மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் வண்டி நின்றதும், சோம்பல் முறித்தபடி கண்களை கசக்கியவாறு சுற்றிலும் பார்வையை சுழலவிட்டேன்
ஏதோ அடுத்த நிமிடமே வண்டி கிளம்பப் போவதைப் போல் அவசர அவசரமாக மக்கள் இறங்கினார்கள்.
பரபரப்பான வாழ்க்கையிலிருந்து விடுதலை பெறத்தான் இவர்கள் ஊட்டிப் பயணத்தைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்.ஆனால் பரபரப்பு எங்கள் பரம்பரை சொத்து என்பதைப் போல, இங்கும் இவர்கள் முண்டியடித்துக் கொண்டு இறங்குவதைப் பார்த்த போது, ஊட்டியின் இயற்கை சூழலேனும் இவர்கள் மனதை இதமாக்கட்டும் என எண்ணியபடி இறங்கினேன்.
போர்ட்டர்களைத் தேட வேண்டிய அவசியம் எனக்கில்லாததை எனது அதிர்ஷ்டமாக நான் நினைத்தேனோ இல்லையோ, என் உடன் பிரயாணித்த நபர் அவ்வாறெண்ணி சிலாகித்தார்
ஒரு பெரிய கூட்டத்துடன் அவர் வண்டியில் ஏறி அதகளப்படுத்தியதை யாவரும் அறிவர். அந்தக் கூட்டத்தின் ஆட்டத்தால் தான், வண்டியின் சுகாதாரம் மேம்பட்டிருந்தது
நான் பயணித்து வந்த ரயில்பெட்டியின் உட்புறத் தோற்றம், நம் மக்களின் அலட்சியப் போக்கை வெட்ட வெளிச்சமாக்க ஒரு சிறந்த ஆதாரம்
பஸ்ஸோ ரயிலோ எதில் பயணித்தாலும், அதை தமது சொந்த உடைமையாக எண்ணி எல்லா அட்டூழியங்களையும் செய்வார்கள்.
வண்டியெங்கும் சிதறிக் கிடக்கும் ஆரஞ்சு, வாழைப்பழத் தோல்கள், வேர்க்கடலை தோல்கள், கறைப்படிந்த பிளாஸ்டிக் காபி தண்ணீர் கப்கள் முகம் சுளிக்க வைத்தன.
“நீ ரொம்ப பொறுப்பானவனா?” என்ற கேள்வியை என் முன் நீங்கள் வைக்கலாம்
இதோ நீங்கள் தான் சாட்சி. நான் கையோடு கொண்டு வந்திருக்கும் பையில், என் பசியைப் போக்கிய உணவின் மிச்சங்களை இத்யாதிகளை சேகரித்து வைத்துள்ளேன்
எதிரில் தென்படும் “என்னை உபயோகி” என்ற வாசகம் கொண்டதன் பயன்பாட்டை உண்மையாக்கப் போகிறேன்.
இந்த இடைப்பட்ட நேரத்தில் தான் உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன், என் மனதின் குரல் மூலமாக
அந்த நபரைப் பற்றி சொல்ல மறந்து விட்டேனே!
ரிசர்வேஷன் என்பதால் இடத்திற்கு அடிதடி களேபரம் இல்லாமல் ஏறுவர் என்று பார்த்தால், தன் குடும்பத்தாரை வழிநடத்துகிறேன் பேர்வழி என, பிரயாணிகள் அனைவருக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தி விட்டார் அந்த மனிதர்
அக்கடா என கைகால்களை தாராளமாக நீட்டி, ஜன்னலோர பயணத்தை ரசித்துக் கொண்டிருந்த கண்ணாடிக்காரரிடம் தன் மகள்களுக்காக பரிந்துரை செய்தார்
அந்த நபரும் மனதுக்குள் நொந்தபடி, முக தாட்சண்யத்திற்காக தன்னிடத்தை விட்டுக் கொடுத்தார்.
பகல் முழுவதும், பலத்த குரலில் தன் வாழ்க்கைத் துணையின் உறவுகளை ஏக வசனத்தில் வறுத்தெடுத்தார்
மேட்டுப்பாளையத்தில் மனைவி வழி உறவினர் வீட்டுத் திருமணத்திற்கு தான் இப்போது செல்கிறார்கள் என்பதை பறைசாற்றியது அந்த வறுத்தெடுப்பு.
பின் சீட்டிலிருந்து அனைத்தையும் ஆமோதிக்கும் வண்ணம் குரல்கள் ஒலித்தன. அவர்கள் வேறு யாரும் அல்ல, அந்த பெண்மணியின் மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார் தான்
அதன் பின், வந்த அனைத்துப் பொருட்களையும் வாங்கி சுவைத்த அவர்களின் கை வண்ணம் ரயில் பெட்டி முழுக்க சிதறிக் கிடந்தது.
என் அதிர்ஷ்டத்தைக் கூற வேண்டும். என்னருகில் அல்லவா அக்குடும்பத் தலைவர் அமர்ந்தார். பிரயாணம் முழுக்க என் கற்பனைக் குதிரை வேகமெடுக்க முடியாதபடி, தனது ரம்பப் பேச்சால் கடிவாளமிட்டார்
என்னைப் பார்த்தவுடனே என் சுதந்திரம் அவருக்குப் பிடிபட்டிருக்க வேண்டும். நான் வைத்திருந்த ஒரேயொரு கைப்பெட்டியின் மூலம், எனது தொந்தரவற்ற தனிமைப் பயணம் அவருக்குப் புரிந்திருக்க வேண்டும்.
எனது வரம் என அவர் நினைத்த ஒற்றை கைப்பெட்டிப் பயணம் தான், போர்ட்டரைத் தேட வேண்டிய அவசியத்தை எனக்குக் கொடுக்கவில்லை
என்னுடன் பயணித்து வரும் உங்களுக்கு, என் அறிமுகம் அவசியமென நினைக்கிறேன்
நான் சுகுமாரன். வளர்ந்து வரும் சினிமா கதாசிரியர். பெயர் சொன்னவுடனே நினைவிற்கு பிடிபடும் அளவிற்கு இன்னும் உயரம் தொடவில்லை. சமீபத்தில் வெற்றிப் பெற்ற திரைப்படங்களில், முதல் மூன்றின் கதை வசனம் எனது கைவண்ணத்தில் அமைந்தவை.
புதுமுக இயக்குனர் விஜயநாதனின் படம் ஊட்டி சம்பந்தப்பட்ட கதை என்பதால், நேரடியாக களத்திற்கு சென்று அதற்கேற்ப கதை வசனம் அமைத்தால் சிறப்பாக இருக்குமென தயாரிப்பாளர் நினைத்ததால் தான் இந்த ஊட்டி பயணம்
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட கதை என்பதால், அந்த களத்தில் இருந்து எழுதும் போது சிறப்பாக இருக்கும் என்ற எண்ணத்தில் நானும் இந்த பயணத்திற்கு இசைந்தேன்
ரயில் நிலையத்தில் இறங்கியதும் அழைத்துச் செல்ல, எனக்காகக் கார் காத்துக் கொண்டிருந்தது.எனக்குக் கார் ஓட்டத் தெரியும் என்றாலும், மூலை முடுக்கெல்லாம் சுற்றிப் பயணம் செய்யும் பொருட்டு உள்ளூர் டிரைவர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். எல்லாம் தயாரிப்பாளர் ஏற்பாடு.
நேராக ஓட்டலுக்கு பயணப்பட்டது வண்டி. எனக்கென பதிவு செய்யப்பட்டிருந்த ரூமில் சற்று இளைப்பாறியப் பின், சுற்றிப் பார்க்கக் கிளம்பினேன்.
முதற்கட்ட தகவல்களை சேகரித்த பின் அறைக்குத் திரும்பினேன். அறைவாசலில் பதினைந்து வயது நிரம்பிய சிறுவன் என்னைப் பார்த்ததும் வணக்கம் கூறினான்
“ரூம் சர்வீஸ் சார்” என்றான் பவ்யமாக. அறையைத் திறந்து அவனை அனுமதித்ததும், பரபரவென தனது வேலைகளை செய்தான்
“சென்னையா சார் நீங்க? தனியா வந்திருக்கீங்க, சீஸன் டைமாச்சே சார் இப்ப. ஃபாமிலியக் கூட்டிட்டு வந்திருக்கலாமே…” என அவன் பேசிக் கொண்டே போனான்.
ஓட்டல் ரெஜிஸ்டரைப் பார்த்து எல்லா அறைகளின் ஆள், ஊர், பேர் எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறான் போல. இம்மாதிரியானவர்களின் வேலையே அது தானே.
பொதுவாக எனக்கு அதிகம் பேசுபவர்களைக் கண்டால் அலர்ஜி. நானும் அளந்து தான் பேசுவேன்.
சுற்றி நடப்பவற்றை மட்டுமே என் கண்திரைகள் கிரகித்து மனத்திரைக்கு அனுப்பும். வாய்க்கு அதிகம் வேலைக் கொடுப்பதில்லை. அதிலும் இந்த பையன் வளவள எனப் பேசியதைக் கேட்டதும், மீண்டும் எனது கற்பனைக் குதிரையின் வேகம் இவனால் கடிவாளமிடப்படுமோ என மனம் கணக்குப் போட்டது.
அமைதியான சூழலே கற்பனைக்குத் தீனியிடும் என நம்புபவன் நான். எனவே இவன் வருகையை, பேச்சை முளையிலேயே தவிர்க்க வேண்டும் என எண்ணினேன்
“தம்பி உன் வேல என்னவோ அதமட்டும் பாரு, எல்லாம் முடிஞ்சுதா? கிளம்பு, நான் ரெஸ்ட் எடுக்கணும்” என்றேன்
என் சுடுசொற்கள் அவனைத் தாக்கியதாகவே காட்டிக் கொள்ளாமல், “சார், நைட் டிபனுக்கு என்ன கொண்டு வரட்டும் சார்? எங்க ஹோட்டல் ஸ்பெஷலே பட்டர்நாண் சன்னா தான் ஸார். இப்பவே கொண்டு வரட்டுமா, இல்ல கொஞ்ச நேரம் ஆகட்டுமா சார்?” எனக் கேட்டான்
“தம்பி, ஒரு தரம் சொன்னாப் புரியாது உனக்கு? அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். கீழ தான ரெஸ்ட்டாரண்ட், நானே வர்றேன், நீ போ இப்போ” என்றேன் கடுமையாக.
நிஜமாகவே அவன் அதிகபிரசங்கித்தனம் எனக்குப் பிடிக்கவில்லை. சற்றே வாடிய முகத்துடன் அந்த புதியவன் வெளியேறினான்
அடுத்த நாளுக்கான பயணத்திட்டத்தை வகுத்த பின், இரவு உணவுக்காக கீழ்த்தளத்தில் இருந்த உணவகத்திற்குச் சென்றேன்
நடுத்தரமான விடுதி என்பதால், பலதரப்பட்ட மக்களைக் காண முடிந்தது.
வரவேற்பறையைத் தாண்டி தான் உணவகம் இருந்தது. அதனால் வரவேற்பறை நிகழ்வுகளை நோட்டமிட்டவாறு, பரிமாறப்பட்ட தோசையை உண்டேன்
காரிலிருந்து இறங்கிய ஒரு வடஇந்திய குடும்பத்தை, ஹோட்டலை நோக்கி வழி நடத்தி அழைத்து வந்தான் அந்த ரூம் சர்விஸ் சிறுவன்
குடும்பத் தலைவர் கட்டணத்தை செலுத்திக் கொண்டிருக்கும் போதே, பெட்டிகளை சுமந்தபடி குடும்பத்தாரை அறைக்கு அழைத்துச் சென்றான் சிறுவன்
வெகுநாள் பழகியவன் போல் அவர்களுடன் சகஜமாக தனக்குத் தெரிந்த ஹிந்தி கலந்த ஆங்கிலத்தில் பேசியபடி அழைத்துச் சென்றான்.
மாடிப் படிக்கட்டை ஒட்டி நான் அமர்ந்திருந்ததால் அவர்கள் உரையாடல் எனக்குத் தெளிவாகவே கேட்டது. நாளை அவர்களை ஊட்டி முழுக்கக் சுற்றிக் காட்ட தான் உடன் வருவதாகக் கூறினான்.
நான் அறைக்குத் திரும்பிய போது, எதிர் அறையில் அந்த குடும்பம் தென்பட்டது. அவன் இன்னமும் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தான்.
அவர்கள் அறைக் கதவை மூடிவிட்டு திரும்பிய போது, அவன் கையில் இருநூறு ரூபாய் தாள்கள் சிரித்தன
என்னைப் பார்த்ததும் சுமூகமான அதே புன்முறுவல் பூத்துச் சென்றான். இந்த வயதில் கையில் புரளும் சரளமான பணம், எவரையும் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும். அவனைப் பற்றிய நிஜமான கவலை அப்போது எனக்குத் தோன்றியது.
பயணக்களைப்பின் காரணமாகவும், கோடையை மறக்கச் செய்த உதகையின் இதமான குளிர்க்காற்றின் பரவசமும், என்னை அறிதுயில் கொள்ளச் செய்தன
கதவு லேசாகத் தட்டப்பட்ட ஓசையில் என் உறக்கம் கலைந்தது. வலுக்கட்டாயமாக இமைகளைத் திறந்து, பின் கதவைத் திறந்தேன்
புத்துணர்வான தோற்றத்துடன், “ரூம் சர்வீஸ் சார்” என்றான் அவன்
இம்முறை என்னால் அவனிடம் கோபம் கொள்ள முடியவில்லை. அவனது விநயமான தோற்றமும் குரல்பாவமும் என்னை ஏதோ செய்தது. அவனை உள்ளே அனுமதித்தேன்.
அறையை ஒழுங்குப்படுத்திய பின், “நல்லா தூங்கினீங்களா சார்? குளிக்க ஹீட்டர் ஆன் பண்ணட்டுமா சார்? டிபன் ரெடியா இருக்கு சார், கொண்டு வரட்டுமா?”எனக் கேட்டுக் கொண்டே போனான்.
இடைமறித்து, “தம்பி! உன் பேரென்ன?” எனக் கேட்டேன்
“ரமேஷ் சார், நான் குன்னூர்ல இருக்கேன் சார். அப்பா, அம்மா, தம்பி, தங்கை அங்க இருக்காங்க. ராத்திரி ஒன்பது வரைக்கும் ட்யூட்டி. திரும்ப காலைல ஆறு மணிலேர்ந்து வேல ஆரம்பிச்சிடும். வீட்டுக்கு தினமும் போயிட்டு வந்திடுவேன் சார்” என, என் ஒற்றை கேள்விக்கு ஒன்பது பதிலளித்தான் அவன்
“ரமேஷ், ஹீட்டர் ஆன் பண்ணிட்டு, காபியும் தினசரி பேப்பரும் கொண்டு வர்றியா?” எனவும், இரண்டு நிமிடத்தில் இரண்டும் வந்தன
மிக சுறுசுறுப்பாகத் தென்பட்டவனிடம் ஏதோ ஒன்று இல்லாதிருந்தது. அது அவன் வயதுக்குரிய சிறுபிள்ளைத்தனம் என உணர்ந்தேன்
பெரியமனுஷத் தோரணையுடன் அவன் வளைய வருவது ஏனோ எனக்கு எரிச்சலைத் தந்தது. அக்குணம் அவன் இயல்பா அல்லது அவனாகத் தருவித்துக் கொண்டதா என்பது புதிராக இருந்தது.
“சார்…வேற ஏதாவது…” என அவன் இழுத்ததுமே, அவன் நோக்கம் புரிய, “வேற ஒண்ணும் வேணாம்ப்பா. நானே கீழ வந்து டிபன் சாப்பிட்டுக்கிறேன், நீ போ” என்றேன்.
அதே மாறாத புன்னகையுடன், “ரைட் சார்” என அடுத்த அறை நோக்கி நகர்ந்தான்.
ரூம் சர்வீஸுக்கும் சேர்த்து தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது அறிந்த ஒன்றென்றாலும், நான் எப்போதுமே இப்பணியாளர்களுக்கும் சரி ஹோட்டல் சர்வர்களுக்கும் சரி தாராளமாக டிப்ஸ் எனப்படும் சன்மானம் கொடுக்காமல் இருந்ததில்லை
அவன் எதிர்பார்ப்பது போல் ஒரு பத்து ரூபாயைக் கொடுப்பதில் நான் ஒன்றும் குறைந்துப் போய்விடமாட்டேன். ஏனோ இந்த சிறுவனுக்குக் கொடுக்க மட்டும் மனம் வரவில்லை
மனம் வரவில்லை என்பதை விட, தயங்குவது ஏன் என மனம் கேட்கும் கேள்விக்குப் பதிலை மனமே சொன்னது.
இந்த வயதில் மற்றவரிடம் பணத்தை எதிர்பார்த்து நிற்பதும், அவன் கையில் சரளமாக புழங்கும் பணமும், அவனது எதிர்காலத்தை நிலைகுலையச் செய்யுமோ என்ற எண்ணமே, அவனுக்கு சன்மானம் தர விடாமல் என்னை தடுத்தது
என் அறைக்கதவு திறந்திருந்ததால், பத்து முறைக்கு மேல் அவன் மாடி ஏறி இறங்கி அவர்களுக்கு வேண்டிய உணவு முதலான உபச்சாரங்களை செய்துக் கொண்டிருந்ததை என்னால் காண முடிந்தது.
அதில் அவனுக்குத் துளியளவும் சலிப்பு ஏற்பட்டதாகவே தெரியவில்லை, விசிலும் பாட்டுமாய் உற்சாகமாக வளைய வந்தான்.
நான் டிபன் சாப்பிட்டு கை கழுவும் போது எதிரில் ஓடி வந்தான். “சார், இங்க எல்லாரையும் சுத்திக் காட்ட நான் தான் சார் கூடப் போவேன். நீங்க வெளிகைடு யாரையும் வெக்காதீங்க சார், நானே நீங்கப் பார்க்க விரும்புற இடத்துக்கெல்லாம் கூட்டிட்டுப் போறேன். ஒன்பது மணிக்கு எல்லாரும் கிளம்புறோம். நீங்களும் வர்றீங்களா சார்?” எனக் கேட்டான்
“இல்ல ரமேஷ், என் ஃபிரெண்டு கார் அனுப்பிருக்காரு. டிரைவர் இந்த ஊர் தான், அவருக்கே எல்லா இடமும் தெரியும் போல. அதனால நான் அவரோடயே போய்க்கறேன்” என்றேன். அவன் முகவாட்டத்துடன் நகர்ந்தான்
என் மூலமாக அவனுக்குக் கிடைக்க வேண்டிய வருமானத்தை இழந்ததில் அவன் அடைந்த ஏமாற்றத்தைக் கண்டு, எனக்கும் மனவருத்தம் தான். ஆனால், ஏனோ மனம் யோசிக்கும் முன் உதடுகள் பதில் உரைத்தன.
நான் வெளியில் கிளம்பிய அதே நேரம், அவனும் மற்றவர்களுடன் கிளம்பினான். ஹோட்டலுக்கு சொந்தமான வாகனத்தில் அவர்கள் செல்கிறார்கள் என்பது தெரிந்தது.
இருநாட்கள் இவ்வாறு கழிந்தன. நான் விரும்பிய தகவல்களையெல்லாம் ஓரளவு சேகரித்து விட்டேன். நான்கு நாட்கள் அங்கு தங்குவது தான் என் பயணத்திட்டம்
இரவு உணவிற்குப் பின் அறைக்குத் திரும்பிய போது லேசாக தலைவலிக்கவே, மருந்து வாங்க நான் வெளியில் செல்ல படியிறங்கினேன்
தன் கைகள் இரண்டிலும் சிகரெட் பாக்கெட்டுக்களையும் மது பாட்டில்களையும் கைகளில் சுமக்க முடியாமல் சுமந்து படியேறி மேலே வந்துக் கொண்டிருந்தான் ரமேஷ்
என்னைப் பார்த்தவுடன் சற்றுத் திடுக்கிட்டாலும், அவனது டிரேட்மார்க் புன்னகையுடன் சமாளித்தான். அவன் அவற்றையெல்லாம் கொடுத்துவிட்டு வரும் வரை நான் கீழே காத்திருந்தேன். அவன் என்னை எதிர்பார்க்கவில்லை என்பதை அவன் வெளிறிய முகத்தில் இருந்து உணர முடிந்தது
“ரமேஷ், இந்த ஹோட்டல்ல இதெல்லாமா அனுமதிக்கறாங்க? அனுமதித்தாலும் உன் வயதில் இதெல்லாம் நீ வாங்கிட்டு வரலாமா? படிக்க வேண்டிய வயசுல, அவங்க குடுக்கற பணத்துக்காக நீ என்ன வேணா செய்வியா? இந்த வயசுல உனக்கு எதுக்கு இவ்வளவு பணம்? வீட்டுக்குக் குடுப்பியா, இல்ல தவறான வழில செலவிடுறியா?
இதெல்லாம் கேட்க எனக்கு எந்த உரிமையும் இல்ல தான். இருந்தாலும் மனசு கேட்காம தான் சொல்றேன். நீயே வலியப் போய் வேல செஞ்சு ஏன் இப்படி எல்லோரிடமும் பணத்த எதிர்பார்க்கிற? உனக்கு இங்க சம்பளம் கொடுக்கிறாங்க தான?
கூடுதலான பணம் கையில் புழங்கறது தவறான பாதைக்கு உன்னைக் கூட்டிப் போகும். சேமிச்சு வைக்கிற பொறுப்புணர்வு இந்த வயசில வந்திடாது. இந்த சூழ்நிலை அதுக்கு இடம் கொடுக்காது. ரமேஷ், இனிமே இந்த சமாச்சாரத்தையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறது நிறுத்திடுப்பா. உன் நல்லதுக்குத் தான் சொல்றேன்” என சொல்லிக் கொண்டிருக்கும் போதே
“ரமேஷ், டிபன் வாங்கியாச்சா?” என ஒரு பெரியவர் மேலிருந்துக் கேட்டார்
என் அறையிலிருந்து மூன்று அறை தள்ளியுள்ள அறையில் தான் தமது மகன் குடும்பத்தாருடன் தங்கியிருந்தார் அவர்
“இப்பவே வாங்கிட்டு வர்றேன் தாத்தா” என்றபடி உணவகம் நோக்கிச் சென்றான்
இவனிடம் பேசுவதில் பயன் ஏதுமில்லை என உணர்ந்தேன். ருசிகண்ட பூனை நிலையில் உள்ளவனிடம் என் அறிவுரையெல்லாம் செல்லுபடியாகாது என தோன்றியது
கதையின் கடைசி களத்தேடலுக்காக குன்னூர் தேயிலைத் தோட்டம், தொழிலாளர்கள், அவர்கள் வாழ்வியல், பழக்கவழக்கங்கள் குறித்து அறிய நினைத்து டிரைவரிடம் முன்னமே கூறியிருந்ததால், அவர் காலையிலேயே வந்துவிட, குன்னூருக்குப் பயணித்தேன்.
ரம்மியமான அச்சூழலில் மனம் மயங்கியது. எல்லாத் தகவல்களையும் சேகரித்தப் பின் மாலை மீண்டும் ஊட்டிக்குப் பயணம்
சென்னை திரும்ப இன்றிரவு ரயில் ஏற வேண்டும் என்ற எண்ணத்துடன் பயணம் செய்தேன்
வழிநெடுகப் பரவியிருந்த இயற்கையின் வர்ண ஜாலங்களை ரசித்தபடி பார்வையை இரு மருங்கிலும் சுழலவிட்டேன்.
கார் அருகே சிறுவன் ஒருவன் சைக்கிளில் வேகமாகச் சென்றுக் கொண்டிருந்தான். அவன் சாயல் எனக்கு ரமேஷை நினைவூட்டியது.
ஆனால் இந்த பையன் பள்ளிச் சீருடையில் இருந்ததால் அவனாய் இருக்க முடியாது என தோன்றியது. அவன் எங்கே இந்நேரம் இங்கே? அவன் தனது கைடு வேலையைக் கச்சிதமாக செய்துக் கொண்டிருப்பான், அவர்கள் அளிக்க இருக்கும் கணிசமான சன்மானத்திற்காக.
எனது ஆவலைப் பூர்த்தி செய்யும் விதமாக, எங்கள் காரை நகர விடாமல் முன் சென்ற வாகனங்கள் எல்லாம் அணிவகுத்து நின்றன.
பெரிய மரம் ஒன்று முறிந்து குறுகலான அந்த வழித்தடத்தை மறித்துக் கொண்டிருந்ததால் நிகழ்ந்த சிறு போக்குவரத்து நெரிசல்.
வாகன ஓட்டிகள் அனைவருமே சேர்ந்து மரத்தை அப்புறப்படுத்தத் தொடங்கினர். எங்களை முந்திக் கொண்டுச் சென்ற சைக்கிள் சிறுவனும் தன் பயணம் தடைப்பட்ட தவிப்புடன் அங்குமிங்கும் அலைபாய்ந்த கண்களுடன் நின்றிருந்தான்.
நான் வண்டியிலிருந்து இறங்கி வண்டிகளூடே நடந்து சென்று அவனுக்கு முன்புறமாக நகர்ந்தேன். அவன் அருகிலிருந்தவருடன் பேசிக் கொண்டிருந்ததால் என்னைக் கவனிக்கவில்லை.
நான் நினைத்தது போல், அவன் ரமேஷ் தான். என் ஊகம் ஜெயித்ததில் மனம் திருப்தி அடைந்தது. ஆனால் கேள்வி பிறந்தது.
இவன் ஏன் இங்கே? வேலை நேரத்தில், அதுவும் பள்ளிச் சீருடையில்… மனம் குடைந்தது விடையறியும் ஆவலில்
மீண்டும் வண்டியில் ஏறி, செல்லுமாறு டிரைவரிடம் கூறினேன். சைக்கிள் அருகில் எங்கள் வண்டி நின்றது.
நிலைமை சரியாகி வண்டிகள் நகரத் தொடங்கியதும், ரமேஷ் தான் முதலில் வேகமெடுத்தான். டிரைவரிடம் முன்பே கூறியிருந்ததால், அவரும் அவனைப் பின் தொடர்ந்து காரை ஓட்டினார்.
என் கண்கள் அவனிடமிருந்து விலகவில்லை. அவன் செல்லும் இடத்தில் அவனைக் கையும் களவுமாகப் பிடிக்க வேண்டும் என மனம் முனைந்தது.
நிச்சயம் தவறான நோக்கம் தேடித்தான் அவன் பயணம் என்ற திண்ணமான எண்ணமே அவனைப் பின்பற்ற செய்தது.
அவன் வளைவுகளிலும் சரிவுகளிலும் மிக வேகமாக முந்திச் சென்ற போது மனம் பதறியது. ஆனால் மிகவும் பழக்கப்பட்டவன் போல வண்டியை செலுத்திய போது, இது மாதிரியான பயணங்கள் அவனுக்கு வழக்கமானவை எனத் தோன்றியது.
முடிவாக நாங்கள் எங்கள் பயணத்தை நிறுத்தியது, ஊட்டி அரசு மருத்துவமனை முன்பு. தான் கையோடுக் கொண்டு வந்திருந்த பையோடு உள்ளே சென்றான் ரமேஷ்
அவனைப் பின்தொடர்ந்து நான். ஜெனரல் வார்டுக்குள் சென்ற அவன் பார்வை இடது வரிசைப் படுக்கையில் இருந்த பெண்மணியிடம் சென்றது.
அவனைக் கண்டதும் முகம் மலர்ந்தார் அந்த அம்மையார். முகஜாடை அவனது தாயாய் இருக்கக்கூடும் என எனக்கு உணர்த்தியது.
“ரமேஷா… வாப்பா தம்பி, என்ன வேர்க்குது உனக்கு? இப்படி உக்காரு.” என்றபடி எழுந்து சாய்ந்து அமர்ந்தார் ரமேஷின் தாயார்.
தன்னருகில் அமர்ந்த ரமேஷின் தலையை வாஞ்சையுடன் கோதினார். வியர்த்திருந்த அவன் முகத்தை, தம் புடைவைத் தலைப்பால் மிருதுவாகத் துடைத்தார்.
கூச்சத்தால் நெளிந்த ரமேஷின் முகத்தில் தெரிந்த பாசமும் குழந்தைத்தனமும் மனதை நெகிழ்த்தியது.
அருகில் இருந்த பாட்டிலை கொடுத்து அவனை தண்ணீர் அருந்தச் செய்ததும்,”கருணாவுக்கு ஃபீஸ் கட்டணும்னு சொன்னியே. பணம் கிடைச்சுதா? அப்படி கிடைக்கலன்னா, நம்ம பார்வதியக்காகிட்ட வேணும்னா கேட்டுப்பாரு. அந்தக்கா மட்டும் தான் நமக்கு பணம் கொடுக்கும். பவி ஒழுங்கா சாப்பிடறாளா? அடம் பண்ணாலும் பாட்டிக்கிட்ட சொல்லி அவளுக்குப் புடிச்ச மாதிரி பண்ணித் தர சொல்லு.
ஆமா, உனக்கு இன்னிக்கு டெஸ்ட் இருக்குனு சொன்னியே. நல்லா எழுதுனியா? இந்த பத்தாம் கிளாஸ் மட்டும் நீ பாஸ் பண்ணிட்டீன்னா, நம்ம ஆத்தாக்கு பொங்க படையல் போடறேனு வேண்டியிருக்கேன்” அதிகம் பேசியதால் மூச்சிறைக்க இருமினார் அப்பெண்மணி
“பையனப் பாத்தவுடனே எங்கிருந்து தான் தெம்பு வருதோ இந்தம்மாவுக்கு. தம்பி, நீயும் நிறைய பழம் வாங்கி வர்ற. ஆனா உங்கம்மா எங்க சாப்பிடுது? சுத்தியிருக்கிறவங்க எல்லாருக்கும் கொடுத்திடுது,எனக்கும் தான்” என்றபடி அந்த அம்மாவின் உடல்நிலையை பரிசோதித்தார் அப்போது அங்கு வந்த டியூட்டி நர்ஸ்.
“அம்மாவுக்கு இப்ப பரவால்லியாக்கா?” கவலையோடுக் கேட்டான் ரமேஷ்.
அந்த முகம் எனக்கு புதியதாக இருந்தது. எப்பொழுதும் புன்னகையுடனும் சுட்டித்தனத்துடன் விசில் பாட்டென வளைய வரும் முகத்தில், நிஜமான அக்கறையும் வயதுக்கு மீறிய பொறுப்புணர்வும் கண்டேன்
“முன்னைக்கு இப்ப பரவாயில்ல தம்பி. நீ முதல்ல இவங்கள கூட்டி வந்தப்ப எவ்ளோ சோகையா இருந்தாங்க, இப்ப நல்லா தேறியிருக்காங்க. பெரிய டாக்டர் வந்ததும் பேசிட்டு இவங்கள வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடு.
ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவையாவது ஏதாவது உடம்பு பிரச்சனைனு நீயும் கூட்டிட்டு வர்ற. உடம்பு சரியானவுடனே முடியாம வேலைக்குப் போய் திரும்பவும் இங்க வராங்க.
அதனால, பழையபடி இவங்க தோட்ட வேலைக்குப் போறேன்னு சொன்னா, வீட்டுக்குள்ள வச்சிப் பூட்டிடு. நல்லா ஓய்வெடுத்து சத்தா சாப்பிட்டாங்கன்னா இங்க வர வேண்டிய அவசியமே இல்ல” என்றபடி அடுத்த நோயாளியை பரிசோதிக்கச் சென்றார் நர்ஸ்.
நடந்த அனைத்தையும் கேட்டுக் கொண்டு இருந்த நான், ரமேஷ் முன் சென்றேன்
என்னைக் கண்டதும் கொஞ்சம் அதிர்ந்த ரமேஷ், சமாளிப்பாக புன்னகைத்து, “வாங்க சார், இவங்க தான் என் அம்மா” என்றான்
நான் என்னை எப்படி அறிமுகப்படுத்திக் கொள்வது என எண்ணிய போதே, “உன் கிளாஸ் மாஸ்டரா?” எனக் கேட்டார் அவன் தாயார்
என் தோற்றம் அவருக்கு அத்தகைய அபிப்ராயத்தை அளித்திருக்கும் என உணர்ந்து, சூழலை உணர்ந்து மறுக்காமல் ஆமோதித்தேன்
நன்றியுடன் என்னைப் பார்த்த ரமேஷ், “உக்காருங்க சார்” என்றான் அருகில் இருந்த பெஞ்சைக் காண்பித்து
“என் பையன் நல்லாப் படிக்கிறானா சார்? எனக்கு வேலையே சரியா இருந்ததால இவன் அஞ்சாவது வகுப்புல இருந்தப்பல இருந்து பள்ளிக்கூடம் வர்றதே விட்டுட்டேன். பசங்க மூணும் படிப்பில கெட்டிங்கிறதால அவங்க படிப்புல நான் தலையிடறதில்ல.
இவங்க அப்பாவுக்கு படிப்பு வாசனையும் கிடையாது, குடும்பத்து மேல அக்கறையும் கிடையாது. குடிச்சே கிடைக்கிற வருமானத்தையெல்லாம் கரைப்பாரு. அவர நம்பறதையே நாங்க விட்டுட்டோம். என் நம்பிக்கையே எம் பசங்க தான்.
இதோ, மூத்தவன் ரமேஷ் ரொம்ப பொறுப்பான புள்ள. ஏதோ வேலைக்குப் போயி வருமானம் சேர்த்து வீட்டையும் கவனிச்சிக்கிட்டு, தன் படிப்பையும் விடாம பார்த்துக்கிறான். நீங்க தான் சார் அவன் படிப்புக்கு உதவனும். அவன் பாடத்தில சந்தேகம்லாம் கேட்கிறானா? அதுங்க ரெண்டும் தனியார்ல படிக்குதுங்க. இவன் சின்னதுலேர்ந்து அரசுப்பள்ளில தான்” என்றார் மூச்சிரைக்க
“நீங்க ஏம்மா கவலைப்படறீங்க? ரமேஷ் ரொம்ப நல்லாப் படிக்கிறான்’ம்மா. நீங்க எதிர்ப்பார்க்கிற மாதிரி நிறைய மார்க் எடுத்துப் பாஸ் பண்ணிடுவான். நீங்க உங்க உடம்ப பார்த்துக்கோங்க. இந்த மாதிரிப் பொறுப்பான மகன் இருக்கும் போது உங்க மத்த ரெண்டுப் பசங்க பத்தின கவலையே உங்களுக்கு வேணாம்” என ஆறுதலாய் கூறினேன்
“அம்மா, நான் கொண்டு வந்திருக்கிற பழங்க எல்லாத்தையும் இன்னைக்கே நீங்க சாப்பிட்டு முடிச்சிடணும். வீட்டப் பத்திக் கவலப்படாதீங்க, கருணா பவித்ராவ நான் பார்த்துக்கிறேன். நாம நாளைக்கே வீட்டுக்குப் போயிடலாம்” என பெற்றவளை உற்சாகப்படுத்தினான் ரமேஷ்
அவன் பேச்சைக் கேட்டு மகிழ்ந்தவர், தலையணைக்கடியில் இருந்து ஒரு பொட்டலத்தை எடுத்தார்
“பக்கத்து பெட்டுல இருக்கற அம்மாவோட பொண்ணு குங்கும பிரசாதம் கொண்டு வந்தது. இங்க வா வெச்சு விடறேன்” என அவனை அருகில் அழைத்து, ஆசையாய் வைத்து விட்டார்
“சரிம்மா, நான் நாளைக்கு வர்றேன். நல்லா தூங்கணும். மாத்திரையெல்லாம் சரியாப் போட்டுக்கணும்” என்றவன், தன் அன்னையிடம் கையசைத்துவிட்டு நகர்ந்தான்
நானும் அவரிடம் விடைப்பெற்றுக் கிளம்பினேன்
அக்கணம், அவன் கண்களில் பனித்திருந்த நீர்த்துளிகள், முத்துக்களாய் பிரகாசித்தது
அந்த “சிந்தும் விழி முத்துக்கள்” அவனைப் பற்றிய எனது அனுமானத்தை, தனது பிரகாசத்தால் தகர்த்தது
“மின்னுவதெல்லாம் பொன்னல்ல” என்பார்கள். ஆனால் என் கண் முன்னே மின்னுவது சொக்கத் தங்கமே என உணர்ந்தேன்
“ரமேஷ், இந்த சின்ன வயசில எவ்வளவு பொறுப்புணர்வோட இருக்க. உன்னை பணத்தச் சேர்க்கிற பேராசைக்காரனா, ஊதாரியா, பணத்துக்கு அலையறவனா நினைச்சேன். உன் பணத் தேவைக்கான காரணம் தெரிஞ்சப்புறம், என் மனசுல நீ பெரிய மனுஷனா நிக்கிற.
உன் அப்பா வழித்தவறி நடக்கிறதால, குடும்ப சுமய நீ தாங்கறத நான் புரிஞ்சிக்கிட்டேன். ஆனா, உன் அம்மா நீ படிச்சுட்டே வேலை செய்யறதா நினைச்சுட்டுருக்காங்க இல்லையா? அதுக்கு தான் அவங்க முன்னாடி யூனிபார்மோட நின்னியா?
உண்மைத் தெரியவரும் போது அவங்களுக்கு எவ்ளோ ஏமாற்றமா இருக்கும். அவங்க ஆசைப்படி நீ ப்ரைவேட்டா பத்தாவது பரீட்சை எழுதிப் பாஸ் பண்ணனும். நீ விரும்பினா, என்னோட சென்னைக்கு வா. அங்க வேலைப் பார்த்துட்டே படிக்கலாம், இப்படி பணத்த எதிர்பார்த்து எல்லார்கிட்டயும் கை நீட்டி நிக்க வேணாம்” என்றேன்
“அண்ணா! நான் பணத்துக்காக மட்டும் இந்த வேல செய்யல. ஒரு நிமிஷம் கூட நிக்காம நான் சுத்தி சுத்தி வேல செய்ய பணம் மட்டும் காரணமில்ல. என் கவலையை மறக்கிற இடமா நெனச்சுத் தான் அங்க நான் வேல செய்றேன்.
எல்லாரும் சந்தோஷமா இருக்கத் தான் ஊட்டிக்கு வர்றாங்க. ரெண்டு வருஷமா இங்க வேலப் பார்த்ததிட்டிருக்கேன். மனுஷங்க குணாதிசயம், அவங்க எதிர்பார்ப்பு எல்லாமே எனக்கு அத்துபடி.
அதனால அடுத்தடுத்து வர்றவங்களோட எதிர்பார்ப்ப அவங்க சொல்றதுக்கு முன்னாடியே செஞ்சி அவங்க ஆசையை பூர்த்தி செய்றதுல எனக்கும் திருப்தி அவங்களுக்கும் சந்தோஷம்
அதனாலேயே அவங்க எல்லா வேலைக்கும் என்னையே கூப்பிடறாங்க. உங்க எதிர் அறைல பார்த்த அந்த ஹிந்திக்காரங்க, பக்கத்து ரூம் தாத்தா எல்லோருமே போன வருஷ சீசனுக்கு வந்தவங்க தான்.
என்னை மாதிரி நிறையப் பசங்க அங்க இருந்தாலும், என்னைத் தான் கூப்பிடுவாங்க. பணம் நிறையக் கொடுக்கிறாங்க தான். இருந்தாலும் அவங்களுக்கு இந்த உதவியெல்லாம் செய்யும் போது என் வீட்டுபிரச்சனை கவலையெல்லாம் மறந்துடுது” என்றவனை இடைமறித்து
“எல்லாம் சரி. உனக்கு வேண்டிய பணமும் கிடைக்குது. மனதிருப்தி, சந்தோஷம் இந்த வேலை தருதுனு சொல்ற. ஆனா, உன் அம்மாவோட ஆசையை நினைச்சுப் பாரு. உன் படிப்ப நீ தியாகம் பண்ணி தான் அவங்க எல்லாரும் வாழ வருமானம் கொண்டு வர்றனு தெரிஞ்சா, அவங்களுக்கு அது குற்ற உணர்வத்தான குடுக்கும்.
ஒரு கண்ணுல வெண்ணெயும் ஒரு கண்ணுல சுண்ணாம்பும் வெக்க எந்த தாயும் விரும்ப மாட்டாங்க. தாயன்பு மட்டும் தான் பாகுபாடு காட்டாதது. உன் தியாகத்தால நாளைக்கு உன் தம்பி என்ஜினியராவும் உன் தங்கை டாக்டராகவும் ஆனா, உங்கம்மா சந்தோஷப்படுவாங்க. ஆனா நீ, இதே நிலைமையில் தான் இருக்க முடியும். அப்ப உன்னைப் பத்தி உங்கம்மா எவ்ளோ கவலைப்படுவாங்க?
உன் எதிர்காலம் பத்தின பயம்தான் அவங்களுக்கு வரும். நீ நிறைய பணம் சம்பாதிக்கலாம். எவ்ளோ நாளைக்கு? உன் உடம்புல தெம்பிருக்கிற வரைக்கும் தான். சீஸன நம்பியிருக்கிற வருமானம் நிலையான வருமானமாகுமா?
அந்தஸ்துல உயர்ந்த பின்னாடி உன் தம்பி, தங்கை உன்னை மதிப்பாங்களா? நீ அப்போ தலைகுனிஞ்சு நிக்கறதப் பார்த்து உன் அம்மா எவ்வளவு வருத்தப்படுவாங்க. உன் படிப்பும் எதிர்காலமும் வீணானதை நினைச்சு ரொம்ப வேதனைப்படுவாங்க.
உன்னோட இன்னய பணத்தேவை எனக்குப் புரியுது. உன் அம்மாவோட மருத்துவ செலவு, தம்பி தங்கை படிப்பு செலவு, குடும்ப செலவு எல்லாம் தான் நீ இப்படி வேல செய்யக் காரணம்னு புரியுது. அதனால உன்னை நான் வேலய விட சொல்லல, படிப்பை விடாதனு தான் சொல்றேன்.
பிரைவேட்டா பத்தாவது, பனிரெண்டாவது எழுதி பாஸ் பண்ணு, அதுக்கான பணத்தை நான் குடுக்கறேன். உனக்குப் படிப்புல ஆர்வம் இருக்கு தான? நான் திரும்ப இங்க வருவேனோ இல்லையோ, என் போன் நம்பர் தர்றேன். என்ன உதவி வேணும்னாலும் கேளு” என்றதும், கண்ணில் நீர் திரையிட என் கைகளை பற்றிக் கொண்டு, மகிழ்வுடன் தலையாட்டினான் ரமேஷ்
அன்றிரவு நிலவு ஒளிர்ந்த நேரத்தில், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் நின்றிருந்தோம் நானும் ரமேசும்
எனது உபதேசம் அவனுள் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் ரயிலில் ஏறி அமர்ந்தேன்.
அதே மாறாத புன்னகையுடன் எனக்கு விடைகொடுக்கக் கையசைத்த ரமேஷின் முகத்தில் தெரிந்த தெளிவு, அவனது விடியலை எனக்கு உணர்த்தியது
ரயில் வேகமெடுக்கத் தொடங்கியதும், மெல்ல மெல்ல புள்ளியாய் மறையத் தொடங்கினான் ரமேஷ்
உண்மையில், இந்த பயணம் எனக்கொரு புதிய கதைக் களத்தை வழங்கியது என்றாலும், வாழ்வின் நிதர்சனத்தை மேலும் உணரும் வாய்ப்பை எனக்களித்தது
ரயிலோட்டத்தினூடே எழுந்த என் மனவோட்டத்தில், கடந்து சென்ற இயற்கையின் அங்கத்தினர், எனது தேடலின் விதைக்கு வாழ்வியல் பயிறை அறுவடை செய்தனர்.
ஆம்… இயற்கையின் சமன்நிலை, வானம், பூமி, தாவர, செடி கொடி, பூச்சி தொடங்கி, பறவை விலங்கினங்களில் மேலோங்கிக் காணப்படுகிறது
ஆனால் இயற்கையின் ஆகச் சிறந்த படைப்பான மனிதனில் மட்டும், இந்த சமநிலை விடுபட்டிருப்பது படைத்தவனுக்கே விந்தையான விடையறியவொண்ணா புதிர்
பிறப்பையும் இறப்பையும் தவிர, இடைப்பட்ட வாழ்வில் மனிதரில் தான் எத்தனை வேறுபாடு.
மனித இனத்தின் ஒற்றுமையை வேரறுக்கும் கொடுங்கோலன் பணம் என்ற பேர் கொண்ட அரக்கன். செல்வந்தன், வறியவன் என்ற வர்க்கத்தை நிர்ணயித்தவன். இதில் நடுத்தரன் என்றொரு பகுப்புண்டு
வழிவழி வந்த பெருஞ்செல்வ திரட்சியால், ரெடிமேட் வாழ்க்கை நடத்தி தன்னை என்றும் வெற்றியாளனாய் கருதுகிறான் பணம் படைத்தவன்
செல்வக்கோட்டை எனும் எட்டாத உயரத்திற்கு தனது உழைப்பைக் கொட்டிக் கொண்டு, நனவாகா கனவுகளுடன் செல்வந்தனாகவும் வறியவனாகவும் இரட்டை வேடமிட்டு நாட்களைக் கடத்தி, திரிசங்கு சொர்க்கத்தின் இன்பத்தில் திளைப்பதாய் கற்பனை வாழ்வாற்றுகிறவனே நடுத்தரன்.
தனக்கென ஒரு வட்டமிட்டு, தனது பிறப்பை தலையெழுத்தென சாக்கிட்டு, வந்து போன நாட்களின் வழி, இனிவரும் நாட்கள் என்ற சாயலில் தன் வாழ்வைக் கழித்து, துன்பமே இன்பமாய் பழகிப் போகிறான் மூன்றாமவன். இவரின் உழைப்பின் சுவை மிகுப்பார் முதலிருவர்.
ரமேஷ் முதலானோர் வாழ்க்கை வட்டத்தின் சுழற்சியில் மேனோக்கி வர முயன்று உச்சி எட்ட வேண்டும். கூரையே வாழ்வாக எண்ணும் கோழியின் கோழைத்தனம் விட்டு, வானாளும் ராஜாளி போல் புகழ் பெற வேண்டும்.
அதற்கு கல்வி ஒன்றே தலைசிறந்த ஆயுதம் ஆகும். ஒருவன் உட்புகுந்த கல்வி, கல்லில் விழுந்த உளியின் கூர்செதுப்பு. அது அழியாதது. மறையாதது ஆழ்ந்த கறைப் போல.
அதன் விளைபயன் ஒருவனை வானுச்சிக்கு இட்டுச் செல்லும். கல்வியாளனின் வளர்ச்சி, எவராலும் தடுக்க முடியாதது.
பிறப்பின் தண்டனையாகத் தன்னைக் கருதும் ஏழையின் தலைவிதியை, அறிஞன் என்னும் இயற்கையின் நான்காம் பகுப்பாளனால் மட்டுமே மாற்றி அமைக்க இயலும்
அதனாலேயே அவன் தலையெழுத்தைக் கல்வி மாற்றட்டும் என அவனை அவ்வழி ஆற்றினேன். எல்லா ரமேஷ்களுக்கும் இவ்வழி பொருந்துமோ என்னவோ
ஆனால், தனது குடும்ப வறுமை படிப்புக்குத் தடை போடும் தாளாக எண்ணி மறுகும் மனம், அதே வறுமையை நெம்புகோலாய் எண்ணி உத்வேகம் கொள்வானெனில், நிச்சயம் அவன் தாயின் கனவை நனவாக்கி வாழ்வில் வளம் பெறுவான்
அதுவே சமுதாய நலம் விழையும் எழுத்தாளனாக, தம்பி நலன் விரும்பும் சகோதரனாக எனது விருப்பம்.
ரமேஷ் விழிகள் சிந்திய முத்துக்கள், அவன் அன்னையின் கழுத்தை அலங்கரிக்கும் மாலையாய் ஒரு நாள் ஒளிரும். அவன் கனவுகள் எல்லாம் நனவாகும்
புதியதோர் உலகம், இளையோர் வசமாகட்டும்!!!
(முற்றும்)
“சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇
எழுத்தாளர் சஹானா கோவிந்தின் நாவல்கள் மற்றும் சிறுகதைத் தொகுப்புகளை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇
அருமையான படைப்பு . கல்வியின் சிறப்பை உணர்த்தும் கதை . வாழ்த்துகள்.
அருமையான படைப்பு . கல்வியின் சிறப்பை உணர்த்தும் கதை . வாழ்த்துகள்.
தங்களது கருத்துக்கு மிக்க நன்றி!
தொடர்ந்து தங்களது ஆதரவை எனக்கு அளியுங்கள் தோழி!
தங்களது கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்து தங்களது ஆதரவை எனக்கு அளியுங்கள் தோழி!!
நல்ல கருத்துள்ள கதை. கெட்டுப் போகச் சந்தர்ப்பங்கள் கிடைத்தாலும் ரமேஷ் தொடர்ந்து நல்லவனாகவே இருக்கிறான். வாழ்க்கையிலும் அவன் முன்னேறப் பிரார்த்திப்போம்.
மிக்க நன்றி உங்கள் மறுமொழிக்கு