“அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய்
ஆனந்த பூர்த்தியாகி
அருளொடு நிறைந்தெது தன்னருள் வெளிக்குள்ளே
அகிலாண்ட கோடியெல்லாந்
தங்கும் படிக்கிச்சை
வைத்துயிர்க்குயிராய்த்
தழைத்ததெது மன வாக்கினில்
தட்டாமல் நின்றதெது சமய கோடிகளெலாந்
தந்தெய்வம் எந்தெய்வமெந்
றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும்
நின்றதெது
எங்கணும் பெருவழக்காய்
யாதினும் வல்லவொரு சித்தாகி யின்பமாய்
என்றைக்கு முள்ளதெதுமேல்
கங்குல்பக லறநிறை எல்லையுள
தெதுவது
கருத்திற் கிசைந்ததுவே
கண்ட வெலாமோன வுருவெளிய தாகவுங்
கருதியஞ் சலிசெய்குவோம்”
- தாயுமானவர்
அகன்ற இந்த பேரண்டத்தில், எங்கும் பிரகாசமாய் ஜோதி சொரூபமாய், நிறைந்து இருப்பவனே கடவுள். மனித சக்திக்கு மீறிய ஒரு சக்தியாக,கடவுளைப் பார்க்கிறோம். அவன் ஜோதிப் பிழம்பாய்,பார்க்கும் மனிதர்களின் தெய்வமாய் விளங்குகிறான்.
திருக்கைலாயம்
கண்களை மூடியிருந்த சிவபெருமானிடம், “ஏன் இந்த ஆழ்ந்த சிந்தனை?” என்று கேட்டபடியே அருகில் வந்தமர்ந்தார் பார்வதி தேவி.
“பூலோகத்தில் நடக்கும் அட்டகாசங்களை பொறுமையாக பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்றார் சிவபெருமான்.
“என்ன தான் நடந்து கொண்டிருக்கிறது?” என்றார் பார்வதி.
“இத்தனை நாள் பூலோகத்தில் மக்கள் ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தாலும், எல்லோரும் ஒற்றுமையாக, சந்தோஷமாக சேர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தனர்.
ஆனால் இப்போது தெய்வங்களே இல்லை என்று மனித வடிவில் ஒரு அரக்கர் கூட்டமும், அவரவர் தெய்வங்களே உயர்ந்தது என்று ஒரு அரக்கர் கூட்டமும், மனிதர்களுக்குள் சண்டையை ஏற்படுத்தி, மனிதத் தன்மையை மக்களிடையே குறைக்கப் பார்க்கின்றனர்” என்றார் சிவபெருமான்.
இருவரும் பேசிக் கொண்டிருக்க, இடையில் “நாராயணா, நாராயணா” என நாரதரின் குரல் கேட்டது
“கலகத்தை மூட்டி விட சரியான நேரத்தில் தான் வந்திருக்கிறாய் நாரதா, பேசிக் கொண்டிருந்ததை எல்லாம் ஒட்டு கேட்டுக் கொண்டே வந்தாயல்லவா?” என்றார் சிவபெருமான்
“நான் கேட்க வேண்டுமென நீங்கள் நடத்தும் நாடகம் தானே ஸ்வாமி இது. பூமியில் இப்போது நடக்கும் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு? மக்கள் எப்போது நிம்மதியடைவார்கள்?” என நாரதர் கேட்க
“அனைத்து தெய்வங்களும் ஒன்று தான் என புரிய வைக்க நானும் எத்தனையோ நாடகங்களை நடத்திக் கொண்டு தான் இருக்கிறேன்.
மனிதர்களின் பாவ புண்ணிய கணக்கை நிர்வகிக்கும் பொறுப்பான டேட்டா பேஸ் டிபார்ட்மெண்ட் ஹெட்டாக சித்ரகுப்தரையும், மனிதர்களுக்குள் இருக்கும் தெய்வ பக்தியை போக்கும் மனித ரூபத்தில் இருக்கும் அரக்கர்களை நரகத்திற்கு கொண்டு வரும் பொறுப்பினை சனீஸ்வரனுக்கும் ஆணையிட்டு இருக்கிறேன்
மற்றபடி எல்லா ஆத்மாக்களும் இறந்த பிறகு திரிசங்கு சொர்க்கத்தில் புடம் போட்ட தங்கமாக மாறி பின்பு மோட்சத்தை அடைவார்கள். இனி பிறக்கப் போகும் குழந்தைகள் தேவ குணங்களுடன் பிறந்து பூலோகம் செழிக்கும்” என்றார் சிவபெருமான்
பூலோகத்திற்கும், சொர்க்கத்திற்கும் இடையே இருக்கும் இடம் தான் திரிசங்கு சொர்க்கம். டெக்னாலஜியில் பூமியைவிட கோடானு கோடி மடங்கு முன்னேறி இருந்தது திரிசங்கு சொர்க்கம்.
