in ,

காசியில் தொலைத்த கண்ணம்மா (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

காசியில் பார்க்கவேண்டிய இடங்களையெல்லாம் மூன்று நாட்களாகப் பார்த்தாகிவிட்டது. நாட்டுக்கொட்டைச் செட்டியார் சத்திரத்தில்தான் தங்கியிருந்தார்கள். மறுநாள் ஊருக்குத் திரும்ப வேண்டும். சாயங்காலமாக இன்னொருமுறை காசி விஸ்வநாதரை தரிசித்துவிட்டு பக்கத்தில் இருக்கும் அன்னபூர்ணா கோவிலுக்கும் சென்றுவிட்டு வரலாம் என்றெண்ணி மனைவியையும் அம்மாவையும் கூட்டிக்கொண்டு கிளம்பினான் கதிரவன்.

மனது வலித்தது, காரணம் செல்வியின் டார்ச்சர். பல சந்தர்ப்பங்களில் ஜாடை காட்டி விட்டாள். இவன்தான் பொறு என்று ஜாடைகாட்டி தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தான்.

கடைசியாக, ‘ இன்னிக்கு ராத்திரிக்குள்ளே விட்டுடறீங்க… இல்லே… என்னை விட்டுடுங்க… ‘ என்று பற்களைக் கடித்தாள் செல்வி.

கண்ணம்மாவோ எப்பொழுதும் போலவே பக்தி பரவசத்துடனே அவர்களுடன் போய் வந்தாள். அவளுக்கு எழுதப் படிக்கத் தெரியாது.  கதிரவனும் அவளது கையில் பணம் எதுவும் கொடுக்கவும் இல்லை. அவர்களது திட்டப்படி, ஏதாவது பெரிய கும்பலில் விட்டுவிட்டு தப்பித்துவிட்டால், திக்குத் தெரியாமல் தொலைந்து போவாள்.

இவனது நெஞ்சுக்குள்தான் மரண வலி. பெற்றெடுத்த அம்மாவை… ஆறு வருஷம் பாலூட்டி ஆளாக்கிய அம்மாவை தலித்துவிட்டு ஊருக்குப் போகவேண்டுமாம்… நேற்று வந்தவளுக்கு பிடிக்காமல் போனதற்காக… அவளது சொத்துக்களை அடைவதற்காக… தொலைத்துவிட்டு ஊர் திரும்பவேண்டுமாம்…

காசி விஷ்வாநாதர் கோவிலுக்குள் சரியானக் கூட்டம். செல்வி அவனை தோளில் ஒரு முட்டு முட்டி, மாமியாரை ஜாடையால்  காட்டினாள். இவனுக்குத்தான் மனது இரண்டுங் கெட்டான் நிலையில் அல்லாடியது. கும்பலில் இடித்து முட்டி மோதிக்கொண்டு உள்ளே போனார்கள்.

கண்ணம்மாவோ மகன் மருமகளை கவனிக்காமல் கைகளை உயரே தூக்கி ‘காசி விஸ்வநாதா… என் புள்ளைகளை காப்பாத்துப்பா… ‘ என்று உரக்கக் கோஷம் போட்டபடி கூட்டத்தோடு கூட்டமாக முன்னேறிக்கொண்டிருக்கும்போது, சட்டென இவர்கள் மட்டும் நின்று… பின்வாங்கி… அப்படியே திரும்பி விட்டனர்.

அம்மாவை ஒருமுறை பார்த்துவிட திருபியவனின் தாடையில் ஒரு இடி இடித்து முறைத்த செல்வி, அவனது கையைப் பிடித்து தரதரவென இழுத்துக்கொண்டு ஓட ஆரம்பித்தாள்.  சத்திரத்தில் வந்துதான் நின்றார்கள் இருவரும்.

‘இந்தாங்க… நாம ரூமை உடனே காலி பண்ணிடலாம்ங்க… ‘

‘ஏன்… என்னாச்சு… ராத்திரி தங்கியிருந்திட்டு காலையில போகலாமே… ‘

‘இந்தாங்க… உங்களுக்கு அறிவிருக்கா… உங்கம்மாவுக்கு எழுதப் படிக்கத்தான் தெரியாது தான்… ஆனாலும் அங்கே இங்கே தேடித் பிடிச்சு சத்திரத்துக்கு வந்துட்டா… கிளம்புங்கன்றேன்… எவ்ளோ கஷ்டப்பட்டு விட்டுட்டு வந்திருக்கோம்… திட்டத்தை தவிடு பொடியாக்கிருவீங்க போலிருக்கே… ‘

பஸ் ஸ்டாண்டுக்கு வந்தபோது மணி ஒன்பது. பசி வயிற்றைக் கிள்ளியது. ஒரு ஹோட்டலில் சப்பாத்தி சாப்பிட்டுவிட்டு பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைந்தார்கள்.

இவனுக்கு கண்கள் கசிந்தன. மூன்று பேராக சந்தோசமாய் வந்தோம். இப்போது இரண்டு பேராய் திரும்புகிறோம். கடவுளே, என்ன கொடுமை இது.

 

ஊரிலிருந்து கிளம்பும்முன்பே அந்தத் திட்டத்தை அவனது காதுகளில் போட்டு வைத்தாள் அவள்.

‘ பாருங்க… கடைசியா சொல்றேன்… உங்கம்மாவை வச்செல்லாம் என்னால குடும்பம் நடத்த முடியாது. ஏற்கனவே சொன்ன மாதிரி காசியில வச்சு தொலைச்சிட்டு வந்துடலாம்… ‘

பெண்டாட்டி தாசனாகிப் போன அவனால் மேற்கொண்டு மறுத்தும் பேசமுடியவில்லை.

அவன் செய்யும் பிசினஸ் தள்ளடித்துப் போனபோது மனைவியிடம் நகைகளை கேட்டான், அடகு வைப்பதற்காக. அவளோ முறைத்துவிட்டு சொன்னாள், ‘ நான் வாழ வேண்டியவ. என்னோட நகைகளை ஏன் கேட்கறீங்க… உங்கம்மா வாழ்ந்து முடிச்சவங்க. அவங்ககிட்ட கேட்டு வாங்கிட்டுப் போங்க… ‘

கண்ணம்மாவோ முழுதாக மறுத்துவிட்டாள். ‘ஏன் உன் வியாபாரத்துல உன் பொண்டாட்டிக்கு பங்கு இல்லையா… அவள் நகைகளை வாங்கிட்டுப் போயேன்… ‘ என்றாள்.

ஒருமுறை வீட்டை ஒட்டிய காலி இடத்தை வியாபார விருத்திக்காக விற்க முயன்றபோது அம்மா மறுத்துவிட்டாள். செல்வி நைசாக சொல்லிப்பார்த்தாள், ‘ உங்க பையன் பிசினஸ் நடத்தத் தானே கேட்கறார். காலி இடத்தை வச்சுக்கிட்டு என்னத்தை சாதிக்க போறீங்க… கைநாட்டைத்தான் வைங்களேன்… ‘ என்று.

‘ ஏன்… உங்க வீட்டுல பத்து பவுன் போடறேன்னு சொல்லி ஏழு பவுனுதானே போட்டுக்கிட்டு வந்தே. அதை வாங்கிட்டு வாயேன்… அவன் மோட்டார் சைக்கிள் வாங்கித் தரச் சொன்னப்போ நீதானே உங்க வீட்டுலேர்ந்து எதுவும் வாங்கிக்கக் கூடாதுன்னு கத்துனே… நானல்லவா சுளையா எழுபதினாயிரம் எடுத்துக் கொடுத்தேன் வண்டி வாங்க… உன் புருஷன் வியாபாரம் பண்றதுல உனக்கு மட்டும் பங்கில்லையா… போ… உங்கப்பன் ஆத்தாக்கிட்ட பணம் வாங்கிட்டு வந்து கொடு… ‘ என்று விரட்டினாள் கண்ணம்மா.

அவளிடம் நேரடியாக மறுத்துப் பேசாமல் தனிமையில் அவனிடம் திட்டினாள் அவள். ‘உங்கம்மாவுக்கு நாக்கு ரொம்ப நீளுது… கட்டிக்கிட்டு வந்து ஆறு வருஷம் ஆச்சுது. இன்னும் போயி பணம் கொடுன்னு எங்கப்பனை ஏன் ஆட்டிவைக்கணும்… உங்கம்மா என்னவோ அவங்கதான் சொந்தமா உழைச்சு இந்த நிலத்தையெல்லாம் வாங்கிப் போட்டமாதிரி குதிக்கறாங்க… உங்கப்பா வாங்கிப் போட்டதுதானே… அவர் இல்லாததால இவங்களுக்கு பாதி பங்குதானே… கைநாட்டு வைக்கும்போதே இப்படி குதிக்கறவங்க… இன்னும் எழுதப்படிக்கத் தெரிஞ்சிருந்தா என்ன குதி குதிச்சிருப்பாங்க… என்ன வாயி… அது என்ன வாயா… கால்வாயா… ஆச்சு… இனிமே உங்கம்மாவை வச்சுக்கிட்டு என்னால இங்கே குப்பைக் கொட்ட முடியாது. வேற வீடு பார்த்துக்கிட்டு என்னை தனியா கொண்டு போயி வைங்க… இல்லே உங்கம்மாவை தனி வீடு பார்த்துகிட்டு போகச்சொல்லுங்க… இனிமே சோறு ரெண்டு பெத்துக்குதான் சமைப்பேன்… ‘

ஆடிப் போனான் இவன்.  அவளது காலில் கையில் விழுந்து கெஞ்சினான்.  பிறகுதான் மெல்ல இறங்கிவந்தாள் அவள். ஆனால் ஒரு திட்டத்துடன்.

‘ உங்கம்மா இருக்கற வரை நமக்கு விடிவு காலம் கிடையாது. அவங்களை எங்கேயாவது கண்காணாத தேசத்துக்கு கொண்டுபோய் தொலைச்சிட்டு வந்துடுங்க… காசிக்குப் போய்ட்டு திரும்பும்போது எதையாவது தொலைசசிட்டு வரச்சொல்லுவாங்க இல்லே… உங்கம்மாவை தொலைச்சுடுவோம்… ‘ என்ற ஐடியா கொடுத்தாள்.

இவனோ ஒப்புக்கொள்ளவும் முடியாமல் மறுத்துப் பேசவும் முடியாமல் தவித்தான்.

 

பஸ் கிளம்பியது.  நானூத்தைம்பது கிலோமீட்டர் தூர பயணம். மனைவிக்குத் தெரியாமல் கசியும் கண்களைத் துடைத்துக் கொண்டான்.

வாரணாசியில் இருந்து நேரடியாக மதுரைக்கு பஸ் கிடையாது. ஜபல்பூர் போனால் அங்கிருந்து ஹைதராபாத் போய், அங்கிருந்து பெங்களூர் போய் கடைசியில் பெங்களூரிலிருந்து மதுரைக்குப் போய்விடலாம் என்று சொல்லியிருந்தார்கள். இப்போது ஜபல்பூர் போகும் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்துவிட்டார்கள்.  நள்ளிரவு மூன்று மணிக்கெல்லாம் போய்ச் சேர்ந்துவிடும் என்று சொல்லியிருந்தார்கள்.

அவனது தோளைத் தட்டினாள். ‘ ஏன் தூக்கம் வரலையா… ‘

‘ எங்கே தூங்க… இந்நேரம் என்ன பண்ணிட்டிருக்காங்களோ எங்கம்மா… சாப்பிடற நேரம்… விட்டுட்டு ஓடியாந்துட்டோம்… கையில நயாபைசா இல்லை. எழுதப்படிக்கத் தெரியாது. தமிழைத் தவிர வேற மொழி தெரியாது… எப்படி எங்கே அலையறாங்களோ… அழுதுக்கிட்டு… பசியோட… ‘

சொல்லும்போது குரல் கரகரத்தது. அவனை தட்டிக்கொடுத்தாள்.  

‘ஒன்னும் ஆகிட மாட்டங்க… மனச போட்டு உலப்பிக்காதீங்க… பேசாம கண்ணை மூடி தூங்குங்க… ஏ.ஸி. ஜில்லுன்னு இருக்குல்ல… ரொம்ப நாளைக்கப்புறம் நான் நல்லா தூங்குனேன்… நீங்களும் தூங்குங்க… மூணு மணிக்கு பஸ் போயிடுமாம்… அங்கே அடுத்த பஸ் பிடிச்சு மறுபடியும் அடுத்த பஸ் பிடிச்சு… என் கணக்குப் படி… நாளை மறுநாள் ராத்திரி வீடு போய் சேர்ந்துடலாம்… ஊருக்குப் போயி உளறி கிளறி வச்சுடப் போறீங்க… நான் சொன்ன மாதிரி கொஞ்சம் காலம் ஓடட்டும். அப்புறம் கேஸ் குடுத்து காணாமப் போய்ட்டாங்கன்னு சர்டிபிகேட் வாங்கிடலாம். எங்க சின்ன அத்தைப் பையன் கான்ஸ்டபிள் தானே.  அவன் எனக்கு உதவுவான்.  அப்புறம் செத்துப் போனவங்க கணக்குல ஏறிடும்.  அப்புறம் என்ன… பிரச்சினை முடிஞ்சுது… இப்போ தூங்குங்க… மப்ளர் தரட்டா தலையை சுத்திக்க… தூக்கம் தன்னால வரும் ‘

இடையில் ஹைதராபாத்தில் ஒரு நாள், பெங்களூரில் ஒருநாள் ரூம் போட்டு தங்கி சுற்றிப் பார்த்தார்கள் என்பது சொல்லாமல் விட்ட கதை.

மதுரை பஸ்ஸ்டாண்ட் வந்ததும், ‘ ஏங்க… பஸ் வேணாங்க… டாக்சி பிடிங்க… ‘ என்றாள் அவள்.

டாக்ஸி பிடித்து வீடு வந்து இறங்கி, வெளிகேட்டைத் திறக்கும்போது இருவரும் அதிர்ந்து போனார்கள்.

அங்கே அவர்கள் பார்த்த காட்சி… காசியில் தொலைந்(த்)த கண்ணம்மா எப்படியோ கரட்டாம்பட்டி வந்து சேர்ந்து கட்டிலில் படுத்து கண்ணயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள். கண்ணம்மாள் எப்படி திரும்பி வந்தாள் என்பது தனிக்கதை.

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் 

 (முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தொலைந்து போன மோதிரம் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

    சகுனம் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு