வாசற்கதவைத் திறந்ததுமே மாசி மாதத்து இளம்பனிக்காற்று முகம் வருட, அந்த சுகத்தை ரசித்தவாறே டைல்ஸ் தரையில் கிடந்த செய்தித்தாளை எடுத்து தலைப்புச் செய்திகளில் கண்களைப் பதித்தவாறே பையில் போடப்பட்டிருந்த பால் பாக்கெட்டுகளை கையில் ஏந்தியபடி திரும்பி நடந்த போது, எவர்சில்வர் தட்டில் ஃபோர்க்கை வைத்தால் எழும் உடலை சிலிர்க்க வைக்கும் ‘கிறீச்’ சத்தத்தைப் போன்ற ஒலியைக் கேட்டதுமே மனம் சொன்னது, ‘அவள் வந்து விட்டாள்’ என
நகரத்தின் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய மையப்பகுதியில் அமைந்திருந்த அந்த நிலத்தை வாங்கி வீடு கட்ட திட்டமிட்ட போதே, மைதிலி தன் கணவன் ஸ்ரீதரிடம் மறுப்பு தெரிவித்தாள்
“இங்க பாருங்க! இந்த தெருவில எல்லா மாதிரியான ஆட்களும் இருக்காங்க. நம்மை விட வசதி படைத்தவங்க பிரச்னையில்ல, எதுலையும் தலையிட மாட்டாங்க. இருக்கிற இடமே தெரியாம தான் உண்டு தன் வேலை உண்டுனு இருப்பாங்க. நம்மை மாதிரி நடுத்தர மக்களா இருந்தா, நம்மகிட்ட அன்பாவும் சகஜமாவும் பழகுவாங்க
ஆனா… இங்க எவ்ளோ பேர் குடிசைப் போட்டு ஓட்டு வீட்ல இருக்காங்க. இவங்களுக்கெல்லாம் படிப்பறிவோ நாகரீகமோ கொஞ்சம் கூட இருக்காது. நம்ம கூடப் பழகவும் தெரியாது. எப்பவும் குடிச்சிட்டு கலாட்டா பண்ணிட்டு இருப்பாங்க
அதனால இந்த நிலம் நல்லா விலைப் போகும் போது வித்துடலாம். நம்ம பையன் படிப்புக்கு, எதிர்காலத்துக்கு உதவும்
இப்ப இருக்கிற வாடகை வீட்டிலேயே இருந்துடலாங்க. அந்த வீட்டுக்கு என்ன குறைச்சல்? நல்ல காற்றோட்டமா வசதியாத்தான இருக்கு?” என மைதிலி வாதிட
“நீ வீட்டிலேயே இருக்கிறதால எங்க ரெண்டு பேரோட கஷ்டம் புரியல. நாம இருக்கிற வீடு சிட்டிக்கு அவுட்டர்ல இருக்கு. என் ஆஃபிஸ் டிநகர்ல, டூவீலர்ல போயிட்டு வர்றதுக்குள்ள போதும்னு ஆயிடுது. நம்ம அஷ்வின் வேன்ல ஒரு மணிநேரம் பயணிச்சு ஸ்கூலுக்கு தினமும் போறான், துவண்டுப் போயிடறான் குழந்தை. டயர்டுல பலநாள் அவன் சரியா சாப்பிடாம, படிக்காம தூங்கிடறான்னு நீதான எப்பவும் கம்ப்ளெயின்ட் பண்ற
அதான்… நல்லா யோசனை பண்ணி தான் நகரத்துக்கு மையமா இருக்கிற இந்த இடத்துல லோன் போட்டு நிலம் வாங்கிட்டேன். எங்க அப்பா கொஞ்சம் பணம் கொடுத்து உதவுறதால தான் இப்ப நாம வீடு கட்டவும் ஆரம்பிச்சுட்டோம். போகப் போக உனக்கு இந்த சூழ்நிலைப் பழகிடும்” என சமாதானம் செய்தான் ஸ்ரீதர்
கிரகப்பிரவேசத்திற்குப் பிறகு புது வீட்டில் மகிழ்ச்சியாகத் தான் குடித்தனத்தை ஆரம்பித்தாள் மைதிலி. ஒவ்வொரு அறையையும் பார்த்து பார்த்து இன்டீரியர் செய்திருந்தனர் இருவரும். அதனால் சற்றுப் பெருமிதத்தோடே வலம் வந்தவள் புதுவீட்டைப் பார்க்க வந்தவர்களிடம், அதன் இன்ட்டீரியர் குறித்து விசாரித்தவர்களிடம் எல்லாம் ஏகப்பட்ட யோசனைகளைக் கூறிப் பாராட்டைப் பெற்றாள்
அஷ்வின் தனது ஸ்டடி ரூமிலேயே ஐக்கியமாகிப் போனான். அவனது விருப்பத்திற்கேற்ற வகையிலேயே அறை அமைக்கப்பட்டதில் அவனுக்கும் மகிழ்ச்சியே
ஆனால் பட்ஜெட்டை மீறி அதிகளவு பணம் வீடுக் கட்டுமானத்தில் செலவானதில் ஸ்ரீதர் தான் பெரிதும் திக்குமுக்காடி போனான். தனது சம்பளத்தின் சரிபாதி கடனை அடைப்பதற்கே செலவாவதை எண்ணி அவன் கவலையுற்ற போது தான்… தலைமை அலுவலகத்திலிருந்து ஒரு நல்ல செய்தி கிடைத்தது
கனடாவில் மென்பொறியாளராகப் பணிபுரியும் நல்லதொரு வாய்ப்பு அது. ஒரு வருட ப்ராஜெக்ட்டாக இவனோடு நான்கு சகப்பணியாளர்களும் நியமிக்கப்பட்டனர். அதற்கான அறிவிப்பு வந்ததுமே உடனே தனது இசைவைத் தெரிவித்தான் ஸ்ரீதர்
மைதிலி தான் இச்செய்தியை ஏற்க முடியாமல் தவித்தாள். அவனது பிரிவு அவளுக்கு வருத்தமளித்ததோடு, தனியே நகரத்தில் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற திகைப்பும் சேர்ந்துக் கொண்டது. இருந்தாலும் பணத் தேவையின் அவசியம் உணர்ந்து, அவன் வெளிநாடு செல்ல இசைந்தாள்
மைதிலி அழகுணர்வோடு பழகும் நடைமுறைகளும் அறிந்தவளாதலால், அவள் வீட்டை விட்டு வெளியே வரும் போது, அவளது தோற்றம் மற்றும் பழகும் அணுகுமுறைகளைக் கண்டு ரசிப்பவர் சிலர், பொறாமை கொள்வோர் சிலர் என்றால், மரியாதை கலந்த வியப்போடுப் பார்த்து அவளுடன் நட்புக் கொள்ள நினைப்போர் சிலர்
அவ்வாறு அவளுடன் பேச நினைத்தோர் அனைவருமே வசதி வாய்ப்பில் குறைந்த குணவதிகள். நமக்குப் படிப்பிலும் வசதியிலும் சமத்தவர் என்று பிறரதுத் திறமைகளை ஏற்றனர்? பாராட்டினர்?அங்கீகாரம் அளிப்பதில் கஞ்சத்தனம் கொண்டவர்களாகவே சிலர் இருக்கின்றனர். ஆனால் எளியவர் மற்றவரைப் பாராட்டிப் போற்றுவதில் உயரியவராகவே திகழ்கின்றனர்
ஏனோ மைதிலிக்கு அவர்களுடன் பழகுவதற்கோ பேசுவதற்கோ பிடிப்பதே இல்லை. அவர்களது பாமரத்தனமோ வசதிக்குறைவோ அல்லது தோற்றமோ ஏதோ ஒன்று அவளுக்குப் பழகுவதில் அசௌகரியத்தை ஏற்படுத்தியது
முக்கியமாக, அவளது வீட்டுக்கு எதிரில் குடியிருப்பவளைக் கண்டாலே மைதிலிக்குப் பிடிக்காது. பயங்கொள்ளத்தக்க அவளது தோற்றம் ஒரு காரணம் என்றால் அவள் செய்யும் தொழிலும் அவள் குடும்பசூழலும் பிற காரணங்கள்
#ad
ஒருநாள் தூக்கம் பிடிக்காமல் எழுந்த மைதிலி, காலை ஐந்து மணிக்கு வாசலில் கோலமிட கதவைத் திறந்த போது எதிரில் அவளை முதன் முதலில் பார்த்தாள். நல்லவேளை வீட்டுக்குக் குடி வரும்போது அவள் முகத்தில் விழிக்கவில்லை. என நினைத்துக் கொண்டாள்
காலையிலேயே குளித்து முடித்துவிட்டாள் போல, முகம் முழுவதும் அடர்ந்த மஞ்சள் பூசி பெரிய ஒருரூபாய் அளவுக் குங்குமப் பூட்டும் கண்ணைச் சுற்றித் தீட்டிய மையும் தூக்கிப் போட்ட கொண்டையுமாக பயங்கரத் தோற்றத்துடன் இருந்தாள் அவள்
உண்மையாகவே பயந்து நடுங்கி உள்ளே வந்து கதவைத் தாளிட்டாள் மைதிலி
மறுநாள் காய் வாங்க வெளியே வந்த போது அந்த பெண் சென்று கொண்டிருந்தாள். அப்போது பக்கத்து வீட்டு மாலதி அவளைப் பற்றிக் கூறிய விஷயம், அவள் மேல் இனம் தெரியாத அருவருப்பை கொணர்ந்தது
அவள் நகராட்சி துப்புரவுப் பணியாளர் என்றதும் தான், அவள் அணிந்திருந்தப் புடவை / தோற்றம் அத்துடன் ஒத்துப்போவதை உணர்ந்தாள் மைதிலி. இதனால் விளைந்த கோபம் மொத்தமும் ஸ்ரீதர் மேல் திரும்பியது
“நல்ல இடத்துல வீடுக் கட்டியிருக்கோம். எதிர்ல இருக்கறவள மாதிரி தான் இங்க இருக்கிற பாதிப்பேர் வேலப் பார்க்கிறவங்களாம். இப்படிப்பட்ட சூழல்ல நம்ம பையன் வளந்தா, இங்க இருக்கிற பசங்களோட சேந்து இவனும் அறிவு மழுங்கினவனா நாகரீகம் தெரியாதவனா வளர ஆரம்பிச்சுடுவான்.
நம்ம சொந்தக்காரங்க நண்பர்கள் அஷ்வினோட ஃப்ரெண்ட்ஸ்’கெல்லாம் இந்த விஷயம் தெரிய வந்தா, நம்ம வீட்டுக்கெல்லாம் வரவே மாட்டாங்க. நம்மள மதிக்கவும் மாட்டாங்க. முதல்ல இந்த வீட்டை வாடகைக்கு விட்டுடுங்க. நாம பழையபடி அந்த வீட்டுக்கேப் போயிடலாம். அந்த வீட்டுக்காரம்மா ரொம்ப நல்லவங்க. இன்னும் வீட்டை வாடகைக்கு விடாததால நான் கேட்டா ஒத்துக்குவாங்க” என ஸ்ரீதரை நச்சரிக்கத் தொடங்கினாள் மைதிலி
புது வீட்டுக்கு வந்து ஒருமாதம் கூட ஆகாத நிலையில், வீட்டை மாற்றுவதால் ஏற்பட இருக்கும் வீண் பண நேர விரயத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்த போது தான், ஆபத்பாந்தவனாய் வெளிநாடு வேலை மாற்றம் குறித்த செய்தி வந்தது
தப்பித்தோம் பிழைத்தோம் என கனடா சென்று விட்டான் ஸ்ரீதர்
இருந்த வாய்ப்பு கைநழுவிப் போனதில், மைதிலியின் ஆத்திரம் முழுக்க மகனின் மேல் திரும்பும் வகையில் ஒரு சம்பவம் நடந்தது
ஸ்ரீதரை விமான நிலையத்தில் வழியனுப்பி விட்டு வரும் வழியெல்லாம் அஷ்வினிடம் திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை தான் மைதிலி வலியுறுத்தினாள்
“இங்கப் பாரு அஷ்வின், நம்ம பக்கத்து வீட்டு சித்தார்த்…. உன் டியூஷன் ஃப்ரெண்ட் வினய், ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் கூட மட்டும் தான் நீ பழகணும் விளையாடணும். நீ அவங்க வீட்டுக்குப் போய் விளையாடினாலும் சரி, இல்ல அவங்க நம்ம வீட்டுக்கு வந்தாலும் சரி
ஆனா எதிர் வீட்டுப் பையன் அவன் ஃப்ரெண்ட்ஸ் கூடலாம் நீ பேசவேக் கூடாது. அவங்கலாம் ரொம்பக் கெட்ட பசங்க. மேனர்ஸ் தெரியாதவங்க. உன்னையும் அவங்க கெடுத்துடுவாங்க. நீ நல்ல பையன் இல்லியா? அதனால அம்மா பேச்சக் கேட்டு நடந்துக்கணும். அப்பா உன்கிட்ட சொன்னாருல்ல?” என்றதும், அஷ்வினும் நல்ல பிள்ளையாக தலையாட்டினான்
அடுத்த வாரத்தில் ஓருநாள் பெற்றவளுக்கு உடல்நிலை சரியில்லையென நலம் விசாரிக்க தாய் வீடு சென்றாள் மைதிலி
செல்லும் முன், “நான் வெளியப் போனதும் கதவை லாக் பண்ணிட்டு டிவி பார்த்திட்டிரு அஷ்வின். நாளைக்கு எக்ஸாம்னு தான இன்னிக்கு லீவு விட்டிருக்காங்க, அதனால படிச்சிட்டிரு. சந்தேகம் இருந்தா மார்க் பண்ணி வெய்யி, அம்மா வந்து சொல்லித் தரேன். நான் வீட்ல இல்லாத தைரியத்துல நீ அந்த பசங்கக் கூட பேசறதோ விளையாடறதோ எனக்குத் தெரிய வந்தது, உன்னை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என எச்சரித்து விட்டு கிளம்பினாள் மைதிலி
அன்னை சொன்னது போல் அஷ்வின் படித்துக் கொண்டிருக்க, கதவுத் தட்டப்படும் ஓசைக் கேட்டது. எழுந்து கதவைத் திறந்தான் அஷ்வின். வெளியே இவன் வயதுடைய ஐந்தாறு சிறுவர்கள் வியர்வை அழுக்கேறிய உடைகளுடன் நின்றுக் கொண்டிருந்தனர்
“பந்து உங்க வீட்டு மாடியில விழுந்துடுச்சு, கொஞ்சம் எடுத்துத் தர்றிங்களா?” என்றனர்
“மாடிலயா இல்ல பால்கனிலயா?” எனக் கேட்டதும் அவர்கள் விழித்ததைக் கண்டு, “சரி என்கூட வாங்க” என அவர்களை அழைத்துச் சென்றான்
மேல்மாடியில் இல்லாததால் பால்கனியில் இருக்கக் கண்டு பந்தைக் கொடுத்ததும், அவர்கள் மகிழ்வுடன் பெற்றுக் கொண்டனர்
அம்மா கூறிய எதிர்வீட்டு பையன் மெல்ல வாய் திறந்தான். “இது பேர் மாடி இல்லியா?… பால்கனினா சொன்னீங்க?” எனக் கேட்க
“ஆமா… உன் பேரென்ன?” எனக் கேட்ட அஷ்வின்
“குமாரு” என்றான் அவன்
“குமார்… உன் வயசுதான் எனக்கும். ஏன் வாங்க போங்கனு பேசற? உன் ஃரெண்ட்ஸ கூப்பிட மாதிறியே என்னை நீ கூப்பிடலாம்” என்றதும்
“இல்ல…. நீ வசதியான பையன். எங்கக் கூடலாம் பழகமாட்டேன்னு இவன் தான் சொன்னான்” என அருகில் நின்றவனைக் காட்ட
அவனோ, “எங்க அம்மாதான் சொன்னாங்க. நாங்க குடிசை வீடு ஓட்டு வீட்ல இருக்கோம் நீ மாடி வீட்ல இருக்க. பெரீய்ய ஸ்கூல்ல படிக்கிறே, நாங்க கவர்ன்மூண்ட் ஸ்கூலு. ஒசத்தித் துணியாப் போட்டிருக்க. ட்ரெஸ் முழுக்க ஓட்ட இருக்கிற பனியன நாங்க எல்லாம் போட்டிருக்கோம். அப்ப எப்படி நீ எங்கக் கூட பழகுவ?” எனக் கேட்டான்
“நான் அந்த மாதிரியெல்லாம் நினைக்கல. நீங்க என்கூட பேசலாம். நானும் உங்க எல்லார் கூடவும் பேசுவேன். இப்ப நானும் உங்கக் கூட விளையாட வரேன். சரியா?” என்றபடி கிரிக்கெட் மட்டையையும் பந்தையும் எடுத்துக் கொண்டு அவர்களுடன் விளையாடச் சென்றான் அஷ்வின்
அது போன்ற விலையுயர்ந்த கிரிக்கெட் மட்டையையும் கார்க் பந்தையும் இதுவரைப் பார்த்திராத அந்த பிள்ளைகள் அவற்றைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து வியந்து மகிழ்ந்தனர்.
மைதிலி வீட்டிற்கு வருவதற்கு முன்பாகவே விளையாட்டை முடித்துக் கொண்டு சமர்த்துப் பிள்ளையாகப் படிக்க ஆரம்பித்தான் அஷ்வின்
அன்னை அறியாதவாறு அந்த பகுதி பிள்ளைகளுடனான நட்பை வளர்த்து வந்தான், அவர்களின் அன்பில் உண்மையைக் கண்டான். ஆனால் அதற்கும் வந்தது வேட்டு
தோழியுடன் கோயிலுக்குச் செல்வதாக அவனிடம் சொல்லிச் சென்ற மைதிலி, கோவில் பூட்டி இருந்ததால் விரைவில் உடனே வீடு திரும்பினாள்
கோவில் சற்று தொலைவில் இருப்பதால், அன்னை வீடு வந்து சேர எப்படியும் இரண்டு மணி நேரமாவது ஆகும் என கணக்கிட்டு, தனது தோழர்களுடன் கபடி ஆடிக் கொண்டிருந்தான் அஷ்வின்
சற்று தொலைவில் வரும் போதே, தன் மகன் அந்த சிறுவர்களுடன் கட்டிப் புரண்டு விளையாடிக் கொண்டிருப்பதைப் கண்டதும் மைதிலிக்கு கோபம் தலைக்கேறியது
அவனைத் தரதரவென இழுத்து வந்து வீட்டுக்குள் தள்ளி விளாசத் தொடங்கினாள். அவனது அழுகுரல் கேட்டு, அவனது தற்போதைய நண்பர்களின் அம்மாக்கள் மனம் கேளாமல் கதவைத் தட்டத் தொடங்கினர்
அவர்களைக் கண்டதும் மைதிலியின் கோபம் இன்னும் அதிகமானது. அவளது பார்வையின் அனலைத் தாங்கவொண்ணாமல், அனைவரும் புலம்பியபடி கலைந்து சென்றனர்
ஆனால் அவள் பெருமைப் பேசிய மேல் மட்டத்தரோ நடுமட்டத்தாரோ இதுக் குறித்து கவலைப்படவும் இல்லை. இவளை எதுவும் விசாரிக்கவும் இல்லை
எதிர்வீட்டுக் குமாரின் அம்மா பெரிய பொட்டுக்காரி மைதிலிக்கு பெரிய தலைவலியாக இருந்தாள். எங்குப் பார்த்தாலும், இவளுடன் பழக விரும்பி புன்னகைப்பாள். வெற்றிலைச் சிவப்பேறிய அவளது கொட்டைப் பற்களைக் கண்டதுமே மைதிலிக்கு அவள் மேல் வெறுப்பும் அறுவறுப்பும் ஒரு சேர கிளம்பும்
ஒருநாள் பேருந்தில் ஏறி அமர இடம் தேடிய போது, “அஸ்வினம்மா” என உச்சஸ்தாயில் குரல் வந்த திசையில் திரும்பியவள், அங்கு பெரிய பொட்டு வைத்த எதிர் வீட்டு பெண் தன்னருகில் இடம் பிடித்தபடி வெற்றிப் புன்னகைப் பூக்க, கண்டும் காணாதது போல் முகத்தை திருப்பிக் கொண்டாள் மைதிலி
அவளை தவிர்க்க எண்ணி, தெரியாத ஒரு பெண்ணருகே தெரிந்தவளாக பாவனை செய்தவாறு அமர்ந்தாள். மறந்தும் கூட பெரிய பொட்டுக்காரிப் பக்கம் திரும்பவில்லை
அதேப் போல் மற்றொரு சம்பவமும் மறக்க இயலாதது. கார்டின் இருப்பு அவசியம் என்பதால் ரேஷனில் பொருள் வாங்கியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தின் பேரில், ஒரு நாள் வரிசையில் நின்றுக் கொண்டிருந்தாள் மைதிலி
வெயிலின் உக்கிரத்துடன் கூட்டத்தில் நிற்க வேண்டிய எரிச்சலில் மைதிலி பொறுமை இழந்து கொண்டிருக்க, திரும்பவும் அதே “அஸ்வினம்மாஆஆஆ!!!” உச்சஸ்தாயி குரல். அவளே தான்
அவளுக்கு முன் இருபது நபர்களுக்கு முந்தி அவள் நின்றுக் கொண்டிருந்தாள். தனக்கு முன் நின்றிருந்தவளிடம் ஏதோ முணுமுணுத்து விட்டு இவளை நோக்கி வந்தாள்
“இன்னா அஸ்வினம்மா! ரேஸன் வாங்க வந்தீங்களா?” என்றாள்
அனைவரும் திரும்பிப் பார்த்தனர். இவளுக்கு மெதுவாகப் பேசவே தெரியாது போல. பில் போடுபவர் சற்று நிமிர்ந்தார். அவ்வளவு தூரமா கேட்டு விட்டது? அவமானம் பிடுங்கிக் தின்றது மைதிலிக்கு. இவளுடனெல்லாம் தனது ஸ்நேகம் என இவர்கள் நினைத்தால் தனது கௌரவம் என்னாவது? என மைதிலியின் மனம் பதறியது
அந்நேரம் பார்த்து ஸ்கூட்டியில் சென்ற அஷ்வினின் நண்பன் சித்தார்த்தின் அம்மா வேறு இவர்களைப் பார்த்து விட்டாள்
“போச்சு! இவ உடனே ஸ்கூல்ல போய் நமக்குப் பொதுவான தோழிங்கக்கிட்ட தம்பட்டம் அடிச்சிடுவாளே!!! நம்ம படிப்பென்ன? நம்ம ஜாதியென்ன? நம்ம அந்தஸ்தென்ன? இவக்கூடல்லாம் நாம பழக்கம் வச்சிருக்கோம்னு பார்த்தா…. எவளாவது நம்மள மதிப்பாளா? நட்பு வட்டத்துல இருந்தே ஒதுக்கிடுவாங்களே?” எனக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தவளிடம்
தனது அக்மார்க் புன்னகையை வீசியபடி, “இன்னா யோசன?” எனக் கேட்டவளை, எரிச்சலுடன் பார்த்தாள் மைதிலி
‘சிரித்த முகம் தான் மைதிலியின் மிகப் பெரிய ப்ளஸ்’ என கணவன் முதற்கொண்டு அவளது உறவினர்கள் தோழிகளிடம் பாராட்டுச் சான்றிதழ் பெற்றிருந்த மைதிலி தான், இப்போது இறுக்கமும் கடுகடுப்பும் தான் எனது சொத்து என்பதுப் போல சிடுசிடுத்தாள்