எல்லா மனிதர்களும் இறந்தவுடன் சொர்க்கத்திற்கு நேராக செல்வதில்லை. அவரவர் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப ஒவ்வொருவரும் சொர்க்கம் அல்லது நரகம் செல்வது தீர்மானிக்கப்படும்.
மனிதன் இறந்த பிறகு, சில படிநிலைகளை கடந்து தான் சொர்க்கத்தைப் அடைகிறான்
திரிசங்கு சொர்க்கத்தில் கோடானு கோடி பேர் இருந்தாலும் எல்லோரும் ஒரே நேரத்தில் கண்களுக்கு புலப்படுவதில்லை.
யாரை நம் மனதில் பார்க்க நினைக்கிறோமோ அவர்களை மட்டும் பார்க்கும்படியான இல்யூஷன் டெக்னாலஜியை கடைபிடிக்கிறார்கள்.
எல்லோரும் தங்குவதற்கு என்று தனித்தனி வீடுகளோ அபார்ட்மெண்ட்களோ திரிசங்கு சொர்க்கத்தில் கிடையாது. திரிசங்கு சொர்க்கத்தில், எல்லோருக்குமாக ஒரே சமத்துவமான வீடு.
நாற்புறம்சுவரும், வாசற் கதவுகளும், ஜன்னல்களும் , மேற்கூரையும் இல்லாமல் ஏகாந்தமாய் ஆகாய வளிமண்டல வீடு.
மழை பெய்யும். ஆனால் ஆத்மாக்களின் மேலே மழைத்துளி விழாது. மேற்கூரை இருப்பது போன்று தோன்றும். ஆனால் மேற்கூரை இருக்காது.
திரிசங்கு சொர்க்கத்தில் இருந்து சூரியனைப் பார்க்க முடியும். ஆனால் சூரிய வெப்பத்தினை உணர முடியாது.
நீங்கள் உட்கார நினைத்தால் மரத்திலான இருக்கைகள் உங்கள் கண்ணுக்குப் புலப்படும். உட்கார்ந்து கொள்ளலாம்.
படுக்க நினைத்தால் மரத்திலான கட்டில்கள் கண்ணுக்குப் புலப்படும். நிம்மதியாகப் படுத்து உறங்கலாம்.
ஆனால், கண் மூடி தூங்கி காலை எழுந்தவுடன் படுக்கையை விட்டு நீங்கள் எழுந்தால், படுத்து தூங்கிய மரக்கட்டில் உங்கள் கண்ணுக்கு புலப்படாது. அந்தரத்தில் இருப்பீர்கள்.
“என்ன ஓய்…. கொஞ்ச நேரம் காலாற நடந்து போய்விட்டு வரலாமா?” என சுந்தரம் தாத்தா, நடராஜன் தாத்தாவை மனதில் நினைத்துக் கொள்ள, கண் முன்னே வந்து நின்றார் நடராஜன் தாத்தா
நாம் ஒருவருடன் பேச ஆசைப்பட்டால், நாம் பேச விரும்பும் நபரின் முன்பு ஒரு கம்ப்யூட்டர் திரை தோன்றும். அதில் பேச அழைத்த நபரின் விவரங்கள் வரும். அதன் கீழே, விருப்பம், விருப்பமில்லை என இரண்டு பட்டன்கள் இருக்கும்.
விருப்பம் என்ற பட்டனை நம் நண்பர் அழுத்தினால், உடனே அவர் நம் கண்முன்னே வந்து நிற்பார். விருப்பமில்லை என்ற பட்டனை நண்பர் அழுத்தினால், அழைப்பு விடுத்த நம் கண்முன்னே ஒரு கம்ப்யூட்டர் திரை தோன்றி, “உங்களது அழைப்பு நிராகரிக்கப்பட்டு விட்டது”என்ற மெசேஜ் நமக்கு கண்முன்னே டிஸ்ப்ளே ஸ்க்ரீனில் தெரியும். வர முடியாத காரணத்தை விளக்குவதற்கும் ஆப்ஷன் இருந்தது.
திருவல்லிக்கேணி சுந்தரம் தாத்தா இறந்து ஐந்து ஆண்டுகள் ஆகின்றது. நடராஜன் தாத்தா இறந்து மூன்று மாதங்களே ஆகிறது.
இறந்த பின்பும் திரிசங்கு சொர்க்கத்தில் மனைவி, மகன், மருமகள் மற்றும் பேரன் பேத்திகளை நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டிருந்த நடராஜன் தாத்தாவை பார்க்க, ஏனோ சுந்தரம் தாத்தாவிற்கு மிகவும் பரிதாபமாக இருந்தது
சுந்தரம் தாத்தா போலவே நடராஜன் தாத்தாவும் திருவல்லிக்கேணி ஊரைச் சேர்ந்தவர் என்பதால் ‘ஊர்ப்பாசம்’ கூட இருக்கலாம்.
“நடராஜா, ஒண்ணும் கவலைப்படாத. போகப் போக இந்த வாழ்க்கையும் பழகிடும். நாம இல்லாத வாழ்க்கையை நம்ம குடும்பம் வாழப் பழகிடுவாங்க. போகப் போக நீயே புரிஞ்சுப்ப” என அவ்வப்போது ஆறுதல்படுத்தினார் சுந்தரம் தாத்தா.
இருவரும் மனதில் பட்டதை வெள்ளந்தியாக பேசும் பழக்கம் உடையவர்களாக இருந்ததால், இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகமானது. எனவே தூங்கி எழுந்தவுடன் வாக்கிங் ஃப்ரெண்டாக மாறி விட்டார் நடராஜன் தாத்தா.
“நம் ஊர் போல தார் ரோடா இல்லாம, அந்தரத்திலயே நடக்கறது மொதல்ல கண்ணாடி மேல நடக்கறாப் போல பயமா இருந்தது. அதுக்கப்புறம், அட நம்ம தான் செத்துப் போய்ட்டோமே. இன்னொரு முறை கண்டிப்பா சாகப் போறதில்லனு உணர்ந்தப்புறம் தைரியமா நடக்க ஆரம்பிச்சேன் அண்ணா” என நடராஜன் தாத்தா வெள்ளந்தியாக கூற
“கொழந்த பொறந்ததும் உட்கார்ந்து, தவழ்ந்து, நடந்து, ஓடறது மாதிரி, மனுஷன் செத்தப்புறம் திரிசங்கு சொர்க்கம் வந்து செட்டறதும் ஒரு திரில் அனுபவமா தான் இருக்கு” என சிலாகித்தார் நடராஜன்
“திரிசங்கு சொர்க்கத்தில் நிறைய படிகள் இருக்கு. ஒவ்வொரு படியா நாம் கடந்து போனா தான் சொர்க்கத்த அடைய முடியும். அதற்கான வழிய மட்டும் தேடிக்கோ நடராஜா” என்றார் சுந்தரம் தாத்தா.
“இப்ப இப்ப தான் இங்க இருக்கிற ரூல்ஸ் கொஞ்சம் கொஞ்சமா தெரிய ஆரம்பிச்சுருக்குண்ணா. நீங்க தான் கொஞ்சம் எனக்கு விலாவரியா எடுத்துச் சொல்லுங்களேன்” என திரிசங்கு சொர்க்கத்தில் இருந்து சொர்க்கம் செல்வதற்கான ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷனை கேட்டார் நடராஜன் தாத்தா
“நீ கேக்கறது கரெக்டு தான் நடராஜா. இங்க இருக்கிற ரூல்ஸ் நன்னா தெரியத்துக்குள்ள மனுஷா நாம பண்ற அல்ப விஷயங்கள் இருக்கே… அப்பப்பா. நான் நிறைய முறை அந்த மாதிரி எல்லாம் மாட்டீண்டு, இப்பப்ப கொஞ்சம் கொஞ்சமா என்ன நானே சரி பண்ணீண்டு வரேன்” என்றார் சுந்தரம் தாத்தா.
“நீங்க மாட்டீண்ட ஒரு விஷயத்தை சொல்லுங்களேன்” என நடராஜன் தாத்தா ஆசையாக கேட்க
“அதை ஏண்டா கேக்குற” என தன் அனுபவத்தை நண்பருடன் பகிர்ந்து கொள்ள தயாரானார் சுந்தரம் தாத்தா.
“நம்ம பூலோகத்தில் இதுக்கு தான்னு இல்லாம எல்லாத்துக்கும் பொய் சொல்லிண்டே இருப்போம். ஆனா இங்க இருக்கற டெக்னாலஜி வேற லெவல்ல இருக்கும்.
நாம பொய் சொன்னா நம்ம தலைக்கு மேல சிகப்பு கலர்ல பல்பு எரியும். அதுக்கான காரணமும் லேப்டாப் டிஸ்ப்ளே போர்ட்ல வர்றாப்ல பிரிண்டட் பார்மட்ல வரும்.
இப்படித் தான் நான் செத்தப்புறம் திரிசங்கு சொர்க்கத்திற்கு வந்து, தூங்கி எழுந்தேன். என்ன இடம், என்ன நடக்கறதுனு ஒருகணம் தெரியாம முழிச்சேன். கொஞ்ச நேரம் நடந்துட்டு வரலாம்னு நடக்க ஆரம்பிக்க, எதிர்ல வந்த சில பேர் ‘சாப்பிட்டாச்சா’னு கேட்டாங்க. நீயா இருந்தா என்ன சொல்லுவ நடராஜா?” என சுந்தரம் தாத்தா கேட்க
“சாப்பிடலனு சொல்வேன் அண்ணா” என்றார் நடராஜன் தாத்தா.
“பொழச்சுப்ப” என்றவர், “நான் ஒரு பேச்சுக்காக, ‘ம்….. சாப்பிட்டாச்சு’னேன். உடனே என் தலைக்கு மேல் சுர்னு சுடறாப்ல இருந்துச்சு.
என் எதிர்ல இருந்தவங்க என் தலைக்கு மேல எதையோ பாத்து, அவங்க வெச்சிருந்த அட்வான்ஸ்டு மடிக்கணினில எதையோ டைப் செஞ்சாங்க. என்னனு புரியாம, டிஸ்பிளே போர்டுல என்ன வந்ததுனு கேட்டேன். ‘காலையிலிருந்து பச்சைத் தண்ணீர் கூட குடிக்கவில்லை, நன்றாக பொய் சொல்கிறான்’னு வருதுனு சொன்னாங்க
பொய் சொல்லாம இருந்து அடுத்த படிநிலையை அடையறது தான் திரிசங்கு சொர்க்கத்தின் முதல்பரீட்சைனு அப்புறம் தான் புரிஞ்சது. கேள்வி கேக்கறதுன்னே சொர்க்கத்தின் பணியாளர் குழு ஒண்ணு இருக்கும். அவங்களுக்குனு தனியா டிரஸ் கோடோ, யூனிஃபார்மோ கிடையாது.
பூலோக சீரியல்ல நாம் பாத்தது மாதிரி, தலைல இரண்டு கொம்பு, சுருட்டை முடி, கருப்பு ஸ்கர்ட்டும், ஸ்லீவ்லெஸ் டாப்ஸ்ஸும் இல்லாம சாதாரண மனுசங்கள மாதிரி தான் இருப்பாங்க
அவங்க கேக்கற கேள்விகளுக்கு நாம தப்பா பதில் சொன்னா, நம் தலைக்கு மேல் சிகப்பு நிறத்தில் பல்பு எரியும். சரியான காரணமும் டிஸ்பிளே போர்டில் ஃபார்மேட்டா வரும்.. கேள்வி கேக்கறவங்க நம்மளப் போல இறந்து வந்த ஆத்மாகளா இல்ல சொர்க்கத்தின் பணியாளர்களானு அனுமானிக்க முடியாது.
நாளின் இறுதில நம்ம கைல ஒரு டோக்கன் வரும். அதை எடுத்துப் பாக்கும் போது அதப் போடறதுக்கான மெஷின் நம்ம கண் முன்னாடி வரும். அதுல டோக்கனை போட்டா அன்னைக்கு நாம சொன்ன பொய்களின் எண்ணிக்கை தெரியும். என்னைக்கு அந்த எண்ணிக்கை பூஜ்ஜியம்னு வருதோ, அன்னைக்கு நாம திரிசங்கு சொர்க்கத்தின் இரண்டாவது படியை அடைவோம்.
இந்த டெக்னாலஜி சிஸ்டத்தின் தலைமை யார்னு கேட்டதுக்கு, சித்ரகுப்தன் தான்னு சொன்னாங்க. ஆனா டேட்டா என்ட்ரி ஹெட் வேலை மட்டும் தான் சித்திரகுப்தரோடது. டேட்டா பேஸில் குழப்பம் ஏற்படுத்தவோ, சிஸ்டத்தை மாத்தவோ சித்ரகுப்தரால முடியாது. எல்லாம் எம்பெருமான் சிவனின் வேலை” என சுந்தரம் தாத்தா கூறி முடிக்கவும்
“பெருமாளே, என்னை பொய் சொல்லாம காப்பாத்து” என நடராஜன் தாத்தா கன்னத்தில் போட்டுக் கொள்ள
“நீ உண்மையைப் பேசுவது உன்னிடமே இருக்கிறது” என கண் முன் தோன்றிய ஒரு கம்ப்யூட்டர் டிஸ்ப்ளே போர்டில் மெசேஜ் வந்தது.
ஒரு வாரத்திற்கு பின், “இப்ப தான் முழுக்க முழுக்க புனிதமான சொர்க்கத்திற்கு போறதுக்கான திரிசங்கு சொர்க்கத்துல இருக்கேன்னே உணர ஆரம்பிக்கிறேன். நம்மை நாம தூய்மை செஞ்சுக்க வேணுங்கற எண்ணமும் இப்பத் தான் வருது” என்றார் நடராஜன் தாத்தா
இதற்கிடையே, சுந்தரம் தாத்தா இறந்த திதி நாள் வந்தது. அன்று கண் விழித்து பார்த்த பொழுது, அவர் கையில் ஒரு டோக்கன் இருந்தது. திதி நாளன்று, திரிசங்கு சொர்க்கத்தில் உள்ளவர்களுக்கு, பூலோகத்திற்கு சென்று வர ஒருநாள் விசா வழங்கப்படும்
அந்த ஒரு நாளில் பூலோகம் முழுக்க சுற்றி பார்த்து விட்டு, திரும்ப திரிசங்கு சொர்க்கத்திற்கு வந்து விட வேண்டும். பூலோகம் விசிட் சென்று வந்ததும், பூலோகத்தில் தங்கள் அனுபவங்களை ஒரு ரிப்போர்ட்டாக சித்திரகுப்தருக்கு சப்மிட் செய்ய வேண்டும்
நல்ல பிள்ளைகளைப் பெற்றெடுத்து நம் பழக்க வழக்கங்களை சரியாக சொல்லிக் கொடுத்த பெற்றோராக இருந்தால், வருடத்திற்கு ஒரு முறை கொடுக்கும் திதி உணவு, வருடம் முழுவதும் அவர்களுக்கு திரிசங்கு சொர்க்கத்தில் அளிக்கப்படும்.
கையில் உள்ள டோக்கனை எடுத்து பார்க்கவும், கண்ணுக்கு முன்னால் வந்த மெஷினில் டோக்கனை போட்டார் சுந்தரம் தாத்தா. அடுத்த வினாடி, தான் வாழ்ந்த திருவல்லிக்கேணி வீட்டின் மேற்கூரையில் காகத்தின் ரூபமாக வந்து நின்றார்
வயது அறுபது ஆகியும், தன் அப்பாவின் வருஷத் திதியை மறக்காமல், ஒவ்வொரு வருடமும் புரோகிதரை வரவழைத்து, செய்ய வேண்டிய நியமங்களை சரியாய் செய்து கொண்டிருந்தான் சுந்தரம் தாத்தாவின் மகன் ரகு
மகன் மருமகள் பேரன் பேத்திகள் அனைவரையும் மனதார வாழ்த்தி விட்டு, தனக்கு அளிக்கப்பட்ட உணவினை மனதார ருசித்து உண்டார் சுந்தரம் தாத்தா. திருப்தியாக உண்ட பிறகு, தான் வாழ்ந்த ஊரை ஒரு முறை சுற்றிப் பார்த்தார்.
சிறுவயதிலிருந்தே, பெட்டிகடையில் தொங்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை ஆர்வமாக படிக்கும் பழக்கம் கொண்டவர் சுந்தரம் தாத்தா. அதே வழக்கம் இப்போதும் தலையெடுக்க, அனைத்து தலைப்புச் செய்திகளையும் அவசர அவசரமாக படிக்க ஆரம்பித்தார்.
“நாட்டில் குழந்தை காப்பகங்கள், முதியோர் இல்லங்கள் அதிகரிப்பு”
“இந்தியா வல்லரசு நாடானது”
“வெளிநாட்டு மக்கள் இந்தியாவில் படிப்பதற்கு ஆர்வம்”
“அரசியலில் வருபவர்களுக்கு அடிப்படை கல்வித் தகுதியை நிர்ணயித்தது இந்திய அரசு”
பிற செய்திகளையும் படிக்க ஆரம்பிக்க, திடீரென இடதுகை மணிக்கட்டில் இருந்த கருவியில் அலாரம் அடித்தது. அதில், “நீங்கள் திரிசங்கு சொர்க்கத்திற்கு திரும்ப வேண்டிய நேரமாகிவிட்டது, கிளம்ப தயாராகுங்கள்” என்ற செய்தி வந்தது
படித்த செய்திகளில் நல்ல செய்திகளை நினைத்து சந்தோஷப்பட்டும், வருத்தம் தரக்கூடிய செய்திகளை நினைத்து கவலைபட்டும், கடவுள் பூலோகத்தை இன்னும் நன்றாக மாற்ற வேண்டும் என மனதார வாழ்த்திவிட்டு, கையில் கிடைத்த டோக்கனை கண்ணுக்கு எதிரே தோன்றிய மிஷினில் போட்டார் சுந்தரம் தாத்தா. அடுத்த நொடி திரிசங்கு சொர்க்கத்தில் இருந்தார்
என்ன தான் ஒரே ஒரு நாள் பூலோகத்திற்கு சென்று வந்தாலும், தான் பிறந்து வளர்ந்த ஊரைப் பார்த்தது, தன் சொந்த பந்தங்களை பார்த்தது என எல்லாவற்றையும் நினைத்துக் கொண்டு ஒரு கணம் கண்ணில் வந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு மனதைத் தேற்றிக் கொண்டார்.
பூலோகத்திற்கு சென்று வந்த விவரங்களை தன் மனைவி செல்லம்மாவிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டார் சுந்தரம் தாத்தா. உடனே ரிக்வெஸ்ட் கொடுக்க, கண் முன்னே வந்து நின்றாள் செல்லம்மா பாட்டி
“என்ன விஷயம், எதுக்காக கூப்பிட்டீங்க?” என்றாள் செல்லம்மா பாட்டி.
“நான் பூலோகத்துக்கு போயிட்டு வந்தேன், அதைச் சொல்லத் தான் கூப்டேன்” என்றார் சுந்தரம் தாத்தா.
“ஊர்ல எல்லாம் நன்னா இருக்காளா? பையன் பேரன் பேத்தி எல்லாரும் சௌக்கியமா?” என்ற செல்லம்மா பாட்டி, “என்னோட திதிக்கு இன்னும் ரெண்டு மாசம் இருக்கு” என்றாள்
“எல்லோரும் சௌக்கியம். பையனுக்கு தான் தலை எல்லாம் நரைச்சு போயிடுத்து, மெதுவா நடக்கறான். ஆனா இந்த வயசுலயும், பையனும் நாட்டு பொண்ணும் அந்யோன்யமா இருக்கா” என்றார் சுந்தரம் தாத்தா.
உடனே, “அவன் என் பையனாக்கும் அப்படித் தான் இருப்பான்” என்ற செல்லம்மா பாட்டி, “சரி சரி, சீக்கரம் மோட்சத்துக்கு ரெண்டு பேரும் சேர்ந்து போற வழியை பார்க்கலாம்” என்றாள்.
“இப்படி நீ எங்கிட்ட வாயாடுவதைத் தான் நான் ரொம்ப மிஸ் பண்றேன் செல்லம்மா” என்றார் சுந்தரம் தாத்தா.
“அப்படி எதுக்கு நினைக்கணும். எப்போ நினைச்சாலும் பாத்துக்குறோம். நம்ம கடமை எல்லாத்தையும் முடிச்சுட்டு தான் இங்க வந்திருக்கோம். அதே சந்தோஷத்துல தெய்வத்தின் சரணாகதியை அடையறதை மட்டுமே குறிக்கோளா வச்சுக்கணும்” என்றாள் செல்லம்மா பாட்டி
“ஆனாலும் நீ தைரியசாலி செல்லம்மா, உன் தைரியம் எனக்கு வராது” என்றவர், ”எது எப்படி இருந்தாலும் தினமும் எப்போதும் போல நாம் இருவரும் 10 நிமிஷமாவது பார்த்துப் பேசிக்கொள்ள வேண்டும்” என்றார்.
“சரி” என்ற செல்லம்மா பாட்டி, “என்னோட படிச்ச ஃப்ரெண்ட் திரிசங்கு சொர்க்கம் வந்து ரெண்டு நாள் ஆறது, அவளைப் போய் பார்த்துட்டு வரணும், கிளம்பறேன்” என்று தன்னுடன் வந்த சினேகிதியுடன் புறப்பட்டாள்.
செல்லம்மா பாட்டி சென்றதும் அங்கு வந்த நடராஜன் தாத்தா, ”ஏண்ணா, உங்கள விட்டுட்டே மன்னி தனியா போறாளே” எனக் கேட்க
“பந்த பாசத்தல கட்டுண்டு கிடக்கிறது பூலோகத்துல தான், இங்கே எல்லாரும் ஆத்மாக்கள் தான். யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது. என் புள்ள ரகு புண்ணியத்துல வருஷா வருஷம் எனக்கு சாப்பாட்டுக்கு எந்த குறையும் இல்லை, வேற என்ன வேணும்” என்றார் சுந்தரம் தாத்தா.
பெற்ற குழந்தைகள், பெற்றோர் இறந்த பின் திதி கொடுக்கவில்லை என்றால், திரிசங்கு சொர்க்கத்தில் அவர்களுக்கென ஒரு 100 சதுர அடி இடம் கொடுப்பார்கள். அதில் தங்களுக்கான உணவை அவர்களே விவசாயம் செய்து, நெல்மணிகளை விளைவித்துக் கொள்ள வேண்டும்.
கடவுளிடம் சரணாகதி அடைந்தவர்கள், தங்களுக்கு கடவுளின் பிரசாதமாக கிடைத்த நெல்மணிகளை “திரிசங்கு சொர்க்க அன்னதான வங்கி”யில் தானமாக வழங்கி விடுவார்கள். இப்படி சேரும் நெல்மணிகளைத் தான், உணவின்றி தவிக்கும் ஆத்மாக்களுக்கு நெல்மணிகளாக திரிசங்கு சொர்க்கத்தில் கொடுப்பார்கள்.
கோடானு கோடி பேர் பூலோக ட்ரெயின் டிக்கெட் காத்திருப்பு பட்டியல் போல் இருப்பதால், பிள்ளைகளுக்கு நம் பழக்கத்தை சொல்லிக் கொடுத்து வளர்த்த பெற்றோர்கள், இறந்த பிறகு திரிசங்கு சொர்க்கத்தில் உணவுக்கு அல்லாடாமல் இருப்பர்.
“முதல்படியே இவ்வளவு கஷ்டமா இருக்கேண்ணா. சரி இரண்டாவது படி எப்படி இருக்கும்னு கொஞ்சம் சொல்லுங்களேன்” என்றார் நடராஜன் தாத்தா
“மனுஷன் கடவுளோட சரணாகதி அடையறது சாதாரணமான விஷயமா? தன்னோட ஆத்மா சுத்தமா இருக்கிற ஒருத்தனால மட்டும் தான் கடவுளின் சரணாகதியை பெற முடியும்” என்றவர், இரண்டாவது படியை விளக்க ஆரம்பித்தார்.
“முதல் படி முடிச்சவுடன் ஆஹானு கைதட்டி நம்மள அடுத்த ரூமுக்கு எல்லாம் அனுப்புவாங்கனு நினைக்க வேண்டாம். உண்மையையே பேசிப் பேசி ஒரு கட்டத்தில் பொய் நம்மை விட்டு தூர ஓடிடும். அன்னைக்கி கண் முழிச்சு பாக்கறப்ப, நாம திரிசங்கு சொர்க்கத்தில் இரண்டாவது படியை அடைஞ்சுருப்போம்.
இங்க மனசுல நினைக்கறத கூட கணிச்சுடுவாங்க. நம்மகிட்ட பேசறவங்க கேட்கும் கேள்விகளுக்கு வாயத் திறந்து பதில் சொல்லாம சாமர்த்தியமா அமைதியா இருந்தாக் கூட, நாம மனசுல நினைக்கறத சொர்க்கத்தின் பணியாளர்கள் டிஸ்ப்ளே போர்டுல பாத்துடுவாங்க. பூலோகத்துல வாயில்லா பூச்சி, வாய் திறந்து எதுவும் பேச மாட்டான், ரொம்ப நல்லவன்னு பேர் வாங்குறவங்க கூட, இங்க சிங்கிள் டிஜிட் மார்க் வாங்கறதுக்கு பல மாசங்க ஆகிடும். கேக்கற கேள்விக்கு மனசுல தவறாக நினைச்சா கூட மதிப்பெண் கிடைக்காது.
இந்த நிலைல, மனம் எதையும் நினைக்காம தியானத்தை நோக்கி பயணிக்கும். தியானம் செய்ய முடிவு செய்யும் போது, பச்சை பசேல்னு நம்ம கண் முன்னாடி பசுமையான மரம் தோன்றும். மரநிழல்ல இளைப்பாறி நிர்மலமான மனசோட கடவுளை நினைச்சு தியானம் செஞ்சுட்டு இருக்கறப்ப, ஒடம்பும் மனசும் முழு தூய்மையடைஞ்சு மூன்றாம் படியை அடைஞ்சுடுவோம். என்ன தான் ஒடம்பும் மனசும் தூய்மையா இருந்தாலும், நாம எடுத்த ஜென்மத்துல செஞ்ச பாவத்துக்கான தண்டனைய முழுசா இந்த கட்டத்துல அனுபவிச்சுட்டு, கடவுளை சரணாகதி அடைய வேண்டிய கடைசி நிலையே இது.
வலிமை உள்ளவன் வலிமை இல்லாதவனை ஏய்க்கறதும், புத்தி உள்ளவன் புத்தி இல்லாதவனுக்கு உதவாம கேவலப்படுத்துறதும், உலகத்துல இன்னைக்கும் நடந்துட்டு தான் இருக்கு
அதனால, தவறு செஞ்சவன், தவறு இழைக்கப்பட்டவனிடமிருந்து ஒவ்வொரு நேரமும் தன் பசிக்கான நெல்மணிகளை வாங்கி சாப்பிடணுங்கறதே இங்க கொடுக்கப்படும் தண்டனை. யாருக்கு தீங்கிழைத்தோமோ, அவரிடமே ஒவ்வொரு நேரமும் கையேந்தி நிற்கும் அவலம், நம்மை கூனிக் குறுக வைக்கும்” என்றார் சுந்தரம் தாத்தா
“கொஞ்சம் புரியும்படியா விளக்கமா சொல்லுங்க அண்ணா” என்றார் நடராஜன் தாத்தா.
“ம்…” என்ற சுந்தரம் தாத்தா, “உதாரணத்துக்கு ஒரு மனுஷன் இன்னொரு மனுசன கொலை செஞ்சுருந்தா, கொலை செய்யப்பட்ட மனிதனின் கையில் இருந்து உணவினை ஒவ்வொரு நேரமும் கையில் வாங்கி உண்ணும் போது ஏற்படும் மனவலியே கொலை செய்தவனுக்கான தண்டனை. ஒரு நிலையில், தான் உணவிற்காக கையேந்துவது, தான் செய்த தவறுக்கான தண்டனை என மனமார வருந்தி நினைக்கும் நேரத்தில், மனிதன் மூன்றாம் படி நிலையைக் கடந்து சொர்க்க வாசலை அடைகிறான்” என்றார் சுந்தரம் தாத்தா
இப்படியாக நாட்கள் சென்றது
பூலோகத்திற்குச் சென்று எல்லோரையும் பார்த்து வந்த சந்தோஷத்திலும், மனைவி செல்லம்மாவை பார்த்ததிலும் சந்தோஷமடைந்த சுந்தரம் தாத்தா, கண்ணைமூடி “லோகத்துல எல்லாரும் எப்பவும் நன்னா இருக்கணும்” என நினைத்துக் கொண்டு தூங்குவதற்கு கண் அயர்ந்தார்.
அடுத்து கண் விழித்த போது, சுந்தரம் தாத்தாவின் அருகில் செல்லம்மா பாட்டி இருந்தார். இருவரின் எதிரே, வானளாவிய தங்க நிறத்திலான சொர்க்க வாசல் கதவு திறந்தது.
இருவரும் கைகளை இறுக பற்றிக் கொண்டு, பய பக்தியுடன் உள்ளே நுழைந்தனர்.
கண்ணெதிரே இருந்த ஜோதிப் பிழம்பு ஸ்ரீமன் நாராயணன் வடிவத்தில் விஸ்வரூபமாய் நிற்க, “அனாத ரட்சகா, ஆபத்பாண்டவா நீயே சரணம்” என சொல்லிக் கொண்டே இருவரும் நமஸ்கரிக்க, கமல பாதத்தில் சரணாகதி அடைந்து, ஜோதியோடு ஜோதியாய் ஐக்கியமாயினர்
ad#
எழுத்தாளர் சஹானா கோவிந்தின் நாவல்கள் மற்றும் சிறுகதைத் தொகுப்புகளை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇
“சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇
(முற்றும்)
GIPHY App Key not set. Please check settings