1997ம் ஆண்டு மே மாத முடிவு. சாதாரணக் காய்ச்சல் என படுத்த அமெரிக்க ரிட்டன் டாக்டர் ராஜன், இரண்டு நாளிலேயே இறந்து போனது முத்துவுக்குப் பேரதிர்ச்சியைத் தந்தது.
நாலரை வருடங்களுக்கு முன்பு நர்சிங் டிப்ளமோ முடித்து விட்டு நகரத்தில் உள்ள மாமா வீட்டிற்குச் சென்றிருந்த போது, மாமா தான் இந்த மருத்துவமனைக்கு வேலைக்கான விண்ணப்பத்தை அனுப்பி வைத்தார்.
நேர்முகத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியில் சேர்ந்தவனுக்குச், சுமார் மூன்று வருடங்களுக்கும் மேலாக மருத்துவர் ராஜனிடமே உதவியாளராகப் பணிபுரியும் வாய்ப்பு அமைந்து போனது.
அமெரிக்காவில் பயிற்சி முடித்து அங்கேயே சில வருடங்கள் பணி செய்த பின், தேசப்பற்றில் தாய்நாட்டுச் சேவைக்காக வந்தவர் தான் டாக்டர் ராஜன்
உடம்பில் எலும்புகள் அனைத்தும் பகுதிப் பகுதியாகப் பிரிந்து போனாலும், உடைந்து போனாலும், உயிர் மட்டும் ஒட்டிக் கொண்டிருக்க இவரிடம் அழைத்து வந்து விட்டால் போதும். நாற்பதே நாட்களில் சராசரி மனிதராக நடமாடச் செய்திடுவார்
திறமையானவர், சுறுசுறுப்பானவர், கைராசிக்காரர், நேயமிக்கவர், நேர்மையானவர், பணத்தை முன்னிறுத்தி வைத்தியம் பார்க்காதவர், எளிமையானவர்.
இப்படிப்பட்டவரிடம் உதவியாளராக இருப்பதற்காக மிகவும் பெருமைப்பட்டுக் கொள்வான் முத்து. மனதில் அவரைத் தன் குருவாக முன்னிறுத்திக் கடமையாற்றினான்.
தன் குருவைப் போலவே நோயுற்று கவனிப்பாரற்று மருத்துவமனையில், குறிப்பாக இலவச மருத்துவப் பிரிவில் உள்ள நோயாளிகளுக்குப் பெற்றப் பிள்ளையாக, சகோதரனாக, நண்பனாக, உறவினனாகத் தன்னால் இயன்றவரை உதவி புரிந்து வந்தான்.
நோயுற்றோரின் கை பிடித்து, தோள் தொட்டு, முதுகு வருடி, அன்பு முகத்தில் தவழ இவன் பேசும் சில ஆறுதல் வார்த்தைகளின் மென்மையில், நோயாளிகளின் மனநோயும் உடல்நோயும் பறந்து போய்விடும்.
பத்தரை மாற்றுத் தங்கமும் இவன் குணத்துக்கு ஈடாகாது என இவனைப் பற்றி மருத்துவமனை வட்டாரத்தில் பேச்சுகள் நடந்தன.
தியாகத்திற்கு அன்னை தெரசாவையும், வீரத்திற்கு விவேகானந்தரையும் உதாரணம் காட்டப்பட்டே அவன் வளர்க்கப்பட்டதால், நிறை பண்புகளுடன் வளர்ந்தான்.
அதனால் மாமன், மாமி மற்றும் மாமன் மகள் பூங்குழலி இவர்கள் மனதிலும் மரியாதைக்குரிய இடத்தைப் பிடித்து வைத்திருந்தான்.
நன்றாகப் பணி செய்து கொண்டிருந்த டாக்டர் ராஜன், திடீரென இறந்தப் பேரிழப்பு இவனை மிகவும் வாட்டிவிட்டது.
‘தன் வாழ்நாளெல்லாம் அவருடனேயே ஒட்டிக் கொண்டு மருத்துவ சேவை செய்திடலாம்’ என்று எண்ணிக் கொண்டிருந்தவனை, அவரது இழப்பு வெகுவாக பாதித்தது.
‘ஓரிரு நாள் காய்ச்சலே அவர் உயிர் பிரியக் காரணமாகி விட்டதே’ என்று கலங்கினான்.
இவ்வாறு அவன் துடிதுடித்துச் செயலற்றுப் போயிருக்க, ஆங்காங்கே பலர் சிறுசிறு குழுக்களாகக் கூடி எதையோக் கிசுகிசுத்துக் கொண்டிருந்தார்கள்.
மருத்துவரை நல்லடக்கம் செய்து நான்கைந்து நாட்கள் கடந்த பிறகே, பலரது ரகசியக் கிசுகிசுப்பின் அர்த்தம் புரிந்தது முத்துவிற்கு!
விஷயத்தைக் கேள்வியுற்ற கொதித்துப் போனான் முத்து
‘இந்த மனிதர்களின் நாவுக்குப் புரளி பேச ஒரு வரையறையே இல்லையா?’ என நொந்து போனான்.
சுமார் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவர் ராஜனிடம் பணியாற்றிய அவனுக்குள், அவரைப் பற்றியதொரு உயர்ந்த மதிப்பீடு இருந்தது.
அதனால் அவரைத் தன் குருவாகவும் தெய்வமாகவும் ஏற்று கொண்டிருந்தவனுக்கு, அவரைப் பற்றி புரளி பேசியவர்கள் மீது பெரும் கோபமே உண்டானது
இருப்பினும் தன் இயல்பான மென்மையானக் குணத்தினால், கோபத்தை வென்று கொண்டிருந்தான்.
மாமன் மகள் பூங்குழலி இவனை விடவும் ஆறு வயது இளையவள். இவனுக்கு அருமைத் தோழியாகவும் இருந்தாள். பி.எஸ்.சி. பிசிகல் சயன்ஸ் மூன்றாமாண்டு மாணவி.
அன்றாட நடவடிக்கைகளையும் மருத்துவமனை நிகழ்வுகளையும் அவள் ஒருத்தியிடம் மட்டுமே அவ்வப்போது அவன் மனம் திறப்பான்.
அவளும் வயதில் சிறியவளானாலும் தேவையான விஷயங்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்குவாள். இவனது சேவை மனப்பான்மைக்குத் தூண்டுகோலாகவும் இருந்தாள்.
அந்த வார நிகழ்வுகளை அவளிடம் பகிர்ந்து கொண்டபோது அவள் தான்,“மாமா, மருத்துவமனையில் அரசல் புரசலாகப் பேசுவதை அலட்சியப்படுத்தாதீர்கள். நன்றாக இருந்தவர் எப்படிச் சாதாரண காய்ச்சலிலேயே செத்துப் போயிருக்க முடியும்? அதனால் நான் ஒன்று சொல்வேன், நிச்சயம் நீங்கள் அதை ஏற்க வேண்டும்” என்றாள்.
முகத்தில் சற்றேக் கலவரம் தொனிக்க, ‘என்ன?’ என்பது போல் அவளை ஒருவித பதற்றத்துடன் பார்த்தான் முத்து.
“இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்து நேர்ந்ததே நினைவிருக்கா உங்களுக்கு?” என்று கேட்டாள்.
“நினைவில்லாமல்…..! அதை எப்படி என்னால் மறக்க முடியும்? அந்த விபத்தில் செத்துப் பிழைத்தவனாயிற்றே நான். தன்னுடைய ரத்தத்தைக் கொடுத்து எனக்கு உயிர்ப் பிச்சை போட்டதே என் குருநாதர் டாக்டர் ராஜன் தானே. அதற்காக என் வாழ்நாளெல்லாம் அவருக்குச் சேவை செய்வதே என் கடமை என்றிருந்தேனே. அதற்குள் அகால மரணமடைந்துவிட்டாரே…” என கண்கள் கசிய விசும்பினான்
அவனைக் கண்ட குழலிக்கும் மனது கனத்துப் போனது. அவனதுத் துயரம் அவளையும் வாட்டியது.
நீண்டநேர அமைதிக்குப் பிறகுத் தன்னைத் தேற்றிக் கொண்ட பூங்குழலி, தயங்கித் தயங்கித் தான் சொல்ல வந்ததைக் கூறத் தொடங்கினாள்.
“மாமா எனக்குச் சொல்லவேப் பயமாகத் தான் இருக்கிறது. நினைக்கவே நடுக்கமாகத் தான் இருக்கிறது. உங்க நல்ல மனசுக்கு ஏதேனும் குறை வைத்தானானால் இறைவனிடம் நியாயமே இல்லை. இருந்தாலும் எனது சந்தேகத்தைப் போக்கிக் கொள்ள நீங்கள் ஒரு ஹெச்.ஐ.வி. டெஸ்ட் எடுத்து விடுங்கள்”என்றாள்.
பூங்குழலியின் இந்தப் பேச்சு முத்துவின் இதயத்தையே ஒரு புரட்டுப் புரட்டிப் போட, அனலிலிட்டப் புழுவாய்த் துடித்து விட்டான்.
#ad
15 வருடங்களுக்கு பிறகு…
2012 அக்டோபர் மாத இறுதியில் ஒர் நாள் மாலை, தான் உருவாக்கிய மனிதநேயக்குடிலில் பம்பரமாகச் சுழன்றுப் பணியாற்றிக் கொண்டிருந்தான் முத்து
வெளியே மைதானத்தில் பயிற்சி வகுப்புகள் முடிந்து நாட்டுப்பண் இசைக்கத் தொடங்கினர். நமது தேசிய கீதத்தின் கம்பீர இசை அவனை நேர்நிறுத்தி விறைப்பாக்கியது.
பாரத தேவியை நினைக்குந்தோறும் ஆனந்தக் கண்ணீர்த் துளிர்த்துவிடும் அவனுக்கு. கீதம் முடிந்ததும் கடமையைத் தொடர்ந்தான்.
மறுநாள் காலை 11 மணிக்கு நிகழவிருக்கும் தமிழகச் சட்டமன்றத்தின் பொன்விழா நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இன்று மாலையே ஜனாதிபதியும் பிரதமரும் சென்னை வருவதாகச் செய்தி வாசித்துக் கொண்டிருந்தார்கள் தொலைக்காட்சியில்
அரசியல் மற்றும் கட்சிப் பாகுபாடின்றி அனைத்து மக்கள் பிரதிநிதித்துவ உறுப்பினர்களும் இன்று மனிதநேயக் குடிலைப்பற்றி அக்கறையோடு விசாரிக்கின்றனர். அதன் நலம் நோக்கி விவாதிக்கின்றனர்.
சமூக நல ஆர்வலர்களும் உலகச் சுகாதார நிறுவனமும்கூட இன்று மனித நேயக் குடிலின் நலத்தில் நாட்டம் செலுத்துகின்றன
ஆனால் இதற்கெல்லாம் முக்கிய காரணமானவள், மனிதநேயக் குடில் உருவாக முக்கிய பொறுப்பாளியானவள் பூங்குழலி தான்.
அவளதுக் கருணை உள்ளமும் கடின உழைப்பும், எல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னலம் கருதாத அவளதுத் தியாகமும் எத்தகையது என்று எண்ணியெண்ணி மெய் சிலிர்த்தான் முத்து.
மறுநாள் காலை வழக்கம் போல் துவங்கி பிரார்த்தனை மற்றும் யோகா வகுப்புகள் முடிந்தன
அன்றையச் செயலாக்கம் பற்றி பூங்குழலி உரைத்த பின்பு காலைச் சிற்றுண்டிக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர் மனிதநேயக்குடில் அன்பர்கள்.
காலை மணி ஆறரை. குடில் வாசலில் ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு கார்கள் வந்து நிற்க, அதிலிருந்து சிலர் அவசர அவசரமாக இறங்கி, சுருசுருவென குடிலுக்குள் நுழைந்து முத்துவையும் குழலியையும் சந்தித்து, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முதல்வர் மூவரும் குடிலை நோக்கி வந்து கொண்டிருப்பதாக கூறினர்
விஷயத்தைக் கேட்டதும் குழலிக்கும் முத்துவிற்கும் ஒன்றுமே புரியவில்லை. திடீர் அதிர்ச்சி அவர்களைச் சில நொடிகள் உறைய வைத்தது
குடில் அங்கத்தினர் அனைவருக்கும் விரைவாகச் செய்தி பரவியது. அனைவரையும் பரபரப்புத் தொற்றிக் கொள்ள, வரவேற்புக்குரிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் போதே அவர்கள் வந்து சேர்ந்தனர்
முத்துவும் குழலியும் அனைவரையும் வணங்கி வரவேற்றனர். உள்ளூர் அமைச்சர், வந்திருந்த விருந்தினர்களுக்கு முத்துவையும் குழலியையும் அறிமுகம் செய்து வைத்தார்
குழலியும், முத்துவும் அவர்களை இருக்கைகளில் அமரும்படிக் கூற, அவர்கள் வரவேற்பறையில் தீட்டப்பட்டிருந்த வண்ண ஓவியங்களில் கண்களை ஓட விட்டார்கள்.
அழகிய இயற்கைப் பொழில்களினூடே, அது என்ன? அவை…? அவை… முத்து மற்றும் இதரக் குடில் அங்கத்தினர்களின் வாழ்க்கைப் பிரதிபலிப்பு
அவர்கள் பாதிக்கப்பட்ட நிலை, பெற்றோர் மற்றும் உற்றார்களால் கைவிடப்பட்ட அவலம், சமுதாயத்தால் விரட்டப்பட்ட வேதனை எனத், தத்தம் நினைவுகளைத் தத்ரூபமாகத் தெரியப்படுத்தும் விதமாக அமைந்திருந்தன அந்த ஓவியங்கள்
அத்தனையும் அங்கிருக்கும் அவர்களாலேயே அவர்களது அனுபவங்களையே கருவாகக் கொண்டு வரையப்பட்டது என்பதால், உணர்வுபூர்வமாக இருந்தது
அதில் ஆழ்ந்து போன ஜனாதிபதி, கண்கள் கசிந்து அங்கேயே சில நிமிடங்கள் அசையாமல் நின்று விட்டார்
பின்புக் குடிலைச் சுற்றியுள்ள சோலைகள், உணவகம், மருத்துவ வசதி, உடற்பயிற்சிக் கூடம், கல்விக் கூடம், குடிலின் ஏனையச் செயல்பாடுகள், பிற பொழுதுபோக்கு விவரங்களைப் பார்த்தும் கேட்டும் தெரிந்து கொண்டார்கள்
அவர்களுக்கு வேண்டிய உதவிகளை உடனுக்குடன் செய்யும்படி முதல்வரிடம் கூறிக் கொண்டிருந்தார் பிரதமர்
அளப்பரியச் சேவையைச் செய்து கொண்டிருக்கும் முத்துவை ஆரத்தழுவிப் பாராட்டினார்கள்.
பின்பு பூங்குழலியையும் வாழ்த்தி ஆசீர்வதித்து, தேவைகளை உடனுக்குடன் தங்களிடம் தெரிவிக்கும்படி கூறி விடைபெற்றனர்.
அன்றைய பொழுது, குடில் அன்பர்களுக்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் கலந்து, நொடியில் கரைந்து போனது.
#ad
பொழுது சாய்ந்து இரவு வெகுநேரமாகியும், முத்துவுக்கு உறக்கம் வரவில்லை.
இருளை விலக்க சுடர்விடும் சிறு தீபமாய் இன்று அவன் இருந்தாலும், கடந்தப் பதினைந்து ஆண்டுகளாக அழியாத வேதனை ஒன்று அவன் ஆழ்மனதில் தங்கி அழுது கொண்டிருப்பது உண்மை தானே
வேதனை அழுத்தும் போது எப்படி உறக்கம் வரும்?
இன்றும் அப்படித் தான். நேயக்குடிலில் உள்ள சுமார் முந்நூறு பேரும் குழலியும் கூட ஆழ்ந்த நித்திரையில் கலந்து போயிருக்க, எவ்வளவோ முயன்றும் மறக்க முடியாத அந்த நினைவுகள் இவன் உள்ளத்தை மறுபடியும் மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கத் தொடங்கின.
பூங்குழலி ‘எச்.ஐ.வி. டெஸ்ட் எடுத்துப் பார்த்து விடு’ என்றுக் கூறியதைக் கேட்டு
‘அவள் தன்னை எவ்வளவுக் கீழ்த்தரமாக நினைத்து விட்டாள்’ என்று துடிதுடித்த முத்து, சில நாட்களில் இயல்பாகத் தன் மனதைத் தயார்படுத்திக் கொண்டு, பூங்குழலி கூறியவாறு தனது ரத்தத்தைப் பரிசோதனைக்குக் கொடுத்து வந்தான்.
இருபது நாட்களுக்குப் பிறகு குழலியையும் அழைத்துக் கொண்டு ஆய்வு முடிவினைத் தெரிந்து வரச் சென்றான்.
ஆய்வகத்தில் இவர்கள் முடிவினைக் கூறினார்களோ அல்லது ஆய்வு முடிவினைக் கூறினார்களோ, இருவர் தலையிலும் இடியை இறக்கினார்கள்.
கேட்ட மாத்திரத்தில் முத்துவுக்கோ கண்கள் இருள, குழலியோ மயங்கிப் பிணமாய் விழுந்து விட்டாள்.
பாவம்! வாழவேண்டிய இருபாசப் பறவைகள்! மென்மையான பிஞ்சு உள்ளங்கள்! தெரியாமல் கூட அந்த உள்ளங்கள் எவருக்கும் மனதாலும் தீங்கிழைத்ததில்லை.
உண்மையில் இறைவன் என்பவன் இருக்கின்றானா?
அந்த இரு இளம் பறவைகளின் உள்ளங்களும் துடித்தது, பதறியது, கதறியது, நடுங்கியது, கலங்கியது
பொய்யறியா பொறாமைப்படா தீயதை எண்ணா அந்த இதயங்களின் துயரத்தைச் சொல்ல சொற்களேது?
முத்துவுக்குச் செலுத்தப்பட்ட ரத்தத்தினூடே எச்.ஐ.வி. கிருமியும் சென்றிருக்குமோ என பூங்குழலி எந்த நேரத்தில் சந்தேகப்பட்டாளோ? அது நடந்து விட்டிருந்தது.
எப்படியோ வீடு வந்து சேர்ந்தார்கள். தனக்கு நேர்ந்துவிட்ட கதியை தட்டுத் தடுமாறியபடி மாமாவிடம் சொன்னான் முத்து.
கேட்டதுதான் தாமதம்! மாமாவும் அத்தையும் நொடியில் நிறம் மாறிப் போனார்கள்.
அருவருப்புடன் கூடியப் பார்வையை அவன் மீது வீசினார்கள். அவனை அவன் ஊருக்கு செல்ல மூட்டையைக் கட்டச் சொல்லிவிட்டு விருவிருவெனக் குழலியை இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றுக் கதவை அடைத்துக் கொண்டார்கள்.
அப்பாவும் அம்மாவும் மாமாவின் சுயமரியாதைக்கு வினாடியில் கொள்ளி வைத்ததைப் பார்த்துத் துடித்துத் தான் போனாள் குழலி.
நிலை தடுமாறி நின்ற முத்து, அடுத்த அரை மணி நேரத்தில் மாமா வீட்டின் வராண்டாவை ஒட்டிய ஒற்றை அறையில் இருந்த தனதுப் பொருட்களை பைகளில் அடைந்தவன், கதவைப்பூட்டிச் சாவியை வாசற்படியில் வைத்தான்
பின் வீட்டினுள் இருக்கும் அத்தை மாமாவிடம், ‘புறப்படுகிறேன்’ என்று உடைந்த குரலில் இயம்பியதுடன் கிளம்பி விட்டான்.
சுமார் எட்டு மணி நேரப் பேருந்துப் பயணம். மரித்த மனதுடனும் கசங்கி வாடிய உடம்புடனும் சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தான்.
நடைபிணமாய் வீடு வந்து மூலையில் சுருண்டு கதறினான், அதைக் கண்ட பெற்றோர் பதறினர்
கதறியப் பிள்ளையைத் தூக்கித் தன் தோளில் சாய்த்துக் கொண்ட அப்பாவிடம் தன் நிலைமையை விம்மிக் கொண்டேச் சொன்னான் முத்து.
கேட்ட அப்பாவின் முகமோ, விகாரமாகிப் போனது. பிள்ளையிடமிருந்துத் தள்ளிப் போய் நின்றுக் கொண்டார்.
தாயும் தங்கையும் துடித்துப் போனார்கள். அலறினார்கள். கதறினார்கள் தலையிலடித்துக் கொண்டு அழுதார்கள்….அவனை நெருங்காமலேயே
துடிக்கும் உள்ளத்திற்கு மருந்திட எவரும் தயாராயில்லை . இயற்கையும் அவன் துயரத்தைச் சகித்துக் கொண்டு தான் இருந்தது.
சொந்த வீட்டிலிருந்தே வெளியேற்றப்பட்டதும், தற்கொலைக்கு முயன்று, சில நாடோடிகளால் காப்பாற்றப்பட்டான்
பின் எய்ட்ஸ் நோய் ஆராய்ச்சி நிலையத்திற்குச் சென்று ஆலோசனை பெற்று, மனம் பிழன்றவனாய் அந்த மருத்துவமனை வளாகத்திலேயே சில நாட்கள் கழித்தான் முத்து
எவ்வளவுச் சொல்லியும் கேளாமல் பூங்குழலித் தன்னைத் தேடி வந்துத் தன்னோடு தங்கி விட்டதோடு, “மாமா, இந்த பூமியில் இன்று தான் பிறந்தோம் என்று ஏன் நீ நினைக்கக் கூடாது? உன்னை விடவும் வாழ்வின் கடைசித் துளிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் சிறுவர்களும் இளைஞர்களும் எண்ணற்றோர் என்பது உனக்குத் தெரியாதா? உனக்கான வாழ்வே இனி தான் துவங்குகிறது என்று எண்ணிக் கொள்
வாழ்க்கையில் உடலோடு உடல் சங்கமிப்பது எள்ளினும் சிறிதளவே. வானளவு வாழ்க்கை உன்னை வரவேற்கக் காத்திருக்கிறது. உயிரின் கடைசிச் சொட்டு ஒழுகும் வரைக்கும் போராடு. உன்னாலும் மரணத்தை வெல்ல முடியும்” என்றெல்லாம் கூறி நம்பிக்கையும் தைரியமும் தந்தாள்
தனக்கும் வாழ வழி இருக்கிறது என்று வழிகாட்டி, அவ்வழிக்குத் துணையானத் தெய்வமாய், தன் வாழ்க்கையையேத் தியாகம் செய்தாள்
எய்ட்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் நல்லுள்ளம் கொண்ட மருத்துவர் ஒருவரின் ஆலோசனைகளாலும் பூங்குழலியின் பக்க பலத்தாலும், குறிப்பிட்ட தன் சேமிப்புத் தொகையைப் பயன்படுத்தி, தெரிந்தோ தெரியாமலோ தன்னைப் போல் பாதிக்கப்பட்ட இரண்டுச் சிறார்கள் உட்பட எண்மருடன் தமிழக ஆந்திர எல்லையில் உள்ள இந்தச் சின்னஞ்சிறு கிராமத்தில் ஆரம்பித்தது தான் ‘மனிதநேயக்குடில்’
இன்று இந்தக் குடிலில் இருபத்து மூன்றுச் சிறார்கள் உட்பட, இருநூற்று எண்பது பேருக்கு முத்துவும் குழலியும் தான் தாய், தந்தை, உற்றார், உறவினர், சுற்றம், நட்பு எல்லாமும்.
இன்று நாட்டின் பல்வேறுச் சமூகநல அமைப்புகளின் பார்வையும் இதன் மீது விழுந்த வண்ணம் இருக்கிறது.
முத்து மற்றும் குழலியின் சேவை, நாட்டு மக்களால் பாராட்டப்பட்டு, விருதுகள் பல இவர்களைத் தேடி சென்றடைகிறது
பட்டுப் போனத் தன் வாழ்விற்கும் அர்த்தம் கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொள்வான் முத்து. ஆனால் குழலியை நினைத்து அவன் வருத்தப்படாத நாட்களே இல்லை
அவள் வாழ வேண்டிய நியாயமான வாழ்க்கையை வீணானத் தனக்காகத் தியாகம் செய்து விட்டாளே
அந்த நல்லவளை, அன்புமிக்க உள்ளவளை, தியாகத் திருவுருவை, தனக்கு இன்னொரு பிறவித் தந்தவளை, தாயுள்ளம் கொண்டத்தூயவளை தன்னால் வாழவைத்துப் பார்க்க முடியவில்லையே என மருகுவான்
ஆனால் அவளோ, “மாமா, நான் திருமணம் செய்திருந்தால் இரண்டு பிள்ளைகளுக்குத் தாயாகி ஒரு சின்னஞ்சிறிய குடும்பத்திற்குத் தான் தலைவியாகி இருப்பேன். ஆனால், இன்றுக் கள்ளங்கபடமற்ற அன்புக்கும் ஆறுதலுக்கும் ஏங்கித் தவிக்கும் நூற்றுக்கணக்கானப் பிள்ளைகளுக்குத் தாயாகும் பாக்கியத்தை இறைவன் எனக்குத் தந்திருக்கிறான்.
இந்தத் தொண்டு வாழ்க்கை எனக்கு மிகுந்த நிறைவையே தருகிறது. இதனை நேசித்தும் மகிழ்ச்சியோடும் மிகுந்த மன நிறைவோடும் தான் செய்கிறேன்” என்று கூறி அவன் வாயை அடைத்து விடுவாள்
அவள் என்ன தான் நியாயப்படுத்திச் சொன்னாலும் ‘தன்னாலேயே அவள் வாழ்வில் ஒரு வெற்றிடம் உண்டாகிவிட்டது’ என்ற வேதனை உணர்வு அவனுக்குள் நிரந்தரமாகி விட்டது
இந்த இணையத்தளத்தில் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய அணுகலாம்👇
(முற்றும்)
நல்ல கருத்துள்ள கதை. இந்தக் காலத்திற்குத் தேவையான ஒன்று.
Thank you madam
Thank you madam