”அமுதா, வா சாப்பிடலாம்”
“இல்லம்மா எனக்கு பசிக்கல. நான் அப்புறம் சாப்பிடறேன்”
”இல்லல்ல நீ வா, எனக்கு தனியா சாப்பிட பிடிக்கல. அத்தோட, காலை உணவை தவிர்க்கவே கூடாது”
“போதும்மா”
“போதுமா? வளர்ற பிள்ள, ஒழுங்கா சாப்பிடு. இங்க பார் அமுதா, வினய் தூங்கிட்டான். நானும் பெரியவனும் எங்க அறைக்கு போறோம். எனக்கு முக்கியமான வேலை இருக்கு. முடிய மதியம் ரெண்டு மணி ஆகிடும். விமல்’க்கும் ரெண்டு மணி வரை வகுப்பு இருக்கு. நீ கிரைண்டர்ல மாவு அரைச்சுடு. சமையலறை கதவ சாத்திக்க, சத்தம் எங்களுக்கு தொந்தரவா இருக்கும். பாத்திரம் கழுவி, சமையலறையையும் சுத்தம் செய்து வெச்சுடு. முடிச்சுட்டு ஓய்வு எடுத்துக்க”
“சரிம்மா”
***
”டொக்”
ஓடி வந்து ஜன்னல் கதவை மெதுவாக சத்தம் இல்லாமல் திறந்தாள் அமுதா
“என்ன ரெண்டு நாளா நீ ஜன்னலயே திறக்கல. என்ன ஆச்சு?”
“மெதுவா பேசுங்க அக்கா”
“சரி நீ விஷயத்த சொல்லு”
“தாத்தா நாளைக்கு வராராம். அதான் அம்மா ரெண்டு நாள் விடுப்பு எடுத்து அவர் அறையை சுத்தம் செய்தாங்க. நானும் கூட உதவி செய்தேன். அத்தோட பெரிய தம்பிக்கு பள்ளிக்கூடம் இல்ல, அதான்”.
“ஓ தாத்தா வராரா. ஜாக்கிரத பொண்ணு. அவர் ரெண்டு மாசம்கிட்ட மருத்துவமனையில இருந்துட்டு வராரு. உனக்கும் கொரோனா வந்துடப் போகுது”
”சரிக்கா”
“அந்த கிழவன் சரியான லொள்ளு. ரொம்ப திட்டும், பாத்து நடந்துக்க. அவரு வாத்தியாரா வேலை பாத்தவரு. உன்னையும் பெஞ்சு மேல ஏத்திடுவாரு”
“சரிக்கா”
“அவங்க புருஷன் எப்ப வெளிநாட்ல இருந்து வரானாம்”
“அதெல்லாம் தெரியாதுக்கா. அக்கா, உங்க வீட்ல யாரோ மணி அடிக்கறாங்க”
”சரி ஜன்னல சாத்திக்க. கிழவன் வந்ததும் சேதி சொல்லு. இந்த பொண்ணுக்கு பாம்பு செவி போல. நமக்கு கூட கேக்கல…”
”என்னக்கா, என்ன சொல்றீங்க?”
“ஒண்ணும், இல்ல. நாளைக்கு கிழவன் வந்ததும் சொல்லு”
“சரிக்கா”
***
”வாங்கப்பா”
“அமுதா, அந்த ஆலத்தட்ட கொண்டு வா”
“ஏம்மா, நான் என்ன போருக்கா போயிட்டு வரேன். எதுக்கும்மா ஆலம் எல்லாம்?”
“இதுவும் ஒரு வகை போர் தானே’ப்பா. நோய்க் கிருமிகளுடன் போராடி வென்று வந்திருக்கீங்க”
“ஹ, ஹ, ஹா. அது சரி, யாரு இந்தப் பொண்ணு?”
“சொல்றேம்பா”
“பிள்ளைங்க எங்கம்மா?”
”சின்னவன் தூங்கறான், பெரியவன் ஆன்லைன் கிளாஸ்”
“சரி, நான் மாடிக்கு என் அறைக்குப் போறேன்.கொஞ்ச நாள் பிள்ளைங்ககிட்ட இருந்து நான் தள்ளியே இருக்கேன்”
”வேண்டாம்ப்பா. நீங்க தான் மருத்துவமனையில இருந்து உங்க தம்பி வீட்டுக்குப் போய் பத்து நாள் இருந்துட்டு தான வந்திருக்கீங்க. துவைக்க வேண்டிய உங்க துணியெல்லாம் கொடுங்க’ப்பா”
“வேண்டாம்மா, நானே துவைச்சுக்கறேன்”
“இந்த பிடிவாதத்தை எப்பப்பா விடப் போறீங்க?”
“உடம்பு முடியற வரைக்கும் செய்யறேன். முடியலன்னா நீ தானே’ம்மா செய்யணும். மகேஷ் போன் செய்யறானா?”
