஆடறே… இன்னும் நாலு கை சேர்ந்தா… தாங்க முடியாது மாலு.”

மாலதி இடுப்பில் கை வைத்துக் கொண்டு முறைத்தாள்.

“போச்சு… அப்பா வசமா மாட்டிக்கிட்டார். மாட்டிக்கிச்சே…. மாட்டிக்கிச்சே… மாட்டிக்கிச்சேசேசே…” என்று ரோஷன் பாட ஆரம்பித்தான்

அதற்கு மேல் விட்டால் ஆபத்து என்பதை உணர்ந்த சுந்தரம், “வாங்க… வாங்க… எல்லாரும் தூங்கலாம். லேட் ஆயிருச்சு” என்று பேச்சை மாற்றினான்.

எல்லாரும் போய்ப் படுத்துக் கொண்டார்கள். ரோஷன் மறுபடியும் எழுந்து உட்கார்ந்து, “அம்மா… ஸ்கூல் வேன் வருமா மா? ட்ரைவர் அங்கிளுக்கு ஃபோன் பண்ணிக் கேக்கணுமா?” என்றான்.

“ஆமா… நல்ல வேளை ஞாபகப்படுத்தினே. இரு ஃபோன் பண்ணிக் கேக்கறேன்.”

“ஏய்… மாலு… மணி 11 ஆகுது. இப்ப போய் ஃபோன் பண்ணுவியா? பேசாம தூங்கு. காலைல பார்த்துக்கலாம். அப்படி வேன் வரலேன்னா ஆட்டோல போகட்டும்.”

“அம்மா… மாஸ்க் கண்டிப்பா போட்டுக்கணுமா? அப்போ எப்படி சாப்பிடுவேன்? தண்ணி எப்படி குடிக்க முடியும்? இந்த நவீன் இருக்கான் இல்லமா, அவன் எப்பப் பாரு என் திங்க்ஸ் எல்லாம் புடுங்கிட்டே இருப்பான். அவன் மாஸ்க்கைப் புடிங்கிட்டா என்ன பண்றதுமா?”

“மாஸ்க்கை புடுங்கிட்டா உனக்குத் தான் பனிஷ்மெண்ட்.”

“அம்மா… பாருமா இவள.”

“ஐயோ… பேசாம் தூங்குங்களேன். என்னால முடியல,” என்று சுருண்டு படுத்தாள் மாலதி.

“அம்மா… என் ஐடி கார்ட் இன்னும் கிடைக்கல மா” என்று ரோஷன் முணுமுணுப்பாகச் சொன்னான்.

“ஈஸ்வரா… ஐடி கார்ட், மாஸ்க், யூனிஃபார்ம், லன்ச் பாக்ஸ், ஸ்கூல் வேன்…. என்னால முடியல. என்னைத் தூங்க விடுங்க. என்னை விட்டுருங்க… என்னை விட்டுருங்க… ப்ளீஸ்….ப்…ளீ….ஸ்….” முடிந்த மட்டும் பலமாகக் கத்தினாள் மாலதி.

“மாலு… மாலு… ஏன் இப்படிக் கத்தற? என்னாச்சு?” என்று கணவன் உலுக்க, மாலதி விருட்டென்று எழுந்தாள்.

“என்னாச்சு மாலு… இவ்ளோ பலமா கத்தறே? குழந்தைங்க தூங்கறாங்க. என்ன கனவு கண்டே?”

“இல்லைங்க… ஏதோ கனவு… ஆமா… ஸ்கூல் திறக்கறதைப் பத்தி நைட் நியூசுல ஏதாவது சொன்னாங்களா?” என்று மலங்க மலங்க முழித்தபடி கேட்டாள் மாலதி.

“என்ன உளறரே…? நாளைல இருந்து மறுபடி முழு ஊரடங்கு 15 நாளைக்கு சொல்லியிருக்காங்க. நீ என்ன…? பேசாம தூங்கு” எனவும் 

“அப்பாடா… எல்லாம் கனவா…? நல்ல வேளை…” என்று நிம்மதியாகத் தூங்கினாள் மாலதி

#ad

              

                  

 

Similar Posts

2 thoughts on “நாளைக்கு (சிறுகதை) – ✍ ஸ்ரீவித்யா பசுபதி
  1. ஹிஹிஹிஹி, நல்ல அமர்க்களம் தான். ஆனாலும் எல்லாவற்றையும் அதனதன் இடங்களில் ஒழுங்காக வைத்திருந்தால் இந்தப் பிரச்னை இருந்திருக்காது அல்லவா? கடைசி நாள் பள்ளி/அலுவலகத்திலிருந்து வந்ததுமே மறுநாளே எல்லாவற்றையும் துவைத்து அதனதன் இடத்திலே வைத்திருக்கலாம். திடீர்னு தேவைப்படும்போது திண்டாடாமல் எடுக்கலாம். ஆனால் இதுவும் ஓர் அழகு தான். நேரிலே பார்க்கிறாப்போலவே இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: