in ,

தொலைந்து போன மோதிரம் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

‘என்னங்க… இன்னிக்கு ஞாயித்துக் கிழமைதானே… அந்த சின்ன பாத்ரூமைக் கொஞ்சம் கழுவிக் கொடுங்களேன்… ‘

கனகா அப்படி கெஞ்சினாளோ இல்லையோ, உடனே, ஷேவிங் பண்ணிக்கொண்டிருந்த கார்த்திக், ‘ ஏய்… என்ன, நீ என்னை பாத்ரூம் கழுவச் சொல்றே… ‘ என்று கத்தினான்.

‘ஏங்க… காய் நறுக்கும்போது விரல்ல கத்தி பட்டு காயமாகி பேண்டேஜ் போட்டுக்கிட்டு வேலை பண்ணிகிட்டிருக்கேன்… உங்களுக்குத் தெரியலை…? எவ்ளோ கஷ்டமா இருக்குன்னு தெரியுமா… நாளைக்கு வேற எங்கப்பா அம்மா வர்றாங்க… அவங்க வந்தா அந்த சின்ன ரூம்லத்தான் தங்குவாங்க. அந்த டாய்லெட்டை நாமளும் யூஸ் பண்ணியிருக்கோம்… ஆனா கழுவிவிடவே இல்லை. இப்ப அவங்க வரும்போது கொஞ்சம் பளிச்னு இருந்தாத்தானே நமக்கு கவுரவம்…  ‘ சிணுங்கினாள் அவள்.

மறுபடியும் கத்தினான். ‘ தோ பார்… இந்த வேலையெல்லாம் என்கிட்டே சொல்லாத… ‘ என்று விட்டு, ‘ சரி சரி… ஷேவிங் ஆச்சு… கேய்ஷரை போட்டுவிடு… குளிக்கணும்… ‘ என்றான்.

அப்போதுதான் அவளுக்கு ஞாபகம் வந்தது, ‘ ஏங்க… நம்ம ரூம்லதான் கீய்ஷர் ஸ்விட்ச் வேலை பண்ணலையேங்க… நேத்தே சொன்னேன்… நீங்க கண்டுக்கலை… இப்போ ஸ்விட்ச் போடுன்றீங்க… நான் என்ன பண்ண… வேணா நீங்க பச்சைத் தண்ணியிலேயே குளிச்சுக்கங்க… ‘ என்றாள்.  அப்பொழுதாவது அந்த ஸ்விட்சை நாளைக்காவது சரி செய்ய ஏற்பாடு பண்ணுவான் என்ற எண்ணத்தில்.

‘ பரவால்ல… சின்ன பாத்ரூம் இருக்கில்ல… அதுல கேய்ஷர் வேலை பண்ணுமில்ல… அதுலயே நான் குளிச்சுக்கறேன்… இந்த குளிர்ல எவனாவது பச்சத் தண்ணியில குளிப்பானா… ‘ என்றபடி ஷேவிங் செட்டைக் கழுவி வைத்துவிட்டு துண்டை எடுத்துக் கொண்டு பாத்ரூமை நோக்கிப் போனான்.

அங்கேதான் வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் தங்கிக்கொள்வார்கள். நாளைக்கு வரவிருக்கும் கனகாவின் பெற்றோர்களையும் அங்கேதான் தங்கவைப்பார்கள். அதற்கான அட்டாச்சுடு பாத்ரூமில்தான் இப்போது கேய்ஸரைப் போடப் போனான்.

படுக்கையறைக்குள் நுழைந்தவனை திகைப்புடன் பார்த்து கேட்டாள், ‘ என்னங்க ஆச்சு… குளிக்கலையா…  ‘ என்று.

‘ இப்போத்தானே ஸ்விட்ச் போட்டிருக்கேன்… ஒரு பத்து நிமிஷமாவது ஆகாதா தண்ணி சூடேறே… ‘ என்றுவிட்டுப் போய்  லேப்டாப்பை திறந்துகொண்டு உட்கார்ந்தான்.

கொஞ்சம் கெஞ்சலாய், ‘ ஏங்க… அங்கேதானே குளிக்கப் போறீங்க… அப்படியே கொஞ்சம் கழுவி விட்டுடுங்களேன் ப்ளீஸ்… உள்ளேயே லிக்விட், பிரஸ் எல்லாம் இருக்கு… நீங்க எதையும் தேடவே வேண்டாம்… ‘ என்றாள்.

‘ நோன்னா நோதான்… ‘ என்றுவிட்டு லேப்டாப்புக்குள் மூழ்கிவிட்டான்.

 

குளித்து முடித்து போய் பனியனைப் போட்டுக்கொண்டே வந்தவனைப் பார்த்து, ‘ மோதிரம் எங்கேங்க… ‘ என்று பதறினாள் கனகா.

‘ ஆமா… பொல்லாத மோதிரம்… ‘ என்றபடியே தனது விரலைப் பார்த்து தானும் லேசாய் அதிர்ந்தான்.

அந்த மோதிரம் கல்யாணத்தின்போது அவனது மாமியார் வீட்டில் போட்டது.

‘ ஹூம்… போட்டதுதான் போட்டாங்க… ஒரு ரெண்டு பவுன்ல போட்டிருக்கக்கூடாது…? ‘ என்று நிறைய தடவை குத்தி குத்திக் காட்டியிருப்பான். 

‘ ஒரு பவுன்ல மோதிரம் போடறோம்னு அவங்க சொன்னப்போ தலையைத் தலையை ஆட்டிப்புட்டு இப்போ ஏன் கத்தறீங்க…. ‘ என்று அவளும் பதிலுக்கு எகிறுவாள்.  பதில் பேச முடியால் அடங்கிப் போவான் அவனும்.