“ஆமா! அதுக்கென்ன இப்ப? உன் வேலயப் பார்த்துட்டுப் போ” என எரிச்சலை வார்த்தையிலும் வெறுப்பைப் பார்வையிலும் உமிழ்ந்தாள்
என்றுமே உரிமையில்லாதவரை ஒருமையில் அழைத்து அறியாதவளான மைதிலி, இப்படி அப்பெண்ணை ஒருமையில் அழைத்தது அவளுக்கே ஆச்சரியம்
அதைப் பொருட்படுத்தாத அப்பெண்ணும், “உங்களப் பார்த்தா பாவமாயிருக்கு. கூட்டத்துலயும் வெயில்லயும் நின்னு பழக்கமில்லாதவங்க போல இருக்கு. நீங்க போயி என் இடத்துல நின்னுக்கோங்க. மூணாவது ஆளாப் போய் சாமான் வாங்கிட்டுக் கிளம்பிடுங்க. தம்பியும் தனியா இருக்குமுல்ல” என்றாள் அந்த பெண்
இதைக் கேட்டதும், எல்லாவற்றையும் கண்காணித்து வைத்து இருக்கிறாளே என்ற எண்ணம் அவள் மேல் இன்னும் கோபம், வெறுப்பு, அச்சம் எனக் கலவையானக் கணிப்பை அளித்தது
ஒட்டுமொத்த ஆத்திரமும் மனதிற்குள் கணவனை திட்ட வைத்தது
ஒருநாள் கோயிலுக்குச் சென்றிருந்த போது, அவளது பள்ளித் தோழி ஜனனியை பல வருடங்கள் கழித்துச் சந்தித்தாள்
மிக மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் மிக்க பரஸ்பர நலம் விசாரிப்புக்குப் பின், “மைதிலி, ஸ்கூல் ஃபங்ஷன்ல ப்ரேயர்ல எல்லாம் நீதானடி பாட்டுப் பாடுவ. பக்திப் பாட்டுன்னாலும் சினிமாப் பாட்டுன்னாலும் நீதான் வெளுத்து வாங்குவ. நாங்கல்லாம் எவ்வளவு தான் நல்லாப் பாடினாலும் நீதான எல்லா ப்ரைஸையும் தட்டிட்டு போவ. இப்பல்லாம் பாடறியா? வீட்ல மியூசிக் க்ளாஸ்லாம் எடுக்கறியா?” எனக் கேட்டாள்
“எங்கடி! ஸ்கூல்ல ஃப்ரெண்ட்ஸ் நீங்க, நம்ம டீச்சர்ஸ், உங்க ஆர்வமும் ஆதரவும் எனக்கு இருந்தது தான் டானிக் மாதிரி உற்சாகம் கொடுத்து பாட வெச்சு பரிசெல்லாம் வாங்க வெச்சது. ஆனா எங்க வீட்லயும் சரி என் புருஷன் வீட்லயும் சரி, யாருக்கும் இசைல ஆர்வம் கிடையாது. அத என்கரேஜ் பண்ற பெரிய மனசும் கிடையாது
காலேஜோட என் பாட்டுக்கெல்லாம் நான் மூடுவிழா நடத்தியாச்சு. அதப்பத்தி நான் இதுவரைக்கும் நினைச்சுப் பார்த்ததும் கூடக் இல்ல. வீட்ல ட்யூஷன் எடுக்க எல்லாம் அனுமதி கிடையாது. வீட்ல யாரும் இல்லாத நேரம், பிடிச்சப் பாட்ட லேசா முணுமுணுக்கிறதோட சரி
என் பையன் கேட்டா… ‘சூப்பர் மா’னு சொல்வான். சிலசமயம் அவரும். சரி… நீ ஏன் பழசையெல்லாம் பேசி என் மூடைக் கெடுக்குற?” என சலித்துக் கொண்டாள் மைதிலி
“ஸாரிப்பா… நானும் என் ஃப்ரெண்ட்ஸ் சில பேரும் சேந்து மியூசிக் ட்ரூப் ஆரம்பிச்சு அஞ்சு வருஷமா நடத்திட்டு வர்றோம். கல்யாண ரிசப்ஷன், கோயில் திருவிழாக்கள்ல பாடிட்டுருக்கோம். நல்லாப் போயிட்டிருக்கு. நீ இப்ப வேலைக்கு எதுவும் போகல இல்லையா? நீ விரும்பினா எங்கக் குழுவில சேர்ந்துப் பாடலாமே. என்ன சொல்ற மைதிலி, உன்னோடப் பாட்டத் திரும்பவும் கேட்கணும் போல இருக்கு. ஒரு ரசிகையாத் தான் கேட்கிறேன்” என ஜனனி கேட்க
“யோசிச்சு சொல்றேன்பா. என் வீட்டுக்காரர்க்கிட்டயும் கேட்கணும். அவர் அனுமதிச்சாக் கண்டிப்பா பாடறேன்” என தோழியிடம் மேலும் சற்று நேரம் அளவளாவிவிட்டு விடைப்பெற்றாள் மைதிலி
அவளுக்குள் இருந்த இசையார்வம் லேசாக எட்டிப் பார்த்து. நேரமாக ஆக மனம் முழுதும் ஆக்ரமித்தது. கணவனிடம் இது குறித்துப் பேசிய பேசினாள்
“உனக்கு விருப்பம்னா கண்டிப்பா அந்தக் குரூப்ல சேத்து பாடு, உனக்கும் பொழுது போகும். அஷ்வின் தான் வளர்ந்துட்டானே, ஆல் த பெஸ்ட்” என வாழ்த்தி அனுமதித்ததும், மகழ்ச்சியில் துள்ளியவள், உடனே ஜனனியைச் தொடர்பு கொண்டு விஷயத்தைக் கூறினாள்
அதன் பின், பல திருமண விழாக்கள், பிற விசேஷ நிகழ்வுகள், கோயில் திருவிழாக்கள், பண்டிகை நாட்கள் என ஜனனி குழுவினருடன் இனைந்து பாடத் தொடங்கினாள் மைதிலி
இவளது குரலின் இனிமையும் வசீகரமும் கேட்டவரை மயக்கியது. சில மாதங்களிலேயே, இவளுக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது
மைதிலி இல்லாத கச்சேரிகள் சோபிக்கவில்லை, மைதிலி இல்லாத கச்சேரிகளை தவிர்க்கத் தொடங்கினர்
இவள் வரவை எதிர்பார்த்து வந்த ரசிகர்கள் மைதிலி இல்லாததைக் கண்டு பெருத்த ஏமாற்றத்துடன் ஒலியெழுப்பி ஆர்ப்பாட்டம் செய்ததுடன், கேள்விக்கணைகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் தொடுக்கும் அளவிற்கு அவளது குரல் பிரபலமானது
#ad
அவளது இந்த உச்சப்புகழ், சமூக வலைத்தளங்களில் எல்லாம் வெகுவாகப் பேசப்பட்டது. அதனால் கச்சேரிகளுக்கானக் கட்டணமும் கணிசமாக உயர்த்தப்பட்டது. அதனைப் பொருட்படுத்தாத ரசிகர்களும், முன்னிலும் அதிக வரவேற்பையும் ஆதரவையும் அளித்தனர்
ஆரம்பத்தில் மைதிலிக்கு அளிக்கப்பட்ட சன்மானம், தற்போது வெகுவாக உயர்த்தப்பட்டது. மைதிலி குழுவில் சேரும் முன், ஜனனி தான் முதன்மை பாடகியாக எல்லா நிகழ்வுகளிலும் அறியப்பட்டு அதிகத் தொகையைப் பெற்று வந்தாள்
பார்டனர்கள் மூவரின் ஏகமனதாய் மைதிலியே எல்லா நிகழ்வுகளிலும் முதன்மை பாடகியாக முன்னிலைப் படுத்தப்பட்டு, நிகழ்வுகளில் பக்திப் பாடல் தொடங்கி பெரும்பான்மையான பாடல்களைப் பாடினாள், அதற்கேற்ற உச்ச சன்மானமும் கிடைக்கப் பெற்றாள்
அவளுக்கான இந்த உயர்ந்த அங்கீகாரம், மைதிலிக்கு பெரும் மகிழ்வையும் ஆத்மதிருப்தியையும் பெருமிதத்தையும் அளித்தது. வீட்டு லோனில் முக்கால்வாசி கடனை, இவளது பணவரவிலேயே அடைக்க முடிந்தது
அன்று கணவனுடனான தொலைபேசி உரையாடலின் போது, “என்னங்க! நீங்க எப்ப வருவீங்க? எனக்கும் அஷ்வினுக்கும் எப்போ உங்களப் பார்ப்போம்னு இருக்கு. இப்பத் தான் வீட்டு கடன் முடியப் போகுதே. அதோட இன்னொரு உங்கக்கிட்ட விஷயமும் சொல்லணும்னு நினைச்சேன். இந்த வீட்டை நல்ல விலைக்கு வித்துட்டு கூட கொஞ்சம் பணம் போட்டு நல்ல டீசண்ட்டான இடத்துல பிளட்டா வாங்கிடலாங்க. இந்த இடம் நம்ம வாழ்க்கையிலேயே ஒரு திருஷ்டிங்க” என மைதிலி கூற
“சரிம்மா… இன்னும் ரெண்டு மாசத்துல எங்க ப்ராஜெக்ட் முடிஞ்சிடும். நான் அங்கு வந்தவுடனே நீ சொன்ன மாதிரி செய்யலாம். சந்தோஷமா உனக்கு?” என கணவன் தன் மனம் புரிந்து பேச, மகிழ்வுடன் புன்னகைத்தாள்
அந்த கிறீச் ஒலியால் ஆரம்பிக்கப்பட்ட பழைய நினைவுகளில் இருந்து மீண்டாள் மைதிலி
அவளது ஒரே தலைவலி இந்த கிறீச் ஓசைதான். எதிர்வீட்டுப் பெரிய பொட்டுக்காரியின் வரவை அறிவிக்கும் அலாரம் தான் அந்த ஒலி. அவர்களது பழைய ஓட்டை மரக் கதவில் கை வைத்தாலே அப்படித் தான் சத்தமிடும்
பகற்பொழுதில் அதன் தொல்லை என்றால், இரவில் அவள் குடிகாரக் கணவனது அலப்பறைகள் தாங்க வொண்ணாதது. தினமும் கேட்கும் அவர்களது சண்டை, காதுகளைக் கூசச் செய்யும். அறுவறுப்பான வசனங்கள் அவர்கள் மேல் வெறுப்பையே உமிழச் செய்யும்
அடுத்த நாள், ஒன்றுமே நிகழாதது போல் சமர்த்துப் பிள்ளைகளாக கணவனும் மனைவியும் அந்யோன்யமாக சைக்கிளில் ஆனந்தசவாரி செய்தபடி வேலைக்கு கிளம்புவார்கள்
அவர்களது கல்லூரி செல்லும் மகளும் பள்ளி செல்லும் மகனும்தான் பாவம் தெருவாசிகளை கடந்து செல்லும் போது அவமானத்தால் தலைகுனிந்து உடற்கூசி செல்வர்
இப்படியாக இந்த வீட்டுக்கு வந்து ஒரு வருடம் ஆகப் போகிறது. இதோ, அடுத்த மாதம் கணவன் வரப் போகிறான். வந்ததும் முதல் வேலையாக வீடு மாற வேண்டும் என தீர்மானித்தபடி இரவுப் படுக்கப் போகும் போது, கதவுத் தட்டப்படும் ஓசைக் கேட்டது
இந்நேரத்தில் யாராக இருக்கும்? என எண்ணியவள், ‘ஒருவேளை தன் பெற்றொர் வந்திருக்கலாம்’ என எண்ணியபடி உற்சாகத்துடன் கதவைத் திறந்தாள்
வெளியே அவள் பார்த்த காட்சி அவளுக்குள் நடுக்கத்தை வரவைத்தது. முரடர்களாகத் தோன்றிய நால்வர் அவள் அனுமதியில்லாமலேயே வீட்டினுள் நுழைந்து சோஃபாவில் அமர்ந்தனர்
“இன்னாக் கண்ணுப் பாக்குற? போய்க் குடிக்க ஜில்லுனு ஐஸ்வாட்டர் கொண்டாப் பாக்கலாம்” என்றதும்
அவளுக்குக் கோபம் வந்தாலும் பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “யாருங்க நீங்கல்லாம்? திடீர்னு வீட்டுக்குள்ள நுழைஞ்சு நீங்கப் பாட்டுக்குப் பேசிட்டேப் போறீங்க?” என மைதிலி கேட்டதும்
அவர்களில் ஒருவன் கடகடவென சிரித்தபடி, “தோ பார்றா… அம்மாவுக்கு வர்ற கோவத்த. சரி நாங்களே எடுத்துக்கறோம்” என்றபடி குளிர்சாதனப்பெட்டியை திறந்து தண்ணீரைக் குடித்ததுடன் தன் நண்பர்களுக்கும் விநியோகித்தான் அவர்களில் ஒருவன்
“இங்க பாரும்மா! நாங்க ஐயா கட்சிய சேர்ந்தவங்க” என கட்சிப் பெயரைச் கூறியவன், “எங்க கட்சி நடத்துறக் கூட்டங்கள்ளலாம் கட்சிப் பெருமையப் பாட்டாப் பாடறதுக்கும், ஜனங்க விரும்புற சினிமாப் பாட்டெல்லாம் பாடி கூட்டத்துக்கு ஜனங்கள இழுக்கிறத்துக்கும் உன்ன மாதிரி நல்லாப் பாடற பொண்ணு தேவைப்படுது
அதோட நம்ம கட்சிக்குக்குனு ஒரு அடையாளப்பாட்டும் வேண்டியிருக்கு. அதான் நம்ம ஜனகணமண மாதிரி பாட்டுவரி எல்லாம் ரெடி. பாடறதுக்கு ஆளத் தேடினப்பத் தான் உன்னப் பத்திக் கேள்விப்பட்டோம். நீ பாடினாலே ஐனங்க ரொம்ப ரசிக்கறாங்களாம், கூட்டம் அலைமோதுதாம். அதனால நீ நாளைக்கு நம்ம இடத்துக்கு வந்துப் பாடிக் குடுத்துட்டுப் போ. சும்மா பாட வேண்டாம். ஒரு பெரிய அமௌண்ட்ட வாங்கிட்டு சந்தோஷமா பாடு. இன்னா சொல்ற?” என்றதும் திணறிப் போனாள் மைதிலி
அவள் அன்றாட அரசியல் நிலவரங்களை கவனிப்பதோடு சரி, தனிப்பட்ட எந்த கட்சியையும் சாராதவள். எனவே, ஒரு கட்சிக்கு சார்பாகப் பாடுவதில் அளவுக்கு உடன்பாடில்லை, விருப்பமுமில்லை
எல்லாவற்றிக்கும் மேலாய், அவர்களது அதிகாரத் தோரணை அளவுக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை. சிறுவயது முதலே அதிகாரத்திற்கு அடிபணிவதில் அவளுக்கு உடன்பாடு இருந்ததில்லை
“பாதகம் செய்பவரைக் கண்டால் நாம் பயம் கொள்ளாலாகாது பாப்பா. மோதி மிதித்து விடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா” என்ற பாரதியின் வைர வரிகளை மனதில் இருத்தி வாழ்பவள்
இதுவரை எந்த பாதகத்திற்கு உடன்பட்டதில்லை. அதோடு அராஜகத்தை எதிர்ப்பவள் என்பதால், இவர்களது அடாவடித்தனத்திற்கு அஞ்சாமல் பதிலளித்தாள்
“இங்க பாருங்க… நான் பாடுறது உண்மை தான். ஆனா எந்தக் கட்சி சார்பாவும் நான் இல்லாததால, உங்கக் கட்சியப் பத்தினப் பாட்டெல்லாம் என்னால பாட முடியாது. நீங்க வேற யாரையாவது பாட வைங்க. தயவு செஞ்சு இப்பக் கிளம்புங்க” என்றதும்
“என்னடி இவ்ளோ திமிராப் பேசற? நாங்க யாருனு தெரியுமா? நாங்க சொல்றதக் கேட்டு நல்லவிதமா நடந்துக்கோ” எனக் குரலை உயர்த்தவும், தூங்கிக் கொண்டிருந்த அஷ்வின் எழுந்து வந்து இவர்களைக் கண்டு பயந்து தன் தாயை அணைத்துக் கொண்டான்
ஆனால் மைதிலியின் கண்ஜாடையை புரிந்து கொண்டவன், உடனே தன் அறைக்குச் சென்று தாயின் செல்பேசியில் இருந்த பக்கத்து வீட்டாரின் எண்ணுக்கும், தனது பள்ளித் தோழர்களின் தொலைபேசி எண்ணுக்கும் தொடர்பு கொண்டு தங்களது நிலையைக் கூறி உதவி கேட்டான்
ஆனால் சில நிமிடங்களிலேயே சில எண்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டன. சிலர் தங்களால் வர இயலாததைக் கூறி வருத்தம் தெரிவித்தனர். பக்கத்து வீட்டினர் தொடர்பே கொள்ளவில்லை
அவர்களை எப்படி சமாளிப்பது என மைதிலி யோசித்துக் கொண்டிருக்கும் போதே, “இதப் பாரு, நாளைக்குக் காலையில நாங்க வருவோம். நீ முரண்டு பண்ணாம ஒழுங்கா வந்து பாடிட்டுப் போ. இல்ல… நடக்கிறதே வேற” என பெருங்குரல் எடுத்து ஒருவன் மிரட்ட, இடியென அவன் கன்னத்தில் அடி விழுந்து கலங்கிப் போய்க் கீழே விழுந்தான்
அவனது துணைவர்கள் சுதாரித்துக் திரும்ப அவர்களும் வெகுவாகத் தாக்கப்பட்டார்கள். கீழே விழுந்த அவர்கள் மட்டுமல்லாமல் நடுக்கத்தில் இருந்த மைதிலியும் கண்கொட்டாமல் பார்க்க, எதிரில் ஆக்ரோஷமாக பத்ரகாளி ஸ்வரூபத்தில் நின்றுக் கொண்டிருந்தாள் அந்த பெரிய பொட்டுக்காரி
அவளைக் கண்டதும் அடியாட்களுக்குக் கிலிபிடிக்க, மைதிலிக்கோ கண்ணில் நீர்மல்கியது. அவளைக் கைகூப்பி வணங்க தோன்றியது
“ஏண்டா! இந்த மாரியம்மா இருக்கும் போது, இன்னா தைரியம் இருந்தா தனியா இருக்கிற பொண்ணுக்கிட்ட உங்க வேலயக் காட்டுவீங்க. இனிமே இந்த ஏரியாப் பக்கம் உங்களப் பாத்தேன்” என பற்களை அவள் கடித்ததும், சிவப்பேறிய அவை சிங்கத்தின் கூர் பற்களாக தணல்போல் தெறித்தது
அவளது சீற்றத்தைக் கண்டு நடுங்கியவர்கள், அங்கிருந்து நழுவப் பார்த்தனர். ஆனால் வெளியே பத்து மாரியம்மாக்கள் நின்றுக் கொண்டிருந்தனர். எல்லோருமே, மைதிலியின் அறுவறுப்புப் பார்வைக்கு உள்ளான குடிசைப் பெண்கள். துப்புரவுப் பணியாளர்கள் தாம்
அவர்களைக் கையெடுத்துக் கும்பிட்டபடி அந்த ரௌடிகள் பம்மினார். மேலிடத்திற்கு தெரிந்தால் பிரச்சனையாவதோடு, ஊடகங்களுக்கு இச்செய்தி தெரிந்தால் கட்சிக்குப் பெரிய தலைவலியாகும் என்பதால், மைதிலியிடம் மன்னிப்புக் கேட்டு ஓடியது அக்கும்பல்
