ஜூலை ஒன்றாம் தேதி முதல் சர்வதேச பயணிகளை வரவேற்க, தயாராகிக் கொண்டிருக்கிறது தாய்லாந்தின் ப்ஹுகேட் தீவு
கொரோனோவிற்கு பின் வரும் பயணங்களில் அவசியம் போக வேண்டிய ஒன்று, இந்த கட்டுரையில் காணும் கடலுக்குள் சுற்றுலா
சிங்கப்பூரில் ஓரிரு நாட்கள் பொது விடுமுறை என்றாலும், பெரும்பாலான பயண விரும்பிகள் அருகிலிருக்கும் நாடுகளின் கடற்கரைக்கு சுற்றுலா சென்று விடுவார்கள்
அதில் எல்லாருக்கும் மிக பரவலாக தெரிந்த இடம் ப்ஹுகேட் (Phuket, Thailand)
சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவின் முக்கிய நகரங்களிலிருந்தும் விமான சேவை தொடங்கப்பட்டதால், தேனிலவுக்காக வரும் புதுமணத் தம்பதிகளையும் பார்க்க முடிகிறது.
நாங்கள் ப்ஹுகேட் (Phuket) தீவுக்குச் சென்றது 2016 ஆண்டில்.
மொத்தம் 42 தீவுகளைக் கொண்ட இடம் தான்பாங் ஞ பே (Phang Nga Bay). 400 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த கடற்பகுதி, ப்ஹுகேட் தீவிற்கும், க்ரா இஸ்துமஸ் எனும் தீவிற்கும் இடையே உள்ள ஜலசந்தி ஆகும்
பல அழிந்து வரும் உயிரினங்கள் வாழ்ந்து வரும் பகுதியும் கூட. இது தாய்லாந்து சுற்றுச்சூழல் துறையால், பாதுகாக்கப்படும் பகுதி
வழக்கமாக கடல் அலைகள் வந்து கால் தொட்டுப் போவதிலேயே சந்தோஷம் அடையும் பெரும்பாலானவர்களுக்கு, கடலுக்குள் சென்று வரும் இம்மாதிரி பயணங்கள், என்றும் நினைவில் இருப்பவை.
பல தீவுக் கூட்டங்கள் உள்ள அந்தமான், லங்காவி தீவுகள் பகுதிகளிலும், இது போன்ற சுற்றுலாக்கள் இருக்கின்றன.
நாங்கள் தேர்வு செய்த குழு, சூரிய உதயத்தை கடலில் தான் பார்க்க வேண்டும் என்றார்கள். (Two Sea Tour) காலை மணி நான்கரைக்கு தூங்கும் மகனை கையில் தூக்கியபடி, காரில் பயணித்தோம்.
பியர் (Ah Poh Pier) என்ற இடத்தில் இறக்கி விட்டார்கள். அங்கிருந்து ஐம்பத்தி ஐந்து பேர் செல்லக் கூடிய பெரிய படகில் பதினைந்து பேர் மட்டும் பயணம் ஆனோம்
ஒரு பிரெஞ்சு நாட்டுக்காரர் நடத்தும் சுற்றுலா இது. சரளமாக தாய் பாஷை பேசுகிறார்
இங்கு நம்மை போல சுற்றுலா வந்த பின்னர், ஒரு படகை வாங்கி சுற்றுலா அழைத்துச் செல்வதையே தொழிலாக செய்கிறார். தினமும் வானத்தையும், கடலையும் பார்த்தபடி ரம்மியமாக இருக்கிறதாம் அவருடைய வாழ்க்கை.
காலை ஐந்தரைக்கு படகு கடலுக்குள் செல்ல ஆரம்பித்தது. அன்று மழை மேகங்கள் மூடிய காலை. அங்கொன்றும் இங்கொன்றுமாக தீவுகள் தனித்திருந்தன
முதல் தீவு ஒரு மணி நேரப் பயணித்திற்கு பிறகே வந்தது. அதற்குள் நாங்கள் படகிலேயே பல வகையான கேக் மற்றும் ரொட்டி வகைகளை காலை உணவாகக் கொண்டோம்.
இந்தப் படகில் இணைய சேவை இருந்ததால், அவ்வப்போது எடுக்கும் படங்களை எங்கள் குடும்பத்தினரோடு பகிர்ந்து கொண்டிருந்தோம்.
#ad
பனாக் தீவு
இந்தத் தீவுக்கென்று ஒரு தனி காயல் பகுதி உள்முகமாக அமைந்திருக்கிறது.
இருட்டான அதிக உயரமில்லாத குகைக்குள் ஒரு இருபது அடியாவது நடக்க வேண்டும். இன்னும் கடல் பகுதியில் அதிக மக்கள் இல்லாத நேரம், எல்லா பக்கமும் மரங்களோடு கூடிய உயர்ந்த மலைகள் சூழப்பட்டிருக்க, விண்ணை பார்க்க முடிந்தது
இங்கு தான் உலகின் முதல் பரிணாம வளர்ச்சிக் கொண்ட நடக்கும் மீன் வகையைப் பார்த்தேன் (Mudskipper)
தவளைக்கு முன் தோன்றிய இந்த உயிர், தன் தோலாலும் சுவாசிக்கும். அப்படி தான் காயல் பகுதிகளில் நீர் இல்லாத கரைகளில் ஒதுங்கி விட்டாலும் உயிர் வாழ்கிறது
சேற்று மண்ணோடு மண்ணாக தவளை மீன் – Mudskipper
https://www.youtube.com/watch?v=DPtOEAOI4aY
அங்கிருந்து ஒரு பூநண்டை என் மகன் கையில் பிடித்துக் கொள்ளச் சொல்லித் தந்தார்கள்
ஹாங் தீவு
பனாக் தீவிலிருந்து ஹாங் தீவிற்கு நாங்கள் சிறிய படகில் துடுப்பு போட்டுக் கொண்டு போனோம். எங்களுக்கு உதவ படக்குழுவிலிருந்து ஒருவரும் கூட இருந்தார்.