“நேத்து கூட பேசினார்’ப்பா உங்க பிள்ளை. நீங்க இன்னிக்கு வறீங்கனு சொன்னேன்”
“என்கிட்டயும் பேசினான். சரிம்மா, நான் மாடிக்கு போறேன்”
***
”என்ன தாத்தா வந்துட்டாரா? எப்படி இருக்காரு? ஜாக்கிரத, தள்ளி நில்லு, கிட்ட போகாத”
”சம்பளம் ஒழுங்கா தராங்களா?”
“சாப்பாடு நல்லா போடறாங்களா?”
“உன்ன திட்டறாங்களா?”
“ரொம்ப வேலை வாங்கறாங்களா?”
ஜன்னல் சம்பாஷணை தொடர்ந்து கொண்டே இருந்தது.
***
”ஏம்மா, இந்தப் பொண்ணு யாரு, சொல்றேன்னு சொன்னியே”
“நீங்க மருத்துவமனைக்கு போனப்பறம் தனியா இருக்கறது ரொம்ப கஷ்டமா இருந்தது’ப்பா. ரெண்டு பிள்ளைங்களையும் வெச்சுக்கிட்டு சமாளிக்க முடியல. நம்ப பூக்காரம்மாகிட்ட கேட்டேன். உதவிக்கு இந்த மாதிரி யாராவது பெண் கிடைக்குமானு”
தன்னைப் பற்றி பேசுவது காதில் விழவே காதைத் தீட்டிக் கொண்டு கேட்டாள், சமையலறை கதவின் பின்னே நின்று கொண்டிருந்த அமுதா.
“பூக்கார அம்மாவுக்கு தூரத்து சொந்தமாம், கிராமத்துல இருக்காங்க. அவ அப்பா, அம்மா கூலி வேல செய்யறவங்களாம். இந்த கொரோனா காலத்துல வேலை இல்லாம சாப்பாட்டுக்கே கஷ்டப்படறாங்களாம். அமுதாவுக்கு ரெண்டு தம்பி, ஒரு தங்கை வேற இருக்காங்களாம். சரி எனக்கு துணையா இருக்கட்டுமேனு அழைச்சுட்டு வரச் சொன்னேன்”
“ரொம்ப சின்னப் பெண்ணா இருக்காளே’ம்மா”
“சின்ன பொண்ணா இருந்தாலும் நல்லா வேலை செய்யறா, பொறுப்பாவும் இருக்கா. நல்ல பெண் தான்’ப்பா”
“எவ்வளவு சம்பளம் கொடுக்கறம்மா?”
”மாசம் 5000 ரூபாய், பணமா கொடுக்கறதில்ல. அவங்க ஊர்ல இருக்கற ஒரு மளிகைக் கடையில சாமான் வாங்கிக்க சொல்லி இருக்கேன். அந்த கடைக்காரருக்கு நான் GOOGLE PAY வழியா பணம் அனுப்பிடறேன். மீதியை கணக்கு வெச்சிருக்கேன். அமுதா பேர்ல வங்கியில போட்டு வெக்கலாம்னு”
“ஏம்மா இது அதிகம் இல்லையா?”
”அதனால என்னப்பா? நானும் நல்லா சம்பாதிக்கறேன், உங்க பிள்ளையும் நல்லா சம்பாதிக்கறார். உங்களுக்கும் பென்ஷன் வருது. ஒரு குடும்பத்துக்கு உதவி செய்த மாதிரி இருக்கும் இல்லயா?அதான்”
“நீ எது செய்தாலும் சரியா தான் இருக்கும்”
”அப்பா எனக்கு ஒரு யோசனை”
“சொல்லும்மா”
“நீங்க ஒரு ஆசிரியர் இல்லயா. அதனால அமுதாவுக்கு எழுதப் படிக்க சொல்லிக் கொடுக்க முடியுமா? நீங்க அடிக்கடி கோவில் கட்டறது, சத்திரம் கட்டறது, எல்லா தர்மகாரியங்கள விட ஓரு ஏழைக்கு படிப்பு சொல்லிக் கொடுக்கறது தான் சிறந்ததுனு பாரதியார் கவிபாடி இருக்கார்னு சொல்லுவீங்களே அப்பா”
“அட என்னம்மா நீ, ஒரு ஆசிரியருக்கு படிப்பு சொல்லிக் கொடுக்கறத விட மகிழ்ச்சி கொடுக்கற விஷயம் என்னம்மா இருக்கு? ஒரு நல்ல நாள் பார்த்து ஆரம்பிச்சுடலாம்”
அமுதா கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
அதற்குப் பிறகு அந்த வீட்டின் சமையலறை ஜன்னல் மூடியே இருந்தது
(முற்றும்)
“சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇
எழுத்தாளர் சஹானா கோவிந்தின் நாவல்கள் மற்றும் சிறுகதைத் தொகுப்புகளை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇
மிகவும் அருமை… பலரின் நல்ல மனங்கள் அந்தப் பக்கத்துவீட்டு பெண் போன்ற சிலரால் தவறாக சித்தரிக்கப்படுகின்றது. நேர்மறை எண்ணங்களை அழகாக எடுத்துக்கூறியுள்ளீர்கள். அருமை.. வாழ்த்துகள்
Good.
Positive vibrations has to be spread like these kind of stories.
Thank you
அருமையான கதை. வாழ்த்துக்கள்