மைதிலிக்குப் பேச்சே வரவில்லை. எதிர் வீட்டு பெண்ணை அவளால் நிமிர்ந்துப் பார்க்கவும் முடியவில்லை
எத்தனை நிராகரிப்பு, எத்தனை அவமானப் பார்வை வீசி இருப்போம் இவள் மீதும் இவளொத்த பெண்களிடமும். ஆனால், தனக்கொரு இன்னல் என அறிந்ததும், உடனே உதவிக்கு வந்தது அப்பெண் மீது அபரிதமான அன்பையும் நன்றியுணர்வையும் ஏற்படுத்தியது
“அஸ்வினம்மா! பயப்படாதீங்க. அவங்க திரும்ப வரமாட்டாங்க. வந்தா, நான் அவங்கள ஒருவழிப் பண்ணிடறேன்” என காவியேறியப் பற்களைக் காட்டி சிரித்ததும், அவளை வாரி அணைத்துக் கொண்டாள் மைதிலி
ஆதரவாக மைதிலியை மாரியம்மா வருடியதில், தாய்மையின் மொத்த பரிவும் அதில் மிளிர்ந்தது. சமீபகாலமாக, இவர்களது ஆர்கெஸ்ட்ரா குழுவில் “சிங்கப்பெண்ணே” பாடல் மிகப் பிரபலம்
ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்க… மூன்று முறையாவது திரும்ப திரும்ப பாடப்படும். அப்படிப்பட்ட ‘சிங்கப்பெண்ணாக’ தன் எதிரில் நிற்கும் மாரியம்மாவைப் போற்றத் தோன்றியது மைதிலிக்கு
தனக்கென்று இல்லை, யாருக்கென்றாலும் நிச்சயமாக இப்படித் தான் வெகுண்டெழுந்திருப்பாள் இவளும் இவளது சகாக்களும் என தோன்றியது. ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட ஆண்கள் நால்வரையும் ஒரே சமயத்தில் மண்ணைக் கவ்வ வைத்தாள் என்றால், இவளது மனவலிமையும் உடல்வலிமையும் எத்தகையது?
எந்த உடற்பயிற்சிக் கூடத்திற்குப் போய் இவள் உரமேற்றிக் கொண்டாள்? அவளதுத் துப்புரவுப் பணியே கைகளுக்கு இரும்புப் போன்ற வலிமையை அளித்திருக்க வேண்டும். உதவிக்கு தன் குடிகார கணவனை கூட அழைக்கவில்லை
தானே தனித்து வந்தாள் என்றால் எத்தகைய துணிவு இவளிடம் குடியிருக்க வேண்டும். இவள் சிங்கப்பெண் மட்டுமின்றி,பாரதிக் கண்ட புதுமைப்பெண்
இவர்களுக்கான அங்கீகாரம் நிச்சயம் கிடைக்க வேண்டும் என எண்ணினாள் மைதிலி
இத்தகு சிங்கப்பெண்களின் முக்கியப் பண்பு, எளிமையும் தாய்மையும் மட்டுமே. இந்த பண்பீன்ற குழந்தைகள் தாம் கருணையும் அன்பும். அவ்விரண்டினிருந்து பிறந்தவையே மனிதாபிமானமும் வீரமும்
பிள்ளையைக் கொஞ்சும் தாயே அதனைக் கண்டிக்கவும் செய்கின்றாள். ஆணின் வெற்றிக்குப் பின்னிருக்கும் பெண்தான் அவனது அடக்குமுறையை எதிர்த்து அவனைப் பின்தங்கச் செய்கிறாள்
இந்நிகழ்விற்குப் பின் மைதிலியும் மாரியம்மாவும் நல்ல தோழிகளாகினர். அந்தக் குடியிருப்புவாசிகளின் அனுமதியோடு, மாரியம்மா மற்றும் பிற துப்புரவுப் பெண்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது
இவளது இசைக்குழுவினரின் பாட்டு பின்னணியில் ஒலிக்க அவர்கள் அனைவரும் ‘சிங்கப்பெண்களாக’ அறிமுகப்படுத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டது
அத்தோடு அவர்களது வாழ்க்கைத்தரம் மற்றும் கல்வியறிவுக்கென ஒரு தன்னார்வு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. மைதிலி தனது வீட்டின் மேல்தளத்தில் இவர்கள் மற்றும் இவர்களது பிள்ளைகளுக்குக் கல்விக் கற்பிக்க இடவசதி செய்ததோடு, தன் போன்ற தன்னார்வலர்கள் துணை கொண்டு அவர்களுக்குப் போதித்தாள்
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ – ‘உருவுக் கண்டு எள்ளாமை வேணடும்’ என்ற பொய்யாப்புலவரின் குறள்நெறிப்பொருள் உணர்ந்து, குடியிருப்புவாசிகள் அனைவருமே இவ்வியக்கத்தில் பங்கு கொண்டனர்
கனடாவிலிருந்து நாடு திரும்பிய ஸ்ரீதர், நிகழ்ந்த இந்த மாற்றங்களைக் கண்டு மகிழ்ந்ததோடு, தன் அன்பு மனைவி மைதிலியின் மனமாற்றம், நல்லதொரு சமுதாய மாற்றமாக உருக்கொண்டு பலம் பெற்றதை எண்ணிப் பெருமிதம் கொண்டான்
தன்னெதிரில் அழகுப் பதுமையாய், அன்புருவாய் நின்ற மைதிலியை ‘சிங்கப்பெண்ணே’ என அழைத்து ஆசையாய் அணைத்தான். சிங்கப்பெண்ணும் நாணினாள் அன்பினால்
எல்லா சிங்கப்பெண்களுக்கும் சமர்ப்பணம் இச்சிறு எழுத்து வடிவம்
(முற்றும்)
இந்த இணையத்தளத்தில் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய அணுகலாம்👇
இப்படியெல்லாம் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது. இது தொடர்ந்து நடக்க வேண்டும். நல்லதொரு கருவில் ஏற்பட்ட இந்தக் கனா உண்மையாகட்டும்.