எங்களுக்கு முன்னும் பின்னும் படகுகளில் உற்சாகமாக எல்லாரும் வந்தார்கள். நாங்கள் துடுப்பு போட்ட பகுதியில், ஒரு மலையின் அடிவாரத்திலிருந்த இடத்தில், உட்புகுந்து வெளி வந்தோம்
மிக அழகான காட்சிகள். அவற்றை நீங்களும் ரசிக்க என்றே நாங்கள் எடுத்த ஒரு காணொளியை சேர்த்திருக்கிறேன்
https://www.youtube.com/watch?v=j7V4vOMBxQk
#ad
ஜேம்ஸ் பாண்ட் தீவு
மீண்டும் பெரிய படகுக்கு வந்து ஜேம்ஸ் பாண்ட் தீவிற்கு சென்றோம்.
எங்களின் சிறிய துடுப்புக் கொண்ட ரப்பர் படகுகளும் பெரியப் படகில் ஏறிக் கொண்டன.
ஜேம்ஸ் பாண்ட் தீவில் தான் அவரது ஒரு சில படங்களில் வரும் காட்சிகள். (Man with a Golden Gun போன்றவை) படமாக்கப்பட்டன.
நாங்களும் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்
மீண்டும் எங்கள் படகுக்கு சென்று மதிய உணவு உண்டோம். நாங்கள் அசைவம் உண்ண மாட்டோம் என்பதால் எங்களுக்கு பச்சைக் கத்தரிக்காய் போட்டு ஒரு தாய்லாந்து கறி செய்து கொடுத்தார்கள்.
மதிய உணவிற்கு பின், லாவா தீவில் ஒரு இரண்டு மணி நேரம் கடல் பார்த்து விளையாடிக் கொண்டிருந்தோம். இந்த பகுதியில் தண்ணீரில் இறங்கலாம். ஜெல்லி மீன்கள் இல்லாத பகுதி.
மீண்டும் கரைக்குத் திரும்பி எங்களை நாங்கள் தங்கியிருந்த விடுதியில் மாலை நான்கு மணிக்குக் கொண்டு சேர்த்தார்கள்.
வார்த்தைகளால் விவரித்தால் புரியாத மிக உன்னதமான அனுபவம். பயணங்கள் எல்லாருக்கும் சாத்தியம் ஆகும் போது, நாம் தவற விடக் கூடாத சுற்றுலா இது.
ப்ஹுக்கெட்டில் தவற விடக் கூடாத மற்றொரு இடம் Trick Eye அருங்காட்சியகம்.
சிங்கப்பூரிலும் இதே அருங்காட்சியகம் இருக்கிறது.
இங்கே நீங்கள் நினைத்தே பார்க்க முடியாதவற்றை புகைப்படங்களாக ஆக்கிக் கொள்ளலாம்.
நாங்கள் எடுத்த ஒரு சில புகைப்படங்களை ஆண்டுகள் பல ஆனாலும், ஆசையாய் திரும்பிப் பார்க்க முடிகிறது
புத்தர் கோயில்
தாய்லாந்து தீவுகள் பலவற்றிலும் ஒரு பெரிய புத்தர் சிலை கொண்ட கோயில் (Big Buddha Temple) இருக்கும். ப்ஹுகேட்டும் இதற்கு விதிவிலக்கல்ல
148 அடி உயரமான புத்தரை வந்தடைந்தால், அவரைப் போல நமக்கும் நிர்வாண நிலை வாய்க்கலாம். இங்கிருந்து மொத்தத் தீவும் அழகாக காட்சியாய் விரியும். ப்ஹுக்கெட்டில் மட்டும் 22 புத்தர் ஆலயங்கள் இருக்கின்றன.
இந்த பெரிய புத்தருக்கு பக்கத்திலிருந்த ‘வாட் சயாங்’ என்ற ஆலயத்துக்கு சென்று வந்தோம்.
புத்தர் கோயில்களை வாட் என்றே அழைக்கிறார்கள்.
இந்தக் கோயிலின் வாசலில் நட்டு வைக்கப்பட்டிருந்த கற்களில், நந்தி, சிவன், பார்வதி, கையில் மலரேந்திய விஷ்ணு போன்றோரையும் பார்த்தோம்
தாய்லாந்து ஆலயங்களுக்கே உரித்தான தங்க நிற கோபுர அழகை நீங்களும் பாருங்கள்
அடுத்த முறை சுற்றுலா வருபவர்களை வரவேற்கும் Phuketற்கு சென்று வாருங்கள்.
இந்த இணையதளத்தில் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய அணுகலாம்👇
(முற்றும்)
GIPHY App Key not set. Please check settings