இப்போது ‘ தெரியலையே… ‘ என்றபடி எல்லா இடங்களிலும் தேட ஆரம்பித்தான்.  அவளும் அவனுடன் சேர்ந்து தேடலானாள்.

குளிக்கும்போது கழற்றி ஏதும் வச்சுட்டேனோ… ‘ முனகியபடியே தான் குளித்துவிட்டு வந்த பாத்ரூமிற்குள் நுழைந்தான், அவன்.

‘ ஏங்க… யாராவது மோதிரத்தை கழற்றி வச்சுட்டு குளிப்பாங்களா ‘  கேலியாய், கேட்டாள். 

‘ என்னவோ… கழற்றிவச்சுட்டுத்தான் குளிச்சேனோனு ஒரு டவுட்டு… ‘

‘ஆமா லூஸா இருக்குன்னு சொல்லிட்டிருந்தீங்க… நூலு சுத்தியாவது போட்டுக்கலாமில்லையா… ‘ என்றபடியே அவளும் அவனுடன் தேடினாள்.  திடீரென்று அவன் கத்தினான்.

‘ அடக்கடவுளே… ‘

‘ என்னங்க ஆச்சு… ‘

திகைத்துப்போய் திரும்பினாள் அவள். டாய்லட் பேஸினைக் காட்டிக்கொண்டிருந்தது அவனது விரல்.

அது வெஸ்டர்ன் ஸ்டைல் டாய்லட் பேசின். அதற்குள் பளிச்சென்று தெரிந்தது மோதிரம்.

‘ அய்யய்யோ… அதுல ஏங்க கொண்டுபோய் போட்டீங்க… ஒரு லட்சம்ங்க அதோட மதிப்பு… ‘ என்று கத்தினாள், அவள்.

‘ அட கிறுக்கே… யாராவது மோதிரத்தைக் கொண்டுபோய் டாய்லேட் பேசினுக்குள்ளே போடுவாங்களா… எப்படியோ விழுந்துடுச்சு… ‘  என்றான் அவன்.

‘ ஆமா… லூஸா இருந்ததால குளிக்கும்போது பேஸின்ல விழுந்துச்சு போல… ‘ என்றாள் அவள்.

‘ இப்போ எப்படி எடுக்க… ‘ அவன் திகைப்புடன் நின்றான்.

‘ கொஞ்சம் இருங்க… அதோ கீழே பிரஷ் இருக்கு பாருங்க… அதை உள்ளே விட்டு மெல்ல வெளியே இழுங்க… ‘ என்றாள்.

‘ மோதிரம் உள்ளே போயிடுச்சுன்னா… ‘

‘ அதெப்படிங்க உள்ளே போகும்… ஒன்னும் போகாது… டெக்னிக்கா எடுக்கணும்… அதோ ஒரு புது பிரஸ் மூலையில இருக்கு பாருங்க… அதை எடுத்து மெல்ல உள்ளே விட்டு இழுங்க, வந்துடும்… ‘

வேண்டா வெறுப்பாய் பிரஸ்ஸை எடுத்து மெல்ல கணத்துடன் உள்ளே விட்டான்.

‘ பார்த்து… பார்த்து… மெல்ல… மோதிரத்தை அப்படியே அழுத்திக்கிட்டு அப்படியே மெல்ல வெளியே இழுங்க… இழுங்க… ஆங்… அப்படித்தான்… அப்படித்தான்…  அவ்ளோதான்…‘

லொட்டென வெளியே வந்து விழுந்தது மோதிரம்.

சிரித்துக்கொண்டே சொன்னாள் அவள், ‘ நல்லவேளை கிடைச்சிடுச்சு… ‘  

‘ கடவுளே… நீ சொன்ன மாதிரி ஒரு லட்சம்… ‘ கண்களை அகல விரித்தான் அவன்.

‘ தங்கம் விலை ஏறாவும்தான் அதோட மதிப்பு உங்களுக்குத் தெரியுது இல்லே… ‘ என்றவள் தொடர்ந்து சொன்னாள், ‘ சரி… எப்படியோ பிரஸ்ஸை விட்டு மோதிரத்தை எடுத்திட்டீங்க… மோதிரத்தை நல்லா டெட்டால்’ போட்டு கழுவுங்க.  அதோட பிரஷ்ஸும் நாரிடுச்சு. அதையும் கழுவியாகனும். நான் இந்த லிக்விடை பெசினுக்குள்ளே ஊத்திவிடறேன்… ஒரு பத்து நிமிஷம் கழிச்சு அதே பிரஸ்ஸை வச்சு தேச்சு விட்டுடுங்களேன்… ப்ளீஸ்…  அப்புறமா பிரஷை கழுவிக்கலாம்… ‘ என்றாள் கெஞ்சும் முகத்துடன்.

யோசித்துவிட்டு, ‘ சரி… ஊத்து… ‘ என்று இழுத்த்த்த்தபடி வெளியே வந்தான்.

கிச்சனுக்குள் திரும்பியவள், ‘ இந்த டாய்லெட்டை கழுவ வைக்க என்ன டிராமாலாம் போட வேண்டியிருக்கு… ஹூம்… ‘ தனக்குள் எண்ணிக் கொண்டாள்.

அவன் சோப்பு ஸ்டேண்டில் வைத்திருந்த மோதிரத்தை அவன் வெளிவந்த நிமிடத்தில் அவள் தானே அவனுக்குத் தெரியாமல் எடுத்து சத்தமின்றி பேசினுக்குள் விட்டவள்.

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் 

 (முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அடிபட்ட பொன்னி (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

    காசியில் தொலைத்த கண்ணம்மா